;
Athirady Tamil News

வடக்கில் வலுக்கும் வல்லரசுப் போர்!! ( கட்டுரை)

0

தென்கிழக்காசியப் பிராந்தியத்தின் வல்லாதிக்கப் போட்டியின் வெளிப்பாடாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும்இடையிலான பூகோள அரசியல் சுழலில் இலங்கை சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. இரு நாடுகளும் தமக்கிடையேயான புகோள அரசியல் போரை இதுவரை காலமும் மறைமுகமாகவே மேற்கொண்டிருந்தன. ஆனால் தற்போது குடுமிப்பிடியாக வீதியில் நின்று அடிபடுமளவுக்கு நடந்து கொள்கின்றன.

வடக்கிலும், கிழக்கிலும் தன் கால்களைப் பதித்துவிடத் துடிக்கும் சீனா, இந்தியப் புலனாய்வு அமைப்பான றோவைச் சீண்டிப் பார்க்குமாப் போல தனது நடவடிக்கைகளைப் பரப்பத் தொடங்கியிருக்கிறது.

மிக அண்மையாக கிழக்கில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்திலும், வடக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் யார் அதிக செல்வாக்குடையவர்கள் என்பதை நிரூபிப்பதற்கான பலப் பரீட்சையில் இரு நாடுகளின் தூதரகங்களும் இறங்கியிருக்கின்றன.

சீனத் தூதுவராலயத்தினால் 2016 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாணவர் உதவு தொகை வருடாந்தம் வழங்கப்பட்டு வருகின்றது. இது வரை காலமும் இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் சமமாகப் பங்கீடு செய்யப்பட்ட இந்நிதி 2022 ஆம் ஆண்டில் இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு மாத்திரமே பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இத்தனை பல்கலைக்கழகங்கள் இருக்க, வடக்கு – கிழக்குக்கு மட்டும் விசேட கவனமெடுத்து சீனா இந் நிதியுதவியை மேற்கொள்ள முனைந்தமை இந்தியத் தூதரகம் உட்படப் பலருக்கும் சீனா மீது சந்தேகத்தை வலுக்கச் செய்தது. ஏற்கனவே வட மாகாணத்திலுள்ள மன்னார் மற்றும் தீவுப் பகுதிகளில் மாற்று சக்தி ஆய்வுகள் என்ற பேரில் கால் பதிப்பதில் இரு நாடுகளும் இலங்கை அரசுக்குப் பெரும் தலையிடியாக மாறியிருந்த நிலையில், இப்போது பல்கலைக்கழகங்களினுள் சீனாவின் தலையீட்டை இந்தியத் தரப்பு அறவே விரும்பவில்லை.

வடக்கு – கிழக்கு பல்கலைக்கழகங்களினுள் சீனாவின் கால்பதிப்புத் திட்டங்கள் குறித்து அறிந்த நாளில் இருந்து இந்தியத் தூதரக அதிகாரிகள் தூங்கியிருக்கவே மாட்டார்கள் என்று சொல்லலாம். உலகின் முன்னணிப் புலனாய்வு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கும் இந்தியப் புலனாய்வு அமைப்பான “றோ” கூட சீனாவின் இந்த நகர்வு குறித்து அறிந்திருக்கவில்லை.

