;
Athirady Tamil News

மற்றுமொரு ‘மன்னிப்பு’ நாடகம்!! (கட்டுரை)

0

பொது வாழ்க்கையிலும் சரி, ஆன்மீகத்திலும் சரி ‘மன்னிப்பு’ என்பது ஓர் உயரிய விடயமாகும். ஆனால், மன்னிப்பு வழங்கப்பட்ட ஒரு குற்றத்தை, மீண்டும் செய்து விட்டு திரும்பவும் மன்னிப்புக்காக வந்து நிற்பது மன்னிப்புக்கும் அழகல்ல; மன்னிப்பு கொடுப்பவருக்கும் அழகல்ல!

இருப்பினும், தேசிய அரசியலிலும் முஸ்லிம் அரசியலிலும் ஆட்சியாளர்களை அரசியல்வாதிகள் மன்னிக்கின்றனர். அரசியல்வாதிகளை முஸ்லிம் கட்சிகள் மன்னிக்கின்றன. தேர்தல் வரும்போது, இவர்கள் எல்லோரையும் மக்கள் மன்னித்து விடுவதே வாடிக்கையாக இருக்கின்றது.

அதாவது, பெருந்தேசிய கட்சிகளும் முஸ்லிம் அரசியல் அணிகளும் அதன் தலைவர்களும் எம்.பிக்களும் திரும்பத்திரும்ப தவறு செய்வதற்கான ஒரு முன்பிணை போல, மன்னிப்பு என்ற கருவியை பயன்படுத்தி வருகின்றமை யாருக்கும் தெரியாத இரகசியமல்ல.

கடந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு பாதகமான கொள்கை வகுத்தல்களை மேற்கொண்டு, ஆட்சி நடத்திய பலரை, காலவோட்டத்தில் முஸ்லிம் சமூகம் மறைமுகமாக மன்னித்திருக்கின்றது.

‘முஸ்லிம்களுக்கு பாதகமான ஆட்சியாளர்கள்’ எனத் தேர்தல் காலத்தில் முஸ்லிம் தலைவர்களால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள் பலர், பிறகு அரசியல்வாதிகளின் பதவிகளுக்காக ‘நல்லவர்’ ஆன கதைகள் ஏராளம் உள்ளன.

முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப்புக்குப் பிறகான அரசியலில் இயங்கிய, இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பற்றிய கடுமையான விமர்சனங்கள், முஸ்லிம் சமூகத்துக்குள் எப்போதும் இருக்கின்றன. சமூகத்தை மறந்த அவர்களது சுயலாப அரசியலே, இதற்கு அடிப்படைக் காரணமாகும்.

முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகின்ற போது, உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படுகின்ற போது, முன்னே நின்று பேசுவதற்கு 99 சதவீதமான முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வருவது கிடையாது. அவர்கள் தமக்கு ஏதாவது ‘நெருக்கடி’ வந்துவிடும் என்பதற்காக ஓடிஓழிந்து விடுவார்கள்.

அதேபோன்று, அரசியலமைப்பு திருத்தங்கள், சட்டமூலங்கள், பாராளுமன்ற விவாதங்கள் இடம்பெறும்போது அது ஒரு சமூகமாக முஸ்லிம்களின் எதிர்பார்ப்புகளில் எவ்வாறான விளைவுகளை உண்டுபண்ணும் என்பதை முன்னுணர்ந்து, முஸ்லிம் எம்.பிக்கள் தமது நிலைப்பாடுகளை எடுப்பதில்லை. முஸ்லிம் சமூகத்துக்கும் நாட்டுக்கும் பாதகமான பல திருத்தங்கள், சட்டமூலங்களுக்கு கண்ணைமூடிக் கொண்டு கையை உயர்த்தியமையே வரலாறாகும்.

சமூகத்துக்கான எந்த உரிமையையும் உறுதிப்படுத்தாமல், இவ்விதம் செயற்பட்டமையாலேயே முஸ்லிம் அரசியல்வாதிகள் ‘பணத்துக்கும் பதவிக்கும் சோரம்போகின்றார்கள்’ என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் போக்கு, சகோதர இன மக்களுக்கும் தெரியும்.

