;
Athirady Tamil News

நவம்பர் 18 இல் மீண்டும் பிரதமராகிறாரா மஹிந்த ? (கட்டுரை)

0

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. நவம்பர் மாதம் 18ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவின் 77ஆவது பிறந்த தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் அன்றைய தினம் பிரதமர் பதவியை பெற்றுக்கொடுக்கவும், அதே தினத்தில் கட்சியின் மாநாட்டை நடத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை பொறுப்பளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வருகிற 2023ஆம் ஆண்டு என்பது தேர்தல்களின் வருடமாகும். அதனை இலக்கு வைத்தும், அரசியல் ரீதியில் கடும் பின்னடைவுகளை சந்தித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீண்டும் செயற்திறன் மிக்க அரசியல் கட்சியாக மாற்றியமைப்பதற்கும் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவம் இன்றியமையாதது என்பதே பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களின் கருத்தாக உள்ளது.

பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தாடலை ஏற்கனவே பொதுஜன பெரமுன ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதிக்கும் இதனை அறிவிப்பதற்கு பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் தீர்மானித்துள்ளனர்.

மறுபுறம் மஹிந்த ராஜபக்ஷவின் மிக நெருக்கமான நண்பரும் இந்தியாவின் மூத்த அரசியல்வாதியுமான சுப்ரமணிய சுவாமி இரு வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்து, மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின்போது, மீண்டும் அரசியல் அதிகாரத்துக்கு வருவதன் அவசியம் மற்றும் நாமல் ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

டெல்லியின் முழுமையான ஒத்துழைப்பு மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைப்பதை சுவாமி உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறானதொரு நிலையிலேயே மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் பொதுஜன பெரமுன ஊடாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக 22ஆவது திருத்தம் மீதான வாக்கெடுப்பு மற்றும் 2023ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஊடாக ஜனாதிபதிக்கு அழுத்தங்களை பிரயோகிக்க பொதுஜன பெரமுன தயாராகி வருகின்றது.

22ஆவது திருத்தம் மீதான விவாதம் எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், அதனை தொடர்ந்து வரும் திருத்தம் மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்து, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குமாறு உத்தியோகபூர்வமாக கோரப்படவுள்ளது.

பஷில் ராஜபக்ஷ அமெரிக்கா சென்றுள்ள நிலையில், கட்சியின் தேசிய அமைப்பாளருக்கான பொறுப்புகள் நாமல் ராஜபக்ஷவுக்கே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பல தொகுதி அமைப்பாளர் கூட்டங்களில் நாமல் ராஜபக்ஷவுக்கு போதிய வரவேற்பு கிடைக்கப்பெறவில்லை.

எனவே, மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை வழங்குவதன் ஊடாக மீண்டும் மக்கள் மத்தியில் செல்ல முடியும் என்று பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் கூறிவருகின்றனர்.

இந்த திட்டத்தை உறுதிப்படுத்துவதற்காக கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடனான கோரிக்கைக் கடிதமும் தயார்ப்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

எனவே, எதிர்வரும் நாட்களில் தேசிய அரசியலில் மீண்டும் கொந்தளிப்புகள் ஏற்படலாம்!?

You might also like

Leave A Reply

Your email address will not be published.