தலாய் லாமாவை வரவேற்பதை கடுமையாக எதிர்க்கும் சீனா !! (கட்டுரை)
திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா, இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டும் என்ற வேண்டுகோள், இலங்கையில் உள்ள பௌத்தமதத் தலைவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
பௌத்த மதத்தின் பாராம்பரிய சிறப்புகள் மிகுந்த இலங்கையில் இருந்து இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
தலாய் லாமா இலங்கைக்கு வருகைத்தருவாராயின் அது இங்கு வாழும் பௌத்த மக்களுக்கு பெரும்பேறாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அதுமாதிரமன்றி, உலகில் பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்ற நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் மத மற்றும் பௌத்த கலாசார நல்லுறவுகளை வலுப்படுத்துவதற்கும் வாய்ப்பு ஏற்படுமென்று பௌத்தமதத் தலைவர்கள் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளன.
அது மட்டுமன்றி இலங்கையில் மதத்தலங்களைத் தரிசிப்பதற்காக வருகைதருகின்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை தலாய் லாமாவின் வருகையின் மூலம் இன்னுமின்னும் அதிகரித்துக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டுமென்று ராமாண்ய மகாசங்கத்தின் பிரதமகுரு மாஹூல்வேவே விமல தேரர் தலைமையிலான பிக்குகள் குழு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
தலாய் லாமா, இந்தியாவின் புத்தகாயாவுக்கு விஜயம் செய்திருந்தார். அவர் அங்கு சென்றதன் பின்னர், புத்தகாயாவுக்கு திருதல யாத்திரை செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அதனை கருத்தில் கொண்டே இலங்கை பௌத்த பிக்குகள், தலாய் லாமாவை இலங்கைக்கு வருகைதருமாறு அழைப்பு விடுத்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.
இலங்கை பொருளாதார ரீதியில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில், தலாய் லாமாவின் வருகையானது பொருளாதார ரீதியில் அனுகூலங்களை ஏற்படுத்தும். அத்துடன் இலங்கையில் வாழும் பௌத்தர்களுக்கு ஆன்மீக ரீதியில் பெரும் நன்மையளிப்பதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவின் புத்தகயாவுக்கு விஜயம் செய்திருந்த இலங்கையின் பிக்குகள் குழுவின் தலைவரே, தலாய் லாமா, இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். எனினும், அவரது வருகைக்கு சீனா கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இலங்கையின் பௌத்த பிக்குகள் விடுத்த கோரிக்கையை, தலாய் லாமா ஏற்றுக்கொண்டாரா அல்லது நிராகரித்துவிட்டாரா என்பது தொடர்பிலான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
இந்நிலையில், பௌத்த மதத்துக்கு எதிராக, சீன கம்யூனிஸ்ட் அரசு முயற்சித்து வருவதாக திபெத் பௌத்த ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா கருத்துத்தெரிவித்திருந்தார்.
சீன இராணுவம் திபெத் பூமியை 1949 இல் ஆக்கிரமித்திருந்தது. இதன்பின்னர் சீன இராணுவத்தின் பிடியில் இருந்து 1959 ஆம் ஆண்டு தப்பித்த தலாய் லாமாவும் அவரது ஆதரவாளர்களும் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். அன்றுமுதல், இந்தியாவின் இமாச்சல பிரதேச தர்மசாலாவில் தலாய் லாமா வசித்துவருகின்றார்.
இந்தியாவின் இமாச்சல மலைப்பிரதேச நாடுகளில் பௌத்த மதம் வியாபித்து பரவியுள்ளது. குறிப்பாக சீனாவின் மங்கோலியாவில் பௌத்த மதம் செழித்து வளர்ந்துள்ளது. ஆனால், பெளத்த மதத்தை சீன கம்யூனிஸ்ட் அரசு விஷமாகவே கருதுகின்றது. பௌத்த மதத்தை அழிப்பதற்கு தீவிர முயற்சிகளில் ஈடுபடுகின்றது. என்றாலும், அந்த மதத்தை அழிப்பதற்கு முடியவில்லை.
சீனாவை பொறுத்தவரையில், திபெத் மற்றும் சீனாவில் பௌத்தமத மடாலயங்கள் பலவற்றை அழித்துள்ளது.
