ஜனநாயகத்தின் எதிர்பார்ப்பு தேர்தல் மட்டும்தானா? (கட்டுரை)
உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அரசியல் களம் தூக்கம் கலைத்து, மீண்டும் உசாரடையத் தொடங்கியுள்ளது.
இத்தனை காலமும், மக்களுக்குச் சேவையாற்றும் விடயத்தில் சோம்பேறித் தனமாக செயற்பட்ட அரசியல் கட்சிகளும், மக்களுக்குப் பிரச்சினை என்று வந்தபோது ஓடியொளித்த தலைவர்களும் கண்விழித்து, பூசிமினுக்கிக் கொண்டு களத்துக்கு வந்துள்ளனர்.
அவர்கள், தங்களது தோற்றப்பாட்டை மட்டுமல்ல, தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்ட பிரசாரக் கருத்தியலையும் பூசிமெழுகத் தொடங்கியுள்ளனர். பொய்களும் மக்களை ஏமாற்றுவதற்கான வித்தைகளும் தூசு தட்டப்படுகின்றன.
முன்பள்ளிகளுக்கு பிள்ளைகளைச் சேர்ப்பது போல, அரசியல் அடிச்சுவரி கற்க ஆள்பிடிக்கும் ஒரு காலம்போல, வட்டார வேட்பாளர் தெரிவுகள் இடம்பெறுகின்றன. இன்னும் அரசியலையே அறியாமல், வேட்பாளர் கனவுகளோடு உலாவருவோரின் அலப்பறைகள் சிரிப்பைத்தான் உண்டுபண்ணுகின்றன.
இலங்கையை பொறுத்தமட்டில், இது மிக இக்கட்டான காலம். கொரோனாவால் விழுந்த மக்களை, அரசியல் குழப்பங்கள் ஏறி மிதித்து குற்றுயிராக்கி உள்ளன. இதனால் ஏற்பட்ட நெருக்கடிகள் இன்னும் தீர்ந்தபாடில்லை.
அரசியல்வாதிகளுக்கும் பெரும் முதலாளிகளுக்கும் இது ஒரு பிரச்சினையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நடுத்தர வர்க்க மற்றும் கீழ்தட்டு மக்கள் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாமல் திணறுகின்றனர். ஒவ்வொரு பொழுதையும் அவர்கள் பெரும் சிரமத்துடன்தான் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.
சாதாரண மக்கள், மத்திய வங்கியில் கொள்ளை அடிக்கவும் இல்லை; நாட்டின் சொத்துகளைச் சூறையாடவும் இல்லை; பெரிய செயற்றிட்டங்களை வெளிநாடுகளுக்கு விற்றுவிட்டு, தரகுப் பணம் பெறவும் இல்லை; கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் சேமித்து வைக்கவும் இல்லை. அவர்கள் வாக்களித்து வாக்களித்தே ஏமாந்து போன ஜென்மங்கள்! மூன்று வேளைச் சோற்றுக்காக போராடுவதே, அநேகமான மக்களின் வாழ்வென்றாகி இருக்கின்றது.
இந்த நேரத்தில்தான் நாம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒன்றுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றோம். தேர்தல் மார்ச்சில் நடக்குமா என்ற சந்தேகம், இன்னும் முற்றாகத் தீரவில்லை. தேர்தலை பிற்போடுவதை நோக்காகக் கொண்டு, அரசியலரங்கில் மேற்கொள்ளப்படுகின்ற நகர்வுகள் அதற்குக் காரணமாகும்.
கிராமப்புறங்களில் வாக்கு வங்கி, தமக்கு இன்னும் பலமாக இருப்பதாக மொட்டு அணி கருதுகின்றது. ராஜபக்ஷர்கள் மீதான மக்கள் எதிர்ப்பை, உள்ளூராட்சி தேர்தலில் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தலாம் என எதிர்க்கட்சி கருதுகின்றது. ஐக்கிய தேசிய கட்சிக்கு இது ஒரு பிரச்சினையாக இருக்கும் எனக் கூற முடியாது.
ஏனெனில், அந்தக் கட்சியின் அரசியல் மிக சூட்சுமமான முறையில் திட்டமிட்டு வீழ்த்தப்பட்டு இருக்கின்றது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில், இப்போது ஜனாதிபதியாக இருக்கின்ற அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் கூட, மக்கள் வாக்குகளால் நேரடியாகத் தெரிவு செய்யப்பட முடியாமல் போனது என்பதே யதார்த்தமாகும்.
