அதிகரிக்கும் வரிகள் – நியாயமா, கொள்ளையா? (கட்டுரை)
‘வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு ’என்றார் வள்ளுவர். தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம் என்ற வள்ளுவனின் கருத்து, 1776இல் அடம் ஸ்மித் குறிப்பிட்ட நவீன வரியின் கோட்பாடுகளான நியாயத்தன்மை, நிச்சயத்தன்மை, வசதி, செயற்றிறன் என்பதோடு ஒத்தியைகிறது.
வரி என்பது ஒரு அரசிற்கு இன்றியமையாததொன்று. ஆனால் அந்த வரியானது மக்களைத் தண்டிப்பதாக அமைந்துவிடக்கூடாது என்பது வரியின் அடிப்படை இயல்பாக அமையவேண்டும். இல்லையென்றால் வழிப்பறிக்கொள்ளைக்காரனுக்கும், அரசிற்கும் பெரிய வித்தியாசம் இருக்க முடியாது.
அரசு ஒன்று இயங்குவதற்கு பணம் தேவை. அந்தப் பணம் வரிகளினூடாகவே பிரதானமாகப் பெற்றுக்கொள்ளப்படுகிறது. வரிகளை பிரதானமாக நேரடி வரிகள், மறைமுக வரிகள் என்று இருவகைப்படுத்தலாம்.
நேரடி வரிகள் முதன்மையாக தனிநபர்கள் மீதான வரிகளாகும், மேலும் அவை பொதுவாக வருமானம், நுகர்வு அல்லது நிகரச் செல்வம் ஆகியவற்றின் அடிப்படையில் செலுத்தும் வரி செலுத்துபவரின் திறனை அடிப்படையாகக் கொண்டவை.
மறைமுக வரிகள் என்பவை பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி அல்லது நுகர்வு அல்லது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பரிவர்த்தனைகள் மீது விதிக்கப்படும் வரிகளாகும். எடுத்துக்காட்டுகளில் பொதுவான மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனை வரிகள், பெறுமதி சேர் வரிகள் (VAT), உற்பத்தி அல்லது உற்பத்தியின் எந்தவோர் அம்சத்தின் மீதான வரிகள், சட்டப் பரிவர்த்தனைகள் மீதான வரிகள் மற்றும் சுங்கம் அல்லது இறக்குமதி வரிகள் ஆகியவை அடங்கும்.
இலங்கையின் இன்றைய பொருளாதார வீழ்ச்சி, மற்றும் வங்குரோத்து நிலைக்கு பிரதான காரணமாகச் சுட்டிக்காட்டப்படுவது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியான பின்னர், தனது தேர்தல் வாக்குறுதிகளின்படி வரிகளை மிகப்பெருமளவுக்கு குறைத்தமையாகும். அந்த வரிக்குறைப்பு அரசாங்கத்தின் வருமானத்தை கணிசமாகக் குறைத்தது.
அதேவேளை அரசாங்கத்தின் செலவுகள் குறைக்கப்படவில்லை. வருமானத்தை விட செலவு கூடும்போது, அதோடு கடன்சுமையும், அதற்கான வட்டியும் கழுத்தை நெரிக்கும்போது, இலங்கை வங்குரோத்தாவது என்பது தவிர்க்க முடியாத விளைவாகிவிட்டது.
மறைமுக வரிகளில், பெறுமதி சேர் வரி 15%-லிருந்து 8% ஆகக் குறைக்கப்பட்தோடு, பெறுமதி சேர் வரிக்கான பதிவுக்கான தேவை எல்லையளவு வருடத்திற்கு 12 மில்லியனிலிருந்து, 300 மில்லியன்களாக அதிகரிக்கப்பட்டது. மேலும், தொடர்மாடிமனைகள் மீதான பெறுமதி சேர் வரி விலக்கப்பட்டது. நேரடி வரிகளைப் பொறுத்தவரையில், மாதமொன்றிற்கு முதல் 250,000 ரூபாய்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதோடு, அடுத்த 250,000த்திற்கு 6%மும், அடுத்த 250,000-ற்கு 12%-மும், அதற்கு மேற்பட்ட தொகைக்கு 18%-முமே வருமான வரி செலுத்த வேண்டியதாகியது.
