இலங்கையில் சிறுபான்மை!! (கட்டுரை)
இலங்கையில், “சிறுபான்மை இனங்கள் இல்லை; பல்வேறு இனக்குழுக்கள் உள்ளன. நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப, அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அண்மையில் ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
இந்தக் கருத்தை, சில தமிழ் அரசியல்வாதிகள் கைதட்டி வரவேற்கிறார்கள். பொதுப்படையாகப் பார்த்தால், இது நல்லெண்ணம் மிக்க கருத்தாகவே தெரிகிறது. அந்தளவில், அதற்குரிய வரவேற்பும் பொருத்தமானதே!
‘அனைவரும் இலங்கையர்களாக ஒன்றுபட்டு, நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்’ என்கிற குரல், அனைவரும் ‘ஸ்ரீ லங்கன்ஸ்’ என்ற தேச அடையாளத்துக்குள் வரவேண்டும் என்கிற ‘சிவில் தேசியம்’ சார்ந்த ‘தேசிய அரசு’க் கட்டமைப்பு சார்ந்த சிந்தனையின் வௌிப்பாடு இதுவாகும்.
அதாவது, ஒரு நாட்டிலுள்ள மக்களுக்கு இடையேயான இன, மத, மொழி, பிரதேச, பிராந்திய வேறுபாடுகளை மேவி, அவை சாராத ‘தேசிய அரசு’ அடையாளம் அமைதலை, ‘சிவில் தேசியம்’ எனலாம். அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற சில நவீன தேசிய அரசுகள், அதற்கு முன்பு அங்கிருந்திராத ஒற்றைப்படுத்தப்பட்ட குடிமையையும் (homogenised polity), ஒற்றைப்படுத்தப்பட்ட சிவில் தேசிய அடையாளத்தையும் கட்டமைத்து, உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளன.
பிரஞ்சுப் புரட்சிக்கு முன்பு, பிரான்ஸ் தேசம் என்று ஒன்று கிடையாது. அமெரிக்க விடுதலைக்கு முன்பு, அமெரிக்க தேசம் என்று கிடையாது. அவை, அந்தந்த மக்கள் கூட்டத்தால், அவர்களிடையே உருவாக்கப்பட்டவை. ஒற்றைப்படுத்தப்பட்ட குடிமை அல்லது, தேசம் இல்லாத நிலையில், ஒரு சிறந்த தேசிய அரசை அடைய முடியாது.
அதேவேளை, பல குடிமைகளையோ தேசங்களையோ கொண்ட அரசொன்றில், ஒற்றைப்படுத்தப்பட்ட தேசமொன்றைக் கட்டியெழுப்புதல் பற்றிக் கருத்துரைக்கும் ஸ்டீபன் டியேர்னி, ‘ஒற்றைப்படுத்தலை, பல குடிமைகள் கொண்ட அரசுக்குள் முயற்சிக்கும்போது, ஆதிக்க குடிமைகளின் நடைமுறைகள், உத்திகள் (உத்தியோகபூர்வ மாநில மொழியின் பரப்புதல் போன்றவை) அரசமைப்புக் கொள்கைகளை வடிவமைக்கும் போது, துணை அரசு தேசிய சமூகங்கள் ஓரங்கட்டப்படலாம். அது, அரசின் மய்யத்தைத் தீர்மானிக்கும் குடிமையின் நலன்களை (அதன் மேலாதிக்க சமுதாயத்தை) முன்னிறுத்துவதாக அமையும் என்கிறார்.
பிரான்ஸ் என்ற தேசிய அரசின் உருவாக்க வரலாற்றைப் பார்த்தால், டியேர்னி கூறும் கருத்தின் அர்த்தம் புலப்படும்.
சிவில் தேசமல்லாது, இனத்தேசிய அரசியல் வேர்விட்டுள்ள அரசொன்றில், ஒற்றைப்படுத்தப்பட்ட தேசிய அரசொன்றைக் கட்டியெழுப்புதலானது, எப்போதுமே ஆதிக்கம் மிக்க பெரும்பான்மை இனத்தேசியத்தின் நலன்களைக் காப்பதாகவும் சிறுபான்மை இனத் தேசியங்களின் நலன்களைச் சவாலுக்கு உட்படுத்துவதாகவும் அமையும்.
