ஒற்றை மைய உலக அரசியலை உடைக்கும் சீனா !! (கட்டுரை)
உக்ரைன் போர் மூலம் ஐரோப்பாவில் பிராந்திய அளவில் ஒற்றை மைய உலக அரசியல் முனை உடைந்திருக்கும் நிலையில் தற்போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நவம்பர் 8 ஆம் திகதி சீன இராணுவ தலைமையகத்துக்கு விஜயம் செய்த போது “போருக்கு தயாராகுங்கள்“ என சீன மக்கள் விடுதலை இராணுவத்திற்கு கட்டளை பிறப்பித்திருக்கின்றார் என செய்தி வெளியாகியுள்ளது.
இச்செயல் தென் சீன கடலில் ஒரு பதற்ற நிலையை தோற்றுவித்திருப்பதோடு தாய்வானிலும் மேற்குலகிலும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. இந்தக் கட்டளையை இன்றைய உலக அரசியல் ஒழுங்கில் சீனா தன்னை முதன்மைப்படுத்த மேற்கொள்ளும் மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவே கொள்ளப்பட வேண்டும்.
இதன் மூலம் உலகளாவிய அரசியல் ஒழுங்கில் கடந்த 30 வருடங்களாக நிலை பெற்றிருந்த ஒற்றை மைய உலக அரசியலை உடைக்கும் வல்லமையை சீனா பெறப் போகின்றது என்பது நிரூபணமாகின்றது.
இன்றைய உலக ஒழுங்கானது இரண்டாம் உலகப்போரின் விளைவுகளினால் கட்டியெழுப்பப்பட்ட அரசியல் பொருளியல் ஒழுங்காகும். பனிப்போர் காலத்தில் இந்த உலகம் இரட்டை மையங்களைக் கொண்டிருந்தது.
ஒன்று முதலாளித்துவ அரசுகள் சார்ந்த மேற்குலக அணி. இதனை அரச அறிவியலாளர்கள் வெள்ளை என அழைக்கின்றனர். இரண்டாவது அணி ரஷ்யா தலைமையிலான சோசலிச அரசாங்கத்தை கொண்ட அணி இதனை சிவப்பு என அழைக்கின்றனர். இந்த இரண்டு அணிகளும்தான் உலக அரசியல் ஒழுங்கில் மேலாண்மை செலுத்தும் அணிகளாக 1990 வரை விளங்கின.
1990 பின்னர் சோவியத் ரஷ்யாவின் கொப்பசேவ் மேற்கொண்ட பெரஸ்ரொய்க்கா சீர்திருத்தத்தின் மூலம் சிவப்பு அணி பொருளாதார நெருக்கடியை சந்தித்து சோவியத் ஒன்றியம் உடைந்து 14 புதிய அரசாங்கங்கள் தோன்றவே அமெரிக்க தலைமையிலான மேற்குலக அணியினர் உலகிற்கு தலைமை தாங்க தொடங்கினர். கடந்த 30 ஆண்டு காலமாக உலகளாவிய அரசியல் பொருளியலில் அமெரிக்கா உலக பொலிஸ்காரனாக தனித் தலைமை தாங்கியது.
இக்காலகட்டத்தை பனிப்போரின் பின்னான ஒற்றை மைய உலக அரசியல் ஒழுங்கு என வர்ணிக்கப்டுகிறது. இந்த ஒற்றை மைய உலக அரசியல் நிலை பெற்ற காலத்தில் மேலும் இரண்டு அணிகள் உதயமாகிவிட்டன.
ஒன்று மங்கோலிய மனித இனவர்க்கத்தைச் சார்ந்த மஞ்சள் நிற மக்களைக் கொண்ட சீனப்பகுதி அரசியல் பொருளியலில் மிகவேகமாக வளர்ச்சி அடைந்து உலகின் சக்தி மிக்க நாடாக சீனா இன்று வளர்ந்து விட்டது. எனவே சீனா தலைமையிலான அணியினை மஞ்சள் என உலகம் அழைக்கிறது.