‘பனி பூமி’ என்றழைக்கப்படும் திபெத் பல்வேறான துயரங்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கின்றது. திபெத்தின் துயரங்கள் காரணமாக ஒட்டுமொத்த உலகமும் பௌத்த மதத்தை அறிந்துகொண்டிருக்கின்றது. இலங்கைக்கு தலாய் லாமா வருகைதருவாராயின், இலங்கையை பற்றி அறிந்துகொள்ளாதவர்கள் கூட அறிந்துகொள்வார்கள் என்பது உண்மையாகும்.
இந்தியாவுக்கு சிறப்பு சலுகைகளுடன் வருகைதந்த தலாய் லாமாவை, இந்தியா தன்பிடிக்குள் வைத்திருப்பது சீனாவுக்குப் பிடிக்கவில்லை. அவர், இந்தியாவில் இருந்துகொண்டு தங்களுக்குத் தொல்லை தருகின்றார் என சீனா கருதுகின்றது. அதனால்தான், தலாய் லாமாவை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு சீனா விரும்புகின்றது.
தலாய் லாமாவின் பௌத்த மத நிறுவனம் 1,400 ஆண்டுகள் பழமையானவை. ஒவ்வொரு தலாய் லாமாவும் இறந்த பின்னர் அவர் மற்றொரு பிறவியில் லாமாவாக பிறப்பார் என்பது திபெத்தியர்களின் நம்பிக்கையாகும்.
தற்போதைய தலாய் லாமா 14ஆவது தலாய் லாமா ஆவர். இவருக்கு இப்போது 85 வயதாகிறது. இவர் மரணித்துவிட்டால். அவரது வாரிசை கண்டுப்பிடிப்பது பெளத்த மதத் துறவிகளான லாமாக்களின் பணியாகும்.
ஆனால், இந்த கண்டுப்பிடிக்கும் செயல்முறையைக் கட்டுப்படுத்த சீனா விரும்புகின்றது. தனக்கு இணக்கமான தலாய் லாமாவை நியமிக்கவும் சீனா விரும்புகின்றது. எனினும், அடுத்த தலாய் லாமா யார் என்பதை திபெத்தியர்களே தீர்மானிக்கவேண்டும் என்பதை அமெரிக்கா விரும்புகின்றது.
எனினும், தலாய் லாமாவின் இலங்கை விஜயம் இன்னுமே உறுதிப்படுத்தபடவில்லை. தலாய் லாமாவின் இலங்கை விஜயத்துக்கு சீனா கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றது.
இந்நிலையில், மல்வத்து மகாநாயக்க தேரரை கண்டியில் சந்தித்த கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஹூ வேய்,
திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவை எந்தவொரு வெளிநாடும் வரவேற்பதை சீன அரசாங்கமும் மக்களும் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தன்னை ஓர் எளிய பௌத்த துறவி என்று கூறிக்கொள்ளும் 14ஆவது தலாய் லாமா உண்மையில் ஓர் எளிய துறவி அல்ல என்றும் திபெத்தை சீனாவில் இருந்து பிரிக்க முயற்சித்து வரும் அவர், மதப் பிரமுகர் போல் மாறுவேடமிட்டு அரசியல் நாடு கடத்தப்பட்டவர் என்றும் ஹூ மகாநாயக்கரிடம் தெரிவித்தாக சீன தூதரகம் தனர் டுவிட்டரில் செவ்வாய்க்கிழமை (17) வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திபெத் தன்னாட்சிப் பகுதி உட்பட சீனாவின் அரசாங்கமும் மக்களும் தலாய் லாமாவை எந்தப் பெயரிலும் பெறுவதைக் கடுமையாக எதிர்க்கின்றனர் என்று மல்வத்து மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரிடம் கடந்த புதன்கிழமை (11) ஹூ வேய் குறிப்பிட்டுள்ளார் என சீன தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவும் இலங்கையும், திபெத் தொடர்பான பிரச்சினை உட்பட பரஸ்பரம் முக்கிய நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் ஒருவருக்கொருவர் உறுதியாக ஆதரவளித்து வருவதாக வலியுறுத்திய ஹு, இரு தரப்பினரும் குறிப்பாக பௌத்த சமூகங்கள் திபெத்திய சுதந்திரத்தை ஊக்குவிக்கவும், சீன-இலங்கை வரலாற்று உறவுகளை சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும் தலாய் லாமாவின் இலங்கைக்கான பயணத்தைத் தடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பல பிக்குகள் தலாய் லாமாவை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகக் கூறப்படும் வதந்தி தொடர்பில் கருத்துத் தெரிவித்த மகாநாயக்க தேரர், சீனா இலங்கையின் நெருங்கிய நண்பர் என வலியுறுத்தினார்.
