இரத்தக்கறை படிந்தவர்களோடு தன்னால் இணைய முடியாது – விக்கி!! (கட்டுரை)
“கைகளின் இரத்தக் கறை உள்ளவர்களுடன் என்னை என்னால் இணைத்துப் பார்க்க முடியாது; தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றில் இணைய வேண்டுமாக இருந்தால் தமிழரசுக் கட்சியில் இணைவேன்…” என்று சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்ற சில மாதங்களில் தெரிவித்த விடயம் பெரும் சர்ச்சையானது.
இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார். அப்போது, கூட்டமைப்பின் பேச்சாளராக ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரான சுரேஷ் பிரேமசந்திரன் இருந்தார். அவர், விக்னேஸ்வரனின் கூற்று, தமிழ் மக்களிள் கூட்டமைப்பிற்கு வழங்கிய ஆணையையும், ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, புளொட் உள்ளிட்ட கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளையும் அவமதிப்பதாகவும் கண்டனம் வெளியிட்டிருந்தார்.
முன்னாள் ஆயுதப் போராட்டங்கள் குறித்து, இரத்தக்கறை விமர்சனம் வெளியிட்ட விக்னேஸ்வரன், இப்போது ஜனநாயகப் போராளிகள் கட்சியினரை பார்த்து, அரச புலனாய்வாளர்களோடு தொடர்புகளைப் பேணுபவர்கள் என்று குற்றஞ்சாட்டி இருக்கிறார். அதனால், ஜனநாயகப் போராளிகள் அங்கம் வகிக்கும் தேர்தல் கூட்டில் தன்னால் இணைந்து கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து நின்று களம் காண்பது என்று தமிழரசுக் கட்சி முடிவு எடுத்தது. அதனால், கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தில் தொடர்ந்தும் போட்டியிட முடியாது என்கிற சிக்கல் டெலோவுக்கும் புளொட்டுக்கும் ஏற்பட்டிருக்கின்றது. அதனால், கூட்டமைப்பினர் தாங்களே என்ற கோரிக்கையோடு புதிய கூட்டொன்றை அமைத்திருக்கிறார்கள்.
இந்தக் கூட்டணி, புளொட்டின், இன்னொரு கட்சியான ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி என்கிற பெயரில் குத்து விளக்குச் சின்னத்தில் போட்டியிடப் போகின்றது. இந்தக் கூட்டுக்கான ஆரம்ப கட்டப் பேச்சுகளில் விக்னேஸ்வரன் இணைந்து கொண்டிருந்தார். அவர், புதிய கூட்டணியின் தலைமைத்துவமும், அதன் ஒட்டுமொத்த கையாளுகைக்கான அதிகாரம் தனக்கு கிடைக்கும் என்று நம்பினார். ஆனால், தமிழரசுக் கட்சி, கூட்டமைப்புக்குள் ஏக அதிகாரத்தோடு நடந்து கொண்டது போல, புதிய கூட்டணிக்குள் எந்தவொரு தரப்பும் நடந்து கொள்வதற்கு அனுமதிப்பதில்லை என்று டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிகள் தீர்மானித்தன.
அதனால், புதிய கூட்டணியில் விக்னேஸ்வரனுக்கு அதிகார இடம் கேள்விக்குள்ளானது. அதனால், அவர் புதிய கூட்டணியில் இணையவில்லை. இந்த நிலையில்தான், புதிய கூட்டணியில் ஏன் இணையவில்லை என்று ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போது விக்னேஸ்வரன், ஜனநாயகப் போராளிகளை அரச புலனாய்வர்கள் போன்றதொரு தோற்றப்பாட்டை வெளிப்படுத்தினார்.
விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய அரசியலுக்கு வந்து இந்த ஆண்டோடு பத்து வருடங்களாகின்றன. இந்தக் காலப்பகுதிக்குள் அவரை உச்சத்தில் ஏற்றிவிட்ட அனைத்துத் தரப்பினரையும் அவர் ஏமாற்றியிருக்கிறார். அதுவும், அந்தத் தரப்பினரை மிக மோசமாக குற்றச்சாட்டுகளை சுமத்தி விமர்சித்து, தன்னை நியாயமானவராக காட்ட முயற்சி செய்திருக்கிறார்.
