கொள்கை இல்லாத தெற்கு கூட்டணிகள் !! (கட்டுரை)
சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதிக்காத விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியும் உதய கம்மன்பிலவின் பிவிதுரு ஹெல உருமயவும் சேர்ந்து, சிறுபான்மை மக்களின் உரிமைகளை நிராகரிக்காத சமசமாஜ கட்சியுடனும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடனும் கூட்டணி அமைத்தால், அக்கூட்டணியின் கொள்கை எவ்வாறானதாக இருக்கலாம்?
இக்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்தது மட்டுமல்ல, இவை மேலும் சில கட்சிகளுடனும் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை (04) புதிய கூட்டணியை அமைத்துள்ளன. அதன் அங்குரார்ப்பணக் கூட்டத்தின் போது, மேடையில் கட்டப்பட்டிருந்த பதாகையில், அதன் பெயர் ‘உத்தர லங்கா சபாகய’ என்று சிங்களத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தமது கூட்டணி, நாடு எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினைகளுக்கு விடை தேடும் கூட்டணியே அன்றி, பிரச்சினைகளைக் கூறித் திரியும் கூட்டணியல்ல என்று விமல் வீரவன்ச, இந்தக் கூட்டத்துக்கு முன்னர் ஊடகங்களிடம் கூறினார்.
‘விடை’ என்பதற்கு அவர் ‘உத்தர’ என்ற சிங்கள சொல்லையே பாவித்தார். எனவே, அந்த அர்த்தத்தில் இந்தக் கூட்டணிக்கு ‘உத்தர லங்கா சபாகய’ என்று பெயர் வைத்தார்களோ தெரியாது. (சபாகய என்பது கூட்டு அல்லது கூட்டணி என்பதாகும்)
‘உத்தர’ என்ற சிங்கள சொல்லுக்கு, வேறு சில அர்த்தங்களும் இருக்கின்றன. ‘உன்னதமான’, ‘வடக்கு’ (Northern) என்பன அவையாகும். எனவே, சிலவேளை உன்னதமான என்ற அர்த்தத்திலும் புதிய கூட்டணிக்கு பெயர் வைத்திருக்கலாம். சிலவேளை, ‘பிரச்சினைகளுக்கு விடை தேடும் உன்னதமான’ என்ற இரண்டு அர்த்தங்களும் பிரதிபலிக்கும் வகையிலும் அந்தச் சொல்லை பாவித்து இருக்கலாம்.
எனினும், வீரவன்சவே அந்தக் கூட்டணியின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். கம்மன்பில இரண்டாவது தலைவர் போல் இருக்கிறார். ஆகவே, இந்தக் கூட்டணி எவ்வகையிலும், சிறுபான்மை மக்களுக்கு உன்னதமான கூட்டணியாகப் போவதில்லைப் போல் தான் தெரிகிறது.
இதற்குப் புறம்பாக, கடந்த வாரஇறுதியில் மேலும் மூன்று தேர்தல் கூட்டணிகளுக்கு தென்பகுதியில் அடித்தளம் இடப்பட்டது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மீதான ராஜபக்ஷர்களின் கட்டுப்பாட்டை எதிர்க்கும் அக்கட்சியைச் சேர்ந்த டலஸ் அழகப்பெருமவின் தலைமையில், ஒரு கூட்டணி உருவாக இருக்கிறது.
ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, ராஜபக்ஷர்களின் வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவுக்குப் போட்டியாக, டலஸ் அத்தேர்தலில் குதித்தார். அப்போது டலஸூக்கு ஆதரவாகச் செயற்பட்ட பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்களே, இந்தக் கூட்டணியை அமைக்கப் போகின்றனர். அது இப்போதைக்கு, கூட்டணியாகவன்றி பொதுஜன பெரமுனவின் மற்றொரு கோஷ்டியாகவே இருக்கிறது. ஆனால், அவர்கள் கூட்டணி அமைத்தே எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட உள்ளதாகக் கூறுகின்றனர்.
ஓகஸ்ட் 31 ஆம் திகதி, பாராளுமன்றத்தில் இவர்கள் ஆளும் கட்சி வரிசைகளில் இருந்து வெளியேறி, எதிர்க்கட்சி வரிசைகளில் அமர்ந்து கொண்டனர். இந்தக் குழுவினதும் கொள்கையைப் பற்றி, பலத்த சந்தேகம் எழுகிறது. தமிழீழ விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வைக் காண வேண்டும் என்று உடன்பாட்டுக்கு வந்த பேராசிரியர் ஜீ. எல் பீரிஸூம் 2005ஆம் ஆண்டு முதல் ராஜபக்ஷர்களின் சகல நடவடிக்கைகளையும் ஆதரித்த டலஸூம் தான், இக்குழுவின் முன்னணித் தலைவர்களாக இருக்கின்றனர்.
