மனித உரிமைகள் பேரவை தொடர் கதையா? (கட்டுரை)
நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளான ‘ஹியூமன் ரைட்ஸ் வொச்’, ‘சர்வதேச மன்னிப்புச் சபை’, ‘மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசிய அமைப்பு’, ‘சர்வதேச சட்ட வல்லுனர்களின் ஆணைக்குழு’ ஆகியன கூட்டாக, ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு, இலங்கை விடயத்தில் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளன.
தற்போது சுவிட்சர்லாந்து, ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் போது, இலங்கை தொடர்பாக கடுமையான பிரேரனையை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியே, அவ்வமைப்புகள் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளன. மனித உரிமைகள் விடயத்தில், இலங்கை அரசாங்கம் நம்பகமான முறையில் நடந்து கொள்வதில்லை என்ற அடிப்படையிலேயே, அவை இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளன.
இம்முறை நடைபெற்று வருவது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடராகும். இக்கூட்டத்தொடர், செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி வரை, ஜெனீவா நகரில் நடைபெறும். இதன்போது, இலங்கை தொடர்பாக மற்றுமொரு பிரேரணை நிறைவேற்றப்படவும் இருக்கிறது.
இதற்கு முன்னர் 2009, 2012, 2013, 2014, 2015, 2017, 2019, 2021ஆம் ஆண்டுகளில் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இவற்றில், 2009ஆம் ஆண்டு பிரேரணை இலங்கையால் முன்வைக்கப்பட்ட பிரேரணையாகும்.
ஏனையவை, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள், சில சிறிய நாடுகளுடன் சேர்ந்து, மனித உரிமைகள் பேரவைவில் சமர்ப்பித்தவையாகும். அவற்றில், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2015ஆம் ஆண்டு பிரேரணைக்கு, அவ்வரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. ஏனையவற்றை, இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில், 2021ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையைத் தவிர, ஏனைய எந்தவொரு பிரேரணையும் இலங்கையின் எந்தவோர் அரசியல் அல்லது இராணுவ அதிகாரியையும் அச்சுறுத்தியதில்லை. 2021ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 46/1 இலக்கமிடப்பட்ட பிரேரணை மூலம், இலங்கையில் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கும் திட்டமொன்று முன்வைக்கப்பட்டு உள்ளது.
அதற்கு முந்திய சகல பிரேரணைகள் மூலமும், மனித உரிமைகளை மீறியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமைகள் பேரவை, இலங்கை அரசாங்கத்தையே கேட்டுக்கொண்டது. ஆனால், இலங்கை அவ்வாறு நடவடிக்கை எடுக்காதமையால், இந்தப் பிரேரணையின் மூலம், அந்தந்த நாடுகளிலேயே சட்ட நடவடிக்கை எடுக்க, உறுப்பு நாடுகளிடம் மனித உரிமைகள் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.
அத்தோடு, இலங்கையில் மனித உரிமைகள் மீறல் சம்பவங்களைப் பற்றி தகவல்களைத் திரட்டி, அவற்றைப் பகுப்பாய்வு செய்வதற்காக, மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தில், தகவல் காப்பகத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த வருட பிரேரணையின் பிரகாரம், எந்தவொரு நாட்டிலாவது இலங்கையில் மனித உரிமைகளை மீறியோருக்கு எதிராக, எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவற்றை நிரூபிப்பதற்காக இந்தத் தகவல் காப்பகத்தின் தகவல்கள் பயன்படுத்தப்படும்.
இதுவே, இலங்கையில் போர் முடிவடைந்ததன் பின்னர், மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் மூலம் எடுக்கப்படவிருக்கும் மிகவும் கடுமையான நடவடிக்கையாகும். ஏற்கெனவே, பல்வேறு மனித உரிமைகள் மீறல் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய 120,000 கோவைகளைத் தமது அலுவலகம் திரட்டி உள்ளதாக, 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தின் போது, முன்னாள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சல் பச்சலே தெரிவித்தார்.
இதற்கு முன்னர், மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைகளை உதாசீனம் செய்த இலங்கையின் அரசியல் மற்றும் இராணுவ தலைவர்கள், இந்தப் பிரேரணையைக் கண்டு நிச்சயமாக திடுக்கிட்டு இருப்பார்கள். ஏனெனில், இந்தப் பிரேரணையின்படி, இலங்கையல்லாது ஏனைய நாடுகள்தான், மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும். அந்நாடுகளின் அரசாங்கங்கள் சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டாலும், தனிநபர்கள் மற்றும் அமைப்புகளால் வழக்குகளைத் தாக்கல் செய்யலாம்.
மனித உரிமைகள் பேரவையின் இவ்வாறான கோரிக்கையொன்று இல்லாமலே, கடந்த காலங்களில் சில நாடுகளில், இலங்கையின் சில இராணுவ அதிகாரிகளுக்கு, மனித உரிமைகள் பிரச்சினைகள் காரணமாக, விசா மறுக்கப்பட்டது. சில நாடுகளில், சில இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்காக, மனித உரிமைகள் அமைப்புகளால் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. ஜெர்மனியில், விடுதலை புலி உறுப்பினர் ஒருவருக்கு எதிராக, வழக்கு விசாரிக்கப்பட்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில்த்தான் பலம் வாய்ந்த நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள், இலங்கை விடயத்தில் கடுமையான பிரேரணையை நிறைவேற்றுமாறு, மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளன.
