;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்வில் தமிழ்த் தேசிய கட்சிகளின் வெளிப்பாடு!! (கட்டுரை)

0

புதிய ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில், தமிழ்த் தேசிய கட்சிகள் மூன்றும், மூன்று விதமான தீர்மானங்களை எடுத்திருந்தன.

டளஸ் அழகப்பெரும – சஜித் பிரேமதாஸ அணியை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரித்திருந்தது. ரணில் விக்கிரமசிங்கவை, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆதரித்திருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ, பாராளுமன்ற வாக்கெடுப்பை புறக்கணித்திருந்தது.

தமிழ் மக்களைப் பொறுத்தளவில், ராஜபக்‌ஷர்களின் சுவடு இல்லாத ஆட்சிக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி ஆராய்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில், தமிழ்த் தேசிய கட்சிகள் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்கிற விடயம், பேசு பொருளானது.

ஆனால், வழக்கம்போலவே தமிழ் மக்களின் முன்னால், பௌத்த – சிங்கள பேரினவாதிகளே வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்கள். அவர்களில், எது குறைவான தீயதோ, அதுதான் தமிழ் மக்களின் தெரிவாக இதுவரை காலமும் இருந்து வந்திருக்கின்றது. இந்த நோக்கத்தின் அடிப்படையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, டளஸ் – சஜித் அணியை ஆதரிக்க முடிவு செய்தது. விடுதலைப் புலிகள் ஆட்சி செலுத்திய காலங்களிலும் தமிழ் மக்கள், குறைந்த தீயதை ஆதரிக்கும் முடிவுகளுக்கே வந்திருக்கிறார்கள்.

ராஜபக்‌ஷர்களைக் காப்பாற்ற வந்த ஆபத்பாண்டவர் ரணில்; அவரை ஆதரிப்பது என்பது, ராஜபக்‌ஷர்களைக் காப்பாற்றுவதற்கு ஒப்பானது என்பது அடிப்படை வாதம்.

எனினும், அமெரிக்காவில் இருந்த டளஸை, அரசியலுக்கு மீண்டும் அழைத்து வந்தது ராஜபக்‌ஷர்கள். ராஜபக்‌ஷர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தருணத்தில், தங்களுக்கு ஒத்துழைக்கக்கூடிய தரப்பினரை இணைக்கத் தொடங்கியிருந்தனர். அதன் ஒரு கூறாகவே, டளஸும் இலங்கை அரசியலுக்குள் மீண்டும் வந்தார்.

அவர், ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் பெருமளவில் முன்னெடுக்கப்படும் தருணம் வரையில், ராஜபக்‌ஷர்களை ஆதரித்து, அவர்களை பூசிப்பதில் குறியாகவே இருந்தார். எனினும், ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான மக்களின் மனநிலை என்பது, பொதுஜன பெரமுனவில் உள்ள பலருக்கு, தங்களில் அரசியல் எதிர்காலம் குறித்த அச்சத்தை உண்டு பண்ணியது.

அதன்போக்கில், பெரமுனவில் இருந்து தனித்து இயங்குவதாக அறிவித்த குழுக்களில் டளஸின் அணியும் ஒன்று. அவர், குறைந்தது 40 பாராளுமன்ற உறுப்பினர்களை தன்னோடு வைத்திருக்கின்றார் என்ற விடயம்தான், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதி போட்டிக்கான வேட்பாளர் தேர்வில் இருந்து விலகிக் கொள்ள வைத்தது. டளஸ் ஜனாதிபதியானதும் சஜித் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்கிற இணக்கப்பாடுதான், எதிர்க்கட்சிகளை டளஸின் பின்னால் செல்ல வைத்தது.

ரணில் எதிர் சஜித் என்கிற போட்டி ஏற்பட்டிருந்தால், சஜித்தை ஆதரிப்பது சார்ந்து கூட்டமைப்பில் உள்ளவர்களுக்கு பிரச்சினை ஏதும் இருந்திருக்காது. ஆனாலும், ரணிலை ஆதரிப்பது என்பது, டளஸை ஆதரிப்பதைவிட அதிகமான அளவில் ராஜபக்‌ஷர்களைப் பாதுகாக்கும் என்கிற விடயம் முன்நகர்த்தப்பட்டு, டளஸை ஆதரிக்கும் முடிவுக்கு கூட்டமைப்பு வந்தது.

அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதும், டளஸ் – சஜித் அணியோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் கூட்டமைப்பு கைச்சாத்திட்டது. ஆனால், கூட்டமைப்பின் அறிவிப்பு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், மொத்தமுள்ள 10 கூட்டமைப்பு எம்.பிக்களில் குறைந்தது நான்கு பேர் ரணிலை ஆதரித்து வாக்களித்து இருக்கிறார்கள் என்பது, கூட்டமைப்பு தலைமையின் எண்ணம். ரணில் அணியும், தங்களுக்கு ஐந்து கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்து இருக்கிறார்கள் என்ற விடயத்தை வெளிப்படுத்தினர்.

ஏனெனில், கூட்டமைப்பின் தீர்மானத்தை எடுக்கும் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள், கூட்டம் நிறைவுபெற்ற சில நிமிடங்களில் ரணிலுக்கு, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களால் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதுதான், டளஸை கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை, இந்திய தூதரகம் எடுத்தமை தொடர்பிலான ராஜதந்திர நெருக்கடிக்கும் காரணமானது.

ரணில், இந்திய வெளிவிவகார அமைச்சரைத் தொடர்பு கொண்டு பேசுமளவுக்கு விடயம் சென்றிருக்கின்றது. எனினும், அவ்வாறான சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை என்று இந்திய தூதரகமும் கூட்டமைப்பின் தலைமைப்பீடமும் ஊடகங்களுக்கு அறிவித்திருக்கின்றன. ஆனால், அதன் உண்மைத்தன்மை எப்படிப்பட்டது என்பது, மக்களுக்கு விளங்கிக் கொள்ளக் கூடியதுதான்.

ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பு, இரகசியமான முறையில் இடம்பெறாது விட்டிருந்தால், ரணில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதுதான், மில்லியன் டொலர் பண பேரம் பேசப்பட்டு, வாக்குகள் விற்கப்படுவதற்கும் காரணமாகியது.

அத்தோடு, ஜனாதியாக ரணில் தேர்தெடுக்கப்பட்டால், தற்போதையை பாராளுமன்ற பதவிக்காலம் முழுமையாக முடிவடைந்த பின்னரே, தேர்தலொன்று குறித்து சிந்திக்கப்படும் என்கிற வாக்குறுதி, பொதுஜன பெரமுன தொடங்கி அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் ரணிலின் தரப்பால் வாக்குறுதி அளிக்கக்பட்டிருக்கின்றது. அதனால், அவரை வெற்றிபெற வைக்கும் தேவை, கட்சி பேதங்கள் கடந்து பெரும்பான்மை எம்.பிக்களுக்கு ஏற்பட்டது. இதில், கூட்டமைப்பின் எம்.பிக்களுக்கோ, விக்னேஸ்வரனுக்கோ கூட, பெரும் உடன்பாடு இருக்கத்தான் செய்யும்.

ஏனெனில், டளஸ் – சஜித் கூட்டணி, தாங்கள் ஆட்சியமைத்தால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் பொதுத் தேர்தலொன்றுக்கு செல்வோம் என்று அறிவித்திருந்தது. அதுதான், அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சம் கொள்ள வைத்தது.

தற்போதையை பாராளுமன்றத்திலுள்ள அதிகமானவர்களுக்கு, மீண்டும் ஒரு தேர்தலை எதிர்கொள்வதற்கு பாரிய பயம். அதனால், பதவிக்காலத்தை முழுமையாக அனுபவித்துவிட்டு செல்லலாம் என்று நினைக்கிறார்கள். அத்தோடு, பெருமளவில் பேசப்பட்ட பண பேரம் என்பது, ஊழல்வாதிகளான பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு உவப்பானதாக இருந்தது.

