மாவை மீதான விக்கியின் திடீர்ப் பாசம்! சுயநலவாதிகளின் நாடகம்!! (கட்டுரை)
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து, பரந்துபட்ட கூட்டணியை அமைக்க வேண்டும் என்று, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருக்கின்றார்.
மாவையை “தலைமைத்துவ ஆளுமையற்றவர்” என்று தொடர்ச்சியாகக் கூறி வந்த விக்னேஸ்வரன், திடீரென்று மாவையின் தலைமையில் கூட்டணி அமைப்போம் என்ற அறிவித்தலை விடுக்கிறார் என்றால், அதன் பின்னணியை ஆராய வேண்டி ஏற்படுகிறது.
வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பால், விக்னேஸ்வரன் நேரடி அரசியலுக்கு அழைத்துவரப்பட்டு 10 ஆண்டுகளாகப் போகிறது. விக்னேஸ்வரன், இந்த 10 ஆண்டுகளுக்குள் ஏழு ஆண்டுகள் கூட்டமைப்பையும் அதன் தலைவர்களையும் “ஏதும் செய்ய இலாயக்கற்றவர்கள்; தமிழ் மக்களின் துரோகிகள்” என்ற விமர்சனங்களை முன்வைத்து, புதிய கட்சியை ஆரம்பித்திருந்தார்.
அதுவும், 2015 பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர், கனடிய ஊடகமொன்றுக்கு விக்னேஸ்வரன் வழங்கிய செவ்வியொன்றில், கூட்டமைப்பின் தலைவர்களை, ‘ரணிலின் அடிமைகள்’ என்ற தோரணையில் விமர்சித்திருந்தார். குறிப்பாக, மாவையை “அரசியல் அறிவே அற்றவர்” என்று குறிப்பிட்டிருப்பார். இந்தச் செவ்வியின் பகுதிகளை வெட்டியொட்டி, கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள், பொதுத் தேர்தல் காலத்தில் பரப்பிக் கொண்டிருந்தன.
அந்தச் செவ்வி குறித்து ஆரம்பத்தில் அமைதி காத்த விக்னேஸ்வரன், தேர்தல் அண்மித்த நாள்களில், கூட்டமைப்புக்கு எதிரான அறிக்கையொன்றை ‘வீட்டுக்கு வெளியே வந்து தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்’ என்று பொருள்பட வெளியிட்டார். இந்த அறிக்கையின் பின்னணியில், யாழ். மையவாத புத்திஜீவிகளும் வைத்தியர்களும் சில அரசியல் பத்தியாளர்களும் இருந்தார்கள்.
அவர்கள், தமிழ்த் தேசிய அரசியலில் அரிச்சுவடி படித்துக் கொண்டிருந்த விக்னேஸ்வரனை, இரா. சம்பந்தனுக்கு மாற்றான தலைவராகக் காற்றடித்து பெரிப்பித்தும், ஜனவசிய வட்டம் வரைந்தும் கொண்டுமிருந்தார்கள். அன்று விக்னேஸ்வரனிடத்தில் ஆரம்பித்த ‘தமிழின தலைவர்’ என்ற அடையாளத்துக்கான ஆசை இன்றளவும் அடங்கவில்லை.
விக்னேஸ்வரன், தன்னை முன்னிறுத்திய அனைவரையும் நட்டாற்றில் விட்டுவிட்டு வந்தவராவார். நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்று வீட்டில் இருந்தவரை, தமிழ் அரசியலுக்குள் அழைத்து வந்த சம்பந்தனையும் எம்.ஏ சுமந்திரனையும் ஏமாற்றியதுடன், அவரை முதலமைச்சராக்கிய கூட்டமைப்பை, தமிழினத்துக்கு துரோகமிழைக்கும் கட்சியாக பேசியிருக்கிறார்.
