புலம்பெயர் தமிழர்கள் விடயத்தில் நிலையான கொள்கை வேண்டும் !! (கட்டுரை)
இலங்கையில், அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையிலான போர் முடிவடைந்து, கடந்து சென்ற 13 ஆண்டுகளில், இலங்கை அரசாங்கங்கள், இரண்டு முறை புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகளைத் தடை செய்துள்ளன. இரண்டு முறை, சில அமைப்புகளின் மீதான தடையை நீக்கியுள்ளன. கடந்த வாரம் இரண்டாவது முறையாக, அவ்வமைப்புகள் மீதான தடையை, அரசாங்கம் நீக்கியுள்ளது.
மேலும் விளக்கமாகக் கூறுவதாயின், 2014ஆம் ஆண்டுக்குப் பின்னரான எட்டு ஆண்டுகளிலேயே, இவ்வாறு அந்த அமைப்புகள் தடைசெய்யப்பட்டு, மீண்டும் அத்தடை நீக்கப்பட்டுள்ளது. ஆயினும், இந்நான்கு சந்தர்ப்பங்களிலும், தடை செய்யப்பட்ட மற்றும் தடை நீக்கப்பட்ட அமைப்புகளின் எண்ணிக்கை வேறுபட்டுள்ளது. குறிப்பிட்ட சில அமைப்புகள் மட்டுமே, இரண்டு முறையும் தடைசெய்யப்பட்டு, இரண்டு முறையும் தடை நீக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழ் அமைப்புகளைத் தடை செய்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், ராஜபக்ஷர்களே, அதற்கான முடிவை எடுத்தனர். தடையை நீக்கிய இரண்டு சந்தர்ப்பங்களிலும் ரணில் விக்கிரமசிங்கவே, அதற்கான முடிவை எடுத்தார்.
2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம், 16 அமைப்புகளையும் 424 நபர்களையும், தடைப் பட்டியலில் உள்ளடக்கியது.
அதற்கு அடுத்த வருடம், அரசாங்கம் மாறியதோடு, புதிய அரசாங்கத்தின் பிரதமரான ரணிலின் ஆலோசனையின் பேரில், 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி (20 மாதங்களுக்குப் பின்னர்), எட்டு அமைப்புகளினதும் 267 நபர்களினதும் தடைகள் நீக்கப்பட்டன.
அதேபோல், கடந்த வருடம் பெப்ரவரி 25ஆம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம், ஏழு புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும் 389 நபர்களையும் தடைப் பட்டியலில் உள்ளடக்கியது. அதன் பின்னரும், ஜனாதிபதி ரணில், சுமார் 20 மாதங்களுக்குப் பின்னர், ஆறு அமைப்புகளினதும் 316 நபர்களினதும் தடையை நீக்கியுள்ளார்.
அதாவது, 2014 ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்ட சில அமைப்புக்களினதும் நபர்களினதும் அத்தடை இன்னமும் நீக்கப்படவில்லை. 2014ஆம் ஆண்டு அரசாங்கம் தடை செய்த அமைப்புகளில் சில அமைப்புகள், அப்போது இயங்கும் நிலையில் இருக்கவில்லை என்றும், சில நபர்கள் அத்தடை விதிக்கப்படுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்னரே, இறந்திருந்ததாகவும் ஊடகவியலாளர் டி.பி.எஸ் ஜெயராஜ் குறிப்பிட்டு இருந்தார்.
வேறு சில அமைப்புகள் முதலாவது முறை தடைசெய்யப்பட்டு, அத்தடை நீக்கப்பட்டதன் பின்னர், இரண்டாவது முறை (கடந்த வருடம்) தடை செய்யப்படவில்லை. சில அமைப்புகள், முதலாவது முறை தடை செய்யப்படவில்லை. ஆனால், இரண்டாவது முறை தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. உலகத் தமிழர் பேரவை போன்ற சில அமைப்புகள், இரண்டு முறையும் தடை செய்யப்பட்டு, இரண்டு முறையும் தடை நீக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறியே, அரசாங்கம் இவ்வாறான தடையை விதிக்கிறது. அவ்வாறான அச்சுறுத்தல் இருப்பதாக, பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளே, அறிக்கை மூலம் அரசாங்கத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
எனினும், இதில் ஒரு விசித்திரமான விடயமும் நடைபெறுகிறது. அரசாங்கங்கள் மாறினாலும், பாதுகாப்பு அமைச்சின் முக்கிய உயர் அதிகாரிகள், எப்போதும் மாற்றப்படுவதில்லை. அந்த வகையில் பார்த்தால், அந்த அதிகாரிகள், இந்த அமைப்புகளை தடை செய்வதையும் அத்தடையை நீக்குவதையும் நியாயப்படுத்த வேண்டியுள்ளது.
உதாரணமாக, கடந்த வருடம், இந்த அமைப்புகள் தடை செய்யப்பட்ட போதும் தற்போது, அத்தடை நீக்கப்பட்டுள்ள போதும், ஜெனரல் கமல் குணரத்தனவே பாதுகாப்புச் செயலாளராக இருந்துள்ளார். இது, சில அரசியல்வாதிகள், அரசியலமைப்பின் 17ஆவது, 18ஆவது, 19ஆவது, 20ஆவது திருத்தங்களுக்கு ஆதரவாக வாக்களித்ததை நினைவூட்டுகிறது.
இவ்வனைத்து விடயங்களையும் கருத்திற்கொள்ளும் போது, பலமான காரணங்களுக்காக இவ்வமைப்புகள் தடைசெய்யப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது. கோட்டாபய ராஜபக்ஷ இன்றுவரை பதவியில் இருந்தால், இம்முறை இவ்வமைப்புகளின் தடை நீக்கப்பட்டு இருக்குமா?
