;
Athirady Tamil News

சீன உரம் படுதோல்வி: பணம் கொடுத்த பிறகும் உரம் இல்லை !! (கட்டுரை)

0

நாடு இந்தளவுக்கு ​பொருளாதார நெருக்கடிக்குள் விழுந்து கிடக்கிறது என்பதை விடவும் நெருக்கடியின் அதாள பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது என்றால் அதில் தவறு இருக்காது. இதனால், ஒவ்வொரு குடிமகனும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி திணறிக்கொண்டிருக்கின்றான்.

இலங்கையில் வாழும் இலங்கையரின் மீதான சுமை, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிலிருந்து மீண்டெழுவதற்கு இன்னும் பல வருடங்கள் செல்லும் என்பதை நிபுணர்களின் கருத்தாகும். இந்த பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணமாக, சீனாவில் இருந்து பெறப்பட்ட, அதிகூடிய வட்டியுடனான கடன் பிரதான காரணமாக இருக்கிறது.

அபிவிருத்தி வேலைத்திட்டம் எனும் பெயரில், பெற்றுக்​கொள்ளப்பட்ட கடன்கள், அதற்கான வட்டிகளை செலுத்த முடியாமையால், வட்டியும் குட்டிப்போட்டுக்கொண்டு, இலங்கையின் கழுத்தை சீனா நெறித்துக்கொண்டிருக்கின்றது.

எவ்வளவுதான் கடனில் இருந்தாலும், தங்களுடைய பொருட்களை விற்று தீர்ப்பதிலேயே சீனா குறியாக இருக்கின்றது. பொருட்களை பெற்றுக்கொள்ளாது, நங்கூரம் இடப்பட்டு திருப்பிய அனுப்பிய சீன உரக்கப்பலுக்காக 6.9 மில்லியன் டொலர்களை இலங்கை செலுத்தியமையை மறந்துவிடமுடியாது. இதுவும் இலங்கையரின் மீதான கடனை மேலும் அதிகரித்துள்ளது. அதாவது இறக்குமதி செய்யப்படாமலே டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இறக்குமதி செய்யப்படாத சீனாவின் உரக் கப்பலுக்கு 6.9 மில்லியன் டொலர்களை செலுத்திய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பக்றீரியாக்களைக் கொண்ட உரத்தை நாட்டில் இறக்குமதி செய்ய முயற்சித்த சீன நிறுவனத்திடமிருந்து நட்ட ஈட்டைப் பெற வேண்டும் எனவும், இந்த உர விவகாரம் தொடர்பில் கணக்காய்வை மேற்கொண்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்ட 96 மெட்ரிக் தொன் இயற்கை உர விவகாரம் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்த அறிக்கையில் இலங்கை சட்டத்திட்டங்களை மீறிய குறித்த சீன உர நிறுவனத்தைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த பரிதுரைகள் எல்லாம், நடைமுறைப்படுத்தப்படுமா? என்பதற்கு எதிர்காலமே பதில் சொல்லும். சீனாவிலிருந்து சரக்குகளை ஏற்றி வந்த கப்பல் ஒன்றை இலங்கையின் கடல் எல்லைக்குள் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட பிறகும் அந்த கப்பல் உடனடியாக வெளியே மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும், அந்தக் கப்பலுக்காக பணம் செலுத்தப்பட்டது. உரம் இறக்குமதி செய்யப்படவில்லை என்பது இந்த கவனிக்கப்படவேண்டியது. அத்துடன், நீண்ட நெருக்கமான நட்பைக் கொண்டிருந்த இரு நாடுகளுக்கு இடையேயும் இராஜதந்திர உறவில் விரிசலை ஏற்படுத்திவிடும் என்றோர் அச்சம் ஏற்பட்டிருந்தது. உரிய நாட்களுக்கு பணத்தை செலுத்த தவறியதன் காரணத்தால், வங்கியொன்றை சீனா தடுப்புப் பட்டியலில் வைத்திருந்தது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இரசாய உரத்துக்கான தடையை 2021 மே மாதம் அதிரடியாக பிறப்பித்தமையால், நாட்டின் விவசாயத்துறை முற்றாக பாதித்தது. ஏற்றுமதி செய்யவேண்டிய பொருட்களைக் கூட இறக்குமதி செய்​ய​வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருந்தது. அரிசியி்னால் தன்னிறைவு அடையக்கூடிய நாடு, அரசிக்காக பல நாடுகளிடம் கையேந்திக்கொண்டிருக்கின்றது.

