தீவிரவாதமும் திண்டாடும் பாகிஸ்தானும்!! (கட்டுரை)
“நாயோடு உறங்கியவன் அதன் ஒட்டுண்ணியோடுதான் எழுந்திருக்க வேண்டும்.” இந்த முதுமொழி பாகிஸ்தானுக்கு சரியாகப் பொருந்திப் போகிறது.
இன்று தீவிரவாதத்தின் தொட்டிலாக வர்ணிக்கப்படும் பாகிஸ்தானில் படுகொலைகளுக்கு பஞ்சமேயில்லை என்று சொல்லுமளவிற்கு செய்தி ஊடகங்களில் அது சாதனைப் படைத்து வருகிறது.
இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமாரவின் மிலேச்சத்தனமான படுகொலை சம்பவம், பாகிஸ்தானின் மத தீவிரவாதத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய மற்றுமொரு கொடூரமான நிகழ்வாகும். அந்தக் கொலை நிகழ்ந்து இந்த வருடம் டிசெம்பர் மாதத்தோடு ஒரு வருடம் பூர்த்தியாகிறது.
பாகிஸ்தானில் இடம்பெறும் குண்டு வெடிப்புகளும், தாக்குதல்களும், கொலைகளும் ஊடகங்களுக்கு மிகச் சாதாரண செய்திகளாக மாறியிருக்கின்றன. பிரியந்த குமாரவின் கொலை கூட உலகளவில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தி விட்டு, வழமை போல அமைதியடைந்து விட்டது.
அண்மையில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமா் இம்ரான்கான் மீது தொடுக்கப்பட்ட துப்பாக்கி பிரயோகம் கூட, தீவிரவாதிகளால் பாகிஸ்தானின் ஜனநாயகம் தொடா்ந்தும் சவாலுக்கு உட்பட்டு வருவதை எடுத்துக் காட்டுகிறது.
தீவிரவாதத்தோடும், மதவாதத்தோடும் பின்னிப்பிணைந்துள்ள பாகிஸ்தான் மக்களின் சிந்தனைப் போக்கு, அந்நாட்டை அழிவிலிருந்து இலகுவாக மீட்டெடுக்க இடம் கொடுக்குமா? என்ற அங்கலாய்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது.
பாகிஸ்தானின் இன்றைய இந்த நிலைக்கு என்ன காரணம்?
விடை தேட, நான்கு தசாப்தங்களுக்கு மேல் பின்னோக்கி நாங்கள் நகர வேண்டும்.
தீவிரவாதம் அந்நாட்டுக்குள் திட்டமிட்டுத் திணிக்கப்பட்டதற்கு பின்னணியாக இருந்த பூகோள அரசியலை முதலில் நாம் புரிய வேண்டும்.
அமெரிக்காவால் அரங்கேற்றப்பட்ட பூகோள அரசியல் நிகழ்ச்சி நிரல்களையும், அதற்கு துணை போன அந்த நாட்டின் மதவாத அரசியல் சக்திகளையும் மறந்து விட்டு யாராலும் இந்த தீவிரவாத பிரச்சினைக்கு தீா்வைத் தேட முடியாது.
கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக அந்நாட்டில் தீவிரவாதமும், மதவாதமும் அந்த நாட்டில் அரசியல் தேவைகளுக்காக திட்டமிட்டு வளா்க்கப்பட்டன. பாகிஸ்தானின் இன்றைய தீவிரவாத வன்முறை கலாசாரத்திற்கு அதன் அரசியலே பின்புலமாக இருந்து வந்திருக்கிறது.
பாகிஸ்தானின் இன்றைய நிலைக்கு, மதவாத சக்திகளின் மறைமுக ஆதரவோடு அன்று ஆட்சியைப் பிடித்த இராணுவத் தளபதி சியாஉல் ஹக்கின் வகிபாகம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
பொது மக்களின் ஆதரவின்றி, ஓா் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் பதவிக்கு வந்த இவா், மதவாதத்தை பயன் படுத்தி தனது ஆளுமையை கட்டமைத்துக் கொள்ள முயற்சி செய்தாா். மதவாதிகளை தன் பக்கம் ஈா்ப்பதற்காக பாகிஸ்தானை இஸ்லாமிய மயமாக்குவது தொடா்பான பல சட்டங்களையும் கொண்டு வந்தாா்.