சீனத்தூதரகத்தினால் சீனத்தூதுவர் புலமைப்பரிசில் திட்டம் பற்றி மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கும் சமநேரத்திலேயே அறிவிக்கப்பட்டிருந்தது. “உயர்கல்வி அமைச்சின் ஊடாக 2016 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலுள்ள 17 பல்கலைக்கழகங்களுக்கும் சீனத் தூதுவர் புலமைப்பரிசில் வழங்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாண்டு (2022) முதல் சற்று வித்தியாசமான முறையில் வருடாந்தம் இரண்டு பல்கலைக்கழகங்களை மட்டும் தெரிவு செய்துள்ளதாகவும், அதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும், கிழக்குப் பல்கலைக்கழகமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்கலைக்கழகங்களின் ஆர்வத்தை – சம்மதத்தை அனுப்பி வைக்குமாறும்” கடந்த ஜுன் மாத நடுப்பகுதியில் இரண்டு பல்கலைக் கழகங்களுக்கும் இலங்கைக்கான சீனத் தூதுவரின் முதற் செயலாளரினால் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது.
மின்னஞ்சல் கிடைத்த உடனேயே கிழக்குப் பல்கலைக்கழகம் செயலில் இறங்கி, மாணவர்களுக்கான உதவித் திட்டத்துக்குரிய தமது வழக்கமான செயற்பாடுகளைப் பூர்த்தி செய்து பயனாளிகள் பட்டியலை சீனத் தூதரகத்துக்கு அனுப்பி வைத்திருந்தது. அதன் அடுத்த கட்டமாக சீனத் தூதுவரே நேரடியாக விஜயம் செய்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் நிதியைக் கையளிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி செப்ரெம்பர் 6 ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுகநல பீடத்துக்கு வருகை தந்த சீனத் தூதுவர் கிழக்குப் பல்கலைக் கழகத் துணைவேந்தரிடம் நிதியுதவிக்கான காசோலையைக் கையளித்துச் சென்றார்.

இது இவ்வாறிருக்க, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஜுன் மாதம் அனுப்பப்பட்ட கடிதத்துக்கு பல்கலைக்கழகத்திடமிருந்து ஜுலை மாத இறுதிப்பகுதி வரை எந்தப் பதிலும் அனுப்பப்படவில்லை. பதில் கிடைக்காததால் சற்று அதிர்ச்சிக்குள்ளான சீனத் தூதரகம் நேரடியாக பல்கலைக்கழக நிர்வாகத்தைத் தொலைபேசி மூலம் அணுகி அவசர, அவசரமாக தமது கோரிக்கையை முன்வைத்தனர்.

செப்ரெம்பர் 6 ஆம் திகதி கிழக்குக்கு (மட்டக்களப்புக்கு) ச் செல்வதற்கு முன்னர் 4ஆம், 5ஆம் திகதிகளில் வடக்குக்கு விஜயம் செய்து யாழ்ப்பாணத்தில் மாணவர் நிதியுதவி வழங்கும் நிகழ்வை முடித்துக் கொண்டு, மன்னாருக்குச் சென்று காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களைப் பார்ப்பது சீனத் தூதரகத்தின் திட்டமாக இருந்திருக்க வேண்டும். அதனால் குறித்த திகதிக்குள் பயனாளிகள் பட்டியலைத் தயாரிக்குமாறு பல்கலைக்கழக அதிகாரிகளை துளைத்தெடுத்த வண்ணமிருந்தனர் சீனத் தூதரக அதிகாரிகள். எனினும் அது சொல்லிக் கொள்ளக் கூடியளவு முன்னேற்றத்தைக் காட்டவில்லை. இருப்பினும், சீனத் தூதுவரின் வருகையும், நிதியுதவி கையளிப்பும் திட்டமிடப்பட்டது.

இவையனைத்தும் நடந்து முடியும் வரை இந்தியத் தரப்பு இதுபற்றிய தகவல்களை அறிந்திருக்கவில்லை. ஆகஸ்ட் 15 ஆம் திகதி, இந்தியக் குடியரசு நிகழ்வின் போதே சீனாவின் இந்த நகர்வு பற்றி யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதுவர் அறிந்து கொண்டார். உடனடியாக கொழும்புக்குச் செய்தி பறந்தது. ஆனாலும் சீனாவின் இந்த நகர்வைக் கொழும்பு கூட அவ்வளவு ஆழமாக நோக்கவில்லை. மிகச் சாதாரணமாகக் கடந்து போன நிலையில், ஆகஸ்ட் 30 ஆம் சீன விவசாயப் பல்கலைக்கழகமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடமும் ஆய்வு மற்றும் கற்றல் நடவடிக்கைகளுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடப் போகின்றன என்ற தகவலை பத்திரிகையாளர் ஒருவர் மூலமா யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் அறிந்து கொள்கிறார்கள்.

