;
Athirady Tamil News

களத்தில் குதித்துள்ள பொருளாதார அடியாட்கள் !! (கட்டுரை)

0

இலங்கையர்களின் கதையாடல்கள், இப்போது வேறு தளத்தை நோக்கி நகர்ந்துள்ளன. இன்னும் சரியாகச் சொல்வதானால் நகர்த்தப்பட்டுள்ளன.

நேற்றுவரை போராட்டத்துக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஆதரவாக இருந்தவர்கள், கருத்துரைத்தவர்கள் பலர் இன்று அரசாங்கத்துடன் ஐக்கியமாகி, பதவிகளைப் பெற்றுள்ளார்கள். அவர்கள், போராட்டத்துக்கும் போராட்டக்காரர்களுக்கும் எதிராக, இன்று கருத்துரைக்கிறார்கள்; அவ்வாறான கருத்துருவாக்கம் ஒன்றைச் செய்கிறார்கள்.

இன்னொரு தரப்பினர், பொருளாதார மீட்சியின் அவசரம் பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள், போராட்டக்காரர்களை அமைதிகாக்கும்படி கோருகிறார்கள்.

மற்றுமொரு தரப்பினர், போராட்டம், வன்முறையைக் கையில் எடுத்ததை அனுமதிக்கவோ அங்கிகரிக்கவோ முடியாது என்றும் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்றும் கோருகிறார்கள்.

இவ்வாறெல்லாம் கோருகிறவர்கள், அடுத்த வேளை உணவுக்கோ, எரிபொருளுக்கோ போராடுபவர்கள் அல்ல. களத்தில் நின்று கண்ணீர்புகையையும் நீர்த்தாரையையும் எதிர்கொண்டது, இவர்களது பிள்ளைகளும் அல்ல. போராடுவதும் மாற்றத்தைக் கோருவதும் மிகச் சாதாரணமான இலங்கையர்களே ஆவர். இன்று, இவர்களை நோக்கியே ஜனாதிபதி முதல் அனைவரும், இவ்வாண்டு இறுதிவரை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கோருகிறார்கள்.

இன்றைய இலங்கையின் சித்திரம் கவலைக்கிடமானது. அதுகுறித்துப் பேசுவார் யாருமில்லை. அண்மையில், உலக உணவுத்திட்டம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அச்சம் தருபவை. ‘63 இலட்சம் இலங்கையர்களுக்கு உணவுப் பாதுகாப்பு இல்லை. இலங்கையின் மொத்த சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். சத்தான உணவுகளின் விலைகள் பொருளாதார நெருக்கடிக்கு முன்னர் இருந்ததை விட, ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது’ என்றும் இவ்வறிக்கை சுட்டுகிறது.

அதேவேளை, இலங்கையின் உணவு இறக்குமதிக்காக மாதந்தோறும் செலவிடப்படும் தொகை 130 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 50 மில்லியன் அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது. இது உணவின்மையையும் பட்டினியையும் அதிகரித்துள்ளது.

விவசாய அமைச்சின் புள்ளிவிவரங்களின் படி, இலங்கையில் திரவ பால் உற்பத்தி 20 சதவீதமும் முட்டை உற்பத்தி 35 சதவீதமும் கோழி இறைச்சி உற்பத்தி 12 சதவீதமும் குறைந்துள்ளன. கால்நடை தீவனம் சரியான முறையில் உற்பத்தி செய்யப்படாமையே இந்நிலைமைக்கு பிரதான காரணம் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நிறையுணவாகக் கருதப்படும் பாலினதும் முட்டையினதும் உற்பத்தி வீழ்ச்சியானது, போசாக்குத் தொடர்பான ஏராளமான வினாக்களை எழுப்புவதோடு, நீண்டகாலப் பாதிப்புகளை இலங்கையர்களுக்கு ஏற்படுத்தவல்லது.

பாராளுமன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, மக்கள் கஷ்டங்களை தாங்கிக்கொள்ளப் பழக வேண்டும் எனத் தெரிவித்தார். இதையே பொருளாதார வல்லுனர்கள் எனப்படுவோர் சொல்கிறார்கள். முன்னாள் மத்தியவங்கி ஆளுநரான இந்திரஜித் குமாரசுவாமி, அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அண்மையில் தெரிவித்திருந்தார்.

பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு குறித்துப் பேசுகின்ற அனைவரும், ஒரே தொனியில் பேசுகிறார்கள். சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதே ஒரே வழி; இலங்கை கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்; மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும்; அரச நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட வேண்டும். இவையே இவர்களது தீர்வாக இருக்கிறது.
இவை அனைத்தும், சாதாரண மக்களின் மீது பொருளாதாரத்தின் சுமையை ஏற்றும் தீர்வுகளே ஆகும். சர்வதேச நாணய நிதியத்திடம் மண்டியிடத் தயாராகவுள்ள இலங்கை அரசாங்கம், இலங்கை மக்களை முழுமையாக அடகுவைக்கிறது.

மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுகின்ற, மானியங்களைக் குறைக்கின்ற, தனியார்மயத்தை துரிதப்படுத்துகின்ற நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு வழங்குவோர், செல்வந்தர்களின் பங்கு என்ன என்பது பற்றி வாய் திறப்பதில்லை.

அண்மையில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், மத்திய வங்கியின் ஆளுநர் மிகமுக்கியமான ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினார். மாதந்தோறும் இலங்கைக்கு ஏற்றுமதி வருமானமாகக் கிடைக்கும் தொகை, ஒரு பில்லியன் (1,000 மில்லியன்) அமெரிக்க டொலர். இதில் 800 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்குத் திரும்பி வருவதில்லை. அவை, இலங்கைக்கு வெளியே பதுக்கப்படுகின்றன. அவை நாட்டுக்குள் வந்தால், மாதாந்த எரிபொருள், உணவு, மருந்துகளைக் கொள்வனவு செய்யப் போதுமானவையாக இருக்கும்.

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை மீண்டும் நாட்டுக்குள் கொண்டுவருதற்கான 2021ஆம் ஆண்டின் 5ம் இலக்க விதியின் படி முழு வருமானமும் அந்நியச் செலாவணியில் நாட்டுக்குள் வந்தாக வேண்டும். ஆனால், அது நடைபெறுவதில்லை. இக்குற்றவாளிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை அரசாங்கம் எடுப்பதுமில்லை.

அதேவேளை, இலங்கையின் வரிவிதிப்பு முறைகள் அரசாங்கத்தின் மிகக்கேவலமான முகத்தை வெளிக்காட்டுகிறது. முத்துகள், வைரங்கள், உயர்ரகக் கைக்கடிகாரங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு, வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பெண்களுக்கு அவசியமான மாதவிடாய்கால துணிகளுக்கு 43சதவீத வரியும் குழந்தைகளுக்கான அணையாடைகளுக்கு 15சதவீத வரியும் விதிக்கப்படுகிறது. இவ்வாறான வரிவிதிப்புகளையும் வரிச்சலுகைகளையும் உருவாக்கிய அதிகாரிகள், அங்கிகரித்த அரசாங்கம் என்பன, மிகச்சாதாரணமான இலங்கையர்களுக்கு சொல்லும் செய்தி என்ன?

இலங்கையில் பொருளாதார அடியாட்கள், பல்வேறு வகைகளில் இயங்குகிறார்கள். ஒருசிலர், இவ்வாறு நாட்டுக்குள் வரவேண்டிய அந்நியச் செலாவணியை வெளிநாட்டில் பதுக்குகிறார்கள்.

இன்னும் சிலர் அரசாங்கப் பதவிகளில் இருந்தபடி, இவ்வாறான செயற்பாடுகளுக்கு வசதி செய்து கொடுக்கிறார்கள். இவ்வாறான செயல்கள் தொடர அனுமதியளிக்கிறார்கள். இவர்கள் அனைவரும், நாட்டுக்குள் இயங்கும் செயற்பாட்டுப் பொருளாதார அடியாட்கள்.

இன்னும் சிலர் அரசாங்கத்தின் கொள்கைவகுப்பில் செல்வாக்குச் செலுத்தும் பொருளாதார அடியாட்கள். அவர்கள் தான் சர்வதேச நாணய நிதியத்திடம் சரணடையக் கோருவது, சமூகநல வெட்டுகளைக் கோருவது போன்ற வேலைகளைச் செய்பவர்கள்.

மூன்றாவது வகை, நாட்டின் தலைவர்களாக, அமைச்சர்களாக இருந்து நேரடியாக, நவதாராளவாதத்தின் அடியாட்களாக இயங்குபவர்கள். இவர்கள் அனைவரும் வகைதொகையின்றி இலங்கையில் உலா வருகிறார்கள்.