இதே வேளை, அமெரிக்க – சோவியத் ரஷ்யாவுக்கிடையிலான பனிப்போர் கூர்மையடைந்திருந்தது. அதனை ஒரு பினாமி போராக மாற்றி ரஷ்யாவுக்கு “தா்ம அடி” கொடுக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இருந்தது.
சோவியத் ரஷ்யாவை முழந்தாளிட வைக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு 1978ம் ஆண்டு, காலம் கனிந்த ஆண்டாக ஆனது. அந்த ஆண்டு டிஸம்பா் மாதம் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவிய ரஷ்யப் படைகளை விரட்டியடிப்பதற்கு அமெரிக்கா வியூகம் வகுத்தது.
இந்த பினாமி போருக்கான சிறந்த தளமாக அமெரிக்க சீஐஏ பாகிஸ்தானை தோ்ந்தெடுத்து, அதன் இராணுவ ஆட்சியாளா் சியாஉல் ஹக்கிடம் பணியை ஒப்படைத்தது.
இந்த ஆப்கான் போரில் சியாஉல் ஹக் கதாநாயகனாக முக்கிய பங்கு வகித்தார். அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவின் ஆதரவுடன், போருக்கான தளமாக பாகிஸ்தானின் பெஷாவா் நகரை மெருகேற்றப்பட்டது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிலுள்ள சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைவரையும் இலக்கு வைத்து கம்யூனிஸத்திற்கு எதிரான பிரசாரம் சீஐஏவால் வடிவமைக்கப்பட்டது. சோவியத் ரஷ்யாவுக்கு எதிராக போராடுவது “உன்னத வழி” என்று போதிக்கப்பட்டது. இதற்காகவே பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான கல்விக் கூடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.
அமெரிக்காவின் அப்போதைய ரேகன் நிர்வாகம், சியாஉல் ஹக்கின் இராணுவ ஆட்சியின் தீவிர ஆதரவாளராகவும், பாகிஸ்தானின் மதவாத ஆட்சிக்கு ஆசிா்வாதம் வழங்கும் ஆப்த நண்பனாகவும் இருந்தது.
கம்யூனிசத்தின் அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில், எழுச்சிமிக்க சக்தியாக சியாஉல் ஹக்கின் ஆட்சியை அமொிக்கா அடையாளப்படுத்தியது. பாகிஸ்தானை “அமெரிக்காவின் முன் வரிசை” கூட்டாளியாக ரேகன் நிர்வாகம் அறிவித்தது.
அமெரிக்கா தனது பொது எதிரியை வீழ்த்துவதற்காகவும், தனது சொந்த அரசியல் நலன்களுக்காகவும் பாகிஸ்தானை பகடைக்காயாக பயன்படுத்தியதை அன்று யாரும் உணரவில்லை. ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை மையப்படுத்தி கல்வி தொடா்பான பாடத்திட்டங்களைக் கூட அமெரிக்கா மாற்றியது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களை தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் மாற்றுவதற்கான அடித்தளத்தை, அமெரிக்கா அந்நாட்டு அரசியல்வாதிகளின் ஆசிா்வாதத்தோடு நிறைவேற்றியது.
நாட்டு மக்களின் மத நம்பிக்கையை, அவா்களின் ஆன்மிகத்தை ஆயுதமாக்கி சோவியத் ரஷ்யாவை வீழ்த்தும் திட்டத்தில் அந்நாட்டை இலகுவாக அமொிக்கா சிக்க வைத்தது. சோவியத்துக்கு எதிராக போராட்டத்தை மையப்படுத்தி அந்நாட்டு சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை மூளைச் சலவை செய்யப்பட்டாா்கள்.
பாகிஸ்தான் ‘அமெரிக்க அரசியல் நிகழ்ச்சி நிரலின் ‘ கேந்திர நிலையமாக பரிணாமம் பெற்றது. ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா என உலகின் எல்லா நாடுகளிலிருந்தும் போராட்டக் காரர்களைக் கொண்டு வந்து குவிக்கும் இடமாக பாகிஸ்தானின் பெஷாவா் நகரம் மாற்றப்பட்டது.