சீனாவுடனான நமது உறவுகள் பாதிக்கப்படக் கூடாது என்றும் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சீனா வழங்கிய பங்களிப்பின் முக்கியத்துவத்தை அரசாங்கம் புரிந்து கொள்வது நல்லது என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையர்களாகிய நாம் சீனாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு நாங்கள் எப்போதும் கடன்பட்டுள்ளோம் எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து அதிகமான பிக்குகள் மற்றும் பிக்குனிகள் சீனாவுக்கு விஜயம் செய்ய முடியும் என்றும் மேலும் சீனாவில் இருந்து அதிகமான பக்தர்கள் இலங்கை மற்றும் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்ய முடியும் என தான் நம்புவதாகவும் மகாநாயக்கர் தெரிவித்ததாக சீன தூதரக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, புத்த கயாவில் பௌத்த ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவை இலங்கையின் உயர்மட்ட பௌத்த பிக்குகள் குழு கடந்த ஆண்டு டிசெம்பர் 27 திகதி சந்தித்தது. அதேபோன்று அன்றைய நாட்களில் புத்த கயாவில் பெரும் திரளான உள் நாட்டு வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.
தலாய் லாமா ஏன் இந்தியாவிற்கு வந்தார்? பெரும் திரளான பன்னாட்டு மக்களும் ஏன் இங்கு வருகின்றனர் போன்ற விடயங்கள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என ஸ்ரீ சம்புத்த சாஸனோதய சங்க சபை தலைவர் வணக்கத்திற்குரிய வஸ்கடுவ மகிந்தவங்ச மகாநாயக்க தேரர், தலாய் லாமாவை சந்தித்ததன் பின்னர் தெரிவித்திருந்தார்.
தலாய் லாமாவின் புனிதத்திற்கு இந்தியா உதவியது. இதன் காரணமாகவும் அவரது புனிதத்துவத்தின் பிரகாரமும் இன்று இந்தியாவிலும் புத்த கயாவிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். கடும் குளிர் மிக்க இந்த நாட்களில் பொதுவாக மக்கள் வருவதில்லை. ஆனால் தலாய் லாமாவின புனிதத்தால் மக்கள் வருகின்றார்கள். இதனால் புத்தகயா பல வழிகளில் பயனடைகிறது என குறிப்பிட்ட ஸ்ரீ சம்புத்த சாஸனோதய சங்க சபை தலைவர் வணக்கத்திற்குரிய வஸ்கடுவ மகிந்தவங்ச மகாநாயக்க தேரர், திபெத் பலன் பெற்றதா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என்றார்.
எனவே தான் தலாய் லாமா இலங்கைக்கு விஜயம் செய்வது அனைத்து வகையிலும் நாட்டிற்கு நல் வழிகளை காட்டும். குறிப்பாக இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கவும் தலாய் லாமாவின் விஜயம் உதவும் என இலங்கை பிக்குகள் குழு குறிப்பிட்டுள்ளது.
தலாய் லாமா புத்த கயாவிற்கு சென்றது போல் இலங்கைக்கும் வர வேண்டும். அவர் இலங்கைக்கு வந்தால் பல ஆயிரக்கணக்கான பன்னாட்டு பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் வருவார்கள். இது பொருளாதாரத்தை மேம்படுத்தும். ஏனெனில் இலங்கை நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளது. மேலும் அவர் இலங்கைக்கு வருவதால் நாங்கள் ஆசீர்வதிக்கப்படுவோம், பொருளாதாரமும் உயரும் எனவும் கூறினார்.
தலாய் லாமாவை சந்திப்பதற்கு இலங்கை ராமஞ்ஞ மகா நிகாயாவின் பிரதம பீடாதிபதி மகுலேவே விமல மகாநாயக்க உட்பட தேரர்களும் சென்றிருந்தனர். புனித தலாய் லாமா ஓர் ஆன்மீகத் தலைவர். அவரை அங்கு சந்தித்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். எங்களுக்கு ஆன்மீக செயல்பாடுகள் பற்றிய புரிதல் உள்ளது. எனவே, இலங்கையைச் சேர்ந்த மகாசங்கத்தினராகிய நாங்கள் அவரது புனிதத்துவத்தை கண்டு மகிழ்ச்சியடைந்ததாக ராமஞ்ஞ மகா நிகாயா கூறியது.
