முஸ்லிம் கட்சிகள் என்ன பேசப் போகின்றன? (கட்டுரை)
இனப்பிரச்சினைக்கான தீர்வு அடுத்த சுதந்திர தினத்துக்குள் வழங்கப்படும் என்று, முன்னதாக அறிவித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இது தொடர்பான சந்திப்புக்கு வருமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளடங்கலாக, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஐம்பது வருடங்களாக, வாய்மொழி மூலமும் ஆயுத மொழியாலும் பேசப்பட்டு, இன்னும் தீர்வு காணப்படாத ஒரு விவகாரத்துக்கு சுதந்திரதினத்துக்கு இடைப்பட்ட 55 நாள்கள் என்ற குறுகிய காலத்துக்குள் தீர்வு காண்பது, நடைமுறைச் சாத்தியமா என்பது பொதுவான சந்தேகமாகும்.
ஆனாலும், இவற்றை எல்லாம் தாண்டி, இச்சந்திப்புகளில் கஜேந்திரகுமாரின் கட்சி தவிர்ந்த ஏனைய தமிழ்க் கட்சிகளும் மறுபுறத்தில் அரசாங்கத் தரப்பும் பங்குபற்ற உள்ளதாகத் தெரிகின்றது. எனவே, இன்றைய காலகட்ட அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வுக்கூறு என்ற அடிப்படையில், முஸ்லிம் சமூகமும் இப்பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க வேண்டியுள்ளது.
ஆனால், இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில், முஸ்லிம் கட்சிகள் மற்றும் அரசியல் அணிகள் எதைப் பேசப் போகின்றன? எவற்றை முன்வைக்கப் போகின்றன? உண்மையில், தீர்வுத் திட்டம், வடக்கு-கிழக்கு மாகாணங்களின் மீள்இணைப்பு, சமஷ்டி, அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களை முஸ்லிம் கட்சிகள் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளனவா, அப்படியென்றால் அவர்களின் தெளிவான நிலைப்பாடு என்ன என்றுதான் தெரியவில்லை.
இலங்கையின் இனப்பிரச்சினை என்பது நேரடியாக தமிழ் மக்களுடனும் அரசாங்கத்துடனும் தொடர்புபட்டது. தமிழ் மக்கள் இதனால் பட்ட இழப்பு கள், வலிகளுக்கு கணக்கில்லை. ஆனால், இனப்பிரச்சினை என்பது முற்றுமுழுதாக தமிழர்களுக்கு மட்டுமான விவகாரம் அல்ல.
தமிழர்களுக்கு அடுத்தபடியாக அது முஸ்லிம் சமூகத்துடனும் சிங்கள மக்களுடன் தொடர்புபட்டது. ஆயுத மோதல் வடக்கு, கிழக்கில் இடம்பெற்றது என்றாலும், குண்டுத் தாக்குதல்கள், படுகொலைகள் நாட்டின் எல்லாப் பாகங்களிலும் இடம்பெற்றன.
எனவே, வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மட்டுமன்றி கொழும்பிலும் மலையகத்திலும் வாழ்கின்ற தமிழர்களின் நலன்களும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களின் அபிலாஷைகளும் உறுதிப்படுத்தப்படுவதுடன், குறைந்தபட்சம் சிங்கள மக்கள் சகித்துக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வாகவாவது அது அமைதல் இன்றியமையாதது.
முன்னைய காலகட்டத்தில் தமிழரின் அரசியலுக்கு மட்டுமன்றி விடுதலைப் போராட்டத்துக்கும் முஸ்லிம்கள் நியாயபூர்வமான ஆதரவை வழங்கினர். தமிழர்களின் தாகத்துக்காக முஸ்லிம் இளைஞர்கள் உடலாலும் முஸ்லிம் சமூகம் மானசீகமாகவும் ஒத்துழைப்பு வழங்கியது. இதனால் அரச நெருக்குவாரங்களும் இடம்பெறாமலில்லை.
ஆனால், ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்களின் ஆயுதங்கள், முஸ்லிம்களை நோக்கித் திரும்பின. வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றம், கிழக்கில் இடம்பெற்ற பள்ளிவாசல் படுகொலைகள், கப்பம் பறிப்பு, கடத்தல்கள் எனத் தொடர்ந்தன. அதன் பிறகுதான் முஸ்லிம்கள், தமிழர் அரசியல் மற்றும் போராட்டத்துக்கான ஆதரவை விலக்கிக் கொண்டார்கள்.
