;
Athirady Tamil News

இலங்கை தமிழ் அரசியலுக்கு ஒரு பெரும் குழப்பம் தேவை!!(கட்டுரை)

0

கட்சி மோதல், உட்கட்சிப் பிரிவினை, குழாயடி சண்டைகள் என ஏற்கெனவே நாறிப்போய்க்கிடக்கும் இலங்கை தமிழ் அரசியல் பரப்பில், இன்னும் தேவைப்படுவது ஒரு பெருங்குழப்பம்தானா என நீங்கள் யோசிக்கலாம். நியாயமான யோசனை! அதற்கான விடையைத் தேடும் முன்பு, இலங்கை தமிழ் அரசியல் பரப்பின் இன்றைய நிலை, எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.

இன்றைய இலங்கை தமிழ் அரசியல் பரப்பு, திக்குத் தெரியாத காட்டில், ஒன்றுக்கொன்று முரணான வழிகாட்டிகளின் சண்டைக்கு நடுவே சிக்கி, எங்கே போவதென்று தெரியாது, ஓரிடத்தில் தங்கிப் போய் நிற்கிறது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதிலிருந்து, தமிழ் அரசியல், தாம் தலைமைத்துவம் வழங்குவதாகச் சொல்லிக்கொள்ளும் மக்களுக்காக, 13 வருடங்களில் என்னத்தைச் சாதித்தது என்று கேட்டால், அதற்கான தேறிய பதில் எதுவுமில்லை என்றுதான் வரும்.

ஒருவகையில் பார்த்தால், இந்தத் தமிழ் அரசியல்வாதிகள், தமது தேர்தல் வாக்குறுதிகளின்படி, தமிழ் மக்களுக்கு செய்வோம் என்று சொன்னவற்றைவிட, ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை கடந்த 13 வருடங்களில் செய்திருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. 19ஆம் திருத்தமாகட்டும், 2015 நல்லாட்சியாகட்டும், 2018 டிசெம்பர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசியலமைப்பு விரோத ஆட்சியை விரட்டியடித்ததாக இருக்கட்டும், இது எல்லாமே இரா. சம்பந்தன் – சுமந்திரன் ஆகியோரது கைங்கரியங்கள்தான் என்றால் அது மிகையல்ல.

ஆனால், இதே 13 வருடங்களில் வடக்கு-கிழக்கு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இலங்கை அரசியலின் தலையெழுத்தை தீர்மானிக்கவல்ல தமிழ் அரசியல்வாதிகளால், வடக்கு-கிழக்கின் தலையெழுத்தைத்தான் மாற்றியமைக்க, வடக்கு-கிழக்கின் பிரதிநிதிகளால் முடியவில்லை!

கல்வி, பொருளாதாரம், உற்பத்தி, வாழ்க்கைத்தரம் என எல்லாவற்றிலும் வடக்கும் கிழக்கும் பின்தங்கியே இருக்கின்றன. ஆனால், சமகால வடக்கு-கிழக்கு தமிழ் அரசியல் பரப்பில், தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் முன்னரங்கில் நின்றாலும், தேசக்கட்டுமானம் பற்றிய அக்கறை அவற்றிடம் தென்படவில்லை. மாறாக நாக்கிலும், அறிக்கைகளிலும் மட்டும் தமிழ்த் தேசியம் வாழ்கிறது. மற்றப்படி, தமிழ்த் தேசியம் என்பது, இன்று குழாயடிச் சண்டைக்கான பொருளாக மாறியுள்ளது.

தேசக்கட்டுமானம் பற்றி அக்கறைகொள்வதற்குப் பதிலாக, தமிழ்த் தேசியத்துக்கு யார் சொந்தம் கொண்டாடுவதென்று அடிபட்டுக்கொண்டு கிடக்கிறது தமிழ் அரசியல் பரப்பு!

தமிழ்த் தேசியம், தமிழ்த் தேசிய விரோதமென முன்பு பரந்தளவில் இருநிலைப்பட்டிருந்த தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு, இன்று தமிழ்த் தேசிய பரப்புக்கு உள்ளேயே நீயா, நானா சண்டைகளால் உடைந்து போயிருக்கிறது.

