ஜி 20: உலக நெருக்கடியும் இந்தியாவின் தலைமைத்துவமும் !! (கட்டுரை)
உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் மிகவும் கூா்மையடைந்த கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், எதிர்வரும் 2023 ஆண்டுக்கான G20 நாடுகளின் தலைமைப் பதவி இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது.
உலகில் வளா்ச்சியடைந்த முன்னணி 20 நாடுகளின் மிக முக்கிய கூட்டணியாக ஜி 20 கூட்டமைப்பு உள்ளது. இந்த அமைப்பில் இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரேசில், சீனா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, கனடா, ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, தென்கொரியா, இத்தாலி, மெக்சிகோ, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட 20 நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன.
ஜி 20 நாடுகளின் அமைப்பின் தலைமை பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் இந்த நாடுகளுக்கிடையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பு இந்த முறை இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது.
உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவிகிதத்தையும், சர்வதேச வர்த்தகத்தில் 59% முதல் 77% விகிதத்தையும், உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும், உலக நிலப்பரப்பில் 60% விகிதத்தையும், தொழில்துறையில் வளர்ந்த, வளர்ந்துவரும் உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளை உள்ளடக்கியது தான் இந்த ஜி20 கூட்டமைப்பு.
இதன் காரணமாக, ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
2023ம் ஆண்டு இந்தியாவின் தலைமையில் இந்த கூட்டமைப்பு செயல்பட உள்ள நிலையில், 200 மாநாடுகளை நடாத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக அறிய வருகிறது. 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு இந்தியாவில் இடம்பெறவிருக்கிறது.
உலகளவில் மாறுபட்ட அரசியல் நிர்வாகங்களைக் கொண்ட பலதரப்பு அரசியல் கட்டமைப்புகளைக் கொண்ட நாடுகளை வழிநடத்துவதற்கான வாய்ப்பை இந்த தலைமைப் பதவி இந்தியாவிற்கு வழங்கியிருக்கிறது. இந்தியாவின் தலைமைத்துவம் பல காரணங்களுக்காக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இன்று மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்கள் உலகளாவிய தன்மை கொண்டவையாகும். அவை தேசங்களுக்குள் மட்டும் குறுகிப் போகாத, நிலம் மற்றும் கடல் எல்லைகளுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படாத சவால்களாகும். இந்த சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு எல்லைகளற்ற கூட்டு நடவடிக்கைகளையே உலகம் வேண்டி நிற்கிறது. இந்த சவால்களை முறியடிப்பதற்கு முரண்பாடுகளற்ற பலதரப்பு முயற்சிகள் அவசியமாகும்.
இருப்பினும், அரசியல் ஆதிக்கம், கொள்கை முரண்பாடுகள், எல்லை மற்றும் வளப்பகிா்வு போன்ற விவகாரங்களில் தேசங்களுக்கிடையிலான முறுகல்கள், இந்த மனித சமூகத்தை வீழ்ச்சியின் எல்லையை நோக்கி நகா்த்திக் கொண்டிருக்கின்றன.
கொவிட்-19 தொற்றுநோய் தொடா்பான மா்மங்கள், அதை சமாளிக்கத் தவறியமை மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரைத் தவிர்க்க இயலாமை போன்றவை உலகிற்கு ஒரு பாடத்தை சொல்லிக் கொடுத்திருக்கிறது. உலகிற்கு கிடைத்துள்ள இந்த அரிய படிப்பினை, ஒற்றுமையையும், தேசங்கள் மீதான எல்லைகளற்ற கூட்டு செயற்பாட்டின் அவசியத்தையும் வலியுறுத்தி இருக்கிறது.
ஜி20 நாடுகளின் தலைமைப் பதவி, நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளை மறந்து உறவைப் புதுப்பிக்க இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இருபத்தியோராம் நூற்றாண்டின் உலகளாவிய அதிகார கட்மைப்புகளைக் கொண்ட தேசங்களை இணைக்கவும், வழிநடத்தவும் இந்தியாவால் முடியும் நம்பிக்கையை அது வழங்கியிருக்கிறது.