இதே காலகட்டத்தில் அமெரிக்க எதிர்ப்பு இஸ்லாமிய உலகம் ஒன்று உதயமாகிது. இஸ்லாமிய மதத்தின் பெயரில் இஸ்லாமிய அடிப்படை வாத நாடுகள் அமெரிக்கா தலைமையிலான ஒற்றை மைய உலக அரசியலுக்கு சவால்விடும் வகையில் பின்லாடனை தலைமையாகக் கொண்டு உலகளாவிய இஸ்லாமிய இராணுவம் ஒன்றை கட்டியமைக்க முனைந்தனர் இதனை பச்சை என உலகம் அழைக்கிறது.
ஒற்றை மைய உலக அரசியல் நிலவிய காலத்தில் அமெரிக்காவினுடைய முழு கவனமும் பச்சை என்று அழைக்கப்படுகின்ற இஸ்லாமிய அடிப்படை வார்த்தைக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டிருந்தது.
இஸ்லாமிய உலகத்துக்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்கா ஈடுபட்டிருந்த வேளை சீனா தன் முதுகை நிமிர்த்தி தனது பட்டுப்பாதை வியூகத்தை மிக வேகமாக ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் ஸ்தாபிதமடையச் செய்து விட்டது.
அதே நேரத்தில் ரஷ்யா தான் இழந்த செல்வாக்கை மீண்டும் நிலை நாட்டுவதற்கு தன்னை தயார்படுத்தி விட்டது. அதன் அடிப்படையில்த்தான் ரஷ்யா தனது நாட்டுக்கு வெளியே மத்தியதரைக் கடற்பகுதியில் தன்னுடைய கடற்படை தளம் ஒன்றையும் அமைத்துவிட்டது. இன்றைய உலக ஒழுங்கில் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், பச்சை என நான்கு அணிகள் தென்படுகின்றன.
ஆனால் இங்கே வெள்ளை எனப்படும் மேற்குலகம்தான் முதன்மையானது. அத்தகைய “வெள்ளைக்கும்-சிகப்புக்கான யுத்தம்“ பனிப்போர் முடிவுடன் முடிவடைந்துவிட்டது.
எனவே சிவப்பு தற்போது பிராந்திய அரசியலையே தக்கவைக்கவே விரும்புகிறது. அடுத்ததாக“வெள்ளைக்கும் பச்சைக்கிமான யுத்தம்“ கடந்த 30 ஆண்டுகால யுத்தத்தில் சதாம் உசேன், கடாபி, பின்லேடன், ஆகியோர் கொல்லப்பட்டதுடன் பச்சை பெருமளவுக்கு தோற்கடிக்கப்பட்டுவிட்டது.
ஈரானிய தளபதி காசிம் சுலைமானி, அணுவிஞ்ஞனி பெற்றியாட் இருவரும் கொல்லப்பட்டதனால் ஈரான் மீண்டெழுவதற்கு இன்னும் 20 வருடங்களுக்குமேல் தேவை என்ற நிலை உருவாகிவிட்டது.
எனவேதான் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை வெளியேறிவிட்டன. இப்போது வெள்ளைக்கும், மஞ்சலுக்குமான யுத்தத்தமே எஞ்சியுள்ளது. எனவேதான் அமெரிக்காவின் முழு கவனமும் இப்போது இந்து சமுத்திரத்திலும் தென் சீனக் கடலிலும் மையம் கொண்டுள்ளது.
எனவே இப்போது இருக்கின்ற சூழமைவில் உலகளாவிய அரசியலில் அதாவது பூகோள அரசியலில் வெள்ளையும், மஞ்சளும் செல்வாக்கு செலுத்த போட்டியிடுகின்றனர்.
ரஷ்யாவை(சிவப்பை) பொறுத்தளவில் அது உலகளாவிய பூகோள அரசியலில் தற்போது நாட்டம் கொள்ளவில்லை. அது தனது புவிசார அரசியலை பலப்படுத்தவும் பாதுகாக்கவும் விரும்புகிறது.
எனவே தான் ரஷ்யா தனது புவிசார் அரசியல் வளையத்துக்குள் தன்னை பாதுகாப்பதற்கான மூலோபாயமாக கருங்கடல் பகுதியயை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். எனவே உக்ரைனை தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் தொடர்ந்து வைத்திருக்கவே ரஷ்யா முனைகிறது.