எனவே, இதுபற்றி அக்கட்சி பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டாது. இப்போதிருக்கின்ற அதிகாரங்களை வைத்துக் கொண்டு, போட்டியிடுவதன் மூலம் கிடைப்பதெல்லாம் அவர்களது இலாபக் கணக்கிலேயே சேரும். இழப்பதற்கு ஒன்றுமில்லை. மக்கள் விடுதலை முன்னணியும் உள்ளூராட்சித் தேர்தலின் பிரதான போட்டிக் களத்துக்கு வெளியிலேயே உள்ளது.
மாகாண சபைத் தேர்தலையும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும் இதற்கு முன்னரே நடத்தியிருக்க வேண்டும். இருப்பினும், நாம் முன்னைய பத்தியில் குறிப்பிட்டதைப் போல மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் அதன் மூலம் மாகாண சபைகளை உயிர்ப்பிக்கவும் ஆட்சியாளர்கள் விரும்பவில்லை.
எனவே, எந்தத் தேர்தலையும் நடத்தவில்லை என்று சர்வதேசம் மேலும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முன்னதாக, உள்ளூராட்சி தேர்தலையாவது நடத்த அரசாங்கம் முனைவதாகவே தெரிகின்றது.
ஜனநாயகத்தின் அடிநாதமான இறைமை மக்களிடம் உள்ளது. அதன் அடிப்படையில், மக்களுக்கான ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான ஓர் ஏற்பாடாகவே தேர்தல்கள் இடம்பெறுகின்றன.
ஆயினும், மக்களுக்கான ஜனநாயகம் என்பது தேர்தல் என்ற நிகழ்வோடு முடிந்து விடுகின்றதா? ஜனநாயகத்தின் உண்மையான எதிர்பார்ப்பு வாக்கெடுப்பு மட்டுந்தானா என்று, சிந்திக்க வேண்டிய கட்டத்தில் இலங்கை மக்கள் இருக்கின்றனர்.
தேர்தல்களின் மூலம் மக்களின் ஜனநாயகம் எந்தளவுக்கு சிறப்பாக பேணப்படுகின்றது? அதனை அரசியல்வாதிகள், வேட்பாளர்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பது நம்முன்னுள்ள முக்கியமான கேள்விகளாகும்.
உண்மையில். ஜனநாயகத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படும் அடைவுகள் எல்லாம், தேர்தல்களை நடத்துவதோடு மட்டும் முடிந்து விடுவதில்லை. மக்களுக்கான அரசியலை மக்கள் பிரதிநிதிகள் முன்னெடுப்பது உள்ளிட்ட பல விடயங்களுடன் தொடர்புபடுகின்றது. அப்படிச் செய்தால் மட்டுமே, அந்த ஜனநாயகம் அர்த்தமுள்ளதாகின்றது.
வெறுமனே நான்கு வருடங்களுக்கு ஒரு முறை உள்ளூராட்சி சபை தேர்தலையும் ஐந்தாண்டுக்கு ஒரு தடவை ஜனாதிபதி, பாராளுமன்றம் ஆகிய தேர்தல்களையும் நடத்தி விட்டால், ஒரு நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டு விட்டது என்று கருத முடியுமா என்பது ஆழமாகச் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவது என்பது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய உள்ளடக்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அதுவே முழுமையான உள்ளடக்கம் அல்ல. மக்களுக்கான ஜனநாயகம், தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் உறுதிப்படுத்தப்பட வேண்டியதாகும்.
இலங்கை சூழலில், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் முதல் எம்.பிக்கள் தொட்டு ஜனாதிபதி வரை அனைவரும் ஜனநாயகத்தின் திறவுகோலான தேர்தல் அல்லது ஏதோ ஓர் அடிப்படையிலான வாக்கெடுப்பின் ஊடாக அதிகாரத்துக்கு வருகின்றனர்.
ஆனால், அதற்குப் பிறகு அவர்களிடம் மாட்டிக் கொண்டு, அந்த ஜனநாயகம் படுகின்றபாடு சொல்லி மாளாது. எனவேதான், ஜனநாயகம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படுகின்ற பல காரியங்களில் மக்கள் மெதுமெதுவாக நம்பிக்கை இழந்து வருவதாகத் தெரிகின்றது.
இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடிச் சூழலில், தேர்தல் ஒன்றை எதிர்கொள்ளும் மனநிலையில் மக்கள் இருக்கின்றார்களா என்றால் ‘இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். ஜனநாயகம் பற்றிய எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருந்தாலும், யதார்த்தபூர்வமான நெருக்கடிகள் அவர்களை வேறு எதைப்பற்றியும் சிந்திக்க விடவில்லை.
