;
Athirady Tamil News

23 நாள்களில் வரவிருக்கும் ஜனாதிபதியின் தீர்வு !! (கட்டுரை)

0

எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர், அதாவது இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக கடந்த மாதமும் அதற்கு முந்திய மாதமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்த போதிலும், அது நிறைவேறும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

கடந்த நவம்பர் மாதம் வரவு – செலவுத் திட்டம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த வாக்குறுதியை முதன்முதலில் வழங்கினார். வரவு – செலவுத் திட்ட விவாதம் முடிவடைந்ததன் பின்னர், தாம் பாராளுமன்றத்தில உள்ள சகல அரசியல் கட்சிகளையும் அழைத்து, இது தொடர்பாகக் கலந்துரையாடுவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

அப்போது பெப்ரவரி மாதம் நான்காம் திகதிக்கு சுமார் இரண்டரை மாதங்கள், அதாவது 80 நாள்கள் இருந்தன. கடந்த 80 ஆண்டுகளாக, பல நூறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியும், 30 வருட கால ஆயுதப் போரொன்றை நடத்தியும் தீர்க்க முடியாது போன ஒரு பிரச்சினையையே, இவ்வாறு 80 நாள்களில் தீர்ப்பதாக ஜனாதிபதி அன்று கூறினார்.

1940களில் இருந்து 80 ஆண்டுகள் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்க்க முடியாது போன பிரச்சினையைத் தீர்க்க. மேலும் 80 ஆண்டுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது இதன் அர்த்தம் அல்ல! பிரச்சினை அவ்வளவு சிக்கலானதாக உள்ளதால், அதைத் தீர்ப்பது அவ்வளவு எளிதல்ல என்பதையே சுட்டிக் காட்டுகிறோம்.

எனினும், கடந்த 80 ஆண்டுகளாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது, பிரச்சினையின் சகல பக்கங்களும் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டு இருப்பதால், சம்பந்தப்பட்ட தரப்பினர் நேர்மையாகச் செயற்பட்டால், மேலும் ஊரிரு சுற்றுப் பேச்சுகளில் தீர்வைக் காணலாம். எனவேதான், ஒரே நாளில் இதைத் தீரக்கலாம் என, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அப்போது கூறியிருந்தார்.

வரவு – செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் முடிவடைந்ததன் பின்னர், அரசியல் கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவேன் என்ற தமது வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றினார். கடந்த மாதம் 13ஆம் திகதி, அவர் அந்தக் கூட்டத்தை ஜனாதிபதி செயலகத்தில் கூட்டினார்.

அந்தநிலையில், அதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்னர், தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து, ஒரு பொதுவான நிலைப்பாட்டில் இருந்து, இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுத்தன. அக்கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது, ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றுமாறு கூறி, மூன்று முக்கிய கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைப்பதென முடிவு செய்யப்பட்டது. எடுத்ததற்கெல்லாம் முரண்பட்டுக்கொள்ளும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் இந்த உடன்பாட்டுக்கு வந்தமை முக்கிய விடயமாகும்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணிகளை அபகரிப்பதை நிறுத்தி, அபகரித்த காணிகளை திருப்பிக் கொடுக்க வேண்டும்; 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றி, மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்; சமஷ்டி கட்டமைப்புக்குள் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் என்பனவே அந்தக் கோரிக்கைகளாகும்.

டிசெம்பர் 13ஆம் திகதி கூட்டத்தின் போதும், சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார். அவ்வாறேயானால், ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர், தமது மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு சுமந்திரனும் விக்னேஸ்வரனும் அந்தக் கூட்டத்தில் கூறினர். அதைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜாதிக்க ஹெல உருமய கட்சியின் தலைவர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட எவரும் எதிர்க்கவில்லை.

ஜனாதிபதி அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக் கொண்டார். 13ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பாக, அன்றே பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார். ஜனவரி மாதத்தில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை நடத்தி விடயத்தை முடிக்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்ததாக, ஜனாதிபதி செயலகம் அறிவித்து இருந்தது.

பின்னர், கடந்த ஐந்தாம் திகதி தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையே ஒரு மணி நேர பேச்சுவார்த்தை நடைபெற்றது. அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிறுவதில், எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்பதை அப்போது தமிழ்த் தலைவர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். அதன்பினனர் 10ஆம் திகதி (நேற்று) முதல் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இன்று ஜனவரி 11ஆம் திகதியாகும். ஜனாதிபதி தமது வாக்குறுதியை நிறைவேற்ற இன்னமும் 23 நாள்கள் மட்டுமே உள்ளன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விதித்த காலக்கெடுவின்படி, 20 நாள்களே இருக்கின்றன. அதற்குள் தீர்வை எட்ட முடியுமா?

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதாக இருந்தால், இது மிகவும் பொருத்தமானதொரு தருணமாகும். ஏனெனில், நாட்டில் இனவாத சக்திகள் மிகவும் பலவீனமாகவே இப்போது இருக்கிறார்கள். முன்னர் கடும் இனவாதியாக இருந்த சம்பிக்க ரணவக்க, சற்று மாறி இருக்கிறார். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் அரசியல் அநாதைகள் போலாகிவிட்டார்கள். அவர்கள் ராஜபக்‌ஷர்களின் உதவியிலேயே தமது இனவாத தாக்குதல்களை நடத்தினார்கள். இப்போது ராஜபக்‌ஷர்களும் தேர்தலை சந்திப்பதற்கே அஞ்சுகிறார்கள்.