இதில் கட்சி, கூட்டணிகளுக்கு இடையேயான முரண்பாடுகளைத் தாண்டி, கட்சிக்குள்ளான, கூட்டணிகளுக்குள்ளான முரண்பாடுகளும், அடிபாடுகளுமே தமிழ்த் தேசிய அரசியலை தினந்தோறும் இன்று நகர்த்திக்கொண்டிருக்கும் முக்கிய விசையாக இருக்கிறது.

தமிழ்த் தேசிய நலனுக்கும், கட்சிக்காரர், தனிப்பட்ட ஆளுமைகள், அந்த ஆளுமைகளைச் சுற்றிய அரசியல் வட்டங்கள் ஆகியவற்றின் நலனுக்கும் இடையிலான போட்டியில், தமிழ் தேசியமும், அதன் நலன்களும் மறக்கப்பட்டுவிட்டன. இதனால்தான் தமிழ்த் தேசிய அரசியலால், 2009இற்கு பின்னர், இந்த 13 வருடங்களில் எதையும் தமிழ் மக்களுக்காக சாதிக்க முடியவில்லை.

தமிழ் மக்களுக்காக ஒரு குழந்தையைப் பிரசவிப்பதைவிட, அந்தக் குழந்தைக்கு தம் பெயரே முதலெழுத்துகளாக அமைய வேண்டும் என்ற எண்ணம்தான் தமிழ் அரசியல்வாதிகளிடையே மேவி நிற்கிறது. அதனால்தான், தன் பெயர் முதலெழுத்தாக வராவிட்டால், குழந்தையே வேண்டாம் என்ற குருட்டுத் தன்னலம் இந்தத் தமிழ் அரசியல்வாதிகளிடையே மேலோங்கி நிற்கிறது.

ஒரே கொள்கை கொண்டோர் என்று சொல்லிக்கொள்வோர் கூட, அந்தக் கொள்கைக்காக ஒரே மேடையில் ஒன்றாக நிற்கத்தயாராக இல்லாமைக்கு இதுதான் காரணம். தனிமனிதனை மையப்படுத்தி, தனது அரசியலை கட்டமைத்த எந்த நாடும் தேசமும் சமூகமும், நீண்டுநிலைக்கத்தக்க அரசியல் வெற்றிகளை நீண்டகாலத்திலும் பெற்றுக்கொண்டதில்லை. நிற்க!

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு, தேசக்கட்டுமானத்தை மறந்ததால், தமிழ்த் தேசம் சமூக, பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மக்கள் தப்பிப்பிழைத்தலுக்கான வழியைத் தேட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்த் தேசிய அரசியல், மக்களுக்கான எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை வழங்காததன் விளைவுதான், தமிழ்த் தேசத்தின் இளம் வாக்காளர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர், தமிழ்த் தேசியம் அல்லாத மாற்றுக் கட்சிகளின் அரசியல்வாதிகளை நோக்கி, தமது நம்பிக்கைப் பார்வையைத் திருப்புகின்றனர்.

இதுதான் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நடந்தது. இது நடந்த பின்னர் கூட, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு சுதாகரிக்கவில்லை. இன்னும் அதே தனிநபர் மைய அரசியல், உட்கட்சி, உட்கூட்டணிப் பிளவுகள், குழாயடிச் சண்டைகள் என பழங்கதை, தொடர்கதையாகவே இருக்கிறது.

அதெல்லாம் சரி! அது என்ன தமிழ் அரசியல் பரப்பில் பெருங்குழப்பம் தேவை?
‘தக்கன பிழைக்கும்’ என்பது இயற்கையின் விதியென்றால், அது அரசியலுக்கும் பொருந்தும். காலத்துக்கு ஏற்ப தன்னைப் பரிபாலித்துக்கொள்ளும் அரசியல்தான் பிழைக்கும்; மற்றையவை மடியும்.
இன்று தமிழ் அரசியல் பரப்பில், ஒரு பெரும் மாற்றம் தேவைப்படுகிறது. அந்த மாற்றத்துக்கான ஆரம்பப்புள்ளி ஒரு பெருங்குழப்பம்தான்.