இவ்வாறு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய மட்டத்தில் தவறுகளையும் சமூகத் துரோகங்களையும் இழைக்கும்போது, சமூகத்திடையே ஓர் ஆக்ரோசமான எதிர்ப்பலை ஏற்படும். ‘சம்பந்தப்பட்ட எம்.பிக்களை அடுத்த தேர்தலில் தோற்கடிப்போம்; பாடம் புகட்டுவோம்’ என்று மக்கள் பொதுவெளியில் பகிரங்கமாகக் கூறுவார்கள்.

ஆனால், தேர்தல் வந்தால் எல்லாவற்றையும் மன்னித்து மறந்து விடுவார்கள். கட்சி கீதத்தில் மயங்கி, பொய்க் கற்பிதங்களை நம்பி, தலைவர்களும் தளபதிகளும் வேண்டிநிற்கின்ற பாவமன்னிப்பை வழங்கி, அடுத்த தேர்தலிலும் வாக்களித்து விடுவார்கள்.

கட்சிக்காக, தங்களது ஊருக்கு எம்.பி வேண்டும் என்பதற்காகவும் வேறு அற்பத்தனமான காரணங்களுக்காகவும் இப்படியான ஏமாற்று அரசியல்வாதிகளுக்கு மன்னிப்பு வழங்கி, மீண்டும் மீண்டும் எம்.பியாகவும் தலைவராகவும் செயலாளராகவும் பிரதித் தலைவராகவும் அரியாசனம் ஏற்றி வைப்பதை நாம் காண்கின்றோம்.

ஆனால், அதே தவறுகளை வேறு தோரணையில் செய்து விட்டு, புதியதொரு விளக்கத்தைக் கூறிக் கொண்டு, அடுத்த தேர்தலிலும் அவர்கள் மக்கள் மன்றத்தில் வந்து மண்டியிட்டு நிற்கின்றார்கள்; பாவமன்னிப்பு புதுப்பிக்கப்படுகின்றது. பழையவர்களும் இப்படித்தான். புதிதாக எம்.பியாக தெரிவு செய்யப்பட்டவர்களும் இதே பாணியைத்தான் பின்பற்றுகின்றார்கள்.

மக்கள் தங்களைத் திருத்திக் கொள்ளவும் இல்லை. ஓரிரண்டு அரசியல்வாதிகளுக்காவது பாடம் புகட்டுவதன் ஊடாக, ஏனையவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதற்கான களநிலைமைகளை தோற்றுவிக்கவும் இல்லை.

முன்அனுமதியோடு தவறுகள் நடக்கின்றன. அதற்கு மன்னிப்பு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவே தோன்றுகின்றது.

இதேவேளை, கட்சிகளுக்கு உள்ளேயும் இவ்வாறான மன்னிப்பளித்தல் செயன்முறைகள் உள்ளன. இதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியே மிகவும் பிரபலமானது. காலங்காலமாக மன்னிப்பளிப்பதை ஓர் உபாயமாகவே அக்கட்சி செய்து வருவதாகச் சொல்லலாம். மக்கள் காங்கிரஸ் கட்சியும் அவ்வப்போது இதனை பரிசீலித்துப் பார்த்திருக்கின்றது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு, கட்சியின் தீர்மானத்துக்கு மாற்றமாக வாக்களித்த எம்.பிக்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தலைவர்களான றவூப் ஹக்கீமும் ரிஷாட் பதியுதீனும் அறிவித்திருந்தனர்.

அதற்குப் பிறகு, அரசியலமைப்பில் 20 இனை வலுவிழக்கச் செய்யும் மற்றுமொரு திருத்தமும் நிறைவேறிவிட்டது. ஆனால், மேற்குறித்த ஒழுக்காற்று அல்லது சட்ட நடவடிக்கைக்கு என்ன நடந்தது என்பது மக்களிடையே ஒரு தெளிவற்ற வினாவாக இருந்தது.

இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் கட்டாய உயர்பீடக் கூட்டம் கொழும்பிலும், பேராளார் மாநாடு புத்தளத்திலும் நடைபெற்றுள்ளது.
முன்னதாக, 20ஆவது திருத்தத்தத்துக்கு ஆதரவளித்த எம்.பிக்களை ஒழுக்காற்று நடவடிக்கைகளின் கீழ் இடை நிறுத்துவதாக மு.கா அறிவித்திருந்தது. இதன்மூலம் கட்சி தனது கட்டுக்கோப்பை நிலைநிறுத்த முன்னிற்பதாகவும், விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஒரு தோற்றப்பாட்டை முஸ்லிம் காங்கிரஸ் மக்களிடையே ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், கட்சியில் இடைநிறுத்தப்பட்டிருந்தவர்கள் உள்ளடங்கலாக அனைவருக்கும் பேராளர் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கட்சித் தலைவர் ஹக்கீம் அழைப்பு விடுத்திருந்தார். அதன்பின்னர், நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில், கட்சியின் யாப்பில் தனக்கிருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்படி எம்.பிக்களை மீள இணைத்துக் கொள்வதாக அவர் அறிவித்ததாகவும், இது பெரும் அமளியை ஏற்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. (கட்டுரை எழுதி முடிக்கப்படும் வரை இந்த முடிவு மாற்றப்பட்டதான வேறு பிந்திய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை)
இது எதிர்பார்க்கப்பட்டதுதான். தவறு செய்கின்ற தலைவர்களுக்கு கட்சி உறுப்பினர்களும் கட்சி எம்.பிக்களுக்கு தலைவர்களும் மாறிமாறி மன்னிப்பு வழங்குவது, முஸ்லிம் காங்கிரஸிற்கோ முஸ்லிம் அரசியலுக்கோ ஒன்றும் புதிதல்ல.

இது இவ்வாறிருக்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் ரிஷாட் பதியுதீன் அறிவித்திருந்தாலும், அந்த நடவடிக்கைகள் எந்த இடத்தில் இருக்கின்றன எனத் தெரியாது.

ஒரு எம்.பிக்கு எதிரான நடவடிக்கைகள் ஒரு கோணத்திலும் மற்றவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வேறு விதமாகவும் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது. இக்கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைகளும் ஓரிரு எம்.பிக்கள் விடயத்தில் கடைசியில் ஒரு முழுமையான அல்லது பகுதியளவிலான பாவமன்னிப்பில் வந்து முடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்போம் என்று முஸ்லிம் கட்சிகள் அறிவித்த போதே, புத்தியுள்ள மக்கள் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்கள் என்பதே உண்மையாகும்.

ஏனெனில், அஷ்ரபுக்குப் பின்னர் எம்.பிக்களுக்கு எதிரான நடவடிக்கை என்பது மக்களை நம்பவைத்து, காலத்தை இழுத்தடித்து, கடைசியில் பாவமன்னிப்பு வழங்கி மக்களை ஏமாற்றிவிடுகின்ற ஓர் உபாய நாடகமே அன்றி வேறொன்றுமில்லை.

இங்கு அவர் செய்தது சரி என்றோ, இவர் செய்வது தவறு என்றோ சொல்வதற்கு இல்லை. ஏன், மக்களின் முடிவுகள் கூட எப்போதும் சரியாக இருப்பதில்லை. எனவே, அரசியல் யதார்த்தங்களின் அடிப்படையில் சில முடிவுகள் சில போதுகளில் சரியாக இருக்கும். பின்னர் பிழையாகும். ஓவ்வொரு கோணத்திலும் வித்தியாசமாகத் தெரியும்.

ஒரு திருத்தத்தை, சட்டமூலத்தை, ஆட்சியாளர்களை எதிர்ப்பதற்கு பல காரணங்கள் இருப்பது போல, ஆதரிப்பதற்கும் ஒரு சில நியாயங்கள் இருக்கலாம். அது வேறுவிடயம். ஆனால், அவை சமூகம் சார்ந்தவையாக இருக்க வேண்டும்.

அதுபோல, கட்சி உறுப்பினர்கள் செய்கின்ற தவறுகளுக்கு எல்லாம் அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், தொடர்ச்சியாக தவறு இழைக்கின்றவர்களை மன்னிப்பதை விட, “இதோ நடவடிக்கை எடுக்கின்றோம்” என்று மக்களை பொய்யாக நம்ப வைத்து, பேய்க்காட்டி, மக்களின் மறதியை சாதகமாகப் பயன்படுத்தி, கடைசியில் எல்லாவற்றையும் பூச்சியத்தால் பெருக்கி விடுகின்ற அரசியல் நாடகதான் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

‘மன்னிப்பு நிச்சயம் கிடைக்கும்’ என்ற நம்பிக்கை இருந்தால், திரும்பத் திரும்ப தவறுகள் இடம்பெறுவதை தடுக்கவே முடியாது. இது எம்.பிக்களுக்கு மட்டுமன்றி தலைவர்களுக்கும் வாக்களிக்கின்ற மக்களுக்கும் கூட பொருந்தும்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.