உலகளாவிய அரசியல் அதிகார கட்டைமைப்புகள், வளா்ச்சியடைந்த நாடுகளுக்கும், பலம் கொண்ட பொருளாதாரங்களுக்கும் மட்டும் ஆதரவாக வளைந்து கொடுக்கும் தன்மையை பெற்றிருக்கின்றன. நாடுகளுக்கிடையிலான வா்த்தகம், ஒத்துழைப்பு மற்றும் நிதி வழங்கலுக்கான சர்வதேச விதிகளை உருவாக்குவதில், ஒரு சமமற்ற செல்வாக்கை வளர்ச்சியடைந்த நாடுகள் செலுத்தி வருகின்றன.
உலகம் எதிா்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதில் உள்ள திறனை இது மோசமாக பாதித்துள்ளது. உலகளாவிய அரசியல் நிர்வாக செயல்முறைகளை மறுபரிசீலனை செய்வதற்கும், சர்வதேச பேச்சுவார்த்தைகளில் சமநிலையை நிலைநாட்டுவதற்கும் இந்தியா தனது ஜி20 தலைமை பதவியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.
கடந்த G20 மாநாட்டின் தலைமைப் பதவியை இந்தோனேசியா பெற்றிருந்தது. அதன் தலைமைப் பதவிக்கு, கொவிட் 19 அனா்த்தமும், மேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவிற்குமிடையிலான புவிசார் அரசியல் பதற்றங்களும் பாரிய சவால்களையும், பின்னடைவுகளையும் உருவாக்கின.
நாடுகளுக்கிடையில் தோன்றிய முரண்பாடுகளும், பிளவுகளும், சச்சரவுகளும் G20 நாடுகளின் செயற்திறனிலும், நம்பகத்தன்மையிலும் சந்தேகத்தை ஏற்படுத்தின.
ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக இந்தியாவின் நடுநிலையான செயற்பாடு, புவிசாார் அரசியலில் தடையாக நிற்கின்ற முட்டுக் கட்டைகளுக்கு அப்பால் நகா்ந்து செல்ல முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
இந்த புவிசார் ஆதிக்க அரசியல் வேறுபாடுகளின் இடைவெளியை குறைப்பதற்கு, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு செயற்பாடு அவசியமாக இருக்கிறது. இது தொடா்பான காத்திரமான உரையாடல்களுக்கும், தீர்வுகளை அடையாளம் காணுவதற்கும் இந்தியாவுக்கு சந்தா்ப்பம் கிடைத்துள்ளது.
இந்தியா தனது G20 தலைமைப் பதவிக்கான செயற்பாடுகளில் பல முன்னுரிமைகளை அடையாளம் காட்டியிருக்கிறது.
சமத்துவம் மற்றும் நிலையான வளர்ச்சி, சுற்றுச்சூழலை பாதிக்காத வாழ்க்கை முறை, பெண்களுக்கான அதிகாரம், டிஜிட்டல் தொழில் நுட்ப உள்கட்டமைப்புகளை விஸ்தாித்தல், சுகாதாரம், விவசாயம், கல்வி, வர்த்தகம் ஆகியவற்றில் தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாடுகளை கட்டமைத்தல், திறன் வளா்ச்சி, கலாச்சாரம், சுற்றுலா, காலநிலை அனா்த்தங்களுக்கான நிதியம், உலகளாவிய உணவு பாதுகாப்பு, ஆற்றல் பாதுகாப்பு, பேரிடா் ஆபத்துக்களை குறைத்தல், வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு, பொருளாதார குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை போன்றவை அடிப்படை இலக்குகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
கொவிட் 19 தொற்று நோயும், அதனைத் தொடா்ந்து வந்த ரஷ்யா-உக்ரைன் போரும் உலகளாவிய பொருளாதாரத்தையும், நாடுகளின் நிதி ஸ்திரத்தன்மையையும் முற்றாக சீா்குலைத்திருக்கின்றன.