விக்னேஸ்வரன் ரணிலை ஆதரிக்க எடுத்த முடிவு என்பது, விசித்திரமான ஒன்று! ஏனெனில், ரணில்- மைத்திரி நல்லாட்சிக் காலத்தில் அவர், கூட்டமைப்பில் இருந்து விலகிச் செல்வதற்கு, “நல்லாட்சி ஆட்சியாளர்களை கூட்டமைப்பு பாதுகாக்கின்றது” என்று காரணம் கூறினார். அத்தோடு, ரணிலுக்கும் சம்பந்தனுக்கும் தனக்கும் இடையிலான சந்திப்பொன்றின் போது, வடக்கு – கிழக்கில் இருந்து இராணுவத்தை அகற்றுவதற்கு தன்னால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ரணில் புறந்தள்ளினார்; அப்போது அதைச் சம்பந்தன் கவனத்தில் கொள்ளாமல் இருந்தார் என்றெல்லாம் 2015 பொதுத் தேர்தல் காலத்தில் விக்னேஸ்வரன் வெளிப்படுத்தியிருந்தார்.

அத்தோடு, “புதிய அரசியலமைப்பு, தமிழ் மக்களின் சமஷ்டிக் கோரிக்கையை ஏற்கவில்லை. சம்பந்தனும் சுமந்திரனும் தமிழ் மக்களை, நல்லாட்சியை காப்பாற்றுவதற்காக ஏமாற்றுகிறார்கள்” என்றார்.

இவையெல்லாம் சேர்ந்துதான், அவரை தனி அரசியல் ஆளுமையைாக முன்னிறுத்தும் வேலையை, தமிழ் மக்கள் பேரவையும் சில வைத்தியர்களும் கல்வியாளர்களும் ஒருசில அரசியல் ஆய்வாளர்களும் முன்னிறுத்தினார்கள். விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினராகியதும், இன்றைக்கு இந்தியாவின் புதுச்சேரி, கோவா ஒன்றியப் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஒத்த அதிகாரங்கள், வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குவதற்கு ரணில் வாக்குறுதி அளித்திருப்பதாக கூறினார். அதனால்தான், ரணிலை ஆதரிக்கும் முடிவுக்குத் தான் வந்ததாகவும் கூறுகிறார்.

இந்தியாவின் ஒன்றியப் பிரதேசங்களின் அதிகார வரம்பு என்பது, துணைநிலை ஆளுநரின் அதிகாரத்துக்கு முன்னால் ஒன்றுமே இல்லை. குறிப்பாக, புதுச்சேரியும் கோவாவும் மத்தியிலுள்ள ஆட்சிக்கு எதிரான நிலைப்பாடுள்ள கட்சியால் ஆளப்படுமானால், அங்கு எதுவுமே நடைபெறாது. அதற்கு துணைநிலை ஆளுநர் அனுமதி வழங்குவதில்லை.

புதுச்சேரியில், காங்கிரஸின் நாராயணசாரி ஆட்சியில் இருந்த போது, கிரன் பேடி துணைநிலை ஆளுநராக இருந்து கொடுத்த இடையூறுகள் வெளிப்படையானவை. கிட்டத்தட்ட இலங்கையின் மாகாண அலகுகள் தற்போது கொண்டிருக்கின்ற அதிகார வரப்பு எவ்வளவோ அது போன்றதொரு நிலையே, கோவா, புதுச்சேரி ஆகியவற்றுக்கும் உண்டு.

அப்படியான நிலையில், அவ்வாறான அதிகாரமொன்றை ரணில் வழங்கத் தயாராக இருக்கிறார்; அதனால் அவரை ஆதரிக்க விக்னேஸ்வரன் தீர்மானம் மேற்கொண்டார் என்பதெல்லாம், மக்களின் மண்டையில் மசாலா அரைக்கும் வேலையாகும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தளவில், அவர்களின் ஜனாதிபதி தேர்தல் கால புறக்கணிப்பு நிலைப்பாட்டை, அதே கோரிக்கைகளுடன் இப்போதும் கடைப்பிடித்து இருக்கிறார்கள். அதில், ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லை.

ஜனாதிபதிக்கான பாராளுமன்ற வாக்கெடுப்பை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் விக்னேஸ்வரனும் கையாண்ட விதம் தொடர்பில் மக்களுக்கு நிறையவே அறியக் கிடைத்திருக்கின்றது.

அதாவது, உள்ளடி வேலைகளின் போக்கிலும், ஊழல்களுக்குத் துணைபோகும் நிலைப்பாட்டிலும் எம்.பிக்கள் செயற்பட்ட விதமும் வெளியாகி இருக்கின்றது. இந்த விடயங்கள், எதிர்கால தேர்தல்களின் போது, மக்களால் நினைவுகூரப்பட்டு, விலைபோகாத தலைவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.