இன்று, சஜித் பிரேமதாஸ கூட, சிறுபான்மை இனங்கள் இல்லையென்று சொல்கிறாரே தவிர, பெரும்பான்மை இனம் என்று ஒன்று இல்லையென்று சொல்லவில்லை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற எண்ணத்தை, சிறுபான்மையினரிடம் விதைப்பதற்கு முன்னர், அதைப் பெரும்பான்மையினரிடம் விதைப்பதே மாற்றத்துக்கான முதற்படியாக அமையும்.
உண்மையாகவே, இலங்கையில் இன, மத, மொழி, சாதி, பிரதேச, பிராந்திய அடையாளங்களை மேவி, ‘ஸ்ரீ லங்கன்’ என்பதை, ‘சிவில் தேசிய’ அடையாளமாகக் கட்டமைக்க, ஓர் அரசியல் தலைமை விரும்புமானால், அந்த மாற்றத்தை சிறுபான்மையினரிலிருந்து அல்ல; மாறாக, பெரும்பான்மையினரிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்! இதைச் சொல்வதற்கு, வரலாற்று ரீதியான காரணம் இருக்கிறது.
சிங்கள-பௌத்த பெரும்பான்மை, இன-மத தேசியத்துக்கு எதிராக, அதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே, தமிழ்த் தேசியம், ஈழ மண்ணில் விதைகொண்டு, வேர்விட்டது.அதனால்தான், இதைத் ‘தற்காப்புத் தேசியம்’ என்கிறார்கள். இலங்கைத் தீவில் ‘இனத் தேசிய’ அடையாளத்தை முதலில் சுவீகரித்தவர்கள் சிறுபான்மையினர் அல்ல. சுதந்திரத்துக்கு முன்னிருந்த தமிழ்த் தலைமைகள் பலரும், ‘சிலோனீஸ்’ (இலங்கையர்கள்) என்ற ‘சிவில் தேச’க் கட்டமைப்பு பற்றியே அக்கறை கொண்டிருந்தார்கள்.
ஆனால், பெரும்பான்மையின அரசியல் தலைமைகளால், பெருந்திரள்வாத உரம் போடப்பட்டு ,வளர்த்தெடுக்கப்பட்ட ‘சிங்கள-பௌத்தம்’ என்ற பெரும்பான்மை இன-மத தேசியம், தன்னுடைய வளர்ச்சிக்கு, சிறுபான்மையின தமிழ் மக்களை, வேண்டப்படாத அந்நியராகச் சித்திரித்து. தமிழின விரோதத்தையும் குரோதத்தையும் வளர்த்தது.
இந்நாட்டின் பெரும்பான்மை, தன்னை ‘இன-மத’த் தேசியத்தின்பால் கட்டமைத்துக் கொள்ளும் போது, சிறுபான்மை மட்டும் ‘சிலோனீஸ்’ அல்லது ‘ஸ்ரீ லங்கன்’ என்ற ‘சிவில் தேசிய’க் கனவில் இயங்குவது சாத்தியமில்லாதது. ஆகவே, இங்கு பெரும்பான்மையின் இன-மதத் தேசியவாதமும் பேரினவாதமும்தான், சிறுபான்மையினரை, தம்மை தனித்த ‘தேசமாக’ அடையாளப்படுத்த வைத்ததேயன்றி, மற்றவளமாக இது நடக்கவில்லை.
இன்று, இந்த நாட்டிலுள்ள மக்கள் கூட்டம், தம்மை இன-மதத் தேசியங்களாகக் கட்டமைத்துள்ளன. இதற்குள் மீண்டும் சிவில் தேசியத்தை கட்டமைப்பது என்பது மெத்தக்கடினமானதொரு காரியம்.சிறுபான்மையினரின் இனத்தேசியத்தை மாற்றியமைக்க முன்னர், பெரும்பான்மையினரின் இன-மதத் தேசியத்தையும் பேரினவாதத்தையும் மாற்றியமைக்க வேண்டும். இது ஓரிரவிலோ, ஓராண்டிலோ, ஏன் சில ஆண்டுகளிலோ சாத்தியப்படக் கூடிய விடயமல்ல.
“சிறுபான்மையினர் இல்லை” என்று பகட்டாரவாரப் பேச்சுப் பேசும் சஜித் பிரேமதாஸ போன்றவர்கள் கூட, ‘இங்கு பெரும்பான்மையினர் என்று யாருமில்லை; இன-மத அடையாளங்களுக்கு இங்கு இடமில்லை; பெரும்பான்மை இனத்துக்கோ, மதத்துக்கோ முன்னிலையில்லை’ என்று சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், அது அவர்களது வாக்கு வங்கியைப் பாதிக்கும்.