இந்த நெருக்கடிகளிலிருந்து நாடுகளை மீட்டெடுப்பதற்கான கூட்டு நடவடிக்கையை வலியுறுத்தும், வழிநடாத்தும் பொறுப்பை ஜி20 தலைமைத்துவம் இந்தியாவுக்கு வழங்கியிருக்கிறது.
தொற்று நோயும், போரும் உலகளவில் உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடிகளை உருவாக்கி, உலக நாடுகளின் பொருளாதாரத்தை நலிவடைய செய்துள்ளன. இந்த பொருளாதார வீழ்ச்சியின் மீட்சிக்கான வழியைத் தேடுவது காலத்தின் தேவையாகும். இந்த மீட்சிக்கு ஒரு வலுவான மூலோபாயத்தை உருவாக்குவதற்கான பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது.
இயற்கை பேரிடா்களிலிருந்தும், சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்தும் உலகை மீட்பது மிகப் பொிய சவாலாகும். அதன் மீது கவனம் செலுத்துவது, குறைந்த கார்பன் உமிழ்வை தரும் தொழில்துறைக்கான மாற்றத்தை துரிதப்படுத்துவது அவசியமான அவசர நடவடிக்கைகளாகும். இதற்கான காத்திரமான செயற்திட்டங்களை இந்தியா முன்வைப்பது அவசியமாகும்.
காலநிலை மாற்றத்தின் சவால்கள் குறித்த உலகளாவிய உரையாடல்கள், இதன் விளைவுகள் பற்றிய கவலைகளை வெளியிடுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கின்றன. இதுவரை, காலநிலை மாற்றத்துடன் தேவையான உருப்படியான வேலைத்திட்டங்கள் மீது ஒழுங்கான கவனம் செலுத்தப்படவில்லை என்பதை, உலகை ஆட்கொண்டு வரும் இயற்கை அனா்த்தங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
தொழிற்துறையில் வளா்ச்சி கண்ட நாடுகளால் ஏற்படுத்தப்படும் சூழல் மாசடைவு வறிய நாடுகளையும், வளரும் நாடுகளையும் பாதிக்கின்றன. இயற்கை அனா்த்தங்களால் பாதிப்படையும் நாடுளுக்கான காலநிலை நிதியம் ஒன்றை உருவாக்குவதின் அவசியம் தொடா்பில் வளா்ச்சியடைந்த நாடுகள் பாராமுகமாக இருந்து வருகின்றன.
அதுமட்டுமல்லாமல், காலநிலை அனா்த்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நிதித் தேவைகளில் வளா்ச்சியடைந்த நாடுகளின் கவனம் மிகவும் குறைவாகவே இருக்கிறது.
இந்தியாவின் ஜி20 தலைமைப் பதவி, பருவநிலை நெருக்கடியை சமாளிப்பதற்கும், அனா்த்தத்திற்கு உள்ளான நாடுகளை மீட்டெடுப்பதற்கும் காத்திரமான வழி வகைகளைத் தேட கடமை பட்டிருக்கிறது.
தொழில் வளா்ச்சி கண்ட நாடுகளின் பொடுபோக்கான நிலைப்பாட்டிலிருந்து அந்த நாடுகளை விடுவிக்க வேண்டும். அந்த நாடுகளின் நிதி மூலாதாரங்களின் மூலம் அனா்த்தத்திற்கு உள்ளான நாடுகளை அரவணைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். உலகளாவிய காலநிலை பாதுகாப்பு நடவடிக்கையில் நிலையான செயல் முறைகளை ஒருங்கிணைப்பதற்கு இந்தியா முன்வர வேண்டும்.