எனவே, இந்தத் தடையானது, அரசியல் இலாபம் கருதி மேற்கொள்ளப்படும் ஒன்றேயல்லாமல், பாதுகாப்பு காரணங்களுக்கானது அல்ல என்பதை, எடுத்துக் காட்டுகிறது.
2015ஆம் ஆண்டு, எட்டு அமைப்புகள் மீதும் 267 நபர்கள் மீதும் விதிக்கப்பட்டு இருந்த தடையை, மைத்திரி- ரணில் அரசாங்கம் நீக்கிய போது, மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள், அதனை எதிர்த்துப் பெரும் கூச்சலை எழுப்பினர். ஆனால், இம்முறை தடை நீக்கப்பட்ட போது, அவர்கள் அதைப் பற்றி எதுவும் தெரியாதவர்களைப் போல், மௌனமாக இருக்கிறார்கள். ஏனெனில், அவர்களால் நாடாளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியே, இம்முறை இந்த முடிவை எடுத்திருக்கிறார். அன்று, இவர்களது எதிர்ப்பு, வெறும் இனவாதத்தின் காரணமாகவே எழுப்பப்பட்டது என்பதையே இது காட்டுகிறது.
அதேவேளை, தமிழ் தலைவர்களும், நல்லாட்சி அரசாங்கம் இவ்வமைப்புகள் மீதான தடையை நீக்கியதைப் போலல்லாது, வேறுபட்ட நோக்கத்துடனேயே இம்முறை நீக்கியுள்ளதாக கருதுகின்றனர். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தைக் கருத்தில் கொண்டே, இத்தடை நீக்கம் இடம்பெற்றுள்ளது என்றும் நாடு எதிர்நோக்கி இருக்கும் பெரும் வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினை காரணமாக, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை இலங்கையில் முதலீடு செய்யத் தூண்டும் நோக்கத்திலேயே, தடை நீக்கம் இடம்பெற்றுள்ளது என்றும், அவர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் தாம், கடந்த 10 ஆம் திகதி அவரைச் சந்தித்ததாகவும் அப்போது அவர், புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பான திட்ட ஆவணம் ஒன்றைத் தம்மிடம் சமர்ப்பித்ததாகவும், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவருமான சி. வி விக்னேஸ்வரன் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துக்கு, புலம்பெயர் தமிழர்கள் மூலம் முதலீடுகளை வரவழைத்துக் கொள்ளும் தேவை இருக்கலாம். ஆனால், ரணிலைப் பொறுத்தவரை இதுவே இத்தடை நீக்கத்துக்கு ஒரே காரணம் எனக் கூற முடியாது. ஏனெனில், அவரது ஆலோசனையின் பேரிலேயே, 2015ஆம் ஆண்டிலும் தடை நீக்கம் மேற்கொள்ளப்பட்டது. அன்றைய அரசாங்கம் இந்த அமைப்புக்கள் மீதான தடையை நீக்கியது மட்டுமல்லாது, அப்போதைய வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர, புலம்பெயர் தமிழர்களின் விழாவை இலங்கையில் நடத்தவும் திட்டமிட்டிருந்தார். தடையை நீக்கியது சரியான நடவடிக்கையாக இருந்தாலும், அரசாங்கத்துக்கு உள்ளேயே எழுந்த எதிர்ப்பின் காரணமாக, மங்கள அந்த யோசனையைக் கைவிட்டார்.
எனினும், இந்த அமைப்புகள் மீதான தடையை நீக்கி, அவற்றின் மூலம் மனித உரிமைகள் பேரவையின் நெருக்குவாரத்தை குறைக்கும் நோக்கம் சிலவேளை, ஜனாதிபதி ரணிலின் மனதில் இருக்கலாம். கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா பொதுச் சபையின் 76ஆவது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் நகருக்குச் சென்றிருந்த கோட்டா, செப்டெம்பர் 19ஆம் திகதி, ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரேஸை சந்தித்தார். அந்தச் சந்திப்பின் போதும், 22ஆம் திகதி பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போதும், தமது அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், நாடு திரும்பிய சில நாள்களில், அப்போதைய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், “தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை” என்றார்.
புலம்பெயர் தமிழர்கள், வௌிநாடுகளில் இலட்சக் கணக்கில் வாழ்கின்றனர். அவர்களில் பலர், அந்நாடுகளில் உயர் அந்தஸ்தில் உள்ளனர். பலர், பெரும் செல்வந்தர்களாக உள்ளனர். அவர்கள், இந்நாட்டில் முதலீடு செய்வதால், இலங்கையின் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டலாம். அதேவேளை, இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமது உறவினர்களின் சிந்தனையிலும், அவர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.
எனவே, அவர்களது அமைப்புகளைத் தடை செய்து, அவர்களை முற்றாகப் புறக்கணிக்க முயல்வது, புத்திசாலித்தனமானது அல்ல. அவர்களை அரவணைத்துச் செல்வதே, நாட்டின் இனமத நல்லிணக்கத்துக்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் பேருதவியாகவே அமையும்.
ஆனால், அவர்கள் விடயத்தில், அரசாங்கத்தின் கொள்கை, ஆட்சியாளர்கள் மாறும் போதெல்லாம் மாறும் கொள்கையாக இருக்கிறது. இதனால், மேற்குறித்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாதுள்ளது.
வடக்கு, கிழக்கில் முதலீடு செய்வதானது, வெறுமனே அரசாங்கத்துக்கு செய்யும் உதவியல்ல என்பதையும் புலம்பெயர் தமிழர்கள் உணர வேண்டும்.