இங்குள்ள மக்கள் கூட்டம், அதாவது அவர்களது வாக்கு வங்கி, இன-மதத் தேசியத்தின் அடிப்படைகளிலேயே கட்டமைந்திருக்கிறது. மீளிணக்கப்பாடு தொடர்பான தளங்களில், இந்தப் பேச்சு அதிகம் ஒலிக்கும். ‘இலங்கை’ எனும் சிவில் தேசிய அரசைக் கட்டமைக்கும் கனவொன்றும் புதியதல்ல!
19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும், இலங்கையிலிருந்த உயர்குழாம் அரசியல் தலைமைகளின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. ஆனால், பெரும்பான்மை இன-மத தேசியமும் அதற்கு எதிரான சிறுபான்மையினரின் தற்பாதுகாப்பு இனத் தேசியமும், பல தசாப்தங்களாக வேரூன்றிய அரசில், மீண்டும் சிவில் தேசியத்தை, பகட்டாரவாரப் பேச்சும் பிரசாரமும் மட்டும் உருவாக்கிவிடாது.
மக்கள் தம்மை ஒரு தேசமாக உணராதவரை, அத்தகையதொரு தேசமொன்று உருவாகாது. சமகாலச்சூழலில் இலங்கை இன-மத, இனத் தேசியங்களில் இருந்து, மீண்டும் தன்னை ஒரு சிவில் தேசமாக் கட்டமைவதற்கான அரசியல் தேவையோ, பிரக்ஞையோ காணப்படுவதற்கான அறிகுறிகள் இல்லை.
யதார்த்தத்தில், பெரும்பான்மை இனத்தால் சிறுபான்மையாகவே பார்க்கப்படுகின்ற, அவ்வாறே நடத்தப்படுகின்ற மக்கள் கூட்டத்திடம், இங்கு சிறுபான்மையினர் என்று யாருமில்லை என்று சொல்வதைப் போல அபத்தமான விடயம் வேறில்லை. பெரும்பான்மை தன்னைப் பெரும்பான்மையாக உணராத, அவ்வாறு நடந்துகொள்ளாத, சிறுபான்மையினரை அந்நியராக நடத்தாத, சிறுபான்மையினரை அடக்குமுறைக்கு உட்படுத்தாத நிலைவரும்போது, இயல்பிலேயே சிறுபான்மையினர் தம்மை சிறுபான்மையினராக உணர மாட்டார்கள்.
ஆனால், சிறுபான்மையினமென்று ஒன்றில்லையென்று சொல்லத் துணியும் பெரும்பான்மையினத் தலைவர்களிடம், பெரும்பான்மையினமென்று ஒன்றில்லை, அனைவரும் இலங்கையர்கள் என்று சொல்லும் திராணி இல்லை.
அப்படிச் சொல்வதால் மட்டும், ஒன்றும் உடனடியாக விளைந்து விடப்போவதில்லை. ஆயினும், அதைக் கூட அவர்களால் சொல்ல முடியாது என்பதுதான் துர்பாக்கியமான நிலைமை. இலங்கையின் இனப்பிரச்சினையை, முரண்பாட்டைத் தீர்க்க வேண்டுமானால், முதலில் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வேற்றுமைகளை அங்கிகரிப்பதுதான், வேற்றுமையில் ஒற்றுமையை ஸ்தாபிப்பதற்கான முதற்படி. இலங்கையின் பன்மைத்தேசக் கட்மைப்பை அங்கிகரிப்பதன் மூலம், இலங்கையை பன்மைத் தேச நாடாக, அதாவது இலங்கை என்ற ஓர் அரசுக்குள், பன்மைத் தேசங்கள் வாழ்கின்றன, என்ற யதார்த்தத்தை ஏற்றுகொள்வதுதான் உண்மையில், நல்லெண்ணம் கொண்ட தலைமைகளின் கருத்தாக அமையும். மிகுதியெல்லாம் வெறும் அரசியல் கண்துடைப்புகள்தான்.
அந்தக் கண்துடைப்பு நாடகங்களுக்கு விசிலடித்து, கைதட்டவும் இங்கு தம்மைத்தாமே தலைவர்கள் என விளித்துக்கொள்ளும் ஒரு சின்னக்கூட்டம் இருப்பதும் மக்களின் துரதிர்ஷ்டமே!