இன்று உலகையே அச்சுறுத்தி வருகின்ற மிகவும்கொடூரமான தீவிரவாத அமைப்புகளாக கருதப்படும் அல்காயிதா, தாலிபான், ஐஎஸ்ஐஎஸ் மற்றும் இது போன்ற அனைத்து அமைப்புகளுக்குமான விஷ விதை இந்த இரு நாடுகளிலேயே தூவப்பட்டன.
அமெரிக்கா, தான் உருவாக்கிய தீவிரவாதத்தை வைத்து அதன் இலக்கை அடைந்தது. அதன் மூலம் இன்றுவரை இலாபத்தை அடைந்து வருகிறது. அதன் ஆயுத வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது. இந்த தீவிரவாதத்தைக் காரணம் காட்டி பல நாடுகளை கபளீகரம் செய்து, வளங்களை அமெரிக்கா இன்றும் கொள்ளையிட்டு வருகிறது.
ஆனால், பயங்கரவாதத்தோடு கை கோா்த்து, அமெரிக்காவின் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் தாளத்திற்கு ஆட்டம் போட்ட பாகிஸ்தானின் நிலை இன்று பரிதாபமாக மாறியுள்ளது. அது மீள முடியாத தீவிரவாத படுகுழியில் வீழ்ந்து, விழி பிதுங்கி நிற்கிறது.
இன்று உலகின் நாலா திசைகளிலும் நிகழும் இஸ்லாம் என்ற போர்வையில் இயங்கும் தீவிரவாத கும்பல்களின் சமூக விரோத செய்பாடுகளுக்கு அச்சாணியாக இருப்பது இந்த ஆப்கான் போராட்டத்தை வைத்து பாகிஸ்தானில் உருவான மத தீவிரவாதம்தான்.
2000ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை, பல்லாயிரக் கணக்கான பாகிஸ்தான் குடிமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாத தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனா். இந்த காலப்பகுதியில் 62990 பேரின் உயிர்கள் தாலிபான் மற்றும் பிற தீவிரவாதக் குழுக்கள் நடாத்திய தாக்குதல்களின் போது பலியாகியுள்ளதாக South Asian Terrorism Portal Index என்ற அமைப்பின் கணிப்பீடு கூறுகிறது.
இன்று பாகிஸ்தான் ஒரு கொடிய, தோல்வியுற்ற, ஜனநாயகம் அறவேயில்லாத, பயங்கரவாத நாடாக வகைப்படுத்தப்படுகிறது. பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மை சமூகங்கள் மத தீவிரவாதத்தின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகின்றனா்.
மதவாதிகளை திருப்தி படுத்துவதற்காகவும், உசாா் படுத்துவதற்காகவும் சியாஉல் ஹக்கால் மெருகூட்டப்பட்ட பாகிஸ்தானிலுள்ள மத நிந்தனை சட்டத்தின் மூலம் பலா் அநீதியான முறையில் தண்டிக்கபட்டு வருகின்றனா். மதவாத சக்திகள் சகிப்புத் தன்மையற்ற முறையில் வன்முறைகளில் ஈடுபடுவதற்கு உளவியல் ரீதியிலான ஓா் உந்து சக்தியை இந்த சட்டம் வழங்கியிருக்கிறது என்று சா்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
பாகிஸ்தானில் புற்று நோயாக பரவியிருக்கும் இந்த தீவிரவாதத்தை எதிா்த்து குரல் கொடுப்பவா்கள் கூட இலகுவாக குறி வைக்கப்படும் அபாயம் அங்கு இருக்கிறது.
2011ம் ஆண்டு, பாகிஸ்தானின் முக்கிய அரசியல்வாதியான சல்மான் தசீர் என்பவா், பெண்கள் மற்றும் மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடா்பாக கருத்து வெளியிட்டதை ஜீரணித்துக் கொள்ள முடியாத தீவிரவாதி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
சல்மான் தசீர், சிறுபான்மை சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வந்தாா். சிறுபான்மை சமூகத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பதை, இஸ்லாம் மதத்திற்கு செய்யும் அவமதிப்பாக பாகிஸ்தானிய மதவாதிகள் பாா்க்கின்றனா். இதன் காரணமாக அவரது மெய்பாதுகாவலர் ஒருவராலேயே சல்மான் தஸீா் சுட்டு படுகொலை செய்யப்பட்டாா்.
