ஜனாதிபதி தெரிவும் தமிழ்க் கட்சிகளும் !! (கட்டுரை)
இலங்கையினுடைய எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக, அரசியலமைப்பின் 40ஆவது சரத்தின்படி, பாராளுமன்ற உறுப்பினர்களிடையேயான இரகசிய வாக்கெடுப்பின் மூலம், ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டு, பதவியேற்றிருக்கிறார். பல திருப்புமுனைகளோடு, மிக விறுவிறுப்பாக இந்த ஜனாதிபதி தெரிவு அரங்கேறியிருக்கிறது.
இந்த ஜனாதிபதி தெரிவின் போதான தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடுகள், நடவடிக்கைகள் என்பவற்றை, மீள்பார்வை செய்வதே இந்தப் பத்தியின் நோக்கமாகும்.
இன்றுள்ள பாராளுமன்றத்தைப் பொறுத்தவரையில், கூட்டணிக் கட்சிகள் உள்ளடங்கலாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு, பாராளுமன்றம் ஏகிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 145 ஆகும். இதோடு, பொதுஜன பெரமுன அரசாங்கத்தோடு இணைந்த கட்சிகளாயினும், தமது கட்சி சின்னத்தில் போட்டியிட்டு, பாராளுமன்றம் ஏகிய உறுப்பினர்கள் மூன்று.
ஆகவே, பொதுஜன பெரமுன, இந்தப் பாராளுமன்றத்தில் அசைக்க முடியாத பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது என்பதில், மாற்றுக்கருத்து இருக்க முடியாது. கூட்டணிக் கட்சிகள் தனித்துச் செயற்படுவதாக அறிவித்த பின்னரும், பல பாராளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக கோட்டாவின் ‘வியத்மக’ குழுவிலிருந்து வந்த பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள், சுயாதீனமாகச் செயற்படுவதாக அறிவித்த பின்னரும் கூட, பொதுஜன பெரமுனவுக்கு கணிசமான பெரும்பான்மை இன்னும் இருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.
ஆகவே, அந்தப் பெரும்பான்மையை புறக்கணித்து, அரசியல் கணிப்புகளை மேற்கொள்ள முடியாது என்பது அரசியல் பாலபாடம். இந்தப் பின்னணியில்தான், தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதி தெரிவு தொடர்பில் மேற்கொண்ட தெரிவுகளை, நாம் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.
ஜனாதிபதி தெரிவுப் போட்டியில், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பொதுஜன பெரமுனவின் டளஸ் அழகப்பெரும, ஜே.வி.பியின் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அநுரவுக்கு, அவரது கட்சியிலுள்ள மூன்று வாக்குகளைத் தவிர, வேறு வாக்குகள் கிடைக்கும் என எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
ரணிலுக்கு எதிரான வாக்குகள் சஜித், டளஸ் எனப் பிரியும். ரணில், அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று வெற்றியீட்டுவார் என்ற நிலை இருந்த போது, வேட்பாளர் முன்மொழிவுக்கு முதல்நாள், டளஸூக்கும், சஜித்துக்கும் இடையில் ஓர் இணக்கப்பாடு ஏற்படுகிறது. அதன்படி, சஜித் ஜனாதிபதி தெரிவுப் போட்டியிலிருந்து விலகிக்கொண்டு, டளஸூக்கு ஆதரவை வழங்கியிருந்தார்.
இதன் பின்னர், முன்பு எவருக்கும் வாக்களிப்பதில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்த சுதந்திரக் கட்சியும் டளஸை ஆதரிப்பதாக அறிவித்திருந்தது. வாய்ப்பே இல்லை என்றிருந்த டளஸ், வெற்றி பெறப்போவதாக சமூக ஊடகங்களில் கருத்துகள் பரப்பப்பட்டன.
தமிழ்க் கட்சிகளைப் பொறுத்த வரையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது, 18ஆம் திகதியே தன்னுடைய நிலைப்பாட்டை தெட்டத்தௌிவாக அறிவித்துவிட்டது. “ஜனாதிபதி தெரிவுக்காகத் தம்மை முன்மொழிந்து இருப்பவர்கள், தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் தீர்வு விடயங்களை முன்னெடுக்கத் தயார் இல்லாதவர்களாகவே உள்ளனர்.
