;
Athirady Tamil News

ஆசிரியைகள் கலாச்சாரக் காவிகள்? (கட்டுரை)

0

கடந்த ஏப்ரல் மாதம் அரசாங்கம் வெளியிட்ட 05/2022ஆம் இலக்க சுற்றுநிருபத்தின்படி அரச ஊழியர்கள் தமக்கு இலகுவான ஆடைகளை அணியலாம் என்று கூறப்பட்டிருந்தது.

அதை மேற்கோள் காட்டி இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவராகிய ஸ்டாலின் கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதில் அவர் ஆசிரியர்களும் குறிப்பாக ஆசிரியைகளும் தமக்கு இலகுவான ஆடைகளை அணிய அனுமதிக்கப்பட வேண்டும் என்று கேட்டிருந்தார்.

ஆனால் மகா சங்கத்தைச் சேர்ந்த பிக்குமார் ஒரு தொகுதியினர் அதற்கு எதிர்ப்பு காட்டியதினையடுத்து கல்வி அமைச்சு அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது.

ஏனைய அரசு ஊழியர்களைப் போலன்றி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரிகள் என்ற அடிப்படையில் ஆடை விஷயத்தில் அவர்கள் முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்று ஒரு பொதுவான வாதம் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர்களுக்கு பொருத்தமான சம்பளம்

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரிகள் என்பதனை இந்த நாடு ஏற்றுக் கொண்டிருக்குமாக இருந்தால் ஆசிரியர்களுக்கு பொருத்தமான சம்பளத்தை வழங்கியிருக்க வேண்டும். பொருத்தமான சலுகைகளையும் வழங்கியிருக்க வேண்டும்.ஆனால் ஆசிரியரின் நிலை சமூகத்தில் அப்படியா காணப்படுகிறது இல்லையே?

ஆசிரியைகள் கலாச்சாரக் காவிகள்? | Teachers Are Cultural Saviors

மூத்த தமிழ்க் கவிஞர் நீலாவாணன் பாடியது போல “பாவம் வாத்தியார்” என்ற நிலை தானே இப்பொழுதும் உண்டு? அண்மையில் எரிபொருள் வரிசைகளில் ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் குறிப்பாக கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு கிடைத்த மதிப்பை நாம் கண்டோமே ? தமிழ்ச் சமூகத்தில் எந்த ஆசிரியராவது தன் பிள்ளை ஆசிரியராக வரவேண்டும் என்று விரும்புகிறாரா என்ற கேள்வியை கேட்டுப் பார்ப்போம்.இல்லை.

பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகள் ஆசிரியர்களாக வருவதை விரும்பவில்லை. தங்கள் பிள்ளைகள் சமூகத்தில் உயர்வாக மதிக்கப்படுகின்ற வேறு தொழில் துறைகளில் பிரகாசிக்க வேண்டும் என்றுதான் பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புகிறார்கள்.
ஆடை விடயத்தில் பெண் ஆசிரியர்களின் மீது அழுத்தங்கள்

தன் பிள்ளை ஆசிரியராக வரவேண்டும் என்று ஆசிரியர்களே விரும்பாத ஒரு சமூகச் சூழல்தான் நாட்டில் உண்டு. இப்படிப்பட்டதோ சமூகச் சூழலில் ஆசிரியர்களே சமூகத்தின் முன்மாதிரிகள் என்று கூறப்படுவதை எப்படி விளங்கிக் கொள்வது ? சமூகத்தின் முன்மாதிரியாக காணப்படும் ஒரு தொழில்துறைக்குத்தான் அதிக சலுகைகள்,அதிக முன்னுரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

ஆனால் நாட்டில் நிலைமை அப்படியில்லை. அது மட்டுமல்ல, முன்மாதிரியான தொழில் என்று கூறி ஆடை விடயத்தில் பெண் ஆசிரியர்களின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.சில பாடசாலைகளில் கிழமையில் ஒரு நாளில் அல்லது மாதத்தில் இரு நாட்களில் பெண் ஆசிரியர்கள் ஒரே நிறத்தில் ஆடை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

