;
Athirady Tamil News

பிஸ்கட் அத்தியாவசியம் தானா? (கட்டுரை)

0

நாட்டில் பணவீக்கம் அதிகரித்துச் செல்வதுடன், அத்தியாவசியமானது மற்றும் அத்தியாவசியமற்றது என சகல பொருட்களின் விலைகளும் கடந்த சில மாதங்களில் பெருமளவில் அதிகரித்துள்ளதை எம்மால் உணர முடிகின்றது. விலைவாசி உயர்வுக்கேற்ப மக்களின் வருமானங்கள் உயர்வடையாமை மற்றும் செலவுகளை சமாளிக்க வருமானம் போதியதாக இல்லாத நிலையில், அதிகளவு சிந்தித்து செலவிடுவது மற்றும் பொருட்கள் கொள்வனவில் ஈடுபடுவதற்கு மக்கள் தம்மை மாற்றி வருகின்றனர்.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதில் இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இறக்குமதித் தீர்வை அதிகரிப்பும் தாக்கம் செலுத்துகின்றது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நிகராக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலைகளும் பெருமளவில் அதிகரித்துள்ளன.

அவ்வாறு இந்தவாரம் பெரிதும் பேசப்பட்ட விடயமாக பிஸ்கட் மற்றும் இனிப்புப் பண்டங்களின் விலைகளின் அதிகரிப்பு பற்றிய விடயமாகும். குறிப்பாக இந்தப் பண்டங்களின் விலை அதிகரிப்பை கடந்த சில மாதங்களாக அவதானிக்க முடிவதுடன், அவற்றின் விலை அசாதாரணமான வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர்கள் கருத்துக்களைத் தெரிவித்திருந்தன. இவை தொடர்பான பல கண்டனக் கருத்துக்கள் மற்றும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக காண முடிகின்றது.

பிஸ்கட் என்பது வயது வேறுபாடின்றி சகலரும் அருந்தும் ஒரு தின்பண்டமாக அமைந்துள்ளது. அதுவும் விசேடமாக தற்போது உணவுப் பொருட்களின் விலைகள் பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில், சில வீடுகளில் பிஸ்கட்களை ஒரு வேளை உணவாகக் கொண்டு வாழும் நிலையையும் அவதானிக்க முடிகின்றது. கிராமிய மட்டங்களில் காணப்படும் சிறுவர்களுக்கு இந்த பிஸ்கட் வகைகளே அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் உணவுப் பண்டமாக அமைந்துள்ளது. விருந்தினர்களாகச் செல்லும் போதும் நாம் பிஸ்கட் பொதிகளை அன்பளிப்பாக கொண்டு சென்று வழங்கி மகிழ்வதுண்டு.

இந்த விலை அதிகரிப்புக்கான காரணத்தை விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இந்த வாரத்தின் முற்பகுதியில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நாட்டின் உள்நாட்டு பிஸ்கட் மற்றும் இனிப்புப் பண்ட உற்பத்தியாளர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதுவே முதல் தடவையாக தாம் ஊடகங்களுக்கு முன்னால் ஒன்றாக பிரசன்னமாகி கருத்து வெளியிடுவதாக இந்த நிகழ்வில் பேசுகையில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

பிஸ்கட்கள் மற்றும் இனிப்புப் பண்டங்கள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் விசேட ரக கோதுமை மாவின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதுடன், அவற்றை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியாமை, நிர்ணய விலையை விட அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியமை, தாவரக் கொழுப்பின் விலை அதிகரிப்பு, மரக்கறி எண்ணெய் விலை அதிகரிப்பு போன்றவற்றை இவர்கள் இந்த விலை அதிகரிப்புக்கான காரணிகளாகத் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்தும் டொலரின் மதிப்பு குறைவடையும் போது தாமும் தமது உற்பத்திகளின் விலையை குறைப்பதாக தெரிவித்திருந்ததுடன், அதுவரையில் சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்படுவதைப் போல தமது உற்பத்திகளை பகிஷ்கரிக்க வேண்டாம் என்றும், அவற்றை தொடர்ந்து கொள்வனவு செய்து, நுகர்ந்து, உள்நாட்டு வியாபாரங்களுக்கு கைகொடுக்குமாறும் அவர்கள் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவ்வாறு பொது மக்கள் தமது உற்பத்திகளை வாங்குவதைத் தவிர்த்தால், தமக்கு மாற்று வழியின்றி, தமது தொழிற்சாலைகளை மூடிவிட வேண்டிய நிலை ஏற்படும் என்பதுடன், தமது தொழிலைக் கூட இழந்து வருமானமிழக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.

