வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 01: முசோலினியின் நூறு ஆண்டுகளின் பின்னர்… !! (கட்டுரை)
அதுவோர் அழகிய நாள்! இலையுதிர்காலம் முழுமையாகத் தன்னை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தது. அந்த ஓக்டோபர் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையே, கதிரவன் தன் கதிர்களைப் பரப்பி, ஒருவித மகிழ்ச்சியைத் தரும் ஆண்டின் இறுதித் தினமென்பதைப் பலர் அறிவர்.
ஓஸ்லோ நகரின் மத்தியில், குழந்தைகளுக்கான பல செயற்பாடுகளை, அவர்களுடன் நாடக நடிகர்களும் முன்னெடுத்திருந்தனர். வீதிகளில் பல்வேறு நிறங்களினாலான வெண்கட்டிகளால் படங்களை வரைவது, பாடுவது, ஆடுவது விளையாடுவது என்று ‘பல்கலைக்கழக வளாகம்’ என்று அறியப்பட்ட அப்பகுதி களைகட்டியிருந்தது.
அப்பகுதிக்கு வாத்தியங்களை இசைத்தபடி, கொடிகளைத் தாங்கிய கறுப்புடை அணிந்த மனிதர்கள் ஊர்வலமாக வந்தனர்கள். குழந்தைகளின் செயற்பாடுகளை நிறுத்தி, அவ்விடத்திலிருந்து அவர்களை விரைவாக ஏற்பாட்டாளர்கள் அகற்றினர். அந்த ஊர்வலத்தை மேற்கொண்டவர்கள், அதிவலதுசாரி ஆதரவாளர்கள். அவர்கள் குடியேற்றவாசிகளுக்கு எதிரானவர்கள். தங்களை நவநாசிகள் என்று அழைத்துக் கொள்பவர்கள்.
அவர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் முயன்ற நிலையில், பொலிஸாருக்கும் நவநாசிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இறுதியில் 35 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பலர் நோர்வே நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லையென்றும், அண்டைய ஸ்கன்டினேவிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் காவற்றுறையினர் தெரிவித்தனர்.
இந்நிகழ்வு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த ஒன்றை நினைவுபடுத்தியது. இதை உலகின் ஒரு மூலையில் உள்ள ஒரு ஸ்கன்டினேவிய நாட்டின் தலைநகரில் நிகழ்ந்த தனித்த நிகழ்வாகக் கருத முடியாது. இன்று உலகைச் சூழ்ந்துள்ள பொருளாதார நெருக்கடியின் விளைவு, பல ஐரோப்பிய நாடுகளில் குடியேற்றவாசிகளுக்கு எதிரான மனநிலையும், அதிவலது தீவிரவாதமும் எழுச்சி பெற்றுள்ளது.
இந்த மனநிலை, நெருக்கடிகளை எதிர்நோக்கும் எல்லா நாடுகளிலும் இன்று பரவுகிறது. இலங்கையும் இதற்கு விலக்கல்ல. இந்த அதிவலது தீவிரவாதமும் அதனோடு பின்னிப் பிணைந்த தேசியவாத வெறியும், நவநாசிசம் மற்றும் பாசிசம் ஆகியவற்றின் கூட்டுக்கலவையின் ஆபத்துகளையும் எதிர்காலச் சவால்கள் குறித்த முன்னோக்கையும் இத்தொடர் ஆராய விளைகிறது.
முசோலினியின் கதைக்குப் போவதற்கு முன்னர், அண்மைய இரு நிகழ்வுகளை நினைவுகூர்தல் தகும்.
முதலாவது, இஸ்ரேல் பற்றியது. இது முக்கியமானது. ஏனெனில், ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடுகின்ற அபத்தம் இன்றும் தொடர்கிறது. கடந்தவாரம், இஸ்ரேலிய பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, அதிவலது தீவிரவாத நிலைப்பாடை உடைய கட்சிகள் ஆட்சியைப் பிடித்துள்ளன. தீவிர வலதுசாரிக் கட்சிகளின் எழுச்சியானது, இஸ்ரேலிய சமுதாயத்தில் அதிகரித்துவரும் தீவிரவாதம் மற்றும் இனவெறியின் வெளிப்பாட்டின் இயல்பான விளைவாகும்.
இஸ்ரேலியர்களால் பாலஸ்தீன மக்கள் பல ஆண்டுகளாக கொலைகள், கைதுகள், குடியேற்றங்கள் போன்ற வடிவங்களில் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இஸ்ரேலிய அரசானது, குடியேற்றவாசிகள் மற்றும் இராணுவத்தினர் பலஸ்தீனியர்கள் மீது எல்லையற்றுக் குற்றங்களைச் செய்ய இலவச அனுமதியை வழங்கியுள்ளது.
