முஸ்லிம் தரப்புக்கு ஆயிரத்தோராவது வாய்ப்பு!! (கட்டுரை)
‘ஒன்றுமே செய்யாமல் அல்லது பெற்றுக்கொள்ளாமல் இருப்பதை விட, சிறியதாகவேனும் எதையாவது செய்வது அல்லது பெற்றுக்கொள்வது சிறந்தது’ என்று, ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கின்றது. இது வேறு எதற்குப் பொருந்தாவிட்டாலும் கூட, நமது அரசியலுக்கு மிகப் பொருத்தமானதாகும்.
‘செய்ய முடியாதவற்றை எல்லாம் செய்யும் கலைதான் அரசியல்’ என்று சொல்வதுண்டு. ஆனால், அப்படிச் சொன்னவர்களில் அதிகமானவர்கள், செய்யக் கூடியவற்றைக் கூட செய்யாமல்தான் காலத்தை வீணடித்து விட்டுப் போயிருக்கின்றார்கள்; இதுதான் யதாத்தம்!
ஆயிரத்தெட்டு வாக்குறுதிகளைக் கூறி, பலநூறு நம்பிக்கைகளைக் கொட்டி, மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள், அவற்றில் ஒருசிலவற்றைக் கூட நிறைவேற்றாமலேயே தமக்கான அரியணையில் இருந்து இறங்கிப் போனதை நாம் கண்டிருக்கின்றோம்.
இலங்கை அரசியலில் பல வாக்குறுதிகள், தேர்தல் விஞ்ஞாபனங்கள், கொள்கைப் பிரகடனங்கள் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற உண்மையான எண்ணத்தோடு வெளியிடப்படுவதில்லை. தமது சுயலாப அரசியல் எனும் கல்லாப்பெட்டி நிரம்பும் வரை, மக்களை பராக்குக் காட்டுவதற்கான ஓர் ஆயுதமாகத்தான் இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
குறிப்பாக, முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்திய அரசியலில், இந்த ஏமாற்றுத்தனத்தை வெகுவாகக் காணலாம். முஸ்லிம் அடையாள அரசியலை முன்னிறுத்தும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், எம்.பிக்கள் மட்டுமன்றி, ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன என எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் எம்.பிக்களின் போக்கும், இதுவன்றி வேறொன்றுமில்லை.
பதினாறு இலட்சத்துக்குக் குறைவில்லாத வாக்காளர்களைக் கொண்ட, 22 இலட்சம் முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அபிலாஷைகளை முன்னிறுத்துவதற்கும், அதன்மூலம் ஒரு தனித் தேசிய இனமாக முஸ்லிம் சமூகத்தை அடையாளப்படுத்துவதற்கும், கடந்தகாலத்தில் பல வாய்ப்புகள் கிடைத்தன.
மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அந்த வாய்ப்புகளைக் கொஞ்சம் பயன்படுத்தினார். அதற்குப் பிறகு, வேறு எந்த முஸ்லிம் தலைவரோ, எம்.பிக்களோ இந்த வாய்ப்புகளைக் கனகச்சிதமாகப் பயன்படுத்தவில்லை.
சந்திரிகா அம்மையாரின் இரண்டாவது ஆட்சிக்காலம் தொடக்கம், ராஜபக்ஷர்களின் ஆட்சிக்காலம் வரை, பல சந்தர்ப்பங்கள் முஸ்லிம்களுக்கு கிடைத்தன. இவற்றை இரண்டு வகையாக பார்க்கலாம்.
ஒன்று, முஸ்லிம்கள் தமது பிரச்சினைகளை தீர்ப்பதற்காகப் பேரம் பேசும் சக்தியைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு.
இரண்டாவது, சமூகத்துக்குப் பாதகமான சட்டமூலங்கள், யாப்புத் திருத்தங்கள், அரசியல் நகர்வுகளை கூட்டாக எதிர்ப்பதற்கான வாய்ப்பு.
துரதிர்ஷ்டவசமாக இவை இரண்டு வாய்ப்புகளுமே பயன்படுத்தப்படாமல் நழுவவிடப்பட்டன. சில முஸ்லிம் அரசியல் ‘டீலர்’கள் இதனை தமது சுய இலாபத்துக்காகப் பயன்படுத்திக் கொண்ட கதைகளும் உள்ளன.
சிங்கள ஆட்சியாளர்கள் ஒரு காலத்திலும் தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற இரண்டு சிறுபான்மை இனங்களையும் ஒரே மாதிரிக் கையாண்டதில்லை. இரண்டு சமூகங்களோடும் சமகாலத்தில் உறவு கொண்டாடியதும் இல்லை; பகைத்துக் கொண்டதும் இல்லை. இரண்டு இனங்களின் விவகாரங்களில் ஒரே காலப்பகுதியில் சமஅளவு கரிசனை காட்டியதும் இல்லை.