சில மாதங்கள் முன்பதாக அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டதன்படி, இந்த வரிக்குறைப்பு நடிவடிக்கைகளினால், கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 10 இலட்சம் வரி செலுத்துவோரை இலங்கை இழந்துள்ளது.
கோட்டாபயவின் வரிவிலக்கின்படி, இலங்கையின் அதிகபட்ச மொத்த தனிநபர் வருமானவரி, 18%. இந்தியாவில் 42.74%, ஜப்பானில் 55%, நேபாளில் 36%, பங்களாதேஷில் 25%, நெதர்லாந்தில் 49.5%, நியுஸிலாந்தில் 39%, பெல்ஜியத்தில் 79.5%, பூட்டானில் 25%, நோர்வேயில் 46.4%, பாகிஸ்தானில் 35%, பிலிப்பைன்ஸில் 35%, போர்த்துக்கலில் 64%, ஈரானில் 35%, சுவீடனில் 52%, சுவிட்ஸலாந்தில் 59.7%, துருக்கியில் 40%, ஒஸ்திரேலியாவில் 45%, கனடாவில் 54%, ஃபிரான்ஸில் 49%, பிரித்தானியாவில் 63.25%, மற்றும் அமெரிக்காவில் 51.6%. ஆகவே அதிகபட்ச வருமானவரியே 18% என்பது எவ்வளவு குறைவானது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
இந்தநிலையில்தான், பொருளாதார மீட்சி ஒன்றை வேண்டி நிற்கும் இலங்கையில், இலங்கையின் இன்றைய ஜனாதிபதியும், நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்க, புதிய அதிகரித்த வரிகளை அறவிடுவதற்கான உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரித்திருக்கிறார்.
இந்த அதிரடி வரி அதிகரிப்பு நடவடிக்கை கடந்த வாரத்தில் இலங்கையின் வணிக வட்டங்களில் மட்டுமல்லாது, பொதுமக்களிடையேயும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
கோட்டாவின் வரிகளின் கீழ், வருடத்திற்கு முப்பது இலட்சம் ரூபாயாக இருந்த வருமானவரி விலக்கு எல்லையளவு, வருடத்திற்கு பன்னிரண்டு இலட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே வருடத்திற்கு 12 இலட்சம் ரூபாய்க்கு அதிகமாக வருமானம் பெறும் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டியவர்களாகிறார்கள். அதுபோல, வருமான வரியளவும் கணிசமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்பதோடு, 18% ஆக இருந்த அதிகபட்ச வருமானவரியளவு இரு மடங்காக 36% அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
இதன் யதார்த்த விளைவைச் சொல்வதானால், இதுவரை 2 இலட்ச ரூபாய் மாதச்சம்பளம் பெற்றவருக்கு, வருமான வரி கிடையாது, ஆனால் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறினால், மாதம் 10,500 ரூபாய் வரியாகச் செலுத்த வேண்டியிருக்கும். அதுபோல, இதுவரை 4 இலட்ச ரூபாய் மாதச்சம்பளம் பெற்றவர் மாதத்திற்கு 9000 ரூபாய் வரிசெலுத்தவேண்டியதாக இருந்தது, புதிய சட்டமூலத்தின் படி 70,500 ரூபாவாக அதிகரித்துள்ளது!
இந்த திடீர் வரி அதிகரிப்பு உயர்-மத்தியதர வருமான மற்றம் உயர் வருமான தரப்பினரைக் கடுமையாகப் பாதிக்கும். வரியின் அளவின் நியாயதர்மம் என்பதைவிட, திடீர் அதிகரிப்பு என்பதுதான் இங்கு பிரச்சினையை வீரியப்படுத்துவதாக இருக்கிறது. இதுவரை 4 இலட்சம் சம்பளம் பெற்றுவந்தவர், தன்னுடைய செலவினங்களை அதற்கேற்றாற்போல கட்டமைத்திருப்பார். வீட்டுக்கடன், வாகனக்கடன், பிள்ளைகளின் கல்விக்கடன் என அனைத்தும் அந்த வருமானத்திற்கு தக்கபடி கட்டமைக்கப்பட்டிருக்கும். திடீரென அந்த 4 இலட்ச ரூபாய் சம்பளத்தில் 70,500 ரூபாய் குறைவதானது, அவர்களைக் கடுமையாகப் பாதிப்பதாகவே அமையும்.
