மக்கள் பிரதிநிதிகளின் கைகளுக்குள் இடைக்கால ஜனாதிபதி !! (கட்டுரை)
2022 ஜூலை 20 ஆம் திகதியும் இலங்கையின் அரசியல் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும். இன்றையதினம்தான் மக்கள் பிரதிநிதிகளால் இடைக்கால ஜனாதிபதியொருவர் தெரிவு செய்யப்படவிருக்கின்றார். அதற்கான இரகசிய வாக்கெடுப்பு, பாராளுமன்றத்தில் இன்று (20) நடைபெறவிருக்கின்றது.
இதற்கான வேட்புமனுக்கள் நேற்று (19) ஏற்றுக்கொள்ளப்பட்டன. சஜித் பிரேமதாஸ, டலஸ் அழகபெரும, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் பெயர்கள் வெளிப்படையாகவே அடிபட்டன. தானும் போட்டியிடப்போகின்றேன் என வெளிப்படையாக பிரசாரம் செய்யாவிடினும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்கான காய்நகர்தல்களை கச்சிதமாய் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தான் விலகிக்கொண்டு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான டலஸ் அழகபெருமவை ஆதரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ அறிவித்து, முன்மொழிந்தார். ஆகையால், இன்றைய களத்தில் பதில் ஜனாதிபதியுடன் சேர்த்து மூன்று வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இடைக்கால ஜனாதிபதிக்காகப் போட்டியிடவிருப்போரின் ஆதரவைத் திரட்டிக்கொள்ளும் வகையில் பல கட்சிகளுக்கு இடையில் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அவையெல்லாம் அதிகாரத்தை பிடித்துக்கொள்ளும் வகையிலேயே அமைந்திருந்தன எனினும், இடைக்கால வேலைத்திட்டம் எவையும் முன்வைக்கப்படவில்லை.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, சர்வகட்சி அரசாங்கம், ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டிக்கவேண்டும், பழைய வழக்குக் கோவைகளை தூசிதட்டி மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் மற்றும் குறுகிய காலத்துக்குள் பொதுத்தேர்தல் உள்ளிட்டவற்றை முன்வைத்திருந்தார். அவருக்கான வெற்றிவாய்ப்பு குறைவாக இருக்கிறது ஏனைய இரண்டு வேட்பாளர்களுக்கும் இடையிலேயே போட்டிகள் நிலவுகின்றன.
எமது நாட்டை பொறுத்தவரையில், மக்கள் பிரதிநிதிகளால் இடைக்காலத்துக்கு ஜனாதிபதியொருவர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர், 1993 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதியன்று அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர், பதில் ஜனாதிபதியாக பிரதமர் டி.பீ.விஜேதுங்க கடமையை ஏற்றார்.
இடைக்கால ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்கோரலின் போது, அவருக்கு எதிராக எவருமே போட்டியிடவில்லை என்பதால், இடைக்கால ஜனாதிபதியாக ஏகமனதாக நியமிக்கப்பட்டார். இன்றைய நிலைமை தலைகீழாக இருக்கின்றது.
இடைக்கால ஜனாதிபதியாக யார்? நியமிக்கப்பட்டாலும் அவருக்கு முன்பாக உடனடியாக தீர்க்கப்படவேண்டிய மக்களின் பிரச்சினைகள் பல சவாலாக இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மக்களின் வயிற்றுப் பசிக்கு தீர்வு காணும் வகையிலான திட்டங்களை முன்னெடுக்காது அல்லது கணக்கிலெடுக்காது செயற்படுவார் எனின், அவருக்கு எதிராகவும் மக்கள் கிளர்ந்தெழுவர் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
ஆக, மக்களின் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து, வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே, இடைக்கால ஜனாதிபதியின் முன்பாக இருக்கும் சவால்களில் பிரதான சவலாகும் என்பதை நினைவூட்டுகிறோம்.