இந்தப் பொருளாதார அடியாட்கள், வரன்முறையின்றி இயங்குவதற்கு இயல்பான எதிர்ப்பு உருவாகாத சூழல் அவசியம். அதையே போராட்டக்காரர்களை நசுக்குவதன் ஊடு, அரசாங்கம் செய்ய முயல்கிறது.
பொருளாதார அடியாட்களோடு, ஊழலும் அதிகாரத் துஷ்பிரயோகமும் பின்னிப் பிணைந்தவை. இல்லாவிட்டால் மத்திய வங்கிப் பிணைமுறி விடயத்தில், இலங்கையால் தேடப்படுகின்ற குற்றவாளியை ‘சீஎன்என்’ தொலைக்காட்சி பேட்டி எடுக்கிறது. அவரும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது பற்றி வகுப்பெடுகிறார். இதையெல்லாம், கேட்டுக்கேள்வியின்றி சகிக்க வேண்டிய நிலையில்தான் இலங்கையர்கள் இருக்கிறார்கள்.

இந்தப் பொருளாதார அடியாட்களும் அவர்தம் துதிபாடிகளும் அடிக்கடி சொல்கின்ற இரண்டு விடயங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.

முதலாவது, அரச சேவையில் பணியில் உள்ளவர்களைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்பது. இந்த அடியாட்களது கோரிக்கை யாதெனில், பணியாட்களைக் குறைத்து, துறைகளைத் தனியார்மயமாக்க வேண்டும் என்பதாகும். தனியார்மயமாக்குவதன் ஊடு வினைத்திறனான சேவை கிடைக்கும் என்பதே இவர்களின் வாதம்.

இலங்கையில் வெற்றிகரமாக இயங்கிவந்த அரச பஸ் சேவையை, 1979இல் தனியார்மயமாக்கியதன் கோர விளைவுகளை, இலங்கையர்கள் நன்கு அறிவார்கள். இன்றும் பின்தங்கிய கிராமங்களுக்கு இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்களே செல்கின்றன. அரசசேவையைத் தனியார்மயமாக்குவது எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு, பஸ் சேவை தனியார்மயமாக்கம் நல்லதோர் உதாரணம்.

இலங்கையின் அரசதுறையின் அரசியல்மயமாக்கமும், வாடிக்கையாளர் அரசியலும் வினைத்திறனையும் உற்பத்தித்திறனையும் சீரழித்துள்ளன. அதேவேளை இலங்கையில் எஞ்சியுள்ள சமூகநலன்கள் அடித்தட்டு மக்களுக்குப் போய்ச் சேர்வதற்கு, வினைத்திறனான அதேவேளை போதுமான ஊழியர்களைக் கொண்ட அரசசேவை அவசியம்.

ஆட்கள் குறைப்பு பற்றிய விடயத்தில், நாம் ஒன்றைக் கவனிக்கத் தவறுகிறோம். இலங்கையில் 1.5 மில்லியன் பேர் அரசபணிகளில் இருக்கிறார்கள், சராசரியாக 100 பேருக்குப் பணிசெய்வதற்கு 6.8 பேர். ஐரோப்பாவில் சராசரியாக 100க்கு7, ஸ்கன்டினேவியாவில் சராசரி 100க்கு 9.
இலங்கை போன்ற அசமத்துவங்கள் நிறைந்த, குறைந்த வருமானமுடைய ஒரு நாட்டின் நலனுக்கு, அரசசேவையே அச்சாணி.

ஐ.நாவின் சமூகக் குறிகாட்டிகளில் ஏனைய தென்னாசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கை முன்னணியில் இருப்பதும், குறிப்பாகக் கல்வியிலும் மருத்துவத்திலும் இலங்கை வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இணையான குறிகாட்டிகளைக் கொண்டிருப்பதையும் சாத்தியமாக்கியது, இலவசக் கல்வியும் இலவச மருத்துவமுமாகும்.

பொருளாதார அடியாட்கள் எம்மிடம் மீதமுள்ள சமூக நலன்களையும் அது தருகின்ற வளமான கல்வி, நலமான உடல்நிலை ஆகியவற்றையும் பறித்து, அனைத்தையும் வியாபாரமாகவும் இலாபத்துக்கானதாகவும் மாற்ற முயல்கிறார்கள்.

அவதானமாக இல்லாவிடின், துன்பத்தில் உழல்வது எமது எதிர்காலச் சந்ததியும்தான் என்பதை நினைவில் கொள்க!

You might also like

Leave A Reply

Your email address will not be published.