இரண்டாவது, முசோலினி பதவியேற்று நூறாண்டுகளுக்குப் பிறகு, முசோலினியைப் பின்பற்றுவதாக வெளிப்படையாக அறிவித்த ஒருவர், தனது தீவிர வலதுசாரி நிலைப்பாட்டுடன் தேர்தலில் வென்று, இத்தாலியில் பிரதமராகியுள்ளார். இது இனி நடக்கச் சாத்தியமான நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே!
ஒஸ்லோவில் கடந்த மாதம் நடந்த நிகழ்வு நினைவுகூர்ந்த நிகழ்வுக்குத் திரும்புவோம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 1922இல் இதேபோன்றதோர் ஒக்டோபர் மாதம், பெனிட்டோ முசோலினியின் துணை இராணுவ கறுப்புச்சட்டைகள், இத்தாலிய தலைநகரில் பிரதம மந்திரி லூய்கி ஃபாக்டாவின் அரசாங்கத்தை கலைக்கக் கோரி அணிவகுத்துச் சென்றனர். ரோம் மீதான அணிவகுப்பு என்பது, பாசிச சக்தியின் அடிப்படை கட்டுக்கதை. இந்தத் துணிச்சலான செயலின் மூலம், இத்தாலிய அரசாங்கத்தின் தலைவராக, வலிமையான முசோலினி தன்னை நிறுவிக் கொண்டார். ஆனாலும் அந்த அணிவகுப்பு ஒரு கேலிக்கூத்து.
முசோலினியின் பாசிசப் படைகள் சில ஆயிரங்களை மட்டுமே கொண்டிருந்தன, பெரும்பாலும் தடிகளாலான ஆயுதங்களை ஏந்தியிருந்தன. அரசப்படைகளுடன் ஏற்பட்ட மோதலில் சிதறி, சேற்றிலும் மழையிலும் மூழ்கின. அவர்களில் அதிகமானோர், தலைநகரில் அரசாங்கப் படைகளால் சுடப்பட்டு, பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். ‘குதிரையில் ஏறிய மனிதன்’ என்று தன்னைத் தானே வீரனாக அழைத்துக் கொள்ளும் முசோலினி, சுவிஸ் எல்லைக்கு அருகே ஒரு பாழடைந்த அலுவலகத்தில் ஒளிந்து கொண்டார்.
பாசிஸ்டுகளிடம் வெளிப்படையான பலவீனம் இருந்தபோதிலும், அரசாங்கம் ஆட்சிக் கவிழ்ப்புக்கு அடையாள எதிர்ப்பை மட்டுமே ஏற்றியது. ‘பாசிஸ்டுகள் மீது மிகுந்த அனுதாபத்தைக் கொண்டிருந்த இராணுவம், முசோலியின் ஆட்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்க மறுப்பார்கள் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்’ என்று பிரிட்டிஷ் தூதர் குறிப்பிட்டார்.
பேரணி நடைபெற்று 24 மணி நேரத்துக்குள், மன்னர் விக்டர் இமானுவேல், முசோலினியை பிரதமராக நியமித்தார். புதிய சர்வாதிகாரியின் துருப்புகள் இறுதியாக ரோம் நகரை அடைந்தபோது, அவர்கள் வெற்றி அணிவகுப்பில் நுழைந்தனர்.
ரோம் மீதான அணிவகுப்பு என்ற நாடகத்தை விளங்குவதற்கு சில அடிப்படையான உண்மைகளைப் புரிந்து கொள்ளுவது முக்கியம். முசோலினி ஆளும் வர்க்கத்தின் விருப்பத்துக்கு எதிராக அதிகாரத்தை எடுக்கவில்லை, மாறாக, அதன் ஆசீர்வாதத்துடனேயே பெற்றார். அதிகாரத்துக்கான பாசிஸ்டுகளின் பாதை சகிப்புத்தன்மை, பொலிஸ்துறை, அரசியல்வாதிகளின் நேரடியான ஒத்துழைப்பு, தொழிலதிபர்களின் ஆடம்பரமான நிதியுதவி ஆகியவற்றால் அமைக்கப்பட்டது.