ராஜபக்ஷ தரப்கை அகற்றி, ஓர் அடிப்படை மாற்றத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில், ரணில் விக்கிரமசிங்க அதற்கு ஒரு முட்டுக்கட்டையாக இருக்கின்றார். 2015ஆம் ஆண்டு, மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து நடைபெற்ற அவரது ஆட்சிக்காலத்தில், தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில், ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஓர் இடைக்கால அறிக்கை ஒன்றையே தயாரித்து இருந்தனர். ஐக்கிய தேசிய கட்சி, அதற்கு மட்டும் தான் ஆதரவு தரலாம் என்ற விடயத்தையும் சமஷ்டியையும் தமிழ் மக்களுடைய சுயநிர்ணயத்தையும் நிராகரித்து, அவர்களுடைய செயற்பாடுகள் இன்னமும் அதிலிருந்து விடுபடாமல் இருக்கின்ற நிலையில், அவரை ஏற்க முடியாது. ரணிலை நாங்கள் என்ன காரணத்துக்காக நிராகரிக்கின்றோமோ, அதேநிலைப்பாட்டில் தான் சஜித் பிரேமதாஸாவும் தனது கருத்துகளை தெரிவித்து இருந்தார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் அவர், எங்களோடு பேசிய பொழுது, இந்தியாவில் உள்ள பஞ்சாயத்து முறையில் பிரச்சினைகள் தீர்க்கப்படும் முறையைக் கூறி, அதைப் போலவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற கோணத்தில், அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார். தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை சார்ந்த விடயத்துக்கும் பஞ்சாயத்து முறைக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பது, சஜித் பிரேமதாஸவுக்குத் தெரிந்திருக்கவில்லை போலும்” என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது நீண்ட அறிக்கையில், தமது நிலைப்பாட்டை பட்டவர்த்தனமாகப் பதிவு செய்திருந்தது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்போ, வாக்களிப்புக்கு முதல்நாள் இரவுதான் தன்னுடைய முடிவை எடுத்திருந்தது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் வீட்டில் சஜித், டளஸ், ஜீ.எல்.பீரிஸ், டிலான் பெரேரா ஆகியோரையும் சந்தித்துப் பேசிய கூட்டமைப்பினர், டளஸை ஆதரிப்பதாக முடிவெடுத்தனர். டளஸ், சஜித் ஆகியோர், அரசியல் கைதிகளின் விடுதலை, தனியார் காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட கூட்டமைப்பின் 10 முக்கிய கோரிக்கைகளை ஏற்று, ‘எழுத்துமூல உடன்படிக்கை’யில் ஒப்பமிட்டனர் என்று அந்தக் கூட்டத்தின் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் பகிரங்கமாக வௌிப்படுத்தியிருந்தார்.
ஆனால், இதே செய்தியை ‘டெய்லி மிரர்’ பத்திரிகைத் தளம் பிரசுரித்த போது, அதை ‘குறும்புத்தனமானதும் தவறானதுமான செய்தி’ என்று கூட்டமைப்பின் மற்றொரு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். இதுதான் உண்மையென்றால், அதனை ஏன் மறைக்க வேண்டும்? மக்களின் உணர்வுகளோடு ஊடகங்கள் விளையாடி, வாக்கெடுப்பை தீவிரமாகப் பாதிப்பதற்கு, இது ஒன்றும் மக்கள் வாக்களிக்கும் தேர்தல் இல்லையே? இன்று வரை, அந்த எழுத்துமூல ஒப்பந்தத்தை கூட்டமைப்பு வௌியிடவில்லை என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது.
ஆனால், பொதுஜன பெரமுனவை எதிர்க்கும் கூட்டமைப்பு, டளஸை எப்படி ஆதரிக்கலாம் என்ற கேள்வி இங்கு முக்கியமானது. ரணில் விக்கிரமசிங்கவை, ‘ராஜபக்ஷ விசுவாசி’ என்று கூறும் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், டளஸ் எவ்வளவு பெரிய ராஜபக்ஷ விசுவாசி என்பதனை மறந்துவிட்டார்களா?