அதுபோலத்தான், முஸ்லிம் அரசியலையும் ஆட்சியாளர்கள் கையாண்டு வருகின்றார்கள். நாட்டு மக்களைப் பிரித்தாளுவது போலவே, முஸ்லிம் அரசியல் அணிகளையும் பிரித்தாளுவதன் ஊடாக, முஸ்லிம்களுக்கான அரசியல் பலம் பெறுவதை, மூலோபாய ரீதியாக தடுத்து வருகின்றார்கள். ஜனாதிபதி ரணிலும் பெருந்தேசியத்தின் செல்லப் பிள்ளைதான் என்பதையும், இதற்கு முன்னர் அவர் அதிகாரத்தில் இருந்த காலத்தில், சிறுபான்மையினரின் பிரச்சினைகளை முற்றுமுழுதாகத் தீர்த்து வைத்தார் எனவும் கூற முடியாது.
ஆனாலும், ஒரு நிர்ப்பந்த சூழல் காரணமாக, தமிழர்களை நோக்கிய ஒரு மென்போக்கை அரசாங்கம் தற்போது கடைப்பிடித்து வருகின்றது. இந்நிலையில், அடுத்த சுதந்திர தினத்துக்குள் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதாகவும் அதற்காக தமிழ் அரசியல்வாதிகளுடன் பேச்சு நடத்த உள்ளதாகவும், ஜனாதிபதி அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
காணிப் பிரச்சினைகள் தொடர்பாக, தமிழ்த் தரப்புகள் தொடர்ச்சியாகப் பேசி வருகின்றன. வடக்கில் காணி அபகரிப்புகள் இடம்பெறுவதாகவும் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் மீளஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளன. இந்நிலையில், காணி விவகாரம் பற்றி ஆராய, எட்டு குழுக்களை நியமிப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
வடக்குக்குச் சென்ற ஜனாதிபதி, வவுனியாவில் ஜனாதிபதி செயலகத்தின் ஒருங்கிணைப்பு உபஅலுவலகத்தைத் திறந்துவைத்துள்ளார். அத்துடன் புலம்பெயர்ந்தோருக்கான அலுவலகத்தை அடுத்த மாதம் திறப்பது தொடர்பாகவும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
நாட்டில் இன்னும் இனவாதமும் இனப்பாகுபாடும் முற்றாக அழிந்து விடவில்லை. சரத் வீரகேசர போன்றோரின் கருத்துகள் இவற்றுக்கு நல்ல பதச்சோறாகும். இவ்வாறிருக்க, பசிலும் நாடு திரும்பியுள்ளார்.
இவ்வாறான சூழமையில், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேறும் என்று சொல்வதற்கில்லை. இருப்பினும், ஒரு சில பிரச்சினைகளாவது தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை பரவலாக ஏற்பட்டுள்ளது.
ஆனால், இது விடயத்தில் முஸ்லிம் சமூகம் எந்த இடத்தில் நிற்கின்றது? மீண்டும் கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முடியுமானவற்றுக்கு தீர்வுகாண தமிழ் அரசியல்வாதிகள் முன்னிற்பது போல, முஸ்லிம் அரசியல்வாதிகள் முயலுகின்றார்களா?
அரசாங்கங்கள், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போக்குக்கு, ஆயுதப் போராட்டம் காரணம் என்று சொன்னால் அதை ஏற்க முடியாது. ஏனெனில், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரசியல் ரீதியான முன்னெடுப்புகள், ஆயுத மோதலுக்கு முன்னரும் இருந்தன, யுத்தம் முடிவடைந்த பிறகும் நீளுகின்றன.
ஆகவே, அரசியல் நகர்வுகள், ஒருமித்த நிலைப்பாடு, பிரச்சினைகள் உலக அரங்குக்கு கொண்டு செல்லப்பட்டமை எனப் இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. இதைப் பார்த்து, மலையக அரசியல்வாதிகளும் தற்போது மலையக மக்களின் பிரச்சினைகளை முன்கொண்டு செல்ல முனைவதை அவதானிக்க முடிகின்றது.
உண்மையில், முஸ்லிம் கட்சிகள் மட்டுமன்றி, பெரும்பான்மைக் கட்சிகளில் அங்கம் வகித்த, வகிக்கின்ற முஸ்லிம் எம்.பிக்களும் இதையெல்லாம் எப்போதோ செய்திருக்க முடியும். அதன்மூலம் முஸ்லிம் சமூகத்தின் ஒன்றிரண்டு பிரச்சினைகளையாவது தீர்த்து வைத்திருக்கலாம். ஆனால் அது இதுவரை நடக்கவில்லை.