இவ்வாறு இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது மற்றுமொரு சர்ச்சையான கருத்தும் முன்வைக்கப்பட்டிருந்தது. அதாவது உள்நாட்டு பிஸ்கட் வகைகளை விலை அதிகரிப்பின் காரணமாக பகிஷ்கரிக்குமாறு தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரச் செயற்பாடுகள் வேண்டுமென்றே எவ்வித அடிப்படைகளுமின்றி முன்னெடுக்கப்படுவதாகவும், இதன் பின்னால் சதி காணப்படுவதாகவும், வெளிநாட்டிலிருந்து குறைந்த விலையில் பிஸ்கட் வகைகளை நாட்டுக்குள் கொண்டு வந்து விற்பனை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இவ்வாறு இடம்பெறுகின்றதா என தாம் சந்தேகிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

சரி, பிஸ்கட் என்பது ஒரு அத்தியாவசிய பொருளா? உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பால் தாமும் விலையை அதிகரிப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் அரிசி, சீனி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்த போதிலும், பொது மக்கள் அவற்றை சொற்ப அளவிலேனும் கொள்வனவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளனர். ஆனாலும் பிஸ்கட் என்பது அவ்வாறானதல்ல. கண்டிப்பாக வாங்க வேண்டும் எனும் நிர்ப்பந்தங்கள் எதுவுமில்லை.

இதனை அடிப்படையாகக் கொண்டே சமூக வலைத்தளங்களில் “நீங்கள் பிஸ்கட் உண்ணாவிடின் உயிரிழக்கமாட்டீர்கள். இந்த அளவுக்கதிகமான விலை கொடுத்து வாங்குவதைத் தவிருங்கள்” எனும் பதிவுகள் இடப்பட்டிருந்தன.

அத்துடன், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பிஸ்கட் வகைகளின் தரம் மற்றும் சுவை ஆகியவற்றில் வித்தியாசத்தை அண்மைக் காலத்தில் உணரக்கூடியதாக இருந்ததாக நுகர்வோர் விசனம் தெரிவித்திருந்தனர். குறிப்பாக, தரம் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், வழமையாக பிஸ்கட் பொதி ஒன்றை உடைத்து சிலதை நுகர்ந்த பின்னர் அவற்றை போத்தலில் காற்றுப்புகாத வகையில் அடைத்து வைத்தால், சில நாட்களுக்கு அவற்றை அதே மொறுமொறுப்புடன் நுகரக்கூடியதாக இருக்கும். சுவையிலும் மாற்றம் இருக்காது. ஆனாலும் தற்போது சில ரக பிஸ்கட்கள் பொதியை உடைத்தவுடனே நுகர வேண்டிய நிலையிலுள்ளதாகவும். சில தினங்களுக்கு போத்தலில் இட்டு வைத்து நுகர முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக, உற்பத்தி நிறுவனங்கள் தமது சந்தைப்படுத்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, பொது மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத விலைகளில் அமைந்த பொதிகளை சந்தையில் அறிமுகம் செய்யாமல், சிறிய அளவுகளிலான பொதிகளை சந்தையில் அறிமுகம் செய்தால் அவர்களால் நுகரக் கூடியதாக இருக்கும்.

அத்துடன், தமது முக்கியமான தகவல்களை ஊடகங்கள் வாயிலாக பொது மக்கள் மத்தியில் கொண்டும் செல்லும் முன்னர் தாம் தெரிவிக்க இருக்கும் கருத்துக்கள் பற்றி ஊடக ஆலோசகர்கள், பொது உறவுகள் அமைப்பு நிபுணர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதும் சிறந்தது. அப்போது சரியான தகவல் வெளிப்பட்டு, பொது மக்களை சென்றடையும். இலங்கையின் பிஸ்கட் உற்பத்தியாளர்கள் கற்றுக் கொண்ட ஒரு பாடமாக இது அமையட்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.