கடந்த 2022ம் வருடம் ஒக்டோபர் மாதம், இந்தியாவும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து மிஷன் லைஃப் (Mission LiFE) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இது காலநிலை நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான சிறந்த உத்தியாக வகைப்படுத்தப்படுகிறது.
இந்தியாவின் தலைமைத்துவ கருப்பொருள் ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்பதாகும். இது உலகளாவிய ரீதியில் ஒன்றோடொன்று இணைந்த தேசங்களின் பிணைப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அது மட்டுமல்லாமல், இது இந்தியாவின் இயற்கையை நேசிக்கும், பூமியை பாதுகாக்கும் கிரகச் சார்பு அணுகுமுறையை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
தேசங்களுக்கிடையிலான பிணைப்பை வலுப்படுத்தவும், இந்த இணைப்பின் மூலம் நாடுகளுக்கிடையிலான உயிரோட்டமான உறவுகளை உருவாக்கவும் இது அடைப்படையாக அமையும் என்று நம்பப்படுகிறது.
எந்தவொரு சவால்களை சமாளிக்கவும், புதுமையான தீர்வுகளைக் கண்டறியவும் இந்தியா முயற்சி செய்கிறது என்ற நம்பிக்கையை இந்த கருப்பொருள் வழங்குகிறது.
புவிசார் அரசியல் முரண்களுக்கு மத்தியில் உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதில், இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழான ஜி20 நிகழ்ச்சி நிரல் முக்கியமானதாக பாா்க்கப்படுகிறது.
உலகளாவிய ரீதியில் உறுதியான, பாதுகாப்பான சுகாதார கட்டமைப்பு, டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் பயன்பாடு மற்றும் நிலையான ஆற்றல் மாற்றம் ஆகிய மூன்று முன்னுரிமைப் பகுதிகளில் இது கவனம் செலுத்துகிறது.
கொவிட் 19 தொற்று நோயும், ரஷ்யா – உக்ரைன் போரும் சம காலத்தில் பல நாடுகளை பொருளாதார நெருக்கடியில் வீழ்த்தியிருக்கின்றன. இந்த நாடுகளுக்கான சமமான பொருளாதார மீட்சியை உறுதி செய்வது மிக முக்கியமான உலகளாவிய சவால்களில் ஒன்றாகும்.
உலகளவில் அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தியை அதிகாித்து, தடைகளற்ற திறந்த விநியோகச் சங்கிலிகளுக்கு உத்தரவாதம் அளித்து, முதலீடு மற்றும் உற்பத்தியை மையப்படுத்தி நாடுகளுக்கிடையிலான கூட்டு ஒத்துழைப்பை சாத்தியமாக்குவதற்கான செயற்திட்டங்கள் விரைவாக முன்வைக்கப்பட வேண்டும்.
கடந்த ஜி20 மாநாட்டின் போது, பாரிஸ் உடன்படிக்கையின் அடிப்படையில், பசுமையில்ல வாயுக்களின் உமிழ்வை விரைவாக குறைக்க வேண்டியதன் அவசியத்தை இந்தியா வலியுறுத்தியது. சகல நாடுகள் மீதும் அந்த வரலாற்றுப் பொறுப்பு இருப்பதாக அது வலியுறுத்தியது.
ரஷ்ய – உக்ரைன் போர், உலகளாவிய விநியோக சங்கிலியில் பலத்த இடையூறுகளை உருவாக்கியுள்ளது. என்றுமில்லாதவாறு விவசாயம் மற்றும் எரிசக்தி துறைகளில் அதிக பற்றாக்குறைக்கும் பாதிப்புக்கும் அது வழிவகுத்தது.