செவ்வாய்க்கிழமை (02) ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு 71 வருடங்கள் பூர்த்தியாகின. அதனை முன்னிட்டு, அக்கட்சியின் செயற்குழு மஹரகமவில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் கூடியது. அதன்போது, தமது கட்சி, தேர்தல் கூட்டணியை அமைக்கப் போவதாக, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.
இதனிடையே, பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் புதிய அரசியல் கட்சியின் அலுவலகத்தை திங்கட்கிழமை (05) ஆரம்பித்தார். ‘நவ லங்கா சுதந்திர கட்சி’ என்பதுவே அவரது கட்சியின் பெயராகும். இது, 2020ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இதன் பின்னால் இயங்குகின்றார்.
இவ்வனைத்துக் குழுக்களும் ஏப்ரல் மாதம் வரை, ராஜபக்ஷர்களின் தலைமையிலான ஆளும் கட்சியில் செயற்பட்டவர்கள் ஆவர். பல்வேறு காரணங்களுக்காக, பொதுஜன பெரமுனவுக்குள்ளேயே ஒதுக்கித் தள்ளப்பட்டதன் காரணமாகவே, இவர்கள் பெரமுனவில் இருந்து பிரிந்துள்ளனர்.
இந்த அரசியல் கூட்டுகள் எவற்றிலும் கொள்கை ரீதியான அடித்தளம் இல்லை. இவர்கள் மக்களை ஏமாற்ற, எதையும் செய்யக்கூடியவர்களாகவும் சொல்லக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஜனாதிபதி தேர்தலின் போது, அரசியல் அறிவே இல்லாத கோட்டாபயவை விமலும் கம்மன்பிலவும் ‘மஹதிர் மொஹமட்’ என்றும் ‘லீ குவான் யூ’ என்றும் அழைத்தனர். வறுமையில் மூழ்கியிருந்த மலேசியாவை, தென்கிழக்கு ஆசியாவில் பொருளாதார ஜாம்பவானாக மாற்றியவர் மஹதிர் தான். சேரிகள் நிறைந்த நாடாக இருந்த சிங்கப்பூரை தற்போதைய நிலைக்கு மாற்றியவர் லீ குவான் யூ ஆவார். ஆனால், விமலும் கம்மன்பிலவும் இலங்கையின் மஹதிராகவும் லீ குவான் யூவாகவும் அழைத்த கோட்டாபயதான், இலங்கையின் பொருளாதாரத்தை குட்டிச்சுவராக்கினார்.
விமல், கம்மன்பில ஆகியோருக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படாவிட்டால், இவ்விருவரும் இன்னமும் பொதுஜன பெரமுனவிலேயே இருந்திருப்பர்.
மார்ச் மாதம், இவர்களை அமைச்சரவையில் இருந்து கோட்டாபய நீக்கிய பின்னரும், கோட்டாவின் தலைமையிலேயே சர்வகட்சி அரசாங்கம் அமைக்க முதன் முதலில் முயன்றவர்களும் இவர்களே! ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, கோட்டாபயவின் சார்பில் இவர்கள் கடுமையாக இனவாதத்தைத் தூண்டினார்கள்.
இடதுசாரிகளாகவும் மாக்ஸியவாதிகளாகவும் தம்மை அழைத்துக் கொள்ளும் சமசமாஜக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் வாசுதேவ நாணயக்காரவின் ஜனநாயக இடதுசாரி கட்சியும் எந்த அடிப்படையில், இவர்களுடன் கூட்டு சேர்ந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது.
பொதுஜன பெரமுனவால் ஒதுக்கித் தள்ளப்பட்ட நிலையில், எதிர்வரும் தேர்தல்களின் போது, பாராளுமன்றத்தில் ஓர் ஆசனத்தையாவது கைப்பற்றிக் கொள்வதைத் தவிர, அவர்களிடம் வேறு நோக்கம் இருக்க முடியாது. எனினும், அதற்கும் விமல், கம்மன்பில ஆகியோரின் கட்சிகளுக்கு பெரிதாக வாக்குவங்கி இல்லை.
