கல்லுக்கிடைக்கும் வரை நாயுடன் பேச வேண்டும்!! (கட்டுரை)
சிங்களத் தலைவர்களின் வரலாற்று அடிச்சுவடுகனைத் தெரிந்து கொள்ளாமல் அவர்களுடன் அரசியலிற் களமாட முடியாது. தமிழ்த் தலைவர்களை அணைத்துத் கெடுத்து தமிழர்களின் கழுத்தை அறுக்கும் வித்தையில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் முதன்மையானவர்கள்.
எது கடிமானதோ, எது பாதகமானதோ, அதிலுள்ளவற்றில் சாதகமானதாக ஆக்கக்கூடிய வாய்ப்புள்ளவற்றை தேர்ந்தெடுத்து அதனையே எதிரிக்குரிய பொறியாக்கி, அதைத் தமக்கு சாதகமானதாக்கி எதிரியை தமக்குச் சேவகம் செய்யவைக்கும் அரசியல் இராஜதந்திரத்தில் சிங்கள இராஜதந்திரிகள் தேர்ச்சி பெற்றவர்கள்.
“ஏதிரியால் ஏவப்படும் ஆயுதத்தையே தனக்குக் கேடயமாக்க வல்லவனே இராஜதந்திரியும் சிறந்த தலைவனும் ஆவான்” அதனை சிங்கள தேசத்தின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நிறுவமுற்படுகிறார். இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற பொருளியல் நெருக்கடி , தமிழர் தரப்பைப் பேசுவதற்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்தித்திருக்கிறது. இந்த அழைப்பு பேச்சுக்கு நிபந்தனை இன்றி தமிழர்கள் வரவேண்டும். சிங்கள தரப்பு நெருக்கடியை சந்திக்கின்ற போதெல்லாம் தமிழர் தரப்பை அணைப்பதும் பேச்சுவார்த்தை மேசையில் அமர்த்துவதும் பேசிக்கொண்டே காலத்தை இழுத்தடிப்பதுதான் சிங்கள இராஜதந்திரம்.
“கல்லுக்கிடைக்கும் வரை நாயுடன் பேச வேண்டும்” இதுவே சிங்கள இராஜதந்திரம்.
நவம்பர் 11ஆம் திகதி தமிழ் தரப்புடன் ஜனாதிபதி பேசுவார் என்பது நடைபெறும் எனவும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ”எதிரியின் அனைத்து வளங்களை தனக்கு ஏதுவாக்கிக் கொள்பவன் எவனோ, தனக்கான தீர்மானங்களை எதிரியின் வாயிலாக எடுக்க வைக்க வல்லவன் எவனோ, தனது நிகழ்ச்சி நிரலுக்குள் எதிரியை செயற்பட வைக்க வல்லவன் எவனோ அவனே ஒப்பாரும் மிக்காருமற்ற இராஜதந்திரியும் தனது மக்களுக்கு இழப்பற்ற வெற்றிகளையும் முன்னேற்றங்களையும் தேடிக்கொடுக்க வல்லவனும் ஆவான்”.
“எது தோல்வியெனக் காணப்படுகின்றதோ அதனையே தனது வெற்றிக்கான தளமாக்கிக் கொள்ளவல்லவன் எவனோ அவனே நிகரற்ற சாதனையாளன் ஆவான்”.
1987ஆம் ஆண்டு உருவான இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் வாயிலாக தற்காலிக இணைப்பைக் கொண்ட வடக்குக் கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டது. இதற்கென இலங்கை யாப்பில் 13வது திருத்தச் சட்டம் மேற்கொள்ளப்பட்டு சட்டத்தின் மூலம் வடக்கையும் கிழக்கையும் தனித்தனி மாகாண சபைகளாக உருவாக்கிவிட்டு ஜனாதிபதி அறிவித்தல் மூலமே தற்காலிக இணைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதுதான் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் வாயிலான மாகாணசபை அமைப்பு தற்காலிக இணைப்பு என்பவனவற்றின் அடிப்படையாகும்.
பலம் கொண்ட இந்தியாவை நேரடியாக எதிர்க்க முடியாத நிலையில் ‘ஓரடி பின்னால் ஈரடி முன்னால்’ என்ற தந்திரோபாயத்திற்கூடாக அதனை அணுகிக் கையாள அன்றைய ஜனாதிபதியான ரணிலின் மாமனார் ஜே.ஆர். ஜெயவர்த்தனா முற்பட்டார்.
கட்சிக்குள்ளும், அரசாங்கத்திற்குள்ளும், கட்சிக்கு வெளியில் பொதுவாக சிங்களக் கட்சிகள் மத்தியிலும் இதற்குப் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகோத்தவில் நிகழ்ந்த கூட்டத்தில் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன பின்வருமாறு கூறினார். ”என்னை இந்த ஒப்பந்தத்திற்காக சிறிது காலம் எதிர்ப்பீர்கள். ஆனால் பின்பு காலமெல்லாம் என்னை பாராட்டுவீர்கள். பிரபாகரனின் குத்துக்கத்தியை இந்த ஸ்ரீகோத்தவின் வாசலில் இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக ஒரு நாள் தொங்க விடுவேன்”
ஜே.ஆரின் இக்கூற்றுக்கள் வெறும் வெற்று வார்த்தைகள் அல்ல. சிங்கள இனத்திற்குத் தீமை போன்று தோன்றும் இவ் ஒப்பந்தத்திலும் மாகாணசபையிலும் சிங்கள இனத்தின் வெற்றிக்கான அடிப்படைகளும் வழிவகைகளும் உண்டு என்பதை அவர் தெளிவாகக் கண்டு கையாளத் தயாரானார்.
இது ஒரு சிறந்த இராஜதந்திரியின் நீண்ட நோக்குப் பார்வை கொண்ட நடைமுறைக்குப் பொருத்தமான ஒரு துல்லியம்மிக்க வழியாகும். இத்தகைய நுணுக்கத்தை ஈழத்தமிழினம் புரிந்துகொள்ள வேண்டும். ஜே.ஆர் வழியில் நாமும் காய்களை நகர்த்தும் வித்தையை கற்றுக்கொள்ள வேண்டும்.
வடக்குக் கிழக்கு மாகாணசபை என்பது சிங்களவர்களின் பார்வையில் அவர்களுக்கு எதிரானது. இந்த வடக்குக் கிழக்கு மாகாணசபை அமைப்பு முறையைப் பயன்படுத்தி ஏற்கெனவே ஒன்றுபட்ட தாயகமாகக் காணப்பட்ட வடக்குக் கிழக்கு இணைந்த தாயகத்தை இப்போது இரண்டாகப் பிரித்துவிட்டார்கள்.
மாகாணசபை இணைப்பு தற்காலிகமாகதென்பதே ஒப்பந்தத்தின் வாயிலான ஏற்பாடாகும். அந்த இணைப்பை போதிய சட்ட வாயிலாக மேற்கொள்ளாமல் வெறுமனனே ஜனாதிபதி அறிவித்தல் மூலம் மட்டும் செய்துவிட்டு பின்பு அவ் இணைப்பானது நாடாளுமன்ற அறிவித்தல் மூலம் செய்யப்படாமல் அரச இதழ் வாயிலான ஜனாதிபதி அறிவித்தல் மூலம் செய்யப்பட்டது செல்லுபடியற்றதென சிங்கள உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அத்தற்காலிக இணைப்பை பிரித்துவிட்டது.
கிழக்கை வடக்கிலிருந்து பிரிக்க வேண்டுமென்கின்ற நீண்ட அபிலாசையை சிங்களத் தலைவர்கள் கொண்டிருந்தனர். மேற்படி மாகாணசபை அமைப்புமுறையைப் பயன்படுத்தி கிழக்கை வடக்கிலிருந்து அரசியல், நிர்வாக மற்றும் நடைமுறை சார்ந்த வழிகளிற் பிரித்து சின்னாபின்னமாக்கிவிட்டனர். வடக்கிலிருந்து கிழக்கு மக்கள் பிரிக்கப்பட்டு தமது சிங்கள குடியேற்றங்களையம் மற்றும் அரசியல் இராஜதந்திர பலங்களையும் பயன்படுத்தி கிழக்கு வாழ் தமிழ் மக்களை அதிகாரமற்ற ஒரு சிறிய சிறுபான்மைப் பிரிவினராக ஆக்கிவிட்டனர். கிழக்கையும் சிங்கள குடியேற்றத்தால் நிலத்தொடர் ரீதியாக மூன்றாக வெட்டிவிட்டார்கள். இப்போது வடக்கிற்கு அதுவும் குறிப்பாக வவுனியா, மன்னார் என பயணம் செய்து பிரதேசவாதத்தை துாண்டும் கைங்கரியத்தில் ஜனாதிபதி ரணில் ஈடுபட்டுள்ளார்.
