உலகத் தமிழர்களை ஒன்றிணைத்த ‘மாவீரன்’ !! (கட்டுரை)
கிறிஸ்தவ பாதிரியாரான போதும், தமிழ் ஆய்வுகளாலும் அறிவாலும் ஆர்வத்தாலும் ஆற்றலாலும் பெருமைக்குரிய தமிழ் அறிஞரானவர் வணபிதா கலாநிதி தனிநாயகம் அடிகளார் ஆவார். இவரது 42ஆவது நினைவுதினம், இன்று, செப்டெம்பர் முதலாம் திகதியாகும்.
கத்தோலிக்க துறவியாகத் தனது பணியை ஆரம்பித்த தனிநாயகம் அடிகள், தமிழை முறைப்படி கற்றுத் தேர்ந்து, தமிழை, வளர்க்கும் பரப்பும் தூதராகத் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
1945ஆம் ஆண்டு, தமிழ் இலக்கியத்தில் பட்டப்படிப்புக்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, தமிழ் இலக்கியம் படித்தார். இவரது தமிழ் அறிவின் ஆழத்தையும் முதிர்ச்சியையும் கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இரத்தினசாமி மற்றும், பேராசிரியர் தெ. பொ மீனாட்சிசுந்தரனார் ஆகியோர் செய்த சிபார்சு மற்றும் முடிவால், இளமாணிப் படிப்பு முடிக்காமல், நேரடியாக முதுகலைமாணிப் படிப்பினை மேற்கொண்டார். சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்து, முதுகலைக் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
தமிழ் இலக்கியத்தில் ‘சங்ககால இலக்கியச் செய்யுள்களில் இயற்கை’ என்னும் தலைப்பில் தனது ஆய்வுக் கட்டுரையை, 1947 – 1949 காலப்பகுதியில் சமர்ப்பித்து ‘எம்.லிட்.’ பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். இதில், இவர் செய்த முதல் தமிழ் ஆய்வே, இவரை ஆய்வுத்துறைக்கு இட்டுச்சென்றது. அந்தப் பயணம், உலகத் தமிழாராய்ச்சி மாநாடு வரை கொண்டு சென்றுள்ளது.
தனிநாயகம் அடிகளின் இயற்பெயர் நாகநாதன். புகழ்பெற்ற இந்துக் குடும்பத்தில் பிறந்தவர். கிறிஸ்தவ சமயத்தை தழுவியபோது, ஞானஸ்ஞானப் பெயர் சேவியர் ஸ்தனிஸ்லாஸ் என்பதாகும்.
ஆரம்பக் கல்வியை, ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் இடைநிலைக்கல்வியை, 1920 – 1922 வரை, யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி்யிலும், கொழும்பில் சென்ட் பேர்னாட் செமினறியில் தத்துவவியலில் கலைமாணிப் பட்டத்தையும் (1934), தமிழ் நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தையும் M.Litt பட்டத்தையும், பின்னர் லண்டனில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டு உள்ளார்.
ஆசிரியப் பணி
தமிழ் நாட்டில், நெல்லை மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் புனித தெரசால் உயர்நிலைப் பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். இங்கு, பண்டித குருசாமி சுப்பிரமணிய ஐயரிடம் தமிழ் பயின்றார். பின்னர், இலங்கை பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
1961இல் மலேசியா சென்று, மலாயா பல்கலைக்கழகத்தில் 1969 வரை, இந்திய கல்வி ஆய்வுகள் துறையில், தலைமைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அங்கிருந்து ஓய்வு பெற்றபின்னர், ஓராண்டு காலம் பரிஸில், பிரான்ஸுக் கல்லூரியிலும் ஓராண்டு காலம், நேப்பிள்ஸ் பல்கலைக்கழகத்திலும், சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
தமிழ்ப் பணி
‘தமிழ்க் கல்ச்சர்’ (Tamil Culture) என்ற ஆங்கில காலாண்டு இதழை ஆரம்பித்து, அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். அதன் மூலம், உலகம் முழுவதிலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலர்களை ஒன்று சேர்க்க முயன்று, அதில் பெரும் வெற்றியும் கண்டார். 1961இல் சென்னையில், ‘தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்’ (Academy of Tamil Culture) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி வெளியிட்டார். ‘தமிழ்த் தூது’ என்ற நூல் அடங்கலாக, 137 நூல்களை எழுதினார்.
மலேசியாவில் பணிபுரியும் காலத்தில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவராகச் செயற்பட்டார். தமிழாராய்ச்சி, முதல் மாநாட்டை 1966, ஏப்ரல் 16 – 23 திகதிகளில், மலேசிய அரசின் துணையோடு, பிரம்மாண்டமான முறையில், கோலாலம்பூரில் நடத்தினார்.
மறைவு
அடிகளார் இறப்பதற்கு நான்கு மாதத்துக்கு முன்னர், ஏப்ரல் 1980இல் தந்தை செல்வா நினைவுப் பேருரையை கொழும்பில் நிகழ்த்தினார். அதே ஆண்டு மே மாதம், வேலணையில் பண்டிதர் கா. பொ இரத்தினம் எழுதிய ‘தமிழ்மறை விருந்து’ நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அதன்பின்னர், பெரிதும் உடல் நலிவுற்றார். 1980 செப்டெம்பர் முதலாம் திகதி மாலை 6.30 மணியளவில் உயிர் நீத்தார்.