மற்றும், கொவிட் 19 தொற்றுநோய், உலகளாவிய சுகாதார நிகழ்ச்சி நிரலை மீள வடிவமைப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டியிருகிறது. கொவிட் 19 நெருக்கடியின் போது அதிலிருந்து உலகை மீட்பதற்கான ஒரு மையப்புள்ளியை உருவாக்குவதில் உலக நாடுகள் தோல்வியடைந்தன. இனிவரும் காலங்களில், அரசியல் முரண்பாடுகளை மறந்து பன்முகத்தன்மைகளை பாதுகாத்துக் கொண்டு அனா்த்தங்களுக்கு முகம்கொடுக்க உலக நாடுகள் ஓரணியில் திரள வேண்டியதன் அவசியம் உணரப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் G20 நாடுகள், அதன் உலகளாவிய செயற்பாடுகளை ஒருங்கிணைத்து, உலக சுகாதார அமைப்பு போன்ற சா்வதேச நிறுவனங்களை சமகால சவால்களை எதிர்கொள்ளுவதற்கு ஏற்ற வகையில், பலப்படுத்தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன் வர வேண்டும்.
உலகளாவிய சுகாதார ஏற்றத்தாழ்வுகளுக்கான அடிப்படை காரணங்களை கண்டறிவதில் இந்தியாவின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது.
காலநிலை மாற்றத்தைத் தணித்தல் போன்ற ‘உலகளாவிய’ சவால்களை சமாளிப்பதற்கான ஆக்கப்பூர்வமான தீர்வுகளை ஆராய்வதில் இந்தியா தனது இளைஞர் சக்தியை ஈடுபடுத்துவதற்கான ஒரு சிறந்த தருணத்தை G20 தலைமைத்துவத்தின் மூலம் முன்வைக்க முயற்சிகளை மேற்கொள்கிறது.
வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், வீட்டுவசதி மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட இளைஞர்களின் முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க உலகளாவிய தளத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை இந்தியா ஆராய்ந்து வருகிறது.
ஜி20 தலைமைத்துவம் பற்றி இந்தியப் பிரதமா் மோடி வெளியிட்டுள்ள கருத்து இங்கு முக்கியமாக பாா்க்கப்படுகிறது.
“பருவநிலை மாற்றம், பயங்கரவாதம், பெருந்தொற்றுகள் என்னும் மிகப்பெரிய சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டி வந்தது. ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டு இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாது. அதேசமயம், ஒன்றாக செயல்பட்டால் மட்டுமே தீர்வு காண முடியும். புனரமைத்தல், நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையின் தலைமையாக இந்தியாவின் ஜி-20 தலைமையை உருவாக்க நாம் அனைவரும் ஒருங்கிணைவோம். மனித நேயத்தை மையமாகக் கொண்ட உலகம் என்ற புதிய முன்னுதாரணத்தை வடிவமைக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்” என பிரதமர் கூறியுள்ளார்.
இந்தியாவின் கதையை உலகளாவிய ரீதியில் பகிர்ந்து கொள்வதற்கு ஜி-20 நாடுகளின் தலைமைப் பதவி ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியிருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
“ஜி-20 தலைமையை ஏற்றிருப்பது இந்தியாவுக்கு மிகப் பெரிய வாய்ப்பு. இதன்மூலம், இந்தியாவின் கதையை மற்ற நாடுகளோடு பகிர்ந்துகொள்ள முடியும். குறிப்பாக, தங்களின் சிறப்பான செயல்பாடுகளின் மூலம் இங்கு மாற்றத்தை நிழ்த்தியவர்கள் குறித்த கதைகளை நாம் பகிர முடியும். உலகில் தெற்கின் குரலாக நாம் மாறுவதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறது. முக்கியமான இந்த தருணத்தில் இந்த வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது.” என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் கருத்து வெளியிட்டுள்ளாா்.
உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் மிகவும் கூா்மையடைந்துள்ள இன்றைய நிலையில் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவ வகிபாகம் உலகிற்கு எத்தகைய பலன்களை கொண்டு வரப் போகிறது? பொறுத்திருந்து பாா்ப்போம்!