ஆனால் உக்ரைன் ரஷ்யாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் இல்லாமல் நேட்டோ அணியில் இணைய விரும்பியதன் விளைவு தான் உக்ரைனின் கிழக்குப் பகுதிகள் ரஷ்யாவினால் இணைக்கப்பட்டிருக்கின்றன. உக்ரைனுடன் போர் தொடர்கிறது. இந்தப் போர் ரஷ்யாவின் புவிசார் நலன்கள் உறுதிப்படுத்தப்படும் வரை தொடரும்.
ரஷ்ய-உக்ரைன் யுத்தத்தில் மேற்குலகம் தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம் மேற்குலக அரசியல், பொருளியலில் பெரும் நெருக்கடிகள் தோன்றியிருக்கின்றன.
உக்ரைன் யுத்தத்தில் யார் வென்றார்கள், யார் தோற்றார்கள் என்று ஆய்வதைவிட இந்த யுத்தத்தின் விளைவுகளும் அது எதிர்காலத்தில் ஏற்படுத்தக் கூடிய உலகளாவிய அரசியல், பொருளியல் வலுச்சமநிலை பற்றியே கவனம் செலுத்தப்பட வேண்டும். உலகளாவிய அரசியலை தமது கட்டுப்பாட்டுங்கள் வைத்திருப்பதற்கு ஐரோப்பியர்கள் பன்னெடுங்காலமாக முயற்சி செய்திருக்கிறார்கள்.
அது கி.மு. 3ம் நுாற்றாண்டில் அலெக்சாண்டர் தொடங்கி நெப்போலியன், ஹிட்லர் வரை தொடர்ந்து முயற்சிக்கப்பட்டது. ஐரோப்பியர்கள் தனித்தனி நாடுகளாக முயன்று தோற்றதன் விளைவுதான் ஐரோப்பிய ஒன்றியம் தோன்றுவதற்கான வரலாற்று விசையாகும். தங்கள் மூதாதையர்களின் கனவுகளை நிறைவேற்றவே ஐரோப்பியர்கள் “மைக்கிண்டர்“ என்கின்ற பிரித்தானிய அறிஞர் முன்மொழிந்த “இருதய நிலக் கோட்பாட்டை” நடைமுறைப்படுத்த முனைந்தனர். அதுதான் ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றமாகும்.
மேற்கே ஐரோப்பாவில் அமெரிக்கா தலைமை தாங்கும் ஒற்றைமைய அரசியலுக்கு சவாலாக யூரோபிய ஒன்றியம் வளர்ந்து விடக்கூடாது என்பதிலும் அமெரிக்கா கவனமாகவே தொழில்பட்டிருக்கிறது.
உக்ரைன், ரஷ்ய யுத்தத்தில் ஐரோபிய நாடுகளை சிக்க வைத்ததன் மூலம் அமெரிக்கா ஒரு நீண்ட காலத்துக்கு ஐரோப்பாவினால் உலக அரசியலுக்கு தலைமைதாங்கும் தகுதியை தற்காலிகமாக தடுத்து நிறுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
தாய்வான் மீதான படையெடுப்பு
அத்தோடு உலகளாவிய ஆயுத பலப்பரிட்சையில் ரஷ்யாவின் பலம் என்ன என்பதை பரீட்சித்துப் பார்க்கப்படும் களமாகவும் உக்ரைன் யுத்தம் மாறி இருக்கின்றது.
உண்மையில் மேற்குலக ஆதரவுடன் நடக்கும் ரஷ்ய, உக்ரைன் யுத்தம் என்பது ஒரு பரிச்சார்த்த களமாகத்தான் அதாவது எதிர்காலத்தில் சீனாவுடனான யுத்தத்திற்கான பரீட்சை களமாகவே பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு ரஷ்யா தனது புவிசார் அரசியலை பாதுகாக்கவும், பாதுகாப்பு வளையத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் விரும்புகின்றதோ அத்தகைய ஒரு நிலையில் தான் சீனாவும், தாய்வான் விவகாரத்தை இந்தக் காலப்பகுதியில் தம் கையில் எடுத்திருக்கின்றது. உண்மையில் தாய்வான் மீதான படையெடுப்பை உடனடியாக நடத்துவதற்கு சீனா தயாராக இருக்கவில்லை.
