தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்களைத் தோற்கடிக்கக் கூடாது !! (கட்டுரை)
அமையும் சந்தர்ப்பங்களை வெற்றிகரமாகக் கையாளும் சமூகமே, அரசியல் வெற்றியை சுவைக்கும்; இலக்குகளை அடையும். மாறாக, அமையும் சந்தர்ப்பங்களை கையாளத் தெரியாமல், தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்திக்கும் சமூகம், பெரும் தோல்வியின் அடையாளமாக மாறும்.
தமிழ் மக்களும் தமிழ்த் தேசிய அரசியலும், இன்றைக்கு தோல்வியின் அடையாளமாக நோக்கப்படுவதற்கு, சந்தர்ப்பங்களைக் கையாளத் தெரியாத, தூரநோக்கற்ற, குறுகிய சுயநல அரசியலே பிரதான காரணம் எனலாம்.
இலங்கை, உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் இன்று சந்தித்து நிற்கின்ற பொருளாதார – இராஜதந்திர நெருக்கடிகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான அவசரத்தைக் காட்டுகின்றது. அதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தன்னுடைய படை பட்டாளத்தோடு களத்தில் இறங்கியிருக்கிறார்.
உள்ளூரில் ராஜபக்ஷர்களோடு கூட்டு அமைத்திருக்கின்ற ரணில், சர்வதேச நெருக்கடிகளை நீக்குவதற்காக எரிக் சொல்ஹெய்ம் போன்றவர்களை அழைத்து வந்திருக்கிறார். கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை வெற்றிகரமாகக் கையாள்வது மாத்திரமன்றி, சந்தர்ப்பங்களை உருவாக்கி, அதிலும் வெற்றிபெறுவதற்காக அவர் இயங்கிக் கொண்டிருக்கின்றார்.
அதன்போக்கில்தான், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு, அடுத்த சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வைக் காண்பது என்கிற பொறியையும் அவர் வைத்திருக்கின்றார்.
ரணில் வைத்திருக்கின்ற பொறியில் சிக்கிக் கொள்ளாமல், தமிழ் மக்களுக்கான அரசியல் வெற்றியை எவ்வாறு அடைவது என்பது தொடர்பில் சிந்திப்பதுதான் தமிழ்த் தேசிய கட்சிகள் முன்னாலுள்ள ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும்.
ஆனால், தமிழ்த் தேசிய கட்சிகளும் அதன் தலைவர்களும், தமிழ் மக்களுக்கான அரசியல் வெற்றி என்கிற புள்ளியைப் புறந்தள்ளிவிட்டு, தனிப்பட்ட தங்களின் பதவி வெ(ற்)றிக்காக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசிய கட்சிகள் மூன்று அணிகளாகப் பிரிந்து நின்று போட்டியிட்டன. அதனால், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளின் வெற்றி, வடக்கு – கிழக்கில் என்றைக்கும் இல்லாதளவுக்கு அதிகரிக்கக் காரணமானது.
யாழ்ப்பாணத்தில் அங்கஜனின் பெரு வெற்றியும், சுமார் 3,000 விருப்பு வாக்குகளைப் பெற்ற திலீபன், வன்னி மாவட்டத்திலிருந்து ஈ.பி.டி.பி சார்பில் வெற்றி பெறுவதற்கும், அம்பாறையில் கிடைக்க வேண்டிய ஓர் ஆசனமும் கருணாவிடம் காவு கொடுக்கப்படவும் தமிழ்த் தேசிய கட்சிகளின் முரண்பாடுகள் காரணமாகின.
இந்த முரண்பாடுகள் கொள்கை, கோட்பாடுகள் சார்ந்து எழுந்ததல்ல; மாறாக, தமிழ்த் தேசிய கட்சிகளுக்குள் ‘நான் பெரிதா, நீ பெரிதா’ என்கிற இழுபறியாலும் சுயநல போக்காலும் ஏற்பட்டது.
இப்போது, தமிழ்த் தேசிய கட்சிகளை ஓர் அணியாகப் பேச்சுவார்த்தை மேடைக்கு வருமாறு ரணில் வலையை விரித்திருக்கின்றார். அவர் விரித்திருக்கும் வலை, கிட்டத்தட்ட ‘மாயவலை’.
சர்வதேச ரீதியில் இலங்கையை நெருக்கடிகளில் இருந்து மீட்பதோடு, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தன்னுடைய வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கங்களைக் கொண்டது.