வேறு சில பாடசாலைகளில் பெண் ஆசிரியர்கள் தலைமுடியை கொண்டையாக கட்ட வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டது.தலைமுடியை கொண்டையாக கட்டிக்கொண்டு எப்படி ஹெல்மெட் போடுவது? மோட்டார் சைக்கிள் ஓடுவது? என்பதற்கு அங்கே விளக்கம் இருக்கவில்லை. ஆசிரியர்களின் ஆடை விடயத்தில் பண்பாட்டை கையில் எடுக்கும் எவரும் பின்வரும் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும். முதலாவது கேள்வி, ஆடைத்தெரிவு ஒரு தனி மனித உரிமை.

அதை எதன் பெயரால் மீறலாம்? இரண்டாவது கேள்வி, பண்பாட்டின் பெயரால் சமூகத்தின் முன்மாதிரியான ஒரு தொழிலில் பால் அசமத்துவம் தொடர்ந்து பேணப்படுவதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பண்பாட்டைக் காவ வேண்டும் என்று சொன்னால் அதை பெண்கள் மட்டும்தான் காவ வேண்டுமா? ஏன் ஆண்கள் காவக்கூடாது? பெண்கள் சேலையும் பிளவுசும் அணிய வேண்டும் என்று கேட்பவர்கள் ஏன் ஆண் ஆசிரியர்கள் வேட்டியும் நஷனலிலும் அணிய வேண்டும் என்று கேட்பதில்லை ? ஆண் ஆசிரியர்கள் மேற்கத்தியபி பண்பாட்டு உடைகளை அணிந்து கொண்டு பெண்களை மட்டும் உள்ளூர் பண்பாட்டு ஆடைகளோடு வாருங்கள் என்று கேட்பது பால் அசமத்துவம்.

மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒரு நிறுவனத்தில் பால் அசமத்துவத்தை பண்பாட்டின் பெயரால் பேணும்பொழுது, அது மாணவர்களுக்கு எப்படிப்பட்ட முன்னுதாரணத்தை கொடுக்கும்? மனித உரிமைகளை பண்பாட்டின் பேரில் மீறலாம் என்ற முன்னுதாரணத்தைத் தானே கொடுக்கும்? பெண்கள் மட்டும் தான் கலாச்சார காவிகளாக இருக்க வேண்டுமா,என்ன? மூன்றாவது கேள்வி,பிளவுஸ் ஒரு பண்பாட்டு உடுப்பா? சில சுவரோவியங்களில் பிளவுஸ் போன்ற சில ஆடைகளோடு பெண்கள் காணப்படுகிறார்கள்.
கோவில்களில் மூல விக்கிரகங்களில் பெண் தெய்வங்கள் பிளவுஸ் அணிந்திருப்பதில்லை

ஆனால் பெரும்பாலான கோவில்களில் மூல விக்கிரகங்களில் பெண் தெய்வங்கள் பிளவுஸ் அணிந்திருப்பதில்லை. இது தொடர்பில் கடந்த தீபாவளி நாளில் ருவிற்றரில் இடம்பெற்ற ஒரு உரையாடலை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஃபியோனா அலிசன்( Fiona Allison) என்ற பெண் பிளவுஸ் இல்லாமல் சேலை மட்டும் அணிந்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். சேலையோடு படம் எடுத்து அதை ருவிற்றரில் பதிவேற்றியிருந்தார்.

அதற்கு ரிங்கு பாண்டே எனப்படும் ஒருவர் பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தார்…”நான் உங்களுடைய செண்டிமெண்ற்களை மதிக்கிறேன். ஆனால் பிளவுஸ் இல்லாமல் சேலை அணிவது என்பது இந்திய பண்பாட்டில் எங்கேயும் காணப்படாதது.” அதற்கு ஃபியோனா பின்வருமாறு பதில் கூறியிருந்தார்” உங்களுடைய சொந்த நாட்டின் வரலாற்றை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்களுடைய நாட்டின் வரலாறு எனக்கு நன்றாகத் தெரியும். இந்தியப் பண்பாட்டில் முதலில் பிளவுஸ் இருக்கவில்லை.அது பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் கொண்டுவரப்பட்டது, அல்லது உருவாக்கப்பட்டது எனலாம்.பூர்வ இந்தியாவின் வரலாற்றை மறந்து விடாதீர்கள்.