அது மாத்திரமின்றி, விக்னேஸ்வரனை நம்பி, கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்று அவரோடு இணைந்தவர்களை, கடந்த பொதுத் தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்திவிட்டு, கறிவேப்பிலைகள் மாதிரி தூக்கியெறிந்துவிட்டார். தேர்தல் வெற்றிக்காக தேவைப்பட்ட சுரேஷ் பிரேமசந்திரன், அருந்தவபாலன், அனந்தி சசிதரன் ஆகியோரிடம் எந்த ஆலோசனைகளையும் அவர் நடத்துவதில்லை. அரசியல் முடிவுகளை தனிப்பட்ட ரீதியிலேயே எடுத்து அறிவிப்பார். அறிவித்த பின்னர்தான், தமிழ் மக்கள் கூட்டணி என்கிற அமைப்பில் இருக்கிற மற்றவர்களுக்கே தெரியும்.
அப்படியான நிலையில், விக்னேஸ்வரனின் தலைமையில் இன்னொரு தேர்தலில் போட்டியிடும் நிலையில் மற்றவர்கள் இல்லை. இது விக்னேஸ்வரனை சிந்திக்க வைத்துவிட்டது. அதுதான், மாவை மீதான திடீர் பாசத்துக்கு காரணம். விக்னேஸ்வரனை முன்னிறுத்திக் கொண்டு இன்னொரு தேர்தலுக்கு செல்வதற்கு இன்றைக்கு யாரும் தயாராக இல்லை. தோல்வி நிச்சயம் என்கிற நிலையில்தான், அவரை மாவையின் தலைமையை ஏற்க வைத்திருக்கின்றது.
இன்றைக்கு தமிழரசுக் கட்சி, மாவையின் கட்டுப்பாட்டில் இல்லை. கட்சியின் தேசிய மாநாடு ஒன்று நடத்தப்பட்டால், மாவை கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து தூக்கி வீசப்படும் நிலை இருக்கின்றது. சுமந்திரனோ, சிவஞானம் சிறிதரனோ கட்சியின் தலைவராகிவிடுவார்கள். அதனால், கட்சியின் தேசிய மாநாட்டை, கட்சி யாப்பு விதிகளை மீறி நடத்தாமல் மாவை தட்டிக் கழித்து வருகின்றார்.
அப்படியான நிலையில், கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாவை, ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் சரணடைந்திருக்கிறார். சுமந்திரனோ, சிறிதரனோ தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்துக்கு வந்துவிட்டால், கூட்டமைப்புக்குள் டெலோ, புளொட்டின் நிலை மோசமான கட்டங்களை அடைந்துவிடும். அதைத் தடுப்பதற்காக, மாவை தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியின் தலைமையில் இருக்க வேண்டும் என்று செல்வமும், சித்தார்த்தனும் விரும்புகிறார்கள். அந்தப் புள்ளியை விக்னேஸ்வரனும் பிடித்துக் கொண்டு, குறுக்கு வழியில் ஓட நினைக்கிறார்.
வடக்கு முதலமைச்சர் பதவி என்பது, மாவையின் தீராக் கனவு. அந்தக் கனவை நனவாக்க, தாங்கள் துணை நிற்பதாக அவரிடத்தில் செல்வமும் சித்தார்த்தனும் உறுதி அளித்திருக்கிறார்கள். இப்போது விக்னேஸ்வரனும் அதற்கு இசைந்திருக்கின்றார். இந்த இசைவு என்பது, சம்பந்தன் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. மாவையை முதலமைச்சர் என்ற கட்டத்துக்குள் வடக்குக்குள் சுருக்கிவிடலாம். அப்படியான நிலையில், கூட்டமைப்பின் மூத்த தலைவர் என்ற கட்டத்தை தான் அடைந்து கொள்ளலாம் என்பது விக்னேஸ்வரனின் எண்ணம். ஏனெனில், செல்வமும் சித்தார்த்தனும், சுமந்திரன், சிறிதரன் தலைமையில் இயங்குவதைக் காட்டிலும் விக்னேஸ்வரனை தங்களது தெரிவாகக் கொள்வார்கள்.
இந்தச் சூத்திரங்களின் புள்ளியில் நின்றுதான், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கூட்டமைப்புக்குள் இணைப்பது என்ற நிலைப்பாட்டையும் மாவையின் தலைமையில் கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என்ற விக்னேஸ்வரனின் அறிவிப்பையும் புரிந்து கொள்ள வேண்டும்.
