;
Athirady Tamil News

திருத்தங்கள் மக்களுக்கானதா? (கட்டுரை)

0

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. அதன்படி, இலங்கை ஜனநாயக குடியரசின் 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு, 20ஆவது தடவையாகத் திருத்தப்பட்டு இருக்கின்றது.

ஜே.ஆர் ஜெயவர்தனவால் 1978ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த யாப்பில் முதலாவது திருத்தத்தை, சில மாதங்களுக்குள்ளேயே அவரே மேற்கொண்டார். அத்துடன் ஜே.ஆர்தான், இதில் அதிகப்படியான திருத்தங்களையும் மேற்கொண்டார்.

1989 தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரை, திருத்தங்கள் கொண்டு வரப்படவில்லை. அரசியலமைப்பு முன்மொழியப்பட்ட 12ஆவது மற்றும் 21ஆவது திருத்தச் சட்டமூலங்கள் நிறைவேற்றப்படவில்லை என்பது இங்கு கவனிப்புக்குரியது.

ஆக மொத்தத்தில், எத்தனையோ ஏற்பாடுகளை 1978ஆம் ஆண்டின் யாப்பு கொண்டிருந்தாலும் அதனால் ஜே.ஆர் முதல், அவரது மருமகன் ரணில் விக்கிரமசிங்க வரையிலான ஆட்சியாளர்கள், அதில் முழுமையாக திருப்தி அடையவில்லை. பல திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது, காலத்தின் தேவையாக இருந்தது என்பதையே இது காட்டுகின்றது.

திரும்பத் திரும்ப அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டுவராமல், முற்றுமுழுதாக புதியதொரு யாப்பை கொண்டு வருவதற்கான முஸ்தீபுகளும் பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அது கைகூடுவதற்கான நிகழ்தகவுகள் குறைந்து கொண்டு போகின்ற பின்னணியிலேயே, 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது.

2015ஆம் ஆண்டு மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசாங்கம், 19 ஆவது திருத்தத்தை கொண்டு வந்திருந்தது. முன்னதாக, மஹிந்த அரசாங்கம் நிறைவேற்றியிருந்த 18ஆவது திருத்தம் என்பது, ‘ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் போட்டியிடுவதற்கான தடவைகள்’ குறித்த பல சரத்துகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதாக அமைந்திருந்தது.

19ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தல் போன்ற வேறு பல நல்ல ஏற்பாடுகள் இருந்தன.

அதன்பிறகு, ‘கோட்டாபய அரசாங்கம்’ ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலேயே, 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றினர்.

19ஆவது திருத்தத்தை நீக்குவதே, இதனது பிரதான நோக்கமாக இருந்தது. அத்துடன், இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவரான பசிலை, எம்.பியாக நியமிப்பதற்கான ஒரு சூட்சுமமான ஏற்பாட்டையும் இது உள்ளடக்கியிருந்தது,
பின்னர், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், 21ஆவது திருத்தத்தை மேற்கொள்ள முயற்சி செய்தது. இதற்கான வரைபு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. ஆயினும், நீதிமன்ற வியாக்கியானம் வெளிவருவதற்கு முன்னமே, அமைச்சரவை இதற்கு அங்கிகாரம் வழங்கியதாக செய்திகள் வெளிவந்தன.

உண்மையிலேயே, அவர்கள் அப்போதே 21 இனை கைவிட்டு, 22 இனையே அமைச்சரவையில் அனுமதி பெற்றிருந்தார்கள் எனவும் வெளியுலகுக்கு அதனை 21என சொன்னார்கள் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சடிபட்டது.

இந்நிலையிலேயே, 21ஆவது திருத்தத்தில் உள்ள சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரண்பட்டது எனவும், அவற்றை நிறைவேற்ற வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் வியாக்கியானம் கொடுத்தது.

நாடு தற்போதிருக்கின்ற நிலையில், அரசாங்கம் மீது மக்கள் விரக்தியில் இருக்கின்ற ஒரு காலப்பகுதியில், ஒரு விசப்பரீட்சைக்குச் செல்வதற்கு எந்த ஆட்சியாளர்களும் விரும்ப மாட்டார்கள். அது நடைமுறைச் சாத்தியமும் இல்லை. அதைவிட எம்.பிக்களின் ஆதரவை பெறுவது சுலபமானது.