சல்மான் தஸீா் மரணிக்கும் போது, பாகிஸ்தானின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாகாணமான பஞ்சாபின் ஆளுநராக இருந்தார். அவா் பல தசாப்தங்களாக பாகிஸ்தானில் நன்கு அறியப்பட்ட பிரபலமான அரசியல்வாதியாகவும் இருந்தார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (PPP) ஸ்தாபக உறுப்பினராகவும், 1960களில் சுல்பிகார் அலி பூட்டோவின் ஜனநாயகமயமாக்கல் பிரச்சாரத்தின் தீவிர ஆதரவாளராகவும் சல்மான் தஸீா் இருந்தார். சுல்பிகாா் அலி பூட்டோவின் மகள், பெனாஸிா் பூட்டோ பிரதமராக இருந்த காலத்தில் அவாின் நம்பகமான ஆலோசகராகவும் அவா் செயற்பட்டாா்.
ஜனநாயகமும், பன்மைத்துவமும் பிரிக்க முடியாதவை என்றும் பாகிஸ்தானில் வாழும் அனைத்து மத சிறுபான்மையினரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தசீர் வெளிப்படையாகவே குரல் கொடுத்து வந்தார்.
ஜனநாயகம் தொடா்பாக தஸீா் வெளியிட்டு வந்த கருத்துக்கள் அந்நாட்டு கடும்போக்கு முல்லாக்களின் கண்டனத்திற்கு உள்ளாகி வந்தன. தஸீரின் சிந்தனைப் போக்கு மேற்கத்தியமயமாக்கலுக்கு துணை போவதாகவும், பாகிஸ்தானில் உண்மையான இஸ்லாம் அழிக்கப்படுவதற்கு காரணமாக இருப்பதாகவும் கடும் போக்குள்ள முல்லாக்கள் சல்மான் தஸீரை கண்டித்து வந்தனா்.
பாகிஸ்தானில் உள்ள மத நிந்தனைச் சட்டம் சிறுபான்மை மக்களை இலக்கு வைப்பதாகவும், இந்த சட்டம் அடிக்கடி துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் பாகிஸ்தானின் சிறுபான்மை சமூகங்கள் அடிக்கடி அநீதிக்கு உள்ளாக்கப்படுவதாகவும் சல்மான் தஸீா் கூறி வந்தாா்.
மத நிந்தனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஆசியா பீபி என்ற கிறிஸ்தவ இளம் பெண்ணை ஆதரித்து பேசிய தஸீா், அவர் குற்றம் இழைக்காதவா் என்றும், அவா் சிறையில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் குரல் கொடுத்தார். மத நிந்தனைச் சட்டங்களை மத தீவிரவாதிகள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றும் அவா் வாதிட்டார்.
சல்மான் தசீரின் படுகொலை, மனித உரிமைகளை மதிக்கின்ற, மனித நேயமுள்ள மிதவாத பாகிஸ்தானியா்களின் குரல்களை அடக்குவதற்கு மதவாத தீவிரவாதிகள் எவ்வாறு எதிா்வினையாற்றுகிறாா்கள், எவ்வாறு வன்முறையை பயன்படுத்துகிறாா்கள் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், நடுத்தர வர்க்கம் மற்றும் பெண்கள் உரிமைகளுக்காகப் போராடியவருமான பெனாசிர் பூட்டோ, 2007ம் ஆண்டு டிசம்பா் மாதம் ஒரு பிரச்சார நிகழ்வில் கலந்து கொண்டபோது வெடிகுண்டுகளால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் “மத தீவிரவாதம்” இருப்பதாக கூறுவதை அதிகமான பாகிஸ்தானியர்கள் ஏற்றுக்கொளவதில்லை என்று ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது. “இஸ்லாத்தை அதன் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்கான போராட்டத்தை” மேற்குலகு “வன்முறை” என்று அா்த்தப்படுத்துவதாக பாகிஸ்தானியா்களில் பெரும்பான்மையோர் கருதுவதாக அந்த தகவல் சொல்கிறது.