ராஜபக்ஷர்களை எதிர்க்கிறோம் என்று சொல்லிவிட்டு, டளஸை ஆதரிப்பதெல்லாம் சின்னப்பிள்ளைத்தனமான அரசியல். அதற்கு அவர், ராஜபக்ஷர்களோடு முரண்பட்டு நிற்கிறார் என்று கூறுவதெல்லாம் சப்பைக்கட்டு. இன்றுவரை டளஸ், பொதுஜன பெரமுன உறுப்பினர் என்பது, இங்கு கோடிட்டுக் காட்டப்பட வேண்டியது!
ஆகவே, இங்கு ‘ரணில் எதிர்ப்பு’ என்ற ஒரு சிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரல்தான், கூட்டமைப்பின் நிலைப்பாடாக்கப்பட முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறன என்பது தெட்டத்தௌிவாகப் புலனாகிறது.
கூட்டமைப்பு, தமிழ் மக்களின் நலன் கருதியோ, கொள்கை சார்ந்தோ தமது முடிவை எடுக்கவில்லை. மாறாக, சிலரின் தனிநபர் வெறுப்பின் அடிப்படையில், தனது முடிவை எடுத்திருக்கிறதோ என்ற எண்ணமே எழுகிறது. இந்த முடிவு தொடர்பில் வௌிப்படையான எதிர்ப்பை, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் முன்வைக்காது இருந்தாலும், அவர்கள் தனிப்பட்ட ரீதியில் இந்த முடிவை ஏற்றுச் செயற்பட்டார்களா, வாக்களித்தார்களா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.
அப்படி இல்லையென்றால், கூட்டமைப்பின் முடிவாக முன்வைக்கப்பட்ட முடிவை, கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் ஏற்கவில்லை என்பதுதான் யதார்த்தமாகிறது. இந்த ஜனாதிபதி தெரிவைப் புறக்கணித்திருந்தால் கூட, கூட்டமைப்பு இப்படி மூக்குடைபட்டு நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டிராது.
‘கூட்டமைப்பு என்பது தனிநபர்களின் சொத்தல்ல’ என்பதை, கூட்டமைப்பின் அனைத்துக் கட்சிகளும் அழுத்தமாகச் சொல்லவேண்டிய காலச்சூழல் எழுந்திருக்கிறது. தனிநபர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவகையில், கூட்டமைப்பின் நடவடிக்கைகள் அமைய முடியாது; அமையக் கூடாது என்று இனியேனும் அமைதி காக்காது, வௌிப்படையாகப் பேச வேண்டிய காலத்தின் நிர்ப்பந்தம், கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.
கூட்டமைப்பு என்பது, ஒருவரின் குரலாக மாறிப்போனால், அது கூட்டமைப்பினதும், தமிழ் மக்களினதும் எதிர்காலத்துக்கு ஏற்புடையதல்ல. தனது போக்கை மறுபரிசீலனை செய்ய வேண்டியதொரு சந்தியில், கூட்டமைப்பு நின்று கொண்டிருக்கிறது.
மறுபுறத்தில், நீதியரசர் சீ.வீ.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் சார்பில் ஆறு கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை, ரணில் விக்கிரமசிங்கவிடம் வழங்கியதாகவும், அதன் பின்னரே ரணிலை ஆதரித்ததாகவும் அந்த ஆறு கோரிக்கைகள் என்ன என்பதையும், அவற்றை ரணில் ஏற்றாரா என்பதையும் அவர் தமிழ் மக்களுக்கு வௌிப்படையாகச் சொல்ல வேண்டும்.
வெறுமனே, ‘கூட்டமைப்பு அந்தப் பக்கம் போனால், நான் இந்தப் பக்கம் போவேன்’ என்ற ரீதியில் இந்த முடிவு எடுக்கபடவில்லை என்பதை, தமிழ் மக்களுக்கு உணர்த்த வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது.