;
Athirady Tamil News

மூழ்கி கிடக்கும் முஸ்லிம் அரசியலும்! (கட்டுரை)

0

சுயநல, விண்டாவாத, சர்வாதிகார போக்குள்ள ஒருவர் எவ்வித நேரடி அனுபவமுமின்றி ஒரு அமைப்பினது அல்லது வீட்டினது அல்லது நாட்டினது தலைவராக வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஆசியாவின் ஆச்சரியமாக பார்க்கப்படும் இலங்கை தேசமே சாட்சியாக இருக்கிறது. மூன்று தசாப்தங்களுக்கு குறையாமல் உள்நாட்டு யுத்தத்தை சந்தித்து, சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வெள்ளம், சூறாவளி போன்ற சகல இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்டு கொரோனாவின் தாக்குதலையும் சந்தித்து, ஈஸ்டர் தாக்குதலையும் தாங்கிக்கொண்டு அடிமேல் அடிவாங்கி சோதனைமேல் சோதனையை சந்தித்து பொருளாதாரத்திலும் உள்நாட்டு கட்டமைப்பிலும் சரிவை சந்தித்து அயல்நாட்டு மக்களின் உதவியில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை தேசம் ஏனைய ஜனநாயக நாடுகளுக்கு இந்த நூற்றாண்டின் சிறந்த பாடமாக அமைந்துள்ளது.

விண்டாவாத, சர்வாதிகார போக்குள்ள ஒருவராக நோக்கப்பட்ட “கோத்தா வீட்டுக்கு போ” என்று ஆரம்பித்த அரகல உதிரியாக மஹிந்தவை பலியெடுத்தது. அதன் விளைவாக பிரதமரான ரணில் அரகலவின் உதவியுடன் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தனது கனவில் இருந்த ஜனாதிபதி கதிரையை கும்கியாக நுளைந்து 134 எம்.பிக்களின் உதவியுடன் அடைந்தார். அதன் பின்னர் தனது எண்ணத்தில் உருவான சர்வகட்சி அரசாங்கத்துக்காக அரசியல் கட்சிகள் பலவற்றுடன் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட யோசனை தயாராகி வருகிறது.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் 11 கட்சிகளின் தலைவர்கள், தமிழ், முஸ்லிம், மலையக கட்சிகளுடனான பேச்சுவார்த்தை என்பன நீள்கிறது. இது சம்பந்தமாக தமிழ் மக்களின் பிரதான அரசியல் இயக்கமான தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி ரணிலை சந்தித்து தமது கொள்கைகளை முன்வைத்து தேவைகளை வலியுறுத்தியிருந்தது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்க முன்வந்துள்ளமை தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்ளும் வாசலைத்திறக்க வைத்துள்ளதாக வரவேற்றுள்ளார். காலத்துக்கேற்ற இந்த முடிவு மூத்த தமிழ்த்தலைவர் இரா.சம்பந்தனின் அரசியல் தீர்க்கதரிசனத்தின் அடையாளமாகவுள்ளது. சர்வகட்சி அரசாங்கத்தை ஆதரிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவை வரவேற்ற அமைச்சர் நஸீர் அஹமட் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சர்வகட்சி அரசாங்கம் அவசியம் அமைக்கப்பட வேண்டும். இந்தத்தேவையிலிருந்து பொறுப்புள்ள அரசியல் கட்சிகள் விலகியிருக்க முடியாது. இந்த சூழ்நிலையில் முஸ்லிம் தலைமைகள் வியூகம் வகுக்காமலிருப்பது ஏன்? அரசியல் தீர்வில் நாட்டமில்லையா? அல்லது தங்களது சமூகத்துக்கு பிரச்சினைகள் இல்லையென்றா? இத்தலைமைகள் சிந்திக்கின்றன. என கேள்வியெழுப்பியிருந்தார்.

யானையை சந்தித்த குதிரை

இவைகளுக்கு மத்தியில் ஜனாதிபதியின் சர்வகட்சி முன்னெடுப்பு அழைப்பிற்கான பதிலை கடிதம் முலம் ஜனாதிபதியிடம் கையளித்த தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா, நாட்டில் தற்போது நிலவும் சமூக பொருளாதார நெருக்கடி நிலைமைகளை தீர்ப்பதற்கான சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து ஒத்துழைப்பு வழங்குதற்கு ஆதரவினை வெளிப்படுத்தியிருக்கிறார். இச் சந்திப்பின்போது தேசிய காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித்தலைவர் ஏ. உதுமாலெப்பையை தவிர யாரும் கலந்து கொண்டிருக்கவில்லை. நாடு எதிர் கொள்கின்ற சமகாலப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு சகல இனங்களுக்குமான சமூக பொருளாதார அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான புதிய அரசியலமைப்பினை பாராளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டிய தருணம் இது என்பதன் அவசியத்தை ஜனாதிபதி ரணிலுக்கு வலியுறுத்தியது.

மேலும் காலத்தின் தேவை கருதி இருபதாவது திருத்தத்தில் அவசியமான திருத்தங்களை மாத்திரம் கொண்டு வருவதன் மூலம் தீர்வு காண்பதோடு புதிய அரசியலமைப்பினை அறிமுகம் செய்வதன் மூலம் நிரந்தர தீர்வினை காண்பது அவசியமானது என்பதை தேசியகாங்கிரஸ் இதன்போது வலியுறுத்தியுள்ளது. மேலும் புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை பூர்த்தி செய்யும்வரை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினை முற்றாக நீக்குவது என்பது, நாட்டின் இறைமை, தேசிய பாதுகாப்பு மற்றும் சகல இனங்களுக்குமான ஜனநாயக காப்பீடு போன்ற விடயங்களை கருத்திற்கொள்கையில் தற்போது உசிதமானதல்ல என்பதையும் தேசிய காங்கிரஸ் தலைவர் இச்சந்திப்பின் போது தெளிவாகச் சுட்டிக்காட்டிருந்தார். மேலும் நாட்டின் சுதேச வளங்களை முறையாகப் பயன்படுத்தி போஷாக்குணவு உட்பட பால் உற்பத்தி மற்றும் குறைந்த விலையில் எரிபொருள் வினியோகம் போன்ற நீண்டகால பிரச்சினைகளுக்கும் முறையான நிரந்தர திட்டங்களை அறிமுகம் செய்வதன் முக்கியத்துவம் பற்றியும் அதற்கான பொறிமுறை பற்றியும் தேசிய காங்கிரஸ் தரப்பு ஜனாதிபதி உடனான இச்சந்திப்பில் வலியுறுத்தயமை இங்கு சிறப்பம்சமாக அமைந்துள்ளது.

ஆனாலும் அமைச்சரவை அமைச்சர் பதவி, கிழக்கு ஆளுநர் பதவி, திணைக்கள பதவிகள், உட்பட பதவிகள் பட்டங்கள் தொடர்பிலும் இங்கு பேசப்பட்டதாக அறிய முடிகிறது. ஆனாலும் 10,500 வாக்குகளுக்கு மேல் தேசிய காங்கிரஸுக்கு வழங்கிய கல்முனை தொகுதியின் சாய்ந்தமருது நகர சபை விடயம், கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் பற்றி இங்கு வாய்திறக்க வில்லை என்பதும் அதுதொடர்பில் பேச அதாவுல்லா எம்.பி முன்வராமைக்கு காரணம் டாக்டர் உதுமாலெப்பை உடனிருந்ததுதான் என்கின்றனர் விடயம் அறிந்தவர்கள். . அண்மையில் சில உள்ளுராட்சி சபைகள் தரமுயர்த்தப்பட்டாலும் கூட தேசிய காங்கிரஸ் தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு ஏற்ப சாய்ந்தமருது நகர சபை மலரவுமில்லை, சம்மாந்துறை பிரதேச சபை நகரசபையாக தரமுயர்த்தப்படவுமில்லை.