அடையாள அரசியல், இணக்க அரசியல் எனச் சொல்லிக் கொண்டு, முஸ்லிம் கட்சிகள் மட்டுமன்றி பெரும்பான்மைக் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் எம்.பிக்களும் அரசாங்கம் அல்லது பெருந்தேசியத்துக்கு முட்டுக் கொடுக்கின்ற வேலையைத்தான் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றன.
தமிழ் அரசியல்வாதிகளை விட, முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசாங்கத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலமான உறவை கொண்டாடி வந்தனர்; வருகின்றனர். அப்படியென்றால், எவ்வளவோ விடயங்களைச் சாதித்திருக்க முடியும். எத்தனையோ பிரச்சினைகளை தீர்த்திருக்க முடியும். ஆனால், வாய்ப்புக்கள் தவற விடப்பட்டனவே தவிர, முஸ்லிம் சமூகத்துக்காக அவை சரிவரப் பயன்படுத்தப்படவில்லை.
இந்த தொங்குநிலை அரசாங்கமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பதவியில் இருக்கப் போகின்றார்கள்? ஆனால், ‘காற்றுள்ளபோது தூற்றிக் கொள்ள வேண்டும். ஆயிரத்தோராவது தடவையாக கிடைத்திருக்கின்ற வாய்ப்பையேனும் தவறவிடாது, சிறிய பிரச்சினைகளையாவது தீர்த்துக் கொள்வதே நல்ல அரசியலுக்கு அழகாகும்.
இந்த நாட்டில் முஸ்லிம் மக்களுக்கும் பிரத்தியேக பிரச்சினைகள் உள்ளன. அவற்றை நாம் தீர்த்து வைப்போம் என்று ஜனாதிபதியோ அரசாங்கமோ அறிவிக்கவில்லை. இதற்குக் காரணம், முஸ்லிம் தலைவர்களும் எம்.பிக்களும் என்று கூறுவதுதான் சரி! அவர்கள் சமூகத்தின் பிரச்சினைகளை முறையாக முன்வைக்கவில்லை. இதனால், இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகளே இல்லை என்பது போன்ற பிம்பமே கட்டமைக்கப்பட்டுள்ளது.
இப்போதுகூட அதுதான் நடக்கின்றது.
கிடைத்திருக்கின்ற குறுகியகால வாய்ப்பைப் பயன்படுத்தி எதையாவது சாதித்துக் கொள்வோம் என்று வடக்கு, கிழக்கு, மலையக தமிழ் அரசியல் சக்திகள் முனைப்புக் காட்டிக் கொண்டிருக்க, முஸ்லிம் அரசியல்வாதிகள், ‘பிடில்’ வாசித்துக் கொண்டு காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
மார்ச்சில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலிலும் அதற்குப் பின்னர் நடைபெறும் தேர்தல்களிலும் எப்படிப் போட்டியிடுவது என்பதற்கான வியூகங்களை அமைப்பதிலேயே முஸ்லிம் கட்சிகளும் அரசியல் அணிகளும் முழுக் கவனத்தையும் குவித்துள்ளன. சில அரசியல்வாதிகள் மட்டும் இப்போதுதான் தூக்கம் கலைத்து பேசத் தொடங்குகின்றனர்.
இப்போது நமக்குக் கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, முஸ்லிம்களின் நீண்டகால பிரச்சினைகளை முறையாக முன்வைத்து, அதில் ஒரு சிலவற்றுக்காவது தீர்வு கண்டுகொள்ள வேண்டும் என்ற முனைப்பையும், அதற்காகவேனும் முஸ்லிம் அரசியல் அணிகள் ஒன்றுபட்டுச் செயற்படுகின்ற போக்கையும் மருந்துக்குக் கூட காண முடியாதுள்ளது.
இந்நிலை மாறவேண்டும். இந்த அரிய தருணத்தைச் சாதகமாகக்கிக் கொண்டு, மூன்று முஸ்லிம் கட்சிகளும் அரசியல் அணிகளும் மட்டுமன்றி, பெரும்பான்மைக் கட்சிகளில் உள்ள முஸ்லிம் எம்.பிக்களும் தமது சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்பட வேண்டும்.
அப்படிச் செய்யவில்லை என்றால், கடந்த காலங்களைப் போலவே இந்தக் காலமும் முஸ்லிம் சமூகத்துக்கு எந்தவிதமான உபயோகமும் இன்றி, ஆயிரத்து ஓராவது தடவையாக, வீணே கழிந்து போகும்.