ஆகவே, இப்போது பேசப்படும் இனப்பிரச்சினை தீர்வு என்பது, பிரதானமாக தமிழ் மக்களைச் சார்ந்தது என்றாலும், அது முஸ்லிம் சமூகத்தையும் உள்ளடக்கியது என்பதே நிதர்சனமாகும். இதற்காக முஸ்லிம்கள் களமிறங்கிப் போராடவில்லை என்பது உண்மைதான். ஆனால், தீர்வு என்று வரும்போது, அவர்களின் நலன்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதை, தமிழ் முற்போக்காளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்று முன்வைக்கப்பட்டால், அதில் முஸ்லிம்களின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் .அஷ்ரப் பேசி வந்தார். இந்தக் கருத்தியலை அரசியல் ஆய்வாளர் எம்.ஐ.எம் மொஹிதீன், முன்னாள் அமைச்சர் எம்.எச் சேகு இஸ்ஸதீன் போன்றோரும் முன்வைத்தனர்.
ஆனால், அஷ்ரப்பின் மரணத்தோடு இந்த வேட்கை, பெருமளவுக்கு தணிந்து விட்டது. ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இதுபற்றிய ஒரு நிலைப்பாடு மீதமிருந்தது. ஆனால், அவர்கள் இப்போது பிரதிநிதித்துவ அரசியலில் இல்லை. தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாவுல்லா மட்டும் வடக்கு, கிழக்கு இணைப்பை தொடர்ச்சியாக எதிர்த்து வந்தார். ரணில் ஆட்சியில் சங்கமித்த பிறகு, அவரது எதிர்ப்பும் பொதுவெளியில் குறைந்து விட்டது.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோ அதன் தலைவர் ரவூப் ஹக்கீமோ சரியான அறிவிப்பை ஒருபோதும் விடுத்ததில்லை. முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை வெல்வதை விட, தமிழ் தரப்புக்கு நோகாமல் செயற்படுவதிலேயே மு.கா தலைவரும் எம்.பிக்களும் கவனமாக இருந்ததாக சொல்லலாம்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி பெருவாரியாக பேசப்பட்டு வருகின்ற நிலையிலேயே, மு.காவின் பேராளர் மாநாடு அண்மையில் புத்தளத்தில் நடைபெற்றது. 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த எம்.பிக்களுக்கு மன்னிப்பு வழங்கும் மேடையாக அது பயன்படுத்தப்பட்டதே தவிர, அதில் இனப்பிரச்சினை தீர்வு பற்றிய எந்தக் காத்திரமான உரை யும் நிகழ்த்தப்படவில்லை.
இந்நிலையில், சனிக்கிழமை (10) மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு கொழும்பின் புறநகர் பகுதியில் நடைபெற்றது. அங்கு தலைவரோ கொள்கை பரப்புச் செயலாளரோ முஸ்லிம்களுக்கு என்ன வேண்டும், இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான தமது கட்சியின் தெளிவான நிலைப்பாடு என்ன என்பதை, எடுத்துரைத்திருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை.
பிரதான முஸ்லிம் கட்சிகள் ‘கம்புக்கும் நோகாமல் பாம்புக்கும் நோகாமல்’ அரசியல் செய்ய முற்படுகின்ற போக்கில் இருந்து இன்னும் மாறவில்லை. இது மிக மோசமான நிலையாகும். இன்னுமொரு வாய்ப்பு தவற விடப்படக் கூடிய ஆபத்தை இது குறிப்புணர்த்தி நிற்கின்றது.
இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட இனமுரண்பாடு தொடர்பான பேச்சுகளில், முஸ்லிம் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். ஆனால், முக்கியமான பல பேச்சுகளில் ‘முஸ்லிம் தனித்தரப்பு’ அந்தஸ்து புறக்கணிக்கப்பட்டது. போர் நிறுத்தம் அல்லது சமாதானப் பேச்சுவார்த்தைகளுடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்களில் முஸ்லிம் சமூகம், தனியான ஓர் இனக்குழுமமாகக் கூட அடையாளப்படுத்தப்பட்டு இருக்கவில்லை.
இதுவெல்லாம் அரசாங்கங்கள் மற்றும் தமிழ்த் தரப்பின் புறக்கணிப்பு என்று மட்டும் சொல்லி விட முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் உள்ளடங்கலாக, அப்போது அதிகாரத்தில் இருந்த எல்லா முஸ்லிம் தலைவர்களும் இதற்குப் பொறுப்பாளிகளாவர்.
இவ்வாறு முஸ்லிம்களுக்கான அந்தஸ்து மறுக்கப்பட்டது ஒருபுறமிருக்க, கிடைத்த வாய்ப்புகளைக் கூட முஸ்லிம் தலைமைகள் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளாமல் தவற விட்ட தருணங்கள் அதிகமுள்ளன.
ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விடயம் குறித்து தெளிவான நிலைப்பாடு ஒன்றைக் கடைசி வரையும் எடுக்காமல் இருந்துவிட்டு, கடைசி நொடியில் மிதிபலகையில் தொற்றிக் கொண்டு, ஆசனம் கேட்கும் பயணியைப் போல நடந்து கொண்ட கதைகள் இனியும் தொடரக் கூடாது.
இனப்பிரச்சினை தீர்வு பற்றிய உரையாடல்களுக்கு ஜனாதிபதி அனைத்து தரப்பினரையுமே அழைத்திருக்கின்றார். அதற்கு முன்னதாக, முஸ்லிம் கட்சிகளுடனும் மலையக கட்சிகளுடனும் இனப்பிரச்சினை பற்றிப் பேசுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயார் என்று அதன் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் எம்.பி. அறிவித்திருந்தார்.
இது நல்லதொரு சமிக்கையும் மறைமுக அழைப்புமாகும். ஆனால், முஸ்லிம் கட்சிகள், ஒரு கட்சியாகவோ. அரசியல் அணியாகவோ கூட்டமைப்புக்கு எந்தப் பதிலையும் வழங்கவில்லை. இரண்டு, மூன்று எம்.பிக்கள் மட்டும் தமது அரசியல் வட்டத்துக்குள் நின்று அறிக்கைகளை விட்டுள்ளார்கள்.
இந்த இலட்சணத்தில், முக்கியமான விடயங்கள் பற்றிய ஆழமான அறிவும், சமூக அக்கறையும் இல்லாத முஸ்லிம் தலைவர்களும் தளபதிகளும் ‘சமாளிப்பு அரசியலில்’ இருந்து விடுபட்டு பேச்சுவார்த்தைகளில் எதைப் பேசப் போகின்றார்கள் என்பதே முஸ்லிம் சமூகத்தின் முன்னுள்ள கேள்வியாகும்.
வழக்கம்போல ‘இது நடக்காது’ என்று முஸ்லிம் அரசியல் தலைமைகள் கருதிக் கொண்டிருக்காமல், முஸ்லிம்களின் நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும். வடக்கு, கிழக்கில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு இதில் உரித்தும் பொறுப்பும் அதிகமுள்ளது. அதேபோல், கிழக்கை வைத்து அரசியல் செய்யும் தலைவர்களுக்கும் இதில் கூடிய பங்கிருக்கின்றது.
எனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீளஇணைக்கப்படுகின்ற விடயம், சமஷ்டி ஆட்சி முறை, அதிகாரப் பகிர்வு, 13ஆவது திருத்தத்துக்கு அப்பாலான ஏற்பாடுகள் பற்றிய தெளிவுக்கும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கும் வர வேண்டும்.
முஸ்லிம்கள் தமிழ்த் தரப்போடு பேசுவதா, அரசாங்கத்தோடு பேசுவதா சிறந்தது என்பது விவாதத்துக்கு உரியது. தமிழர்களும் அரசாங்கத்திடம் இருந்துதான் தீர்வை வேண்டிநிற்கின்றனர். இந்நிலையில், தமிழ்த் தேசியத்திடம் முஸ்லிம்கள் தீர்வை கோர முடியாது என்ற ஒரு கருத்து இருக்கின்றது.
இந்தப் பின்னணியில், முஸ்லிம்கள் தனியானதோர் இனக்குழுமமாக தனித்தரப்பை வலியுறுத்த வேண்டிய தேவையுள்ளது. ஆயினும், எல்லாத் தரப்புகளும் பங்குபற்றும் பேச்சுகளில் முஸ்லிம் கட்சிகள் கட்டாயமாகப் பங்கேற்க வேண்டும்.
அதேபோன்று தமிழ்த் தரப்புடனும் உரையாடல்களை மேற்கொள்வது அவசியம். அது ஒரு புரிந்துணர்வுக்கும் எதிர்கால இனஉறவுக்கும் அடித்தளமாகும். தேவையற்ற புரிதல்கள், முரண்பாடுகள் ஏற்படுவதையும் முஸ்லிம்கள் இனப்பிரச்சினை தீர்வுக்கு குறுக்கே நிற்கின்றார்கள் என்ற மாயத் தோற்றப்பாடு ஏற்படுவதையும் தடுக்க உதவும்.
முஸ்லிம் சமூகம் சார்பாகப் பேச வேண்டிய எல்லா விடயங்களையும் பேச வேண்டிய தரப்புகளுடன் பேசுவது காலத்தின் தேவையாகும். ‘அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்’ என்பார்கள்.