இன்று, வீதியால் செல்கின்ற பொது மக்களை வழிமறித்து உங்களுக்கு தேர்தல் வேண்டுமா? அல்லது மூன்று வேளை நிம்மதியாகச் சாப்பிடுமளவுக்கு நெருடிக்கடியற்ற நிலை வேண்டுமா என்று கேட்டால், நிச்சயமாக 90 சதவீதத்துக்கும் அதிகமான மக்களின் விடை “எமக்கு சோறுதான் முக்கியம்” என்பதாகவே இருக்கும்.
இது தேர்தலுக்கு எதிரான கருத்தியல் அல்ல. இதுதான் நமது யதார்த்தமாகும்.
வயிறாற உண்ண வழியின்றி, வாழ்க்கைச் செலவுச் சுமையால், பிள்ளைகளைப் பராமரிக்க முடியாத கவலையுடன், வருமானத்துக்கான வழிகளைத் தேடி, இரவு பகலாக ஓடிக் கொண்டிருக்கின்ற இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு தேர்தல் நடப்பதால் அவர்களது நெருக்கடிகள் தீர்ந்து விடப் போவதில்லை.
அதைவிட முக்கியமாக, இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில் மனதை திடப்படுத்திக் கொண்டு, ஜனநாயகத்தின் வழிநின்று தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தால் கூட, அவர்களில் 99 சதவீதமானோர் அந்தப் பதவியை மக்கள் நலனுக்கான வழிகளில் பயன்படுத்தப் போவதும் இல்லை.
அப்படியான நல்ல அனுபவம் ஒன்று, கடந்த காலத்தில் மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதாலேயே பொதுவாக உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் முதல் எம்.பிக்கள் தொட்டு ஆட்சியாளர் வரை யாரிலும் நம்பிக்கையற்றவர்களாக இலங்கையர்கள் மாறியிருக்கின்றனர் என்பது முக்கியமானது.
எது எப்படியிருப்பினும், இவற்றையெல்லாம் சமாளித்துக் கொண்டு உள்ளூராட்சி தேர்தலை நடத்த வேண்டிய தேவைப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கின்றது. நாட்டில் ஒரு முறைமை மாற்றத்தை ஆரம்பித்து வைப்பதற்கான அடிமட்ட வாய்ப்பாகக் கூட இத்தேர்தல் அமையலாம்.
எனவேதான், இந்தப் பொருளாதார நெருக்கடி, டொலர் தட்டுப்பாட்டுக்கு மத்தியிலும், பெரும் பொருட் செலவில், பல அரசியல் குழப்பங்களுடன் தேர்தல் நடைபெறப் போகின்றது. அதன் பிறகு உள்ளூராட்சி சபைகளை நிர்வகிக்கவும் கணிசமான நிதி தேவையாகவுள்ளது.
வெறுமனே ஜனநாயக வழிமுறை என்ற கோட்பாட்டுக்காக மட்டும் தேர்தலை நடத்துவதும், அதன் ஊடாக தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் ஜனநாயகத்துக்கு எதிரான காரியங்களிலும் ஈடுபட்டு, மக்களது ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதும் இனியும் தொடரக் கூடாது.
தேர்தல்களை உரிய காலத்தில், சுயாதீனமாக, வன்முறைகள் இன்றி நடத்துவதாலோ, வாக்குகளின் தார்ப்பரியத்தை உணராது அத்தேர்தல்களில் மக்கள் கண்ணை மூடிக் கொண்டு வாக்களிப்பதாலோ, மக்களுக்கான உண்மையான ஜனநாயகம் நிலைபெறாது.
அதேபோல், மக்கள் நலனை மறந்து அல்லது ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடப் போகும் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான ஒரு கருவியாக, தேர்தல்கள் பயன்படுத்தப்படுவதையும் சகித்துக் கொண்டிருக்க முடியாது.
மக்கள் சோற்றுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், தேர்தல் ஒன்றினூடாக ஜனநாயகம் கொஞ்சமேனும் நிலைநாட்டப்படுமென்றால், அது எல்லோருக்கும் நல்லதுதான்.
ஆனால், அரசாங்கமும் மக்களும் இத்தனை தியாகங்களையும் மேற்கொண்டு ஒரு தேர்தலை நடத்துவது என்றால், அதில் ஓர் அர்த்தம் இருக்க வேண்டும். ஏனெனில், ஜனநாயகத்தின் உண்மையான நோக்கம் என்பது வாக்களிப்புடன் மட்டும் சம்பந்தப்பட்டதோ, வெற்றி தோல்வியுடன் மட்டும் முடிந்து விடுவதோ அல்ல!