ஆனால் உலக அரசியலில் ஏற்படுகின்ற அழுத்த விசைகள் சீனாவை அந்த முடிவை நோக்கிச் செல்வதற்கு உந்துகின்றன.
சீனாவிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் தென் சீனக் கடலில் உள்ள தாய்வான் தீவை சீன இப்போது ஆக்கிரமிப்பதற்கு தயாராகிறது. ரஷ்யா எவ்வாறு தனது புவிசார் அரசியலை நியாயப்படுத்துகிறதோ அவ்வாறே சீனாவும் தனது புவிசார் அரசியலை தென் சீனக்கடலில் நிலைநாட்ட முற்படுகிறது.
இதற்கு உடனடிக் காரணம் அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் எச்சரிக்கையை மீறி தாய்வானுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டமைதான். அது சீனாவை மேலும் சீற்றம் கொள்ளச் செய்துள்ளது.
சீனா தனது நீண்டகால இலக்குகளை அடிப்படையாக வைத்து தொழிற்படும் ஒரு நாடு. அது இந்து சமுத்திரத்தை தனது கட்டுப்பாட்டுங்கள் கொண்டு வருவதற்கும், ஆசிய ஆபிரிக்க நாடுகளில் தனது பொருளாதார அடிக்கட்டுமானங்களை நிறுவி தன்னை பலப்படுத்தவும், கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக தனது முழு கவனத்தையும் செலுத்தி வந்திருக்கிறது.
இந்து சமுத்திரத்தில் சீனாவின் பிரவேசம்
இந்து சமுத்திரத்தில் சீனாவின் பிரவேசம் என்பது இந்தியாவின் அரசியல், பொருளியலுக்கும், அதனுடைய பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது.
சீனா இந்து சமுத்திரத்தில் உள்ள மியார்மாவின் கோகோ தீவையும், இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், பாகிஸ்தானின் கூவாதர் துறைமுகத்தையும் நீண்டகால குத்தகைக்கு எடுத்ததன் மூலம் இந்தியாவை முடக்கவும், முற்றுகையிடவும் முனைந்திருக்கிறது.
இந்த பின்னணியில் இந்தியா தன்னை பலப்படுத்தவும், இந்து சமுத்திரத்தில் தனது மேலாண்மையை நிலைநாட்டவும் முற்படுகிறது. உலக அரசியலில் ஏற்படும் மாற்றங்கள், அழுத்தங்கள் இவ்வாறு ஒரு சங்கிலித் தொடராக புதிய கதவுகளை திறக்க வைக்கிறது.
இலங்கை தீவில் சீனாவின் காலூன்றலும் அதனுடைய பொருளாதார கட்டுமானங்களும் இந்தியாவை அச்சம் கொள்ள வைக்கின்றது. இந்தியாவின் புவிசார் அரசியல் வளையத்துக்குள் ஒரு புள்ளியாக 32 கிலோமீட்டர் துாரத்திற்குள் இருக்கும் இலங்கைதீவினுள் சீனா அமர்ந்திருப்பதை ஒருபோதும் இந்தியா அனுமதிக்காது.
எவ்வாறு ரஷ்யாவிற்கு உக்ரைன் இருக்கிறதோ, சீனாவுக்கு தாய்வான் எவ்வாறு முக்கியத்துவமானதோ, அவ்வாறே இந்தியாவுக்கும் இலங்கை தீவு முக்கியமானது.
எனவேதான் இத்தகைய சூழமைவில் இந்தியாவும் தனது புவிசார் அரசியலை பாதுகாப்பதற்கான மூலோபாயம் ஒன்றை இந்து சமுத்திரத்தை மையப்படுத்தி தற்போது வகுக்க தொடங்கிவிட்டது. இதனை ஆழமாக ஆய்ந்து ஈழத்தமிழர்கள் தம் அரசியல் இராஜதந்திர காய்களை நகர்த்தி, பொருத்தமான முடிவுகளை எடுத்து தம்மை தற்காத்துக்கொள்ள வேண்டும்.