இவ்வமைப்புகள், தாம் எதிர்பார்க்கும் கடுமையான நடவடிக்கைள் எவை என அந்தக் கடிதத்தில் குறிப்பிடவில்லை. 46/1 பிரேரணையை மீண்டும் வலியுறுத்துமாறு மட்டுமே கடிதத்தில் குறிப்பிட்டுள்ளன.
மாறிவரும் இந்த நிலைமையின் காரணமாகத்தான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆர்ப்பட்டக்காரர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கவில்லைப் போலும்! கோட்டா கடும் போக்குள்ளவர் என்பது சகலரும் அறிந்த விடயமாகும்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ இருந்தபோதே, வடக்கு – கிழக்கில் கடும் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டு இருந்தது. கட்டுநாயக்க, சிலாபம், ரத்துபஸ்வல, வெலிக்கடை சிறைச்சாலை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், அவர் ஆர்ப்பட்டக்காரர்களை தாக்க இடமளிக்கவில்லை.
2021ஆம் ஆண்டு ஆசிரியர்கள், அதிபர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்களைத் தாக்கி, கலைத்துவிட வேண்டும் என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக அப்போது இருந்த சரத் வீரசேகர ஆலோசனை கூறியிருந்தார். “எனக்கு வெளிநாடொன்றுக்குப் போக முடியாத நிலைமையை உருவாக்கப் போகிறீரா” என, கோட்டா அப்போது கேட்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு இருந்தன.
ஆயினும், மனித உரிமைகள் பேரவையின் பணிகள் நடைபெறும் வேகத்தைப் பார்க்கும் போது, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நியாயம் கிடைக்குமா? அதற்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டி வரும் என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது. அதுவரை, மனித உரிமைகள் பேரவையும் இலங்கை அரசாங்கத்தின் தலைவர்களும், இந்தப் பிரச்சினைகளை விவாதித்துக் கொண்டே இருப்பார்கள் போலும்!
ஒவ்வொரு வருடமும் இலங்கை தலைவர்கள் ஜெனீவாவுக்குச் சென்று, மனித உரிமைகள் பேரவையின் தலைவர்களுக்கு, பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு வருகிறார்கள். பின்னர் அவற்றை உதாசீனம் செய்கிறார்கள். இதைப் பேரவையின் தலைவர்கள் அறியாமலில்லை. இம்முறை இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில், அது தெளிவாகத் தெரிகிறது.
பதில் உயர்ஸ்தானிகர் நதா அல் நஷிப்பால் சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில் ஓரிடத்தில், ‘போர் முடிவடைந்து 13 ஆண்டுகள் சென்றடைந்த போதிலும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்னமும் காணாமற்போனோர் தொடர்பான உண்மையையும் அவர்களுக்கான நியாயத்தையும் எதிர்ப்பார்த்து நிற்கின்றனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று தசாப்தங்களாக, மனித உரிமைகள் மீறல்கள் விடயத்தில் குறியீடுகளாக விளங்கும் சம்பவங்கள் தொடர்பில், எந்தவித முன்னேற்றமும் காண்பதற்கில்லை’ என்று மற்றோர் இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றங்களுக்கு தண்டனை இல்லாமை, மேன்மேலும் குற்றங்கள் இடம்பெறுவதற்கு காரணமாக இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
போர் நடைபெற்ற காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களின் உண்மை நிலைமையை அறிய, ‘உண்மைத் தேடும் ஆணைக்குழு’வை நியமிப்பது தொடர்பாக, அரசாங்கத்தின் தலைவர்களும் மனித உரிமைகள் பேரவையின் அதிகாரிகளும் போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டு முதல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவ்வாறிருக்க, உண்மையை அறியும் பொறிமுறையை நிறுவ, அரசாங்கம் முயன்று வருவதாக வெளிநாட்டமைச்சர் அலி சப்ரி, இம்முறை பேரவைக் கூட்டத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார்.
இதுவரை, மனித உரிமைகள் விடயத்தில் நியமிக்கப்ட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளைப் பரிசீலித்து, நியாயம் வழங்கும் விடயத்தில் என்ன செய்யலாம் என்பதை ஆராய, மற்றோர் ஆணைக்குழுவை நியமிப்பதாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாத கூட்டத்தின் போது, அப்போதைய வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார்.
ஆனால், 2021ஆம் ஆண்டு மார்ச் கூட்டம் நெருங்கும் வரை, அரசாங்கம் அவ்வாறானதோர் ஆணைக்குழுவை நியமிக்கவில்லை. ஒரு விடயத்தை இழுத்தடிப்பது எவ்வாறு என்பதற்கு, இது சிறந்த எடுத்துக்காட்டாகும். 2021ஆம் ஆண்டு ஜனவரியில் நியமிக்கப்பட்ட அந்த ஆணைக்குழு, இந்த வருடம் பெப்ரவரி மாதம், தனது இரண்டாவது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது. அதற்குள் அரசாங்கம் மாறியிருக்கிறது. ஒவ்வோர் அரசாங்கமும், இவ்வாறு தொடர்ந்தும் இழுத்தடிக்கலாம் என்று சிந்திக்கிறது போலும்!
இதன் விளைவாகவே, மனித உரிமைகள் பேரவையின் நிலைப்பாடு சிறிது சிறிதாகக் கடுமையாகி வருகிறது. ஆரம்பத்தில், “நீங்களே குற்றச்சாட்டுகளை விசாரித்துக் கொள்ளுங்கள்” என்று கூறிய பேரவை, இப்போது இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்குமாறு, ஏனைய நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
எனினும், பாதிக்கப்பட்டோருக்கு எப்போது நியாயம் கிடைக்கும் என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.