ஈழத்தாயகத்தைத் துண்டாடவும் தமிழர்களைப் பலவீனப்படுத்தவும், சின்னாபின்னப்படுத்தவும் இந்த மாகாணசபை ஓர் ஏதுவாகப் பயன்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளனர். கிழக்கு மாகாண சபையின் இன்றைய நிலை என்னவெனில் அது தமிழீழ மக்களான தமிழ் பேசும் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் எதிரான அமைப்பாகக் கையாளக்கூடிய வல்லமைகளையும், வழிமுறைகளையும் அவர்கள் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை-இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்தில் ஜே.ஆர். பின்வருமாறு கூறினார். அதாவது ‘ஓங்கிய கையையே அணைக்கும் கையாக மாற்றினேன்’ என்று கூறினார். இதன் அர்த்தம் மிக ஆழமானதாக இன்று வரை நீண்டு வருகிறது. இதன் பொருளை விரிவாக நோக்குவோம்.
இந்தியா இராணுவ பலத்தைக் காட்டி இலங்கையில் கையோங்கிய போது இந்தியாவின் ஓங்கிய அந்த இராணுவக் கரத்தை அணைத்து தமிழருக்கெதிரான இராணுவ நடவடிக்கையில் இந்திய அரசைப் பயன்படுத்துவதில் ஜே.ஆர். முதற்படி வெற்றி பெற்றார். இங்கு தனக்கெதிராக ஏவப்பட்ட ஆயுதத்தையே தனக்கான கேடயமாக மாற்றிக் கொண்டது மட்டுமல்ல, அதனையே தனது எதிரிக்கெதிரான அம்பாகவும் வில்லாகவும் மாற்றிக் கொண்டார்.
நீண்;ட உள்நோக்குடனும் திட்டமிட்ட தூரப்பார்வையுடனும் சூழ்ச்சிகரமான ஆனால் ஓர் பொய்யான இணைப்பை செய்துவிட்டு தருணத்திற்காக காத்துநின்று தமக்கு சாதகமான தருணம் வந்தபோது அந்த இணைப்பை முறையற்ற வகையில் செய்யப்பட்டுள்ளதென்ற வெறும் தொழில்நுட்பத்தைக் காரணம் காட்டி தற்காலிக இணைப்பைப் பிரித்துவிட்டார்கள்.
பிரித்துவிட்டு கிழக்கு மாகாணத்தை வடக்கிலிருந்து தனிமைப்படுத்தி தமிழர் தாயகத்தைச் சின்னா பின்னமாக்கி கிழக்கை சிங்கள ஆதிக்கத்தின் கபளீகரத்திற்கு உள்ளாக்கிவிட்டார்கள். எது எதிரானதாகத் தோன்றியதோ, எந்த மாகாணசபை அமைப்புமுறை சிங்கள இனத்திற்கு எதிரானதாகத் கருதப்பட்டதோ, எந்த மாகாணசபை தமிழ்மக்களிற்கான தீர்வாக முன்வைக்கப்பட்டதோ அந்த மாகாணசபை அமைப்பு முறையில் காணப்பட்ட தற்காலிக இணைப்பு என்ற ஒரு பிரவைப் பயன்படுத்தி அதனையே தமிழினத்தை அழிப்பதற்கான ஓர் ஏதுவாகக் கையாள்வதில் இற்றைவரையான சிங்கள தலைவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதாவது ஜே.ஆர். முதலாக ராஜபக்ச, ரணில் வரையான தலைவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
எதிரானது எதுவோ அதில் காணப்பட்ட சாதகத்தைத் தேடி அதன் வாயிலாக தமிழினத்தை அழிக்கும் வடக்குக் கிழக்கு மாகாண தற்காலிக இணைப்பென்ற அம்சத்தைப் பயன்படுத்துவதில் சிங்களத் தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.
இந்த வியூகத்தால் சிங்கள இராஜதந்திரம் தோற்கடித்திருப்பது ஈழத்தமிழரை மட்டுமல்ல மிக முக்கியமாக கூடவே இந்தியாவையும்தான் என்பதை அதிகம் கருத்திற்கொள்ள வேண்டும். தமிழ் தலைவர்களும் தமிழ் அறிஞர்களும், இந்திய கொள்கை வகுப்பாளர்களும் இதுவிடயத்தில் புதிய கண்கொண்டு அணுகத் தயாராகாதுவிட்டால் அது சிங்கள இனத்திற்கும் சிங்கள இனம் கைகோர்த்துள்ள சீனாவுக்குமே சாதகமாக அமைந்துவிடும்.
