ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் என்ன நடக்கும்? (கட்டுரை)
ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்சுகள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஒருவரின் நினைவாற்றல் திறனை மேம்படுத்த முடியும் என்று சமீபத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மின்னணு சாதனங்கள் மனித வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டன. இனி ஸ்மார்ட் சாதனங்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை மனிதனால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்தவகையில், ஸ்மார்ட்போன்களால் சாதகங்கள் எந்த அளவுக்கு இருக்கிறதோ பாதகங்களும் அந்த அளவுக்கு இருக்கின்றன. ஆனால், பயனுள்ள வகையில் பயன்படுத்தினால் ஸ்மார்ட்போன்கள், தகவல் தொடர்புக்காகவும் இதர பயன்பாட்டுக்காகவும் பெரிதும் உதவுகின்றன.
இந்நிலையில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவது நினைவுத்திறனை அதிகரிக்கும் என வாஷிங்டனின் ‘யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் லண்டன்’ பல்கலைக்கழக ஆய்வாளர்களால் கண்டறிந்துள்ள இந்த ஆய்வின் முடிவுகள் ஜர்னல் ஆஃப் எக்ஸ்பெரிமென்டல் சைக்காலஜி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
டிஜிட்டல் சாதனங்கள் மக்களுக்கு மிக முக்கியமான தகவல்களைச் சேமிக்கவும் நினைவில்கொள்ளவும் உதவுகின்றன. முக்கிய விஷயங்களை சரியான நேரத்தில் நினைவூட்டச் செய்கிறது.
மேலும், நினைவாற்றல் குறித்து சோதிக்க ஒரு சோதனை நடத்தப்பட்டது. 18 முதல் 71 வயதுக்குட்பட்ட 158 தன்னார்வலர்கள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
தொடுதிரை டிஜிட்டல் டேப்லெட் அல்லது கணினியில் 12 எண்ணிடப்பட்ட வட்டங்கள் கொடுக்கப்பட்டு அவற்றில் சிலவற்றை இடதுபுறமாகவும் வலதுபுறமாகவும் இழுக்க நினைவில்கொள்ள வேண்டும். சரியாக செய்பவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதில் பாதியை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பாதியை போனில் நினைவூட்டல்களாக சேமித்து வைத்துக்கொள்ளலாம். இதில் போனில் சேமித்து வைத்திருந்ததைவிட விட சுயமாக நினைவில் வைத்திருந்ததை அவர்கள் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டனர்.
இவ்வாறு ஸ்மார்ட்போன் நினைவகத்தையும் சுய நினைவகத்தையும் மாற்றி மாற்றி பயன்படுத்தும்போது நினைவுத்திறன் அதிகரித்தது கண்டறியப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், முக்கிய நிகழ்வுகளை ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்தாலும் அது தொடர்ந்து நினைவூட்டப்படும்போது நாளடைவில் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுவதும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.