குறிப்பாக, தமிழ் மக்களின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக தனக்கு எதிராகக் களத்தில் நிற்கவுள்ள சஜித்துக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளதால், அதை இல்லாமல் செய்வதற்கான நோக்கத்திலானதாகும்.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், தமிழ் மக்கள் தேர்தல் வாக்களிப்பை புறக்கணித்ததால், ஒரு இலட்சத்து எண்பதாயிரம் வாக்குகளால் அவர் ராஜபக்ஷவிடம் வெற்றியைப் பறிகொடுத்தார். தமிழ் மக்கள் அப்போது வாக்களித்திருந்தால், அந்த வாக்குகளில் 90 சதவீதமானவை ரணிலுக்கே கிடைத்திருக்கும்.
ஆனால், இப்போது நிலைமை அப்படியல்ல; ரணில் – ராஜபக்ஷர்களின் கூட்டு. அதனால், ரணிலுக்கு எதிரான வேட்பாளரை நோக்கியே, தமிழ் மக்கள் நகர்வார்கள். அந்த நகர்வில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். அப்படியான நிலையில், கூட்டமைப்பை உடைத்து, பல கோணங்களில் சிதற வைப்பது என்பது, தமிழ் மக்களின் வாக்குகளை ஓரணியில் திரள்வதைத் தடுப்பதற்கான உத்தி என ரணில் நினைக்கிறார்.
அதனால்தான், தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது, தனக்கு வாக்களித்தவர்கள் யார் யார் என்பதெல்லாம் தனக்குத் தெரியும் என்று, கூட்டமைப்புடனான சந்திப்பில் ரணில் கூறவும் செய்தார்.
கூட்டமைப்பு பலம் பெறுவதையோ, தமிழ்த் தேசிய கட்சிகள் ஓரணியில் திரள்வதையோ, தென்இலங்கையின் எந்தச் சக்தியும் எந்தக் காலத்திலும் விரும்பாது. ரணிலும் அதே புள்ளியில் நின்றுதான் விடயங்களைக் கையாள்கிறார்.
ஆனால், இந்த வெளிப்படையான சதி வலையில் சிக்காமல், விலகி நின்று, தமிழ் மக்களின் இறைமையையும் உரிமையையும் காக்க வேண்டிய பொறுப்புடையனவாக இருக்கும் தமிழ்த் தேசிய கட்சிகள், தங்களின் தனிப்பட்ட தேர்தல் இலாபநட்டக் கணக்கை பார்க்கத் தொடங்கி விட்டன.
எதிர்வரும் ஆண்டு முதல் காலண்டுக்குள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. அதன், பின்னராக வரப்போகும் மாகாண சபைத் தேர்தல்கள், பொதுத் தேர்தலுக்கான பரீட்சார்த்த களமாக இருக்கும்.
ஏனெனில், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு அனுப்பப்பட்ட ராஜபக்ஷர்கள், 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தங்களது மீள்வருகையைப் பதிவு செய்தனர். தென்இலங்கை பூராவும் ராஜபக்ஷர்களுக்கான வெற்றி பறைசாற்றப்பட்டது.
அந்தத் தேர்தலில் வடக்கு – கிழக்கில், கூட்டமைப்பு முதல் முதலாக பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அது, கடந்த பொதுத் தேர்தலில் பெருவாரியாக பிரதிபலிக்கவும் செய்தது. 16 பாராளுமன்ற உறுப்பினர்களோடு இருந்த கூட்டமைப்பு, 10 உறுப்பினர்களுக்குள் சுருங்கியது.
தமிழரசுக் கட்சியின் தலைவர், செயலாளர் உள்ளிட்டவர்கள் தோற்றும் போனார்கள். அப்படியான நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் என்பது, தமிழ் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் களம். அந்தக் களத்தை சாதகமாகக் கையாள வேண்டும் என்பது ஒவ்வொரு தேர்தல் மையக் கட்சியினதும் இலக்காக இருக்கும். இது, அடிப்படையில் தவறும் இல்லை.
ஆனால், இந்தத் தேர்தல் களத்தில் வெற்றி காண்பதற்காக, மிக முக்கியமான பேச்சுவார்த்தைக் கட்டத்தை வைத்து, கேலிக்கூத்து நாடகத்தை தமிழ்த் தேசிய கட்சிகள் ஆடுகின்றன.
அரசுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை திகதிகளை திட்டமிடும் சந்திப்புக்கான அழைப்பை ஜனாதிபதி விடுத்தால், அந்தக் கூட்டத்தில் தங்களால் பங்கெடுக்க முடியாது என்றதும், அதில் குறு அரசியல் செய்ய சி.வி விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் முயல்கிறார்கள்.
யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்னமும் தமிழ்த் தேசிய கட்சிகளின் மூத்த தலைவர் இரா. சம்பந்தன்தான். அவரை முன்னிறுத்தித்தான் பேச்சுவார்த்தை மேடையில் எந்தத் தமிழ்த் தேசிய கட்சியாக இருந்தாலும் அமர வேண்டும். அதனால்தான், தமிழ்த் தேசிய முன்னணி, பல்வேறு காரணங்களைச் சொல்லி அதனை ஆரம்பத்திலேயே தவிர்த்துவிட்டது.
சம்பந்தன் முன்னிலை வகிக்கும் தரப்பில், எம்.ஏ சுமந்திரன் மிக முக்கிய இடத்தைப் பிடிப்பார். ஏனெனில், தந்தை செல்வாவின் மனச்சாட்சியாக இருந்த அமிர்தலிங்கம் மாதிரி, இன்றைக்கு சம்பந்தனின் குரலாக சுமந்திரனே ஒலிக்கின்றார். சுமந்திரன் இல்லாமல் சம்பந்தன் எந்தச் சந்திப்பிலும் கலந்து கொள்வதில்லை.
பங்காளிக் கட்சித் தலைவர்கள் சந்திக்க விரும்பினாலும் கூட, “சுமந்திரனையும் அழைக்கவா” என்று அவர் கேட்கும் நிலையில் இருக்கிறார். ஏனெனில், அவரது உடல்நிலை தளர்வடைந்துவிட்டது. அவர் என்ன பேசுகிறார் என்பது, பல தருணங்களில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கே விளங்குவதில்லை. அதனால், சம்பந்தனின் குரலாக அங்கு சுமந்திரன் அவசியமாகிறார். அது, சுமந்திரனுக்கான முக்கியத்துவத்தை உருவாக்கிவிட்டது.
அதனால்தான், பேச்சுவர்த்தைக்கான திகதிகளை, முன்னேற்பாடுகளை தீர்மானிக்கும் சந்திப்புக்கு, தங்களை நேரடியாக அழைக்காமல் சுமந்திரன் ஊடாக அழைத்ததால், விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் பங்கெடுக்கவில்லை. அதில், அதிகமானவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தது முக்கிய காரணம்.
இவ்வாறான சூழலில், ரணிலுடன் சம்பந்தனும் சுமந்திரனும் சந்திப்பதானது, தங்களுக்கான முக்கியத்துவத்தை குறைக்கின்றது என்று எண்ணியதும், பேச்சுவார்த்தைக்கான விடயத்தில் சுமந்திரனை முன்னிறுத்தக்கூடாது என்ற சாரப்பட ரணிலுக்கு விக்னேஸ்வரன் கடிதம் எழுதுகிறார்.
உண்மையில் இந்தக் கடிதம், தென் இலங்கையில் கொண்டாட்டங்களை வரவழைக்கக்கூடியது. இருக்கின்ற 13 தமிழ்த் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள் பல பிரிவுகள்; இவர்கள் எந்த இடத்திலும் ஓரணியில் வரமாட்டார்கள்; அதனால், பேச்சுவார்த்தை மேடையில் ஏதுவும் நிகழாது; சர்வதேசத்துக்கு தமிழ் மக்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மாதிரி காட்டியும் ஆகிவிட்டது; அது சாத்தியமான அடைவுகளை அடையாது விட்டமைக்கு, தமிழ்த் தேசிய கட்சிகளின் இழுபறியை காரணம்காட்டியும் ஆகிவிட்டது என்று விடயத்தை முடித்துவிடுவார்கள்.
அதற்கான ஏற்பாடுகளைத்தான், தமிழ்த் தேசிய கட்சிகளின் தூரநோக்கற்ற தலைவர்கள் இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறார்கள். இது, தமிழ்த் தேசிய போராட்டத்தை இன்னும் பலமாக தோற்கடிக்கவே செய்யும்.