வண. அஸ்கிரி பீடத்தின் தேரர் முருத்தேனிய தம்மரதன தேரர் கூறுகையில், உண்மையில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், புத்தர் ஞானம் பெற்ற இடமான புத்தகயா எங்கள் தாய்நாடு போன்றது. எனவே தான் இங்கு அதிக தடவைகள் வருகிறோம். இது எனது முதல் முறையல்ல. பல முறை வந்துள்ளேன். தலாய் லாமாவிடம் ஆசி பெறுவதற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான லாமாக்கள் மற்றும் துறவிகள் வந்துள்ளனர். அவர்களையும் சந்திக்கும் அதிர்ஷ்டம் எங்களுக்கு கிடைத்தது என்றார்.
அவர் மேலும் கூறுகையில், நாங்கள் அங்கு ஆயிரக்கணக்கான மக்களைக் கண்டோம். குறிப்பாக தலாய் லாமாவின் உரையைக் கேட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். மறுப்புறம் அவருடைய போதனைகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்தோம். இந்த சந்தர்ப்பத்தை பெரும் அதிஷ;டமாகவே கருதுகிறோம் என்றார்.
இலங்கை 2022 இல் எதிர்கொண்ட நிதி நெருக்கடியிலிருந்து மீள முடியாது தீவு தேசத்தில் அரசியல் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இந்தியா வழங்கியது. இதனால் இலங்கையால் ஒரளவிற்கு மூச்சு விட முடிந்தது என பௌத்த தேரர்கள் குழு குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிற்கு வருகை தந்த உயர்மட்ட இலங்கை பௌத்த பிக்குகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்ததோடு, சவால்களை சமாளிக்க தங்கள் ஆன்மீகத் தலைவவரான தலாய் லாமாவை இலங்கைக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொண்டனர்.
எவ்வாறாயினும் திபெத்திய ஆன்மீக தலைவரான தலாய் லாமாவை இதற்கு முன்னரும். இலங்கைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் அரசியல் காரணங்களால் அது முடியாமல் போனது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவின் ஆதிக்கத்துக்கு உள்ளாகியிருந்தமையே இதற்கான காரணமாக சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தலாய் லாமாவின் இலங்கை விஜயம் குறித்து பேசப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் பாணகல்ல உபதிஸ்ஸ தேரரின் அழைப்பினை ஏற்றுக் கொண்ட திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவாரா என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.
அவரை ஆன்மீகத் தலைவராகப் பார்ப்பதா அல்லது அரசியல் தலைவராகப் பார்ப்பது என்பது தொடர்பிலும் மாறுபட்ட கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இலங்கை ஒரு அமைதியான பௌத்த நாடு என்பதால் தலாய் லாமாவும் அங்கு வரவேண்டும் என்று தாங்கள் அழைப்பு விடுத்துள்ளதாக இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் பாணகல்ல உபதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
கண்டி, அனுராதபுரம் செல்ல விருப்பினார்
ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வரும் போது, தலாய் லாமாவும் தமது நாட்டுக்கு வர வேண்டும் என்பது பௌத்தர்களின் விருப்பமாக உள்ளது என்று உபதிஸ்ஸ தேரர் கூறுகிறார்.
கடந்த 1950ம் ஆண்டு முதல் இலங்கைக்கு வரவேண்டும் எனும் ஆர்வம் தலாய் லாமாவிடம் இருந்தாலும், அதை நிறைவேற்ற அவர் எடுத்த முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை எனவும் உபதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
கண்டியிலுள்ள தலதா மாளிகை மற்றும் அனுராதபுரத்திலுள்ள புனிதமான அரச மரத்தை வழிபட வேண்டும் எனும் தனது ஆவலை தங்களிடம் தலாய் லாமா வெளிப்படுத்தியாக அவர் கூறுகிறார்.
அவரை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும் என தாங்கள் அரசிடம் கோரவுள்ளதாகவும், பௌத்த மதத் தலைவர்களுடனும் இது குறித்து பேசி வருவதாகவும் இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் கூறியிருந்தார்.
எனினும், திபெத்தின் புத்த மதத் தலைவர் தலாய்லாமாவின் வருகைக்கு, அன்றிருந்த இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்திருந்தது. அதற்கு சீனா வரவேற்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தலாய்லாமா எந்த நாட்டிற்கும் செல்வதற்கு, நாங்கள் எப்போதுமே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். அவர் குறித்த நிலைப்பாட்டில், தெளிவாக உள்ளோம். இதை, பல்வேறு தருணங்களிலும் வெளிப்படுத்தியுள்ளோம் என்று அன்றும் சீனா தெரிவித்திருந்தமை கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயங்களாகும்.