இத்தாலிய ஆளும் வர்க்கம் முசோலினியை வரவேற்றது. ஏனெனில், அதன் உறுப்பினர்கள் பாசிஸ்டுகளை பல ஆண்டுகால நெருக்கடி மற்றும் வர்க்கப் போராட்டத்துக்கு தீர்வாகக் கருதினர்,
முதல் உலகப் போர், இத்தாலியை நெருக்கடிக்குள் தள்ளியது. கிட்டத்தட்ட ஆறு மில்லியன் இத்தாலியர்கள் போர்வீரர்களான உள்ளீர்க்கப்பட்டார்கள். 600,000 பேர் கொல்லப்பட்டனர்; 700,000 பேர் நிரந்தரமாக ஊனமுற்றனர். தீவிரமயமாக்கப்பட்ட முனைகளில் இருந்து, விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். தொழிற்சாலைத் தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களில் இராணுவச் சட்டத்தை நிறுவுவதற்கு எதிராகப் போராடினர்.
1917இல் ரஷ்யப் புரட்சி தொழிலாளர்களை தீவிரமயமாக்கும் நடைமுறை உதாரணத்தை வழங்கியது. போரின் காட்டுமிராண்டித்தனத்தை முடிவுக்குக் கொண்டுவர முதலாளித்துவ அமைப்பை வீழ்த்தியது. 1919-20 ஆம் ஆண்டின் பியென்னியோ ரோஸ்ஸோ (இரண்டு சிவப்பு ஆண்டுகள்) இயக்கத்தின் உச்சத்தின் போது, ஆளும் வர்க்கத்திடம் இருந்து இத்தாலியின் மீதான கட்டுப்பாட்டைப் பறிக்க தொழிலாளர்கள் ஒரு தீர்க்கமான போராட்டத்தைத் தொடங்கினர். அதே நேரத்தில், விவசாயிகள் நிலத்தை கைப்பற்றினர்; பெரிய நில உரிமையாளர்களிடம் இருந்து பாரிய சலுகைகளை கட்டாயப்படுத்தத் தொடங்கினர். உள்நாட்டுப் போர் நெருங்கிவிட்டதாகத் தோன்றியது.
சமூக நெருக்கடி வலதுசாரி தீவிரமயமாக்கலையும் உருவாக்கியது, அது பாசிசத்தை பிறப்பித்தது. இத்தாலிய சோசலிஸ்ட் கட்சியின் ஒரு முக்கிய நபரான பெனிட்டோ முசோலினி, நாடு போருக்குள் நுழைவதற்கு ஆதரவாக அறிவித்ததன் மூலம், அவரது தோழர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். கட்சி முசோலினியை வெளியேற்றியது, அவர் மீது காறி உமிழ்ந்தது. அவரை துரோகி என்று அழைத்தது. நவம்பர் 1914இல், முசோலினி, இத்தாலிய தொழிலதிபர்கள் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் ‘Il Popolo d’Italia’ (இத்தாலி மக்கள்) என்ற புதிய வலதுசாரி தினசரி செய்தித்தாளை நிறுவினார். இந்தப் பக்கங்களில், அவரது புதிய யோசனைகள் வடிவம் பெற்றன. அச்செய்தித்தாள் போருக்கான ஆதரவு மற்றும் அவ்வாதரவைச் சீர்குலைக்கும் திறன் கொண்ட சோசலிச இயக்கம் போன்ற அனைத்து சக்திகளுக்கும் விரோதம் ஆகியவற்றையே மூலதனமாகக் கொண்டது.
முசோலினி, ஜனநாயகமே நாட்டை அதன் தலைவிதியை அடைவதில் இருந்து பின்வாங்குகிறது என்ற முடிவுக்கு விரைவாக வரத் தொடங்கினார். இறுதியில் அவர் பாசிசத்தை ‘உச்ச ஜனநாயக விரோதம்’ என்று விவரித்தார். இதனூடாக ஜனநாயகம் குறித்த வரையரைகளைக் கேள்விக்குள்ளாக்கினார்.
இதன் பின்னணியில், சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் செல்வாக்குப் பெற்ற ஒரு கதையாடலை நினைவுபடுத்தல் பொருத்தம். “இலங்கையை நாங்கள் ஒழுக்கமான சமூகமாக உருமாற்ற வேண்டும். அதுவே வினைத்திறனான சமூகமாய் மலரும். அதற்கு எமது உரிமைகளை இழக்கத் தயாராக இருக்க வேண்டும்” என்று ‘வியத்மக’ அமைப்பினர் தொடர்ந்து கூறினர்.
அதன் வழித்தடத்திலேயே கோட்டாபய ராஜபக்ஷவின் வருகை நிகழ்ந்தது. இலங்கைக்கு தேவை ஒரு சர்வாதிகாரியே; ஜனநாயகம் எங்கள் நாட்டு மக்களுக்குச் சரிவராது போன்ற பல உரையாடல்களை நாம் கேட்டிருக்கிறோம். அதன் பலன்களையும் அனுபவித்துள்ளோம். எனவே அதிவலது நிகழ்ச்சி நிரலின் ஆபத்துகள் குறித்து, எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.