மறுபுறத்தில் புதிய திட்டத்தின் கீழ் நிறுவனங்களுக்கான வருமான வரி 24%-லிருந்து 30%-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரைகாலம் வழங்கப்பட்ட பல வரிச்சலுகைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரிச்சலுகைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதைவிட, 100,000 ரூபாய்க்கு மேல் வாடகை வருமானம் மீது 10 சதவீதம் முற்கூட்டிய வருமான வரி, வட்டி வருமானம் அல்லது தள்ளுபடியில் 5 சதவீதம், ஈவுத்தொகை கொடுப்பனவுகளில் 15 சதவீதம், மற்றும் பிற கொடுப்பனவுகளுக்கு 14 சதவீதம் என்பனவையும் தனிநபர்களையும், நிறுவனங்களையும், குறிப்பான சிறு நிறுவனங்களையும் பெருமளவு பாதிப்பதாக அமைகிறது.
இரண்டு விஷயங்களை நாம் இங்கு கருத்திற்கொள்ளுதல் அவசியமாகிறது. முதலாவது, பொருளாதார மீட்சிப் பயணத்திற்கு, இந்த வரிவிதிப்புகள் அவசியமானவை. விரும்பியோ, விரும்பாமலோ, இலங்கையின் அரச செலவினங்கள் மிக அதிகம். அதற்குள் இலவசக் கல்வி, இலவச மருத்துவம், சமுர்த்தி, வீடமைப்பு உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான செலவுகளும் அடக்கம்.
பணத்தை அச்சிட்டு இவற்றிற்கான செலவுகளைச் செய்தால், பணவீக்கம் என்பது கூடி, ஸிம்பாம்வேயைப் போலவேதான் நாம் மாறவேண்டியிருக்கும். ஆகவே பணத்தை அச்சிடுவது தீர்வல்ல. அரச வருமானம் அதிகரிக்க, வரிகள் தேவை. இரண்டாவது, இந்த வரி அளவுகள், ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகையில் சாதாரணமற்ற வரி அளவு அல்ல. ஆனால் திடீரென்ற 18% லிருந்து 36% என்ற இரட்டிப்பான அதிகரிப்பானது, சிலருக்கு ஆரம்பத்தில் பெரும் சவால்களை ஏற்படுத்தப்போகிறது என்பது மறுக்க முடியாதது.
மறுபுறத்தில், மக்கள் இத்தனை கஷ்டத்தில் கட்டும் வரிகள் முறையாக, தேவையானவற்றிற்குத்தான் செலவளிக்கப்படுகின்றனவா என்பது இங்கு முக்கியமானது. மக்களுடைய இரத்தமும், வியர்வையும் இலவசக் கல்விக்கும், இலவச மருத்துவத்திற்கும், உணவுப்பாதுகாப்பு உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு நடவடிக்ககைளுக்கு செலவளித்தால் அதில் நியாயமுண்டு.
அதைவிடுத்து இராணுவத்திற்கும், அரசியல்வாதிகளில் படோடாபங்களுக்கும், பயனற்ற கட்டுமானங்களுக்கும், நட்டத்திலியங்கும் ‘வௌ்ளை யானை’களான அரசுடைமையான நிறுவனங்களுக்கும், ஊழலுக்கும் மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுவதானது மிகப்பெரும் அநீதியும், பாவமுமாகும்.
ஆகவே தமது வரிப்பணம் முறையாக, மக்களுடைய நன்மைக்கே செலவிடப்படுகிறது என்ற நம்பிக்கையை அரசு மக்களிடம் ஏற்படுத்தினால், வரிகளைப் பற்றிய எதிர்மறை எண்ணம் மக்களிடையே குறையக்கூடும். அது அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது. இல்லையென்றால், அதிகரித்த வரிவிதிக்கும் அரசை மக்கள் வழிப்பறிக்கொள்ளையனாகத்தான் பார்ப்பார்கள்.