ரணிலை சந்தித்து மாட்டிக்கொண்ட மு.கா

ஜனாதிபதி ரணிலுடனான முஸ்லிம் காங்கிரஸின் சந்திப்பினால் குளிக்கச்சென்று சேற்றை வாரி தலையில் கொட்டிக்கொண்ட நிலைக்கு மாறியுள்ளார் மு.கா தலைவர் ஹக்கீம். 20க்கு வாக்களித்தமை முதல் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தனது கட்சியின் மூன்று எம்.பிக்களை அவர்களின் கட்சி பதவிகளிலிருந்து இடைநிறுத்தியிருந்த மு.கா தலைவர் ஹக்கீம் அந்த மூன்று எம்.பிக்களின் பின்னால் சென்றே ஜனாதிபதி ரணிலை சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின் மூலம் கல்முனை ஹரீஸ் எம்.பி மற்றும் அமைச்சர் ஹபீஸினது அரசியல் வியூக வலையில் மு.கா தலைவராக இருக்கும் ஹக்கீம் விழுந்துள்ளார் என்பதை காலம் எல்லோருக்கும் வெளிச்சம் போட்டு காட்ட காத்திருக்கிறது என்பது திண்ணம். இச்சந்திப்பின் போது சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பிலும், பாராளுமன்ற விடயங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசாவின் முதன்மை ஆலோசகரான ஹக்கீம் தலைமையிலான கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவினருடன் ஆழமாக கலந்துரையாடியிருந்தார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்திய ஆசன உரையைப் பாராட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர், ஜனாதிபதியிடம் முஸ்லிங்கள் சார்பில் பல அம்சக்கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில் சம்மாந்துறை மற்றும் மூதூர் போன்ற உள்ளூராட்சி மன்றங்களின் தரமுயர்த்தல் உட்பட ஏனைய சில உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள நிர்வாக முரண்பாடுகளைத் தீர்த்தல், கிழக்கு மாகாண கல்முனை, மூதூர், தோப்பூர், வாழைச்சேனை போன்ற பிரதேச செயலகங்களிலுள்ள நிர்வாக முரண்பாடுகளுக்கு தீர்வைக் காணுதல், விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்கும், மீனவர்களின் மீன்பிடிக்குமான எரிபொருளை தங்குதடையின்றிப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தல், முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகள் உட்பட முஸ்லிம்களின் முக்கிய பல பிரச்சினைகள் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்ததாக கூறப்படுகின்றது. ஆனாலும் சாய்ந்தமருது நகரசபை விடயம் தொடர்பிலோ அல்லது கல்முனை உப பிரதேச செயலக விடயம் தொடர்பிலோ கிழக்கு முஸ்லிங்களின் காணி விடயங்கள் தொடர்பிலோ இங்கு மு.கா தலைவர் ஹக்கீம் அழுத்தமாக வாய்திறக்க வில்லை. இருந்தாலும் அந்தந்த பிரதேச எம்.பிக்கள் தமது பிரதேசங்களில் உள்ள பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு எடுத்துரைத்ததும் அதை அங்கிருந்த ஜனாதிபதி செயலக அதிகாரிகள் குறிப்பெடுத்துள்ளனர். ஞானசாராவின் ஒரே நாடு ஒரே சட்டம் நடைமுறைப்படுத்தக் கூடாது என்ற மு.காவின் கோரிக்கையை ஏற்று நடைமுறைப்படுத்தப்படாது என ஜனாதிபதி அந்த சந்திப்பில் உறுதியளித்துள்ளார்.

கண்டி, நாவலப்பிட்டி பிரதேச மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விடயங்களை பற்றி ஜனாதிபதிக்கு எடுத்துரைத்த மு.கா தலைவர் ஹக்கீம் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் இங்கு வலியுறுத்தியதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதி போன்று பல கோரிக்கைகளை ஜனாதிபதிக்கு முன்வைத்ததுடன் கிழக்கில் இடம்பெறும் தொல்பொருள் நடவடிக்கை தொடர்பிலும் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருந்தார், இங்கு கரையோர மாவட்டம், தென்கிழக்கு அலகு, அநியாய கைது நடவடிக்கைகள் என்ற கதைகள் பற்றி மூச்சுக்கூட விடவில்லை என்கின்றனர் அங்கிருந்தவர்கள். ஆனாலும் அமைச்சுக்கள் ஜக்போட் அளவில் காத்திருக்கிறதாம் மு.காவுக்கு.

இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீமுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காஸிம், எம்.எஸ்.தௌபீக், கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், பிரதித்தவிசாளர் எம். நயீமுல்லா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தனியன் கும்கியை சந்தித்தது

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்குமாறு ஜனாதிபதியிடம் மக்கள் காங்கிரஸ் எழுத்துமூல ஆவணம் கையளித்திருப்பதுடன் தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதாக சந்திப்பில் ஜனாதிபதி உறுதியளித்திருப்பதாக மக்கள் காங்கிரஸ் ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பில் அறிவித்துள்ளது. ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற செயலணியின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளுக்கு, ஜனாதிபதி உடன்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற செயலணியின் அறிக்கையை மரமும் (முஸ்லிம் காங்கிரஸ்), மயிலும் (மக்கள் காங்கிரஸ்) தூக்கிப்பிடித்துள்ளதையும் குதிரை (தேசிய காங்கிரஸ்) எட்டியுதைத்துள்ளதையும் காணலாம். தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணியின் அறிக்கை தொடர்பில் இப்போது பேசுவது அர்த்தம் அற்றது. அது செத்த பாம்புக்கு புத்துயிர் கொடுக்க முயல்வது போன்றது ஆகும் என தெரிவித்துள்ள விடயம் இங்கு உன்னிப்பாக பார்க்கவேண்டிய ஒன்றாகும்.

ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தாபய ராஜபக்ஸ விலகியமையை அடுத்து ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியும் கலைந்து போய் விட்டது. ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பாக அவர்களுடன் நேருக்கு நேர் மிக கடுமையாக முரண்பட்டு கொண்டு வெளியேறியவன் நான் என்பதை இத்தருணத்தில் நினைவு படுத்துகின்றேன். ஒரே நாடு ஒரே சட்டம் என்று நீங்கள் சொல்வது என்ன? என்று பல நூற்று கணக்கானோர் திரண்டிருந்த உயரிய சபையில் வைத்து கோத்தாபய ராஜபக்ஸவை நான் வினவினேன். அவருக்கு அதை பற்றி எதுவுமே தெரியாது என்றும் அதை அவர் அறிந்து கொள்வதற்காகவேதான் செயலணி அமைத்து இருக்கின்றார் என்றும் எனக்கு கோத்தாபய ராஜபக்ஸ பதில் தந்தார். எனவேதான் அவர் பதவி விலகியமையுடன் அந்த செயலணியும் இறந்து விட்டது, செயல் இழந்து விட்டது. சிலர் அதை பற்றி இப்போது பேசுவது நகைச்சுவையாக, கோமாளித்தனமாக தெரிகின்றது. ஒரே நாடு ஒரே சட்டம் குறித்து தற்போது பேசுவது அர்த்தம் அற்றது , செத்த பாம்புக்கு புத்துயிர் கொடுக்க முயல்வது போன்றது ஆகும் என்று தே.கா தலைவர் அதாஉல்லா பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில், புதன்கிழமை மாலை (10) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை றிசாத் பதியுதீன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடினர். இந்த சந்திப்பில் பிரதமரும் பங்கேற்றிருந்தார். ஆனால் மக்கள் காங்கிரஸின் சார்பிலான எந்த பாராளுமன்ற உறுப்பினரும் கலந்து கொண்டிருக்கவில்லை. அதற்கான காரணமாக அவர்களை கட்சியிலிருந்து நீக்கியாக காரணம் கூறப்படுகின்றது. நீதிமன்றில் நீண்ட வழக்கின் பின்னர் செயலாளராக அறிவிக்கப்பட்ட சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீட் இந்த நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை என்பது இங்கு உன்னிப்பாக நோக்கப்படுகின்றது.

இந்த நாட்டில் பொருளாதாரம் சீரழிந்தமைக்கு இனவாத, மதவாத சக்திகளின் கைகள் ஓங்கியமையே பிரதான காரணம். அதனால்தான், இந்த நாடு குட்டிச்சுவராகி, ‘கியூ’ யுகத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. எனவே, இந்த நாட்டை கட்டியெழுப்புவதாக இருந்தால், இனவாத, மதவாத சக்திகளின் கைகள் ஓங்கவிடாமல் தடுக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும் என்பதை நாம் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினோம். எதிர்காலத்தில், சர்வகட்சிகளையும் இணைத்து அரசு முன்னெடுத்துச் செல்லவுள்ள வேலைத்திட்டத்திற்கு, எமது கட்சியின் ஒத்துழைப்பையும் ஜனாதிபதி வேண்டிய போது, ஏனைய கட்சிகளோடு சேர்ந்து, ஒரு பொதுவான வேலைத்திட்டத்திற்காக நாட்டு நலனை முன்னிறுத்தி, பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என நாம் உறுதியளித்தோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்திருக்கிறது. அவர்களின் இந்த அறிவிப்பில் “பட்டதெல்லாம் போதும் சரணாகதி அடைவோம்” எனும் நிலைப்பாடு சற்று எட்டிப்பார்ப்பதை மறைக்க முடியாதுள்ளது.