அந்தவகையில், உத்தேச 21ஆவது திருத்தத்தை கைவிட்டு, 22ஆவது திருத்தத்தை அரசாங்கம் முன்வைத்தது. அவ்வாறு முதன்முதலாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட வரைபு, சில திருத்தங்களுடன் தற்போது நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது.

நிறைவேற்றப்பட்ட 22ஆவது திருத்தத்தின் முழுமையான உள்ளடக்கம் இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும், அது ‘பெயர்மாற்றப்பட்ட 21ஆவது திருத்தம்’ என்றுதான் கருதப்படுகின்றது. அத்துடன் சில முன்மொழிவுகள் ஏற்கெனவே பொதுவெளியில் பகிரங்கமாக விவாதிக்கபட்ட விவகாரங்களாகவும் உள்ளன.

குறிப்பாக, அரசியலமைப்பு பேரவையை நிறுவுதல், இரண்டரை வருடங்களில் நாடாளுமன்றத்தை கலைத்தல், இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பது போன்ற ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டு இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

அப்படிப் பார்த்தால், கோட்டாபய அரசாங்கம் கொண்டு வந்த 20இன் சில ஏற்பாடுகளை நீக்குகின்ற வேலையையும் ரணில் அரசாங்கத்தின் 22ஆவது திருத்தம் செய்திருக்கின்றது எனலாம்.

அரசியலமைப்பு திருத்தங்களை ஒரு தொடர் சங்கிலியாக நோக்குகின்ற போது பல திருத்தங்கள், அதற்கு முன்னைய ஒரு திருத்தத்தின் உள்ளடக்கத்தை நீக்குவதற்காக, அல்லது மாற்றுவதற்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்பதை காண்கின்றோம்.

அதுமட்டுமன்றி, ஒரு குறிப்பிட்ட 10 வருடங்களில் அதே எம்.பிக்கள்தான் அதற்கும் – இதற்கும் மாறி மாறி வாக்களித்தும் இருக்கின்றார்கள் என்பதும் கண்கூடு.

குறிப்பாக, 20ஆவது திருத்தம் ‘சரி’ என்றவர்கள்தான் 22இற்கும் ஆதரவளித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள்தான் 20ஆவது திருத்தம் ஊடாக நீக்கப்பட்ட 19 இற்கும் கையுயர்த்தி இருந்தார்கள்.

இந்நிலையில், ஒருவேளை அடுத்த வருடம் 23ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டு, அதன்மூலம் 22 இன் சில ஏற்பாடுகள் நீக்கப்பட்டாலும் இவர்களில் 99 சதவீதமானவர்கள் கையுர்த்துவதற்கு வெட்கப்படப் போவதில்லை.

அதேபோல், அரசாங்கங்களையும் அவை மேற்கொள்கின்ற யாப்புத் திருத்தங்கள் மற்றும் சட்டத் திருத்தங்களையும் வெறுமனே விமர்சித்துக் கொண்டு மட்டுமே இருக்கின்ற அரசியல் அணிகளும், உருப்படியாக எந்தப் பங்களிப்பையும் செய்யாது, அப்படியேதான் தொடர்ந்தும் இருக்கப் போகின்றன என்பதையும் மறந்து விடக்கூடாது.

இந்தப் போக்கை ஒரு கோர்வையாக தொகுத்து நோக்குகின்ற போது, சில விடயங்களை ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. அதாவது, அதே அரசியல்வாதிகள் மாறி மாறி ஒரே விடயத்தில் திருத்தங்களை கொண்டு வருவார்கள் என்றால், இவர்களுக்கு ஏதாவது கொள்கை, உறுதியான நிலைப்பாடு இருக்கின்றதா? இவர்களை எந்த வகையறாவுக்குள் உள்ளடக்குவது என்பன முதலாவது விடயமாகும்.