இராஜதந்திரத்தில் ”அணைத்துக்கெடு” என்று ஒரு தந்திரம் இருக்கிறது. அதனை பிரயோகிப்பதில் சிங்கள இராஜதந்திரிகள் வல்லவர்கள். தற்போதைய அரசியல் நெருக்கடிச் சூதில் இலங்கை அரசுக்கு இனவாத அர்த்தத்தில் வெற்றி தேடிக் கொடுக்கும் கிருஷ்ணபிரானாக ரணில் காணப்படுகிறார். அவர் உருட்டும் காயில் தமிழ்த் தலைவர்கள் எம்மாத்திரம்.
சிங்கள ஆட்சியாளர்களுக்கு உள்நாட்டு ரீதியான நெருக்கடிகளையும், வெளிநாட்டு ரீதியான அழுத்தங்களையும் கொடுக்காமல் தமிழ் மக்களுக்கான பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காணமுடியாது. இலங்கை அரசாங்கத்துடன் ஓத்துழைப்பது என்பது இனவாதத்திற்கு சேவை செய்வது என்பதிலேயே முடியும்
இதற்கு ஆழ்ந்த கோட்பாட்டு பார்வையும் கூரிய வரலாற்று நோக்கும் அவசியமாகும். அரசியலை கோட்பாட்டு ரீதியாகவும் கோட்பாட்டை நடைமுறையுடன் இணைத்து அதனை வரலாற்று ரீதியாகவும் பார்ப்பதற்கான பார்வை ஈழத் தமிழரின் அரசியல் முன்னெடுப்பில் மிகவும் முக்கியத்துவம் பெறவேண்டும்.. இன்றைய இந்த தலைமுறையும், தலைவர்களும், அறிஞர்களும் இதனை முழுமனதுடன் முன்னெடுக்க வேண்டும்.
இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பு பேச்சுக்களில் ஈடுபடுவதற்கு ஏதாவது ஒரு தீர்வு திட்ட முன்வரைவு ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையேல் 2002-2006 வரையான சமாதான பேச்சு வார்த்தை காலங்களில் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைவு அடிப்படையிலாவது பேச முன்வரவேண்டும். அதுவும் இல்லையேல் தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள் முன்வைக்கின்ற சமஸ்டி தீர்வுத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பேசவேண்டும். அரசுடன் பேசுவதற்கு அனைத்து தமிழ்த்தேசியக் கட்சிகளும் உள்ளடங்கிய நிபுணர் குழு ஒன்றை அமைத்து அந்தக்குழுவே பேச்சு மேசையில் பேசவேண்டும். அத்தோடு பேச்சுவார்த்தை காலத்திற்கான கால அளவையும் வரையறுத்து தீர்மானித்துவிட வேண்டும் என்பது இங்கே முக்கியமானது.
கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாய் ஏற்படும் தொடர் தோல்விகளில் இருந்தும் நமது வரலாற்றில் ஏற்பட்டிருக்கக் கூடிய நல்லவைகள், கெட்டவைகள், எழுச்சிகள், வீழ்ச்சிகள், துன்பங்கள், பேரவலங்கள் என்பனவற்றில் இருந்தும் படிப்பினைகளை பெற்றும் கூடவே உலகை புரிந்துகொள்ளவேண்டும்.
இன்று இந்து சமுத்திரமானது அமெரிக்கா – சீனா – இந்தியா ஆகிய முப்பெரும் சக்திகளுக்கிடையேயான முக்கோண வியூகத்திற்குள் அகப்பட்டிருக்கிறது. இந்த முக்கோண வியூயகத்திற்குள் ஈழத்தமிழர் சிக்குண்டுள்ளனர். இதனை குறுங்கால நோக்குடனோ, கற்பனைகளுக்கு ஊடாகவோ அணுகமுடியாது. அதிக புத்திசாலித்தனமும், சாதூர்யமும், விழிப்புணர்வும், முன்னெச்சரிக்கையுடனுமே அணுகவேண்டும்.
ரணில் உருட்டிவிட்டுள்ள காயை மதிநுட்பத்தால் எதிர்கொண்டு முன்னேற வேண்டுமே தவிர எங்களுக்குள் இழுபறிப்பட்டு ரணில் விரும்பும் வெற்றியை அவருக்கும் சிங்கள இனவாத்திற்கும் தேடிக்கொடுக்கும் பணியை உள்நாட்டரங்கிலும் சர்வதேச அரங்கிலும் நிறைவேற்றும் கண்கெட்ட வரண்ட அரசியலை தமிழ்த் தலைமைகள் மேற்கொள்ளாது இருப்பது அவசியம்.