விக்னேஸ்வரனை, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் எதிர்ப்புகளைச் சமாளித்து இரா.சம்பந்தனும் எம்.ஏ.சுமந்திரனும் வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக அரசியலுக்குள் அழைத்து வந்தார்கள். முதலமைச்சர் பதவி ஏற்றதும், விக்னேஸ்வரன் சம்பந்தனுக்கு நிகரான தலைவராக தன்னை எண்ணத் தொடங்கினார். சம்பந்தனின் காலத்துக்குப் பின்னர், அந்த இடம் தனக்குரியது; அதற்குத் தானே தகுதியானவன் என்று நம்பினார்.
தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்து சம்பந்தன் விலகும் போது, அந்தப் பதவி தனக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை மாவை சேனாதிராஜாவிடம் வழங்கிவிட்டு, கூட்டமைப்பின் தலைவராக மாத்திரம் இருக்கும் முடிவுக்கு சம்பந்தன் வந்தார். அதனை, விக்னேஸ்வரனால் ஏற்க முடியவில்லை.
அதுவரை காலமும் கூட்டமைப்பின் பொது (முதலமைச்சர்) வேட்பாளராக இருந்தாலும், விக்னேஸ்வரன், தன்னை தமிழரசுக் கட்சியோடுதான் இணைத்துப் பார்த்தார். அதனால்தான், இரத்தக்கறை படிந்தவர்களோடு தன்னால் இணைய முடியாது என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளை அவமதிக்கவும் செய்தார்.
தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் என்கிற விக்னேஸ்வரனின் எதிர்பார்ப்பு சாத்தியமாகாத புள்ளியில், அவர் கூட்டமைப்பு மீதான விமர்சனங்களை மெல்ல மெல்ல விடுக்கத் தொடங்கினார். இனியும் கூட்டமைப்புக்குள் இருந்தால் சம்பந்தனுக்கு நிகரான இடத்தை அடைய முடியாது என்கிற நிலையில், தனி ஓட்டத்துக்காக அவர் தயாரானார்.
அப்போதுதான் கூட்டமைப்புக்கு மாற்றான தலைமைத்துவம் தமிழ்த் தேசிய பரப்பில் உருவாக்கப்பட வேண்டும் என்கிற வேட்கையோடு இயங்கிய தரப்புகள், விக்னேஸ்வரனை அந்த இடத்தில் பொருத்திப் பார்க்க விரும்பின. அதனால் தமிழ் மக்கள் பேரவை என்கிற அமைப்பினை உருவாக்கினார்கள்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடங்கி கூட்டமைப்புக்கு மாற்றான தரப்புகளாக முன்னிறுத்திய பலரும் விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தை ஏற்பதாக அறிவித்து, 2015 பிற்பகுதியில் ஒன்றுகூடின. கிட்டத்தட்ட தான் சம்பந்தனுக்கு நிகரான தலைவராக உருவாகிவிட்டதாக விக்னேஸ்வரன் நம்பினார்.
பேரவைக்குள் இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சுரேஷ் பிரேமசந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட பிரசாரப் பயணத்தின் மூலம், ‘எழுக தமிழ்’ என்கிற பேரணிகள் ஊடாக, மாற்றுத் தலைமையாக தன்னை விக்னேஸ்ரன் முன்னிறுத்தினார். ஆனால், அப்போதும் அவர் வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பற்றிக் கொண்டிருந்தார்.
நல்லாட்சிக் காலத்தில் கிடைத்த ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்தி, தமிழ்த் தேசிய பரப்பில் பலமான மாற்றுத் தலைமைத்துவமொன்று கட்டமைக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால், அதனை யாழ் மையவதாக அரசியல் ஆய்வாளர்கள், புலமையாளர்களைக் கொண்ட தமிழ் மக்கள் பேரவை சிதைத்தது. இயல்பாக உருவாக வேண்டிய மாற்றுத் தலைமையை, அவசர அவசரமாக விக்னேஸ்வரனைக் கொண்டு நிரப்ப முயன்றது.