மாவையின் அரசியல் நீண்ட பாரம்பரியங்களைக் கொண்டது. ஆனால், அவருக்கு இன்று கட்சியை வழிநடத்தத் தெரியவில்லை. தன்னுடைய பதவி ஆசைக்காக கட்சியை காட்டிக் கொடுக்கும் நிலைக்கு வந்துவிட்டார். அதனால், பங்காளிக் கட்சிகள், கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சியை தோற்கடிப்பதற்காக ஒன்றிணைந்தவர்களுடனும் கூட்டு வைக்கத் தயாராகிவிட்டார்.
தமிழரசுக் கட்சியின் அடுத்த மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் ஏழாம் திகதி மட்டக்களப்பில் நடைபெற இருக்கின்றது. இந்தக் கூட்டத்தில், மாவை மீது தேசிய மாநாட்டைக் கூட்டுமாறு நெருக்கடி விடுக்கப்படலாம். குறிப்பாக, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு முன்னர், அதனை கூட்டுமாறு அழுத்தங்கள் வழங்கப்படலாம். அந்த அழுத்தங்களை “…பார்க்கலாம் தம்பி…” என்று வழமைபோல மாவையால் தட்டிக்கழிக்க முடிந்தால், அவரின் தலைமைப் பதவி இன்னும் சில மாதங்களுக்கு தப்பிப்பிழைக்கும்.
மற்றப்படி, முதலமைச்சர் கனவுக்காக அவர் கட்சியை மற்றவர்களிடம் அடகு வைக்கும் நிலையை, தமிழரசின் அடுத்த கட்டத் தலைவர்கள் யாரும் விரும்பவில்லை. குறிப்பாக, தமிழரசின் தலைமைத்துவத்துக்கு வரத்துடிக்கும் சுமந்திரன் அணியும் சிறிதரன் அணியும் விரும்பவில்லை. இரண்டு அணிகளும், தேசிய மாநாடு ஒன்று நடந்தால், அதில் தலைமைத்துவத்தை அடைவதற்காகப் படை பட்டாளங்களைச் சேர்க்கத் தொடங்கிவிட்டார்கள்.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா வரை கட்சியின் தொகுதிக் கிளைகளுக்குள் சுமந்திரன் ஆதரவை தேடிக் கொண்டிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டை, தீவகம், காங்கேசன்துறை தவிர்ந்த தொகுதிகள் சுமந்திரனை ஆதரிக்கும் நிலையில் இருக்கின்றன.
சிறிதரனைப் பொறுத்தளவில் கிளிநொச்சி, மன்னார் மற்றும் சுமந்திரனுக்கு எதிரான அணிகளுடன் கூட்டு என்று ஆதரவு திரட்டும் வேலைகளை கமுக்கமாக நடத்திக் கொண்டிருக்கிறார். இதுதான், தமிழரசின் இன்றைய நிலைமை.
மாவை, இன்று இருக்கும் நிலையில், முதலமைச்சர் கனவை அடைவதற்கான வாய்ப்புகள் என்பது மிகமிக அரிது. அதைச் சொந்தக் கட்சிக்காரர்களே நிறைவேற்றத் துணிய மாட்டார்கள். இப்படியான நிலையில், விக்னேஸ்வரனின் ‘குயுக்தி’ ஆட்டம் பலிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.
தேர்தல் அரசியலில் இலாப நட்டக் கணக்குகளைப் பார்த்து, கூட்டணிகள் அமைவது சாதாரணமானவை. இந்தக் கூட்டணிகளுக்குள் கொள்கை, கோட்பாடு என்ற எதுவும் இருப்பதில்லை. தேர்தல் வெற்றி மாத்திரமே இலக்காக இருக்கும்.
இவ்வாறான கூட்டணிகளால் மக்களுக்கான நன்மைகள் ஏதும் பெரியளவில் நிகழ்ந்ததாக வரலாறுகள் இல்லை. கொள்கை, கோட்பாடுகள், செயலாற்றுவதற்கான திறன், அரசியல் ஒழுக்கம் என்று ஏதுமற்று, சுய இலாபங்களுக்காக ‘பரந்துபட்ட கூட்டணி’ என்று அறிவித்தலை விடுக்கும் தலைவர்களை, தமிழ் மக்கள் அடையாளம் காண வேண்டும். இல்லையென்றால், தமிழ் மக்களின் தலைகளில் தொடர்ந்தும் மிளகாய் அரைத்துக் கொண்டிருப்பார்கள்.