ஒவ்வொரு மனித சூழ்நிலையும், ஒழுங்குக்கும் குழப்பத்துக்கும் இடையிலான போராட்டம்தான். மக்களிடையேயான உறவுகளில், நிறுவன சூழ்நிலைகளில், சமூகத்தில், ஒழுங்கு மற்றும் குழப்பம் ஆகியவற்றுக்கு இடையேயான இயக்கம், அமைதியான காலங்கள் மற்றும் நெருக்கடி காலங்களால் வெளிப்படுத்தப்படுகிறது.

அமைதியான காலங்களில், எல்லாம் பெரும்பாலும் சரியாக நடப்பதாக அமையும்; விடயங்கள் போதுமான வரிசையில் இருக்கும். இதை ஒழுங்கு எனலாம். அதேசமயம் நெருக்கடியான காலகட்டங்களில், ஒழுங்கை மறுசீரமைக்க வேண்டிய இடத்தில், குழப்பமான சூழ்நிலை உருவாகிறது.

நெருக்கடியும் குழப்பமும் எப்போதும் ஒரு மூலையிலோ, அல்லது மேற்பரப்பின் கீழ் எங்காவதோ இருந்துகொண்டேயிருக்கும். தனிநபர்களும் சமூகமும் முடிந்தவரை நெருக்கடியையும் குழப்பத்தையும் தவிர்க்க முயற்சி செய்கின்றன. ஆனால், நெருக்கடியும், குழப்பமும்தான், ஒழுங்கின் பிறப்பிடம். குழப்பம் இல்லாமல் ஒழுங்கு இருக்க முடியாது; அது குழப்பத்தில் இருந்து பிறக்கிறது. குழப்பம்தான் தாய்; ஒழுங்கு அதற்குள் இருந்து பிறக்கிறது. இரண்டும் எல்லாவற்றிலும் எல்லா சூழ்நிலைகளிலும் உள்ளன.

இன்று தமிழ் அரசியல் பரப்பு குழறுபடியான சூழலில் இருக்கிறது. அதற்கு ஒரு புதிய ஒழுங்கு தேவை என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால், அந்தப் புதிய ஒழுங்கு, எவ்வாறு உருவாக்கப்படும் என்பது குறித்துத்தான் நாம் எதிர்உள்ளுணர்வோடு சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது.

ஒழுங்கிலிருந்து, புதியதோர் ஒழுங்கு பிறக்காது. புதியதோர் ஒழுங்கு பிறக்க, குழப்பம் தேவை. ஒரு பெருங்குழப்பத்தில் இருந்துதான், புதியதோர் ஒழுங்கு பிறக்கும். இந்த எதிர்உள்ளுணர்வுச் சிந்தனையூடாக, இன்றைய தமிழ் அரசியல் பரப்பில், புதிய ஒழுங்குக்கான தேவையை நாம் அணுகினால், அதை அடையப்பெறப்படுவதற்கு, ஒரு பெரும் குழப்பம் தேவை என்பது தௌிவாகும்.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஹோசே சறமாகோ, “குழப்பம் என்பது புரிந்து கொள்ளக் காத்திருக்கும் ஒழுங்கு மட்டுமே” என்பார்.
இலங்கை தமிழ் அரசியல் பரப்பு, திக்கற்ற நிலையில் சிக்கிப் போய், குழம்பிக்கிடக்கிறது. இங்கு ஒரு புதிய ஒழுங்குக்கான தேவை இருக்கிறது. அதற்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. ஆனால், மாற்றம் சுமூகமாக நடக்க வேண்டும். குழப்பம், ஒழுங்கைப் பாதித்துவிடும் என்று அதே குரல்கள் எச்சரிக்கின்றன. அந்த எச்சரிக்கையில் அர்த்தமில்லை.

இங்கு புதிய ஒழுங்கு தேவையென்றால், அது பெரும் குழப்பத்திலிருந்தே தொடங்கும் என்ற எதிர் உள்ளுணர்வுச் சிந்தனையோடு இந்த விடயத்தை அணுகுவதே, தமிழ் அரசியல் பரப்பில், புதிய ஒழுங்கை வரவேற்பதற்கான ஒரே வழி.

You might also like

Leave A Reply

Your email address will not be published.