அதுமட்டுமின்றி தற்போது பாராளுமன்றத்தில் 22ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், எந்த ஒரு அரசியல் சீர்திருத்தத்திலும் கட்சிகளின் நலனுக்கப்பால், நாட்டு நலனை முன்னிறுத்தி அதனைக் கொண்டுவர வேண்டும் என நாம் ஜனாதிபதியிடம் தெரிவித்தோம். நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டியதன் அவசியத்தையும் நாம் இதன்போது வலியுறுத்தினோம். என்று தங்களின் எதிர்கால அரசியலுக்கு மக்கள் காங்கிரஸ் கேடயம் அமைத்துக்கொண்டுள்ளது. இங்கு மன்னார் – புத்தளம் பாதையை திறத்தல், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம் ஆகியவற்றினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவித்து, அவற்றை மக்களின் பயன்பாட்டுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிய விடயங்கள் பாராட்டத்தக்கது.அத்துடன், தாமதமடைந்துள்ள இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இங்கு வலியுறுத்தி ம.கா தலைவர் றிசாத் தனக்கு வாக்களித்த மக்களின் மனதில் நம்பிக்கையை விதைத்துள்ளார். விவசாயிகளுக்கும், கடற்றொழிலாளர்களுக்கும் தமது தொழிலை சிரமமின்றி மேற்கொள்வதற்காக, அவர்களுக்கு தேவையான எண்ணெய் வசதிகளை வழங்குமாறு வேண்டிக்கொண்ட விடயம் மட்டுமின்றி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடு மற்றும் கட்டுப்பாட்டு விலையின்றி மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பில் எடுத்துக்கூறியதுடன், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றிக் கிடைக்க ஆவன செய்யுமாறும் கோரிய விடயங்கள் மக்கள் காங்கிரசின் அகன்ற கனவின் பெருந்தன்மையை காட்டுகிறது.

மேலும், அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிக்க வேண்டாமென வலியுறுத்திய விடயத்தில் அந்த சட்டத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்ட றிசாத் பதியுதீனின் அனுபவம் எல்லோருக்கும் கண்முன்னால் வந்து செல்வதை தவிர்க்க முடியாதுள்ளது. ஏற்கனவே, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தன் (PTA) கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு இன்னும் சிறையில் இருப்பவர்களை அவசரமாக விடுதலை செய்யுமாறும், சிறிய சிறிய காரணங்களுக்காக போராட்டக்காரர்களை அநியாயமாகக் கைது செய்வதையும், பழிவாங்குவதையும் உடன் நிறுத்த வேண்டுமெனவும் வேண்டுகோள்விடுத்ததுடன் தற்போதைய நெருக்கடியான சூழலில் மக்கள் எதிர்நோக்கும் பல முக்கியமான பிரச்சினைகளை எடுத்துரைத்து, அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்த மக்கள் காங்கிரஸ் அத்துடன், மக்கள் நலன் குறித்த இன்னும் பல முக்கிய விடயங்கள் அடங்கிய, எழுத்து மூலமான ஆவணம் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளித்ததோடு, அவற்றை துரிதகதியில் நடைமுறைப்படுத்தித் தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

எது எப்படியோ “யார் இடித்தாவது மா கிடைத்தால் சரி” எனும் நிலைக்கு முஸ்லிம் சமூகம் வந்துள்ளது. காகிதத்தில் எழுதிய கோரிக்கைகள், முன்மொழிவுகள், நிபந்தனைகள், சமூக விடயங்கள் செயற்பாடுகளுக்கு வந்தால் மகிழ்ச்சி. முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ரணில் வசம். ரணில் முஸ்லிம் கட்சிகள் வசம் வருவாரா என்பதே இப்போதைய கேள்வியாக அமைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.