சர்ச்சைக்குரிய அந்தக் ஹிப்போ ஸ்பிரிட் என் கப்பல், 2021 செப்டம்பர் மாதம் சீனாவில் இருந்து 20,000 தொன் இயற்கை உரங்களை ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கிப் புறப்பட்டது. தடைக்குப் பின்னரே, இயற்கை உரத்தை இறக்குமதி செய்யவேண்டிய நிர்ப்பந்தம் இலங்கைக்கு ஏற்பட்டது.

கடற்பாசி அடிப்படையிலான உரங்களைத் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற சீனாவைச் சேர்ந்த கிங்டாவ் சீவின் பயோடெக் என்ற நிறுவனத்திடம் 49.7 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான 99,000 தொன் இயற்கை உரத்தை இறக்கு மதி செய்யப்பட்டது. அந்த உரத்தின் தரத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

அந்த உரமானது மனித கழிவுகளாகும் என குற்றச்சாட்டப்பட்டது. இது பயிர்கள் செழித்து வளர உதவுவதற்குப் பதிலாக அவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறியிருந்தனர்.

“சீன உரம் கிருமிகள் நீக்கப்பட்டதல்ல என்பது உர மாதிரிகள் மீதான எங்கள் சோதனைகள் மூலம் தெரியவந்தது” என தெரிவித்திருந்த இலங்கை விவசாயத் துறையின் தலைமை இயக்குநர் அஜந்த டி சில்வா, “கேரட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.” என்றார்.

கப்பலில் வந்திருக்கும் சரக்கு நாட்டின் உயிர் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், அதை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாதென திட்டவட்டமாகக் கூறி இருந்தனர்.

கடுமையாக கடுப்பாகியிருந்த கிங்டாவ் நிறுவனம் “சீன அரசு மற்றும் சீன நிறுவனங்களின் மதிப்பைக் குலைப்பதற்கு நச்சு, குப்பை, மாசு” உள்ளிட்ட இழிவான சொற்களை இலங்கை ஊடகங்கள் பயன்படுத்துவதாக கோபமாகப் அந்த நிறுவனம் பதிலளித்திருக்கிறது.

உர சர்ச்சை தீவிரமானதால், இலங்கைக்குள் நுழையக் காத்திருக்கும் சரக்குகளுக்குச் செலுத்த வேண்டிய 9 மில்லியன் அமெரிக்க டொலரை நிறுத்துமாறு அரசுக்குச் சொந்தமான மக்கள் வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இதற்குப் பதிலடி தந்தது. பணத்தைச் செலுத்தாததால், இலங்கை அரசின் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்தது.

இந்த சர்ச்சையைத் தொடர்ந்து தங்களது நன்மதிப்புக்கு பங்கம் ஏற்பட்டதாக இலங்கை தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவை எட்டு மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு தர வேண்டும் கிங்டாவ் சீவின் நிறுவனம் கேட்டிருக்கிறது.

இந்தப் பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கும்போது, இலங்கை கடற்பரப்பில் இருந்து கப்பல் வெளியேறவில்லை.

2021 ஒக்டோபர் மாத பிற்பகுதியில் இலங்கை துறைமுக அதிகாரிகள் ஹிப்போ ஸ்பிரிட் கப்பலின் சரக்குகளை இறக்குவதற்கு அனுமதி மறுத்தபோது, அது கொழும்பு துறைமுகத்தை விட்டு நகர்ந்து தெற்கு கடற்கரையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் கரையோரப் பகுதிக்கு சென்றது. சீன நிறுவனம் தனது சரக்குகளை திரும்பப் பெற தயாராக இல்லை என்பதை அது எடுத்துக் காட்டியிருந்தது.

இருப்பினும், சீனாவின் இராஜதந்திர அழுத்தங்களை தாங்கும் திறன் இலங்கை அரசுக்கு இருக்கிறதா என்பது குறித்து இலங்கையில் உள்ள சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இல்லை என்பது கடந்த காலங்களில் சீனா தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டது.

ஆசியாவில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக “பெல்ட் அண்ட் ரோடு” திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு பல பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா கடனாக வழங்கியிருக்கிறது. இருப்பினும் எல்லா நிதியும் இலங்கைக்கு சாதகமாக இருக்கவில்லை.

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்டியெழுப்புவதற்காக 2017 ஆம் ஆண்டில், வாங்கிய கடனை அடைக்க இலங்கை திணறியபோது, அதன் பெரும்பகுதியை சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் 99 ஆண்டு குத்தகைக்கு எடுத்தது.

உரம் தொடர்பாக இரு நாடுகளின் அதிகாரிகளும் மோதிக் கொண்டிருக்கும் நேரத்தில், பல்லாயிரக்கணக்கான இலங்கை விவசாயிகள் மிகவும் தேவையான விவசாய இடுபொருளான உரம் இல்லாமல், மோசமான நெல் அறுவடை பருவத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு அரசு விதித்திருக்கும் தடை, விவசாயிகளைப் பெரிதும் பாதித்துள்ளனர். “நாங்கள் திடீரென இயற்கை விவசாயத்திற்கு மாற முடியாது. இயற்கை உரத்தைப் பயன்படுத்துவது நல்லது என்றாலும், அரசாங்கத்தின் தற்போதைய அணுகுமுறை தவறானது” என்று விவசாயிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

நெல் போன்ற பிரதான பயிர்களின் விளைச்சல் வெகுவாகக் குறையக்கூடும் என்பதால், மொத்தமாக இயற்கை விவசாயதுக்குமாறுவது விவசாயம் சார்ந்த பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. “இயற்கை விவசாயத்தால் மட்டும் நாம் மொத்த உணவுத் தேவையையும் நிறைவு செய்ய முடியாது”

விவசாயத்துறை மட்டுமன்றி, நாட்டின் புகழ்பெற்ற சிலோன் தேயிலை உற்பத்திக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்து. இது தரமான தேயிலை இறக்குமதி செய்வதில் கடுமையான தாக்கத்தை செலுத்தியிருந்தது.

அதிகச் செலவுபிடிக்கும் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்காகவே, ரசாயன உரங்களை அரசு தடை செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது. எனினும், இறக்குமதி செய்யப்பட்ட சீன உரத்தை இறக்குமதி செய்யாமலேயே அதற்கு, உரக் கப்பலுக்கு 6.9 மில்லியன் டொலர்களை இலங்கை அரசாங்கம் செலுத்தியிருந்தது.

சீனாவிலிருந்து உரம் ஏற்றிக்கொண்டு இலங்கை கடற்பரப்பிற்கு வருகைத் தந்த கப்பல் தொடர்பில், கடந்த காலங்களில் அதிகளவில் பேசப்பட்ட நிலையில், தற்போது அந்த கப்பலுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த கப்பலில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் உள்ளதாக தெரிவித்து, அந்த கப்பலில் கொண்டு வரப்பட்ட விவசாய உரத்தை இலங்கை தொடர்ச்சியாக நிராகரித்து வந்தது.

தீங்கு விளைவிக்கும் பதார்த்தம் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், நிபந்தனைகள் இன்றி, பணத்தை செலுத்தி உரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என சீனா குறிப்பிட்டிருந்தது. பணம் செலுத்தப்பட்டது ஆனால், சீனாவின் அந்த உரம் இறக்குமதி செய்யப்படவில்லை. சீன உர விவகாரம் படுதோல்வியடைந்தது என்பதுடன் பணம் கொடுத்த பிறகும் உரம் இல்லை என்பதுதான் வேதனையான விடயமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.