தகவல்களை மிகச் சரியாகப் பெற்று ஆய்வுக்கு உட்படுத்தத் தவறிய அதிகாரிகள் தமக்குக் கிடைத்த மூலங்களின் அத்தனை தகவல்களையும் போட்டுக் குழப்பியடித்து விடுகிறார்கள். சீனாவில் உள்ள பல்கலைக்கழகத்துக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் நிகழ்நிலைத் தொழில் நுட்பத்தினூடாக இருபல்கலைக்கழகங்களினதும் துணைவேந்தர்கள் ஒப்பமிடப்படவிருந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை, சீனத்தூதுவரும், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரும் ஒப்பமிடவிருக்கிறார்கள் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலுமிருந்த இந்தியத் தூதரக அதிகாரிகள் எப்பாடு பட்டாவது நிறுத்திவிட வேண்டும் என்பதற்காக சாம, பேத, தான, தண்டப் பிரயோகங்களின் ஊடாக கையாண்டனர்.

முதலில் பல்கலைக்கழக மாணவர்களைத் தூண்டிவிட்டு சீனத் தூதுவருக் கெதிராக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது. எனினும் மாணவர்களின் அறிக்கைக்கு முன்னரே இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கூடாக பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு செய்தி அனுப்பப்பட்டு மறுநாள் நடைபெறவிருந்த நிகழ்வு நிறுத்தப்பட்டது. ஆனாலும் புலமைப் பரிசில் வழங்கும் செயற்பாடுகள் தொடர்ந்தன. மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட சல சலப்பினால் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை ரத்துச் செய்த சீனத் தூதுவர் மட்டக்களப்புக்குச் சென்று செப்ரெம்பர் 6 ஆம் திகதி கிழக்குப் பல்கலைக் கழகத் துணைவேந்தரிடம் நிதியுதவிக்கான காசோலையைக் கையளித்துச் சென்றார்.

இதனையடுத்து கிழக்கு பல்கலைக் கழகத் துணைவேந்தர் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்துக்கு அழைக்கப்பட்டதாகவும், அதன் பின்னணியிலேயே கிழக்கு பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கு இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவர் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. எனினும் சுயாதீனமாக இத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதனிடையே, சீனாவின் நிதியுதவியை விட அதிகமாக தாம் உதவி தருவதாக இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தெரிவித்திருக்கின்றனர். அத்துடன் ‘இந்தியன் இன்ஸ்ரியூட் ஒப் ரெக்னோலஜி’ யின் இணைந்த வளாகம் ஒன்றை (Offshore Campus) யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் நிறுவுவதற்கும் தாம் தயார் என்ற செய்தியையும் பல்கலைக்கழகத்துக்குத் தெரியப்படுத்துகின்றனர்.

இந்தியாவில் மிகப் பிரபலமான இந்தியன் இன்ஸரியூட் ஒப் ரெக்னோலஜி, உலகில் பல நாடுகளின் பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு அங்கு இயங்கி வருகின்றது. அதன் அடிப்படையில் இலங்கையிலும் இரண்டு இடங்களில் அதனை நிறுவுவதற்கு விரும்பியிருந்தது. இந்திய அரசு ஊடாக இலங்கை அரசை அணுகியிருந்தது. இதன்போது தெற்கிலும், வடக்கிலும் ஒவ்வொரு இடங்களில் அமைப்பதை இந்தியத் தரப்பு விரும்பியிருந்தது.

தெற்கில் பேராதனை மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டு இந்தியன் இன்ஸ்ரியூட் ஒப் ரெக்ரோனலஜி பல்கலையை நிறுவுமாறு இலங்கை அரசு இந்தியாவுக்கு அனுமதி கொடுத்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனாலும், வடக்கில் ஒன்றை அமைப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது எனத் தெரியவருகின்றது. அதனால் வடக்கில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்துடன் இணைந்து கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள பொறியியல்பீடத்தில் இதனை அமைப்பதற்கு இந்திய அரசு விரும்பியிருந்தது. அதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையையும் தானே தயாரித்து யாழ். பல்கலைக் கழகத்துக்கு அனுப்பியிருந்தது. அதற்குச் சாதகமான சமிக்ஞையோ அல்லது உரிய பதிலளிப்புக்களோ யாழ். பல்கலைக் கழகத்திடமிருந்து இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என்று யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரக வட்டாரங்களில் இருந்து அறியக்கிடைத்தது.