விக்னேஸ்வரன் அப்போதுதான் தமிழ்த் தேசிய அரசியலின் அரிச்சுவடியைப் படித்துக் கொண்டிருந்தார். அவரின் தலைமையில் மாற்றுத் தலைமை என்கிற பெரும் பாரம் ஏற்றப்பட்டது. அதற்கு, கஜேந்திரகுமாரும், சுரேஷும், த. சித்தார்த்தனும் துணையாக இருந்தார்கள். விக்னேஸ்வரனை பெருந்தலைவராக முன்னிறுத்தி நாளொரும் வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அரசியல் ஆய்வுகள் எழுதப்பட்டன; பெரும் பிம்பம் கட்டமைக்கப்பட்டது. ஆனால், மண் குதிரையை நம்பி பெரும் தடைகளைத் தாண்ட முடியாது என்று இந்தப் பத்தியாளர் உள்ளிட்ட சிலர் சுட்டிக்காட்டினார்கள். ஆனால், அப்போது அது கண்டுகொள்ளப்படவில்லை.
ஆனால், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்திலேயே விக்னேஸ்வரன் ஒரு மண் குதிரை என்பதும் பதவிகள் மீது பேராசை கொண்டவர் என்பதுவும் வெளிப்பட்டுவிட்டது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் விக்னேஸ்வரனை முன்னிறுத்திக் கொண்டு கஜேந்திரகுமார், சுரேஷ் உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய பரந்து பட்ட கூட்டணியை அமைக்க, தமிழ் மக்கள் பேரவை முயன்றது. ஆனால், அப்போது, விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவி மீதான பற்றால் அவற்றை நாசமாக்கினார். அதனால், பேரவை அமைக்க நினைத்த பரந்து பட்ட கூட்டணி சாத்தியமில்லாமல் போனது. அத்தோடு, பேரவைக்குள் அதுவரை அண்ணனும் தம்பியுமாக இயங்கிய சுரேஷும் கஜேந்திரகுமாரும் குடுமிப்பிடி சண்டை போட்டு பிரிந்து கொண்டார்கள்.
ஒரு கட்டம் வரையில் கூட்டமைப்பையே அச்சுறுத்தும் அளவுக்கு எழுந்து வந்த பேரவை, கலகலத்து காணாமற்போனது. விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக் காலம் முழுவதையும் பூர்த்தி செய்துவிட்டு, அடுத்த நாள் புதிய கட்சியைத் தொடங்கினார். அதுதான், தமிழ் மக்கள் பேரவையின் இறுதி நாள்.
கூட்டமைப்போடு முரண்பட்ட தரப்புகள், கடந்த பொதுத் தேர்தலில் விக்னேஸ்வரன் தலைமையில் கூட்டணி அமைத்தன. விக்னேஸ்வரனை வெற்றிபெறவும் வைத்தன. அத்தோடு, அந்தக் கூட்டணியும் கலைந்து போனது. இப்போது, விக்னேஸ்வரனோடு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் தரப்பு இணைந்து கொண்டிருக்கின்றது. அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு, மணிவண்ணனின் ஆதரவுத் தளம் தனக்கு உதவும் என்று விக்னேஸ்வரன் நினைக்கிறார். அதனால், தன்னை ஏக தலைவராக ஏற்றத் தயாராக இல்லாத, டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்பை அவர் உதறித் தள்ளியிருக்கிறார்.
விக்னேஸ்வரன் இருக்கிறார் என்று நம்பி தமிழரசுக் கட்சியை எரிச்சலூட்டிய டெலோவும் புளொட்டும், இப்போது கிட்டத்தட்ட நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு வந்துள்ளன. அவர்கள், தங்களை கூட்டமைப்பாக முன்னிறுத்தினாலும், அவர்களின் புதிய பாதையை மக்கள் அங்கிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. கடந்த காலத்தில் வீட்டுச் சின்னத்தில் பெற்ற வெற்றியை அடையும் வாய்ப்பில்லை.
தமிழ்த் தேசிய அரசியலில் விக்னேஸ்வரனை நம்பிக் கெட்டவர்கள் என்கிற அணியை அமைத்தால், அதற்குள் சம்பந்தன், சுமந்திரன் தொடக்கம் கஜேந்திரகுமார் ஈறாக, அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும், தரப்புகளும் அடங்குவார்கள் என்பது காலத்தின் பதிவு.