தென் சீனக் கடலில் ஏற்பட்டு இருக்கின்ற மேற்குலக பிரசன்னமும், கொதிநிலையும் சீனாவை ஒரு நெருக்கடிக்குள் தள்ளி இருக்கிறது. எனவே சீனா இந்து சமுத்திரத்தின் வலுச்சமநிலையை தன் பக்கம் திருப்புவதற்கான மூலோபாயத்தை சற்று பின்தள்ளி வைத்துவிட்டு தன் புவிசார் அரசியலை பாதுகாப்பதா?
அல்லது தனது இந்து சமுத்திர வலுப்படச்சியின் மூலம் பூகோளம் தழுவிய தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதா? என்ற இரண்டு கேள்விகளுக்கும் இடையில் சீனா எத்தகைய முடிவை எடுக்கும் என்பது ஊகிக்க முடியாமல்த்தான் உள்ளது. தாய்வான்தீவை தனக்கு சொந்தமானது என சீனா உரிமை கொண்டாடுகிறது.
அதேநேரத்தில் தாய்வானோ கடந்த 75 ஆண்டுகளாக தனியரசாகவும், சீனாவுடன் எந்தத் தொடர்பையும் வைத்திருக்காத அரசாகவும் தன்னை ஒரு நடைமுறை அரசாக அரசியல் பண்பாட்டியலில் ஒரு தனித்துவமான நாடாக தன்னை நிலைநாட்டி இருக்கிறது.
இதனை இன்னொரு வகையில் பார்த்தால் அரபு தேசத்தில் 1947 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட யூததேசம் இன்று உலகளாவிய அரசியலில் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. அதனை இன்றைய உலகம் மறுதலிக்க முடியாத சூழல் தோன்றி விட்டது.
இந்த நடைமுறை உதாரணத்தை முன்னுறுத்தியே தாய்வானும் தன்னை தனித்துவமான நாடாக பிரகடனப்படுத்துகிறது. ஐ.நா தாய்வானை அங்கீகரிக்காவிட்டாலும் 14 நாடுகள் தாய்வானை அங்கீகரித்திருக்கின்றன.
உலகளாவிய வர்த்தகத்தில் மேற்குலகத்துடன் அது சட்ட ரீதியான வர்த்தக உறவுகளை பேணுகிறது என்ற அடிப்படையிலும் தாய்வான் ஒரு தனித்துவமான தேசமாகவே கணிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது.
யூததேசம் எவ்வாறு இருக்கிறதோ அதனை உலகம் எவ்வாறு ஏற்கிறதோ அவ்வாறே தாய்வானையும் ஏற்பதுதான் அரசியலில் நியாயமாகும். ஆனாலும் மக்கள் சீனா தன்னுடைய புவிசார் அரசியலை தென் சீனக்கடலில் நிலை நாட்டுவதற்கு தாய்வான் தேவையாகவே உள்ளது.
எனவே தாய்வானை ஆக்கிரமிப்பதற்காக சீன மக்கள் ராணுவம் இப்போது தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறது. தாய்வான் மீதான யுத்தத்தில் வெற்றி பெறப்போவது யார் ? மேற்குலகம் சார்ந்த வெள்ளையா? சீனா சார்ந்த மஞ்சளா? என்பதற்கு அப்பால் தாய்வான் தாய்வானாக இருக்க வேண்டும் என்பது இங்கே முக்கியமானது.
இங்கே தாய்வான் மக்களுடைய அரசியல், பொருளியல், வாழ்வியல் முக்கியமானது. எனவே தாய்வான் தன்னை தற்காத்துக் கொள்வதற்கும், தன்னை நிலைப்படுத்துவதற்கும் ஏற்ற ராஜதந்திர மூலபாயத்தை இப்போது வகுக்க வேண்டியது மிக முக்கியமானது. தாய்வான் அரசு எடுக்கின்ற முடிவுதான் தென்சீனக் கடலின் அமைதிக்கும், சமாதானத்துக்கும், ஜனநாயகத்திற்குமான அடித்தளத்தை இடும் என்பதே இன்றைய யதார்த்தமாகும்.