ஆனாலும் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் பீடாதிபதியும், பேராசிரியர் ஒருவரும் இந்தியத் துணைத் தூதுவரின் அந்த மின்னஞ்சலுக்கு உடனடியாகவே பதில் அனுப்பியிருந்தனர் என்பதை எமது தரப்பு உறுதிப்படுத்திக்கொண்டது. திட்ட முன்மொழிவை வரவேற்ற பொறியியல் பீடாதிபதி சாத்தியமான வழிமுறைகள் பற்றி ஆராய்வதற்கான தமது ஆர்வத்தை அன்றைய தினமே மின்னஞ்சலில் வெளிப்படுத்தியுமிருந்தனர். ஆனாலும் இந்தியத் துணைத் தூதரகத்தின் வேண்டுகோளைச் செயற்படுத்துவதற்கு யாழ். பல்கலைக்கழகம் தயக்கம் காட்டுவதாக யாழ்ப்பாணத்தில் வெளிவரும் ஊடகங்களில் செய்திகள் வந்தன. அதற்குப் பதிலளித்த துணைவேந்தர் “எழுந்தமானமாக இணைந்த வளாகம் ஒன்றை தான் முடிவெடுக்க முடியாது எனவும், எமது சமூகத்துக்கு முறையாகக் கிடைக்கும் எந்த நன்மையையும் தட்டிக் கழிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டதோடு, ” கல்விசார் முடிவுகளை இயற்றும் அதிகாரமுடைய மூதவையும், அதன் பரிந்துரைகளை ஆராய்ந்து இற்றைப்படுத்தும் – ஆளும் அதிகாரமுள்ள பேரவையுமே இவற்றுக்கான தீர்மானத்தை இயற்ற முடியும். தவிர இலங்கையிலுள்ள பல்கலைக்கழக கட்டமைப்பின்படி அரச நிர்வாக்கக் கட்டமைப்பினூடாக கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினூடாக வரும் எந்த முன்மொழிவுக்கும் நாங்கள் தயக்கம் காட்டப்போவதில்லை. அவ்வாறு வராத எந்தத் திட்டத்தையும் நாம் முன்னெடுக்க முடியாது. எமது சமூகத்துக்கு முறையாகக் கிடைக்கும் எந்த நன்மையையும் தட்டிக் கழிக்கப் போவதுமில்லை. எந்தத் தூதரகமோ, எந்த சேவை நோக்குடைய நிறுவனங்களோ முறையான வழிமுறைகளினூடாக தமது முன்மொழிவுகளைத் தந்தாலும் அவற்றை அந்தந்த துறைகளின் ஊடாக வழக்கமான நடைமுறைகளுனூடாகப் பெற்றுக் கொள்வது வழமை” என்று குறிப்பிட்டார்.

சீனத் தூதுவரின் புலமைப் பரிசில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை இரு தரப்பும் நகர்த்திக்கொண்டிருந்த நிலையில், நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்காக பல்கலைக்கழக அதிகாரிகள் இருவரை சீனத் தூதரகம் அழைத்திருந்தது. அதனைப் பெற்றுக் கொள்ள அந்தத் திட்டத்துக்குப் பொறுப்பான விரிவுரையாளர் ஒருவரும், நலச்சேவை உத்தியோகத்தரும் அந்த உதவியை கடந்த 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சீனத் தூதரகத்தில் வைத்துப் பெற ஏற்பாடாகியிருந்தது. அன்றைய தினம் தேசிய பரீட்சைக் கடமைகளுக்காக கொழும்பு சென்றிருந்த துணைவேந்தர் அந்த அலுவலர்களின் அழைப்பின் பேரிலேயே அவர்களுடன் சென்று நிதியுதவியைப் பெற்றிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தையடுத்து, இந்தியாவைத் தவிர்க்கும் யாழ். பல்கலைக்கழகமும் அதன் கல்விமான்களும் சீனாவை அனுசரித்துப் போவதாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஊடகங்களுக்குச் செய்தி கசியவிடப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழகத்தை எச்சரிக்கும் வகையில் அரசியல் வாதிகள் சிலரும் அறிக்கை விடத் தொடங்கியிருக்கின்றனர். இவையனைத்தும் இந்திய – சீனா பூகோள அரசியலுக்கான வல்லாதிக்கப் போட்டியே என்பது பட்டவர்த்தனமாகத் தெளிவாகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.