ஆசிரியைகள் கலாச்சாரக் காவிகள்? | Teachers Are Cultural Saviors

உங்களுடைய ஆலயங்களில் பெண் தெய்வங்களின் சிலைகள் பிளவுஸ் அணிந்திருப்பதில்லை என்பதையும் மறந்து விடாதீர்கள்..” என்று பதில் எழுதியிருந்தார். பிளவுஸ் தொடர்பான விவாதம் இதைவிட ஆழமானது.

பண்டைய சுவரோவியங்கள் சிலவற்றில் பிளவுசை ஒத்த சில மேலாடைகளை காண முடிந்தாலும் கூட, ஃபயோனா கூறுவது போல பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்தில்தான் நவீன பிளவுஸ் அறிமுகம் செய்யப்பட்டது.சேலையோடு சேர்ந்து அதுவும் ஒரு பண்பாட்டு உடுப்பாக மாறிவிட்டது.

எனவே அதை ஒரு முழுமையான பண்பாட்டு உடுப்பாக கூறி அதை அணியுமாறு நிர்பந்திப்பது எந்த வகையில் சரி ? நாலாவது கேள்வி, ஒரு தொழிலைச் செய்பவர் அந்த தொழிலில் தனக்கு வசதியான ஆடைகளைத்தான் அணியலாம். ஆசிரியைகளைப் பொறுத்தவரை குறிப்பாக முன்பள்ளி, நடனம், விளையாட்டு, உடற்கல்வி, விவசாயம் போன்ற வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த பெண் ஆசிரியர்கள் செய்முறையின்போது தமக்கு வசதியான ஆடைகளைத்தான் அடைந்திருக்கலாம்.

உதாரணமாக, பொறியியலாளர் ஒருவர் பெண்ணாக இருக்குமிடத்து அவர் கட்டடத்தின் உயரத்துக்கு ஏற வேண்டும்.அப்பொழுது அவருக்கு ஆடை ஒரு தடையாக ஆபத்தாக இருக்க முடியாது.

எனவே துறைசார் நிலைமைகளுக்கு ஏற்ப ஆடைகள் இலகுவாக்கப்பட வேண்டும் என்ற விவாதத்தில் நியாயம் இல்லையா? மேலும் ஆசிரியர் தொழிற்சங்கத் தலைவர் ஸ்டாலின் கூறுவது போல, இப்போதுள்ள பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், சேலைகளை வாங்குவதற்காக அதிக தொகை பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறது.
2000 ரூபாய்க்கு விற்கப்பட்ட சேலைகள் இப்பொழுது மூன்று மடங்கு அதிக விலை

முன்பு 2000 ரூபாய்க்கு விற்கப்பட்ட சேலைகள் இப்பொழுது அதைவிட மூன்று மடங்கு அதிக விலையில் விற்கப்படுகின்றன. எனவே சேலைகளை வாங்குவது என்பது ஆசிரியர்களைப் பொறுத்தவரை சம்பளத்துக்குள் அடங்காத ஒரு விவகாரமாக மாறி வருகிறது.

மேற்கண்ட காரணங்களை முன்வைத்துத்தான் ஆசிரியர் தொழிற்சங்கம் அப்படி ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தது.

ஆனால் பௌத்த மதகுருகளை முன்னிறுத்தி கல்வி அமைச்சு பண்பாட்டின் பேரால் அக்கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. இது ஒரு பண்பாட்டுப் பிரச்சினை மட்டுமல்ல.

தொழில்சார் பிரச்சினை மட்டுமல்ல. பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல. இவை எல்லாவற்றையும் விட ஆழமான பொருளில் இது ஒரு மனித உரிமைப் பிரச்சினை. மனித உரிமைகளை பாடசாலைகளில் இருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் சிந்தித்தால் இந்த விடயத்துக்கு பொருத்தமான ஒரு தீர்வை காணலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.