சர்வகட்சி அரசாங்கம் அமைக்க வருமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியபோது, நாடு எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான கூட்டுத் திட்டமொன்று இல்லாமல், கூட்டு சேர்வதில்லை என்றே விமலும் கம்மன்பிலவும் கூறினர். ஆனால், அவ்வாறு எந்தவொரு திட்டமும் கோட்டாவிடம் இல்லாத நிலையில், அவரது தலைமையில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்க, முதன் முதலில் இவர்களே முன்வந்தனர். இவர்களது கட்சிகள் உள்ளிட்ட 11 கட்சிகளே, அந்த ஆலோசனையை கோட்டாவிடம் முன்வைத்தன.
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திட்டம் இல்லாமல், அதே பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவென சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதில் அர்த்தம் இல்லை என்ற இவர்களது வாதம் சரியானதே! அவ்வாறாயின், இவர்கள் தற்போது அமைத்து இருக்கும் கூட்டணியும், அந்த அடிப்படையிலேயே அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான எந்தவொரு திட்டத்தையும் இவர்களும் முன்வைக்கவில்லை.
எனினும், இனங்களுக்கு இடையிலான உறவு விடயத்தில், இவர்களது கூட்டணியின் கொள்கை அறிக்கையில், சில நல்ல விடயங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. ‘தேசிய ஒற்றுமையை வளர்க்க வேண்டும்; ஏனையோருக்கு இடையூறு விளைவிக்காமல், தமது மொழியை பாதுகாக்கவும் தமது மத நம்பிக்கைகளை பின்பற்றுவதற்கும் சகல சமூகங்களுக்கும் உரிமை இருக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு குழுக்களின் தனித்துவ உரிமைகளும் நாட்டின் ஒருமைப்பாடும் பாதுகாக்கப்படும் வகையில், பல்வேறு மட்டத்திலான ஜனநாயக அதிகார அலகுகளில், நடைமுறையில் மக்களின் இறைமை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், இவர்கள் அதிகாரப் பரவலாக்கலை குறிப்பிடுகிறார்களா? அவ்வாறாயின், அந்தளவுக்கு விமலும் கம்மன்பிலவும் மாறிவிட்டார்களா?
தமிழர்களையும் முஸ்லிம்களையும் வெகுவாகப் பாதித்த பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்யவோ அல்லது, அதற்குப் பதிலாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை பரிந்துரைத்துள்ளபடி, சர்வதேச தரத்திலான சட்டம் ஒன்றைக் கொண்டுவர இவர்கள் தயாரா?
டலஸ் அழகப்பெருமவின் தலைமையிலான அமைப்பும், கொள்கை ரீதியில் பொதுஜன பெரமுனவைவிட்டுப் பிரிந்ததொன்றல்ல. டலஸின் மாவட்டமான மாத்தறைக்கு, மஹிந்த ராஜபக்ஷவின் தங்கையின் மகன் நிப்புன ரணவக்க, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, டலஸை விடக்கூடுதலான வாக்குகளைப் பெற்றார். நிப்புனவை, ஹம்பாந்தோட்டையில் போட்டியில் நிறுத்தாமல், மாத்தறையில் நிறுத்தியமை, தம்மை ஓரங்கட்டும் முயற்சி என்பதை டலஸ் உணர்ந்து கொண்டார்.
இவ்வருட ஆரம்பத்தில் இருந்து பசில், ஜீ. எல் பீரிஸை ஓரங்கட்ட ஆரம்பித்தார். அதன் காரணமாகவே, அவர் டலஸூடன் இணைந்து கொண்டார். இவர்களுடன் இணைந்திருக்கும் ஏனையவர்களும் அவ்வாறே ஒதுக்கப்பட்டவர்களாவர். எனவே, இதுவும் சந்தர்ப்பவாத கூட்டேயன்றி, கொள்கை அடிப்படையிலான ஒன்றல்ல.
பயங்கரவாத தடைச் சட்டத்தை, அரசியல் பழிவாங்கலுக்காக அரசாங்கம் பாவிப்பதாக ஜீ. எல் பீரிஸ் குற்றஞ்சாட்டினார். ஆனால், அவர் அமைச்சராக இருக்கும் போது இடம்பெற்ற அதுபோன்ற சம்பவங்களை, அவர் நியாயப்படுத்தினார்.
நாம் விவரிக்காவிட்டாலும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைப் பற்றியும் நவ லங்கா சுதந்திர கட்சியைப் பற்றியும், அவற்றின் தலைவர்களின் வரலாற்றைப் பார்த்து, மக்கள் விளங்கிக் கொள்வர்.