இதற்கு மேலுமா நம்புவது……! (கட்டுரை)
அரசதரப்பு சட்டத்தரணியாகப் பணியாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.எம்.சுஹைர் அண்மையில் நாளிதழ் ஒன்றில் எழுதியிருந்த விருந்தினர் பத்தி ஒன்றில் குறிப்பிட்டிருந்த விடயங்கள், ஆங்கில ஊடகங்களில் அதிகம் கவனத்தைப் பெற்றிருந்தது.
அவரது அந்த பத்தியில், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக, புதிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கு வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்களின் உதவிகள் பெறப்படவுள்ளதாகவும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன், நாடாளுமன்றத்தில் அறிவித்திருப்பதை மையப்படுத்தி, பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.
“இம்முறை விசாரணைகளுக்காக அமெரிக்காவின் எவ்பிஐ, பிரித்தானியாவின் ஸ்கொட்லன்ட் யார்ட், அவுஸ்ரேலியாவின் சமஸ்டிப் பொலிஸ், மாலைதீவு தேசிய பொலிஸ் என்பன, வருகின்ற போது இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஏன் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது?” என்பதே அவரது பத்தியின் பிரதான கேள்வியாக இருந்தது.
“இத்தகைய சூழலில், ஐ.நாவுடன் முரண்படுவதை தவிர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ள அவர் “நாட்டில் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்தால், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான புதிய விசாரணையில் வெளிநாட்டு உதவியைப் பெறுவது போன்று, ஐ.நா விசாரணையை ஏன் எதிர்க்க வேண்டும்’’ என்றும் கேள்வியெழுப்பப்பட்டது.
“வெளிநாட்டுப் பொலிஸாரின் விசாரணைகளை அனுமதிக்கக் கூடாது என்பது அரசின் கொள்கை என்றால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு விரோதமாகச் செயற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு புலனாய்வாளர்களின் மற்றொரு ஈஸ்டர் தாக்குதல் விசாரணை எமக்கு ஏன் தேவை?” என அவர் கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
இந்த விசாரணைகளை மேற்கொள்ள வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளை அனுமதிக்கும் போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட 2000 பேரிடம் பெறப்பட்ட கட்டாய வாக்குமூலங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து, அவர்கள் தகவல்களைத் திரட்டிக் கொள்ள முடியும் என்றும், அது ஜெனிவாவில் புதிய நெருக்கடியை தோற்றுவிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஹைர் வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளின் பங்கேற்புடன் புதிய விசாரணையை எதிர்க்கிறாரா அல்லது, இதன் மூலம், ஐ.நா விசாரணைக்கான கதவுகள் திறக்கப்பட்டு விடும் என்ற பயத்தை ஏற்படுத்துகிறாரா என்ற மயக்கம் கூட சிலருக்கு ஏற்படலாம். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து நடந்தப்பட்ட விசாரணைகளில் வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகள் பங்கேற்றிருந்தன.
பின்னர், அந்த புலனாய்வு நிறுவனங்களிடம் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் விசாரணை அறிக்கைகள், நீதிமன்றத்திலும் சாட்சியங்களாக பதிவு செய்யப்பட்டன.
அந்த நிலையில், வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளின் தகவல்களை நீதிமன்றக் கட்டமைப்பு எதிர்க்கவோ, புறக்கணிக்கவோ இல்லை. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றம் அளித்திருக்கின்ற ஒரு தீர்ப்பு, கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.
“பக்கியான் சட்டக் குழுமம் என்ற சீன சட்ட நிறுவனம் இலங்கைக்குள் எந்தவொரு சட்டப்பூர்வ தொழில்முறை வேலையிலும் ஈடுபடுவதற்கு சட்டத்தில் உரிமை இல்லை” என்று, உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
சட்டத்தரணி நயந்த விஜேசுந்தர தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் வழக்கில் இந்த தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன், கம்பனிகள் சட்டத்தின் கீழ் பக்கியான் சட்டக் குழுவை வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனமாக இணைத்தமை சட்டவிரோதமானது என்றும், இதனைப் பதிவு செய்வதில், கம்பனிகள் பதிவாளர் நாயகம் நாட்டின் சட்டத்தை மீறிச் செயற்பட்டுள்ளார் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
வெளிநாட்டு சட்ட நிறுவனம் ஒன்று இலங்கைக்குள் செயற்படுவதற்கு அரசியலமைப்பு அங்கீகாரம் அளிக்கவில்லை என்ற உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, உள்நாட்டு விசாரணைகளில் வெளிநாட்டு புலனாய்வு அல்லது, சட்ட அமைப்புகளின் உதவியைப் பெற்றுக் கொள்வதில் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.
போர்க்கால மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் பொறிமுறைகளில் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு இடமளிப்பது அரசியலமைப்புக்கு விரோதமானது என்பதே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
ஜெனிவாவில் நல்லாட்சி அரசாங்கம் இணக்கம் தெரிவித்த, 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் போனதற்கும், அண்மையில் 51/1 தீர்மானத்துக்கு இணங்க மறுத்தமைக்கும், அந்தக் காரணத்தைதான் அரசாங்கம் கூறியிருந்தது.
ஆனால், சட்டநிபுணர் எம்.எம்.சுஹைர், இந்த நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகவில்லை.
“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்க தனிப்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரை அனுமதிப்பதில் சட்டரீதியான தடைகள் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ள அவர், “அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு, ஐ.நா.வுடன் ஒத்துழைப்பதற்கு அரசியலமைப்பு தடைகள் எதுவும் இல்லை” என்று வாதிட்டுள்ளார்.
உண்மையை கண்டறியும் பொறிமுறை
நாங்கள் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள ஐ.நா அமைப்புடன் ஒத்துழைப்பது, சில குற்றச்சாட்டுகளையும், நாட்டின் 22 மில்லியன் மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் பொருளாதார அவலத்தையும் சமாளிக்க உதவும்.
என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து புதிய விசாரணையை நடத்தப் போவதாக கூறியிருக்கின்ற அரசாங்கம், அதில் வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளையும் இணைத்துக் கொள்ளவுள்ளதாக கூறியுள்ளது.
அதேநேரத்தில், போர்க்கால மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து உண்மையை கண்டறியும் பொறிமுறை ஒன்றை உருவாக்கவுள்ளதாகவும் வாக்குறுதியளித்திருக்கிறது.
ஆனால் இந்தப் பொறிமுறையில் வெளிநாட்டவர்களுக்கு இடமில்லை, உள்நாட்டு பொறிமுறையாகவே இருக்கும் என்பதில் திட்டவட்டமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு ஒரு வித அணுகுமுறையையும், போர்க்கால மீறல்கள் குறித்த பொறிமுறைக்கு இன்னொரு அணுகுமுறையையும் அரசாங்கம் கொண்டிருக்கிறது.
அரசாங்கத் தரப்பில் மாத்திரமன்றி, எதிர்கட்சிகள் மட்டத்திலும் இதுகுறித்த குழப்பங்கள் உள்ளன. உண்மை கண்டறியும் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வலியுறுத்தியுள்ள நிலையில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அதனை எதிர்த்திருக்கிறார்.
அரசாங்கம் உண்மையைக் கண்டறிய வேண்டுமென்றால், அது பக்கசார்பற்றதாக இருக்க வேண்டும் என்பதும், பாதிக்கப்பட்ட தரப்பினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். அரசாங்கம் இதுவரை அமைத்த எந்த ஆணைக்குழுவும் நியாயமானதாக பக்கசார்பற்றதாக இருக்கவில்லை, அதனை பாதிக்கப்பட்ட தரப்பினர் ஏற்றுக் கொள்ளவுமில்லை.
உண்மை கண்டறியும் பொறிமுறையை அரசாங்கம் உருவாக்குவதற்கு முன்னர், அது நியாயமாக பக்கச்சார்பின்றி செயற்படும் என்பதை மாத்திரமின்றி, அந்தப் பொறிமுறையின் ஊடாக, நீதி நிலைநாட்டப்படும் என்ற உத்தரவாதமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டும்.
ஏனென்றால், கடந்த காலங்களின் அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் குறித்து ஆராய, நியமிக்கப்பட்டுள்ள நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர், இந்தியாவுக்கான தூதுவர் என முக்கிய பதவிகளை வகித்திருந்த முன்னாள் மூத்த சிவில் சேவை அதிகாரியான ஒஸ்ரின் பெர்னான்டோ, அளித்துள்ள சாட்சியத்தில் இதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
“போர் முடிவுக்கு வந்த பின்னர் உடலகம ஆணைக்குழு, தருஸ்மன் ஆணைக்குழு, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்றவற்றால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் முன்வைக்கப்பட்டிருந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்திருக்கின்றது.
குறிப்பாக படையினரிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறும், குற்றமிழைத்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரைத் தண்டிக்குமாறும் சில அறிக்கைகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
போர் முடிந்து 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில், முப்படைகளைச் சேர்ந்த எத்தனை பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக்கின்றார்கள்? இந்த விடயத்தில் அரசாங்கங்கள் பொய்யுரைத்திருக்கின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றைப் புதிதாக உருவாக்குவது பற்றி முன்வைக்கப்படும் விமர்சனங்கள் நியாயமானவை.” என்று ஒஸ்ரின் பெர்னான்டோ, தனது சாட்சியத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இப்போது, பொறிமுறைகளின் உள்ளடக்கம் பற்றிய விவாதங்களை நீட்டி காலம் கடத்தப்படுவது மாத்திரம் நடக்கவில்லை, அதற்கும் அப்பால் தண்டனையில் இருந்து தப்பித்தலும் தொடர்கிறது என்பதை அவரது சாட்சியம் உறுதிப்படுத்தியிருக்கிறது. இதற்கு மேலும் உள்நாட்டுப் பொறிமுறைகளின் மீது பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு நம்பிக்கை வைப்பார்கள்.