அடுத்தது, மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்ற காலத்தில், ஒவ்வோர் அரசாங்கமும் ஆட்சியாளரும் நிறைவேற்றுகின்ற ‘திருத்தங்கள்’ உண்மையிலேயே மக்கள் நலனை இலக்காகக் கொண்டவையா? இதனால் சாதாரண மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்? என்பது அதைவிடப் பெரிய வினாவாகும்.

மஹிந்த நிறைவேற்றியதை மைத்திரியும் ரணிலும் மாற்றினார்கள். அவர்கள் இருவரும் கொண்டு வந்ததை கோட்டாபய நீக்கினார். கோட்டாபயவும் மஹிந்தவும் நிறைவேற்றியதை ரணில் இப்போது திருத்தியுள்ளார்.

நாளை இன்னுமொருவர் வந்து இதையும் திருத்தலாம் என்றால், இதன் அர்த்தம்தான் என்ன? இதனால் அல்லது கடந்தகால திருத்தங்களால் நாட்டு மக்களின் எந்தெந்தப் பிரச்சினைகள் காத்திரமான முறையில் தீர்க்கப்பட்டுள்ளன என்பதை யாரால் கூற முடியும்?

உதாரணமாக, “மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை எமக்குத் தந்தால் நாட்டை புரட்டிப்போடுவோம்” என்று ராஜபக்‌ஷர்கள் சொன்னார்கள். பிறகு 20ஆவது திருத்தம் வேண்டும் என்றார்கள். ஏழு மூளையுள்ள பசில் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்றார்கள்; எல்லாவற்றையும் நாடு அவர்களுக்கு கொடுத்தது.

ஆனால், அவர்கள் மிகப் பெரிய சீரழிவையே நாட்டு மக்களுக்கு கைமாறாக கொடுத்தனர். தமக்கு வாக்களித்த மக்களது வாழ்க்கையை உச்சத்தில் நிறுத்தியிருக்க வேண்டிய ராஜபக்‌ஷர்கள், படுகுழியில் தள்ளி விட்டு, ஓடித்தப்பினார்கள்.

இந்தப் பெரிய மக்கள் பிரளயத்துக்குப் பிறகு கூட, நீதியை நிலைநாட்டுவதற்கோ, நாட்டை நாசமாக்கியவர்களுக்கு பாடம்புகட்டுவதற்கோ முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதையே அர்ஜூன் மகேந்திரனின் விடுதலை, ராஜபக்‌ஷர்களின் மீள்எழுச்சி போன்ற நிகழ்வுகள் குறிப்புணர்த்துகின்றன.

இன்று மக்கள் பெரும் கஷ்டத்தில் உள்ளனர். பெற்றோல் விலையை மட்டும் கொஞ்சம் குறைத்தால் போதாது. ஏனைய அனைத்துப் பொருட்களுக்கும் விலை பன்மடங்காக அதிகரித்துள்ளன. வாழ்க்கைச் சுமையிலிருந்து விடுபடுவதற்கே மக்கள் படாதபாடுபடுகின்றனர்.

அதேநேரம், இலங்கையை பொறுத்தமட்டில் அரசியலமைப்புத் திருத்தங்களும் சட்டங்களும் நிறைவேற்றப்படுவதில் ஒரு தடையும் இல்லை. ஆனால், அவை எழுத்தில் இருந்தனவே தவிர, மக்களின் நலனை மையப்படுத்தி அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அந்தவகையில், 22 உட்பட அனைத்து சட்ட ரீதியான ஏற்பாடுகளும் கொள்கைவகுப்புகளும் மக்களை மனதில் கொண்டு சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், அவை ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகளுக்கன்றி, சாதாரண மக்களுக்கு ஒப்பீட்டளவில் பெரிய அனுகூலங்களைக் கொண்டு வரும் என்று நம்பத் தேவையுமில்லை.

ஏனெனில், இலங்கை அரசியலில், திருத்த வேண்டியது வெறுமனே சட்ட ஏற்பாடுகளை மட்டுமல்ல; மாறாக, மக்கள் நலனை முன்னிறுத்திச் செயற்படாத சில ‘திருந்தாத ஜென்மங்களையே’ முதலில் திருத்த வேண்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.