அல் கொய்தா மற்றும் தாலிபான் உள்ளிட்ட பயங்கரவாதக் குழுக்கள் பொதுமக்களுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்துவதற்கு “இஸ்லாத்தைப் பாதுகாத்தல் மற்றும் அதற்காகப் போராடுதல்” என்ற வரைவிலக்கணத்தை முன்வைத்து வருகின்றன.
பாகிஸ்தானில் பிரதான நான்கு தீவிரவாத குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் தலிபான்(PT), ஆப்கான் தலிபான் (AT), லஷ்கர்-இ-தொய்பா (LeT), மற்றும் அல் காயிதா (AQ) போன்ற இந்த தீவிரவாத குழுக்கள், அரசியல்வாதிகள், இராணுவம் மற்றும் உளவுத்துறை இலக்குகள் மற்றும் பொலிஸ் கல்லூாிகளைத் தாக்கியுள்ளது.
பள்ளிவாசல்கள், பாடசாலைகள், ஹோட்டல்கள், பூங்காக்கள் மற்றும் தேவாலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் என பலரை கொன்றொழித்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளாக பாகிஸ்தானின் பாதுகாப்பிற்கு முக்கிய மிக அச்சுறுத்தலாக இந்த நான்கு அமைப்புகளும் இருந்து வருகின்றன.
இது இப்படியிருக்க,
பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருவதற்குப் பின்னால், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இருப்பதாக தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.
ஊடகங்களுக்கு அவா் அளித்த பேட்டியில், “கடந்த நான்கு ஆண்டுகளாக பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்ததற்கு இம்ரான்கான் தான் காரணம். பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தை தொடர்வோம். பாகிஸ்தானின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்” என்று கூறியிருந்தார்.
அண்மையில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலில் ஆறு காவல்துறையினா் கொல்லப்பட்டனா். இதனைத் தொடா்ந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தனது ட்விட்டர் பக்கத்தில், “பயங்கரவாதம் பாகிஸ்தானின் முதன்மையான பிரச்சினைகளில் ஒன்றாகத் தொடர்கிறது” என்று குறிப்பிட்டிருந்தாா்.
பாகிஸ்தானின் தீவிரவாதம் எல்லை கடந்து வந்து தனது நாட்டை இலக்கு வைப்பதாக இந்தியாவும் பாகிஸ்தானை எச்சரித்து வருகிறது.
“இந்தியா ஐஐடி, ஐஐஎம்எஸ், எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களை உருவாக்கியுள்ள நிலையில், பாகிஸ்தான் லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின் போன்ற தீவிரவாத அமைப்புகளை உருவாக்கியிருக்கிறது” என்று இந்தியா பாகிஸ்தானை விமா்சித்து வருகிறது. .
பூகோள மற்றும் பிராந்திய அரசியல் ஏஜன்டுகளாகவும், கூலிப்படைகளாகவும் இயங்கும் இந்த தீவிரவாத சக்திகளின் செயற்பாடுகள் உலகை அச்சத்தில் உறைய வைத்து வருகின்றன.
பாகிஸ்தான், இன்று தான் வளா்த்த “தீவிரவாதம்” என்ற கடாவின் தாக்குதலில் தனது நெஞ்சை காயப்படுத்திக் கொண்டிருக்கிறது. அது சட்டம் ஒழுங்கு சீா்குலைந்த “பாதாள உலகம்” ஆளுகின்ற ஒரு நாடாக உருவாகியிருக்கிறது. அமெரிக்காவின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு கருமம் ஆற்றப்போய் மரணப் பொறியில் இன்று மாட்டிக் கொண்டிருக்கிறது.
எந்த ஏகாதிபத்திய சக்திகளின் தேவைக்காக இந்த நாடு கைக்கூலியாக செயற்பட்டதோ, அதே ஏகாதிபத்திய சக்திகளின் கரங்களே இன்று அதன் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது.
“பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நோ்மையாக செயற்படுவதில்லை” என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
சுருக்கமாகச் சொல்வதென்றால், ஏகாதிபத்தியம் என்ற நாயொடு உறங்கப்போய் பயங்கரவாத ஒட்டுண்ணியோடு எழுந்திருக்கிறது பாகிஸ்தான்.