தனிநாயகம் அடிகளாரின் பெயரைக் கேட்கின்ற போதெல்லாம் எமக்கு நினைவில் வருவது, ‘தமிழ்க் கலாசாரம்’ என்னும் முத்திங்கள் ஏடும் 1968ஆம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற இரண்டாவது தமிழ் ஆராய்ச்சி மாநாடுமே என்பதில் ஐயமில்லை.
‘தமிழ்க் கலாசாரம்’ என்னும் ஏட்டின் மூலம், தமிழர்களது கலை, இலக்கியம், பண்பாடு என்பவற்றை, உலகுக்கு ஆங்கில மொழியில் பறைசாற்றி வந்தார். ‘தமிழ்க் கலாசாரம்’ ஆற்றிவந்த அரும் பெரும் பணி, மிகவும் மகத்தானது. இந்த ஏடு, உலகம் முழுவதும் வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது. கத்தோலிக்க துறவியான தனிநாயகம் அடிகள், தமிழ் வளர்க்கும் பரப்பும் தூதராகவும், ‘தமிழ்க் கலாசாரம்’ ஏட்டின் ஆசிரியராகவும் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தமிழ் மொழி, இந்துக்களுக்கு மட்டும் உரியதன்று! அது சமணர், பௌத்தர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் என அனைத்து மதத்தவர்களுக்கும் உரிய, தனித்துவமான மொழி என்று, உலகம் முழுவதும் தமிழின் சிறப்பை, தனிநாயகம் அடிகளார் எடுத்துரைத்தார்.
இதனால், சமய சமரசம் நிலவியது; உலக ஒப்புரவு காணப்பட்டது. இயேசுநாதரின் பொறையும், புத்தரின் அகிம்சையும் நபிகள் நாயகத்தின் சகோதரத்துவமும் சைவரின் அன்பும் வைஷ்ணவரின் சரணாகதிக் கோட்பாடும், தனிநாயகம் அடிகளாரிடம் மலிந்து காணப்பட்டன.
ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னரே, தமிழாராய்ச்சி விருத்தி அடைந்தது என்ற தப்பான கருத்தை, சான்றுகளுடன் மறுத்து நிறுவிய பெருமையும் தனிநாயகம் அடிகளாரையே சாரும். அதாவது, 1,500 ஆண்டுகளுக்கு முன்னர், எழுதப்பட்ட ‘தொல்காப்பியம்’, ‘திருக்குறள்’ போன்ற நூல்களை, இதற்குச் சான்றாகச் சமர்ப்பித்தார்.
ஆதிகாலம், இடைக்காலம், நவீன காலம் என முக்காலங்களிலும், தமிழாராய்ச்சி எவ்வாறு தொழிற்பட்டு இருகின்றது என்பதை, அடிகளார் மிக விரிவாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார். ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்று அடிகளார் குறிப்பிடும் ‘புறநானூறு’ அடிகள், இங்கும் இடம்பெற்றுள்ளன. மிகத் தொன்மையான தமிழ் நாகரிகம், சிந்து வெளியில் ஆரம்பமாகி, இந்தியாவிலும் இலங்கையிலும் பரவியிருந்தது என்ற ஆராய்ச்சிக் கருத்தை, முன்வைத்தும் ஆதரித்தும், அதற்கான எடுத்துக்காட்டுகளையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
1966ஆம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாட்டில் பிரதம அதிதியாக வண. கலாநிதி தனிநாயகம் அடிகளார் கலந்து கொண்டமை, இலங்கையர்களுக்கு குறிப்பாக, தமிழ் மக்களுக்கு பெருமை தரும் விடயமாகும். தமிழாராய்ச்சி மாநாட்டின் முன்னோடியாகத் திகழ்ந்தமை மட்டுமல்ல, இந்த அரங்கிலும் அடிகளார் சுறுசுறுப்பாகவும் விவேகமாகவும் செயற்பட்டிருந்தமை, பல வட்டாரங்களில் இருந்து கிடைத்த புகழாரங்கள் சான்று பகரும்.
தனிநாயகம் அடிகளார் ஓர் அறிவாளி; ஆன்மீகவாதி; செயல் வீரன்; உலகில் உள்ள தமிழர்களை, தமிழறிஞர்களை ஒன்றிணைத்த மாவீரன்!
பக்திச்சுவையும் மனிதாபிமானமும் பரந்தநோக்கும் தமிழிலுள்ள மற்றைய இலக்கியங்களின் சிறப்புகள் என்றும் குறிப்பாக, தேவார, திருவாசகம், ஆழ்வார்களின் திருப்பாடல்கள் போன்றவற்றில் பொதிந்தும் மலிந்தும் கிடக்கும் பக்தியுணர்வுகள், வேறெங்கும் காணமுடியாத பண்டங்கள் என்று கூறுவார். தனிநாயகம் அடிகளார், தமிழர்களின் மனதில் பதிந்துள்ள அழியாச் நினைவுச்சின்னம் ஆவார்.
கொழும்பு, பொரளையில் ‘வண. கலாநிதி தனிநாயகம் அடிகளார் தமிழ் வித்தியாலயம்’ என்ற பாடசாலையை, மாகாண சபை உறுப்பினராக இருந்த காலத்தில், ஸ்தாபிதம் செய்தவன் எனும் வகையில் பெருமிதமடைகின்றேன்.