சாதாரண காலங்களில் இனப்பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ஒருவர் கூறியிருந்தால் விமல், கம்மன்பில போன்றோர் எவ்வாறு குதித்து இருப்பார்கள் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். அதற்கும் மேலாக தமிழ்க் கட்சிகள் ஓரிரு நாள்களில் சமஷ்டி முறையிலான தீர்வொன்றை கேட்டால் அவர்கள் என்ன செய்திருப்பார்கள்? நாடெங்கிலும் கூட்டம் நடத்தி இனவாதத்தைத் தூண்டி, பெரும்பான்மையின மக்களை உசுப்பேற்றி இருப்பார்கள். பௌத்த பிக்குகளும் நாட்டை குழப்பி இருப்பார்கள். இம்முறை அது போன்ற எதுவும் இடம்பெறவில்லை.

அதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் யுவதிகள், இனவாதத்துக்கு எதிராகவும் குரல் எழுப்பினார்கள். இப்போது மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் கொத்து ரொட்டி, டொபி, உள்ளாடைகள் போன்ற பிரசாரங்களும் மருத்துவர் ஷாபி விவகாரம் போன்ற பிரசாரங்களும் அவற்றை பரப்பிய சிங்கள ஊடகங்களும் அவற்றை தூக்கிப் பிடித்துக் கொண்டு, மக்களை உசுப்பேற்றிய ஊடகவியலாளர்களும் எள்ளிநையாண்டி பண்ணப்படுகின்றார்கள்.

அதாவது, பெரும்பான்மையினத் தலைவர்களும் மக்களும் ஊடகங்களும் இனவாதப் போக்கை கைவிட்டுவிட்டார்கள் என்பதல்ல இதன் அர்த்தம். இப்போதைக்கு அவர்கள் பலவீனமாக இருக்கிறார்கள் என்பதே தெரிந்துகொள்ள வேண்டியதாகும். எனவே, இது இனப்பிரச்சினைக்குத் தீர்வுகளை முன்வைக்க சிறந்ததொரு தருணமாகும்.

ஆனால், அரசியல்வாதிகளுக்கு இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உண்மையான தேவை இருக்கிறதா என்பதே கேள்வியாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரலாற்றில், 2000ஆம் ஆண்டுக்கு முன்னைய காலம், அதிகாரத்துக்காக இனவாதத்தை மிக மோசமாக பாவித்த காலமாக இருந்தது.

அதன் பின்னர் அவர், சில முக்கிய முயற்சிகளை எடுத்தார் என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது. 2002ஆம் ஆண்டு, புலிகளுடனான சமாதான பேச்சுவார்த்தைகளின் போது, தமது அரசியல் பாதிக்கப்படலாம் என்பதை அறிந்திருந்தும் அவர் சமஷ்டி தீர்வொன்றுக்காக புலிகளுடன் உடன்பாட்டுக்கு வந்தார்.

ஆனால், அவரும் இம்முறை நடந்து கொள்ளும் முறை சற்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. டிசெம்பர் 13ஆம் திகதி கூட்டத்தை அடுத்து, மிகுதியாக இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும், அரச நிறுவனங்கள் கைப்பற்றி இருக்கும் காணிகளை விடுவிக்கவும் அவர் நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஐந்தாண்டுகளாகியும் எல்லை நிர்ணய பணிகள் முடிவடைந்து, இல்லாவிட்டால் மாகாண சபைத் தேர்தலை பழைய விகிதாசார முறைப்படியாவது நடத்த நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

இவை போன்ற, சாதகமான சமிக்ஞைகளை காட்ட அரசாங்கம் தவறிவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கடந்த ஐந்தாம் திகதி கூட்டத்தின் போது ஜனாதிபதியிடம் மிகக் காட்டமாகத் தெரிவித்ததாக தமிழ் ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, ஜனாதிபதி அதிக நேரம் செலவழிக்கத் தேவையில்லை. அவர் தமது செயலாளரை பணித்தால் போதுமானது. எனவே தான் தமிழ் அரசியல் கட்சிகளும் இப்போது மீண்டும் நம்பிக்கை இழந்துள்ளன.

அக்கட்சிகளுக்கும் அவருக்கும் இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைப் பற்றி, இக்கட்டுரை எழுதப்படும் வரை தகவல் எதுவும் கிடைத்திருக்கவில்லை. ஆனால், அப்பேச்சுவார்த்தைக்கும் ஒரு நிகழ்ச்சி நிரல் இல்லை எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அங்கலாய்த்துக் கொண்டு இருந்தார்கள்.

நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட இருந்த கூட்டம் மூன்று நாள்களாகத் தொடரும் எனக் கூறப்பட்டது. ஜனாதிபதி ஊடக தலைப்புகளுக்கும் அதன் மூலம் உலகத் தலைவர்களுக்குக் காட்டவும் நடவடிக்கை எடுக்கிறாரா அல்லது இதய சுத்தியுடன் செயலாற்றுகிறாரா என்பது இந்த மூன்று நாள்களில் தெரிய வரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.