வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில்-11: அதிவலதின் நவீன போக்குகள்!! (கட்டுரை)
இருபத்தியோராம் நூற்றாண்டின் தீவிர வலதுசாரி இயக்கங்களின் சூழல், உள்ளடக்கம் ஆகிய இரண்டும், அவற்றின் மூதாதையர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவை. பாரம்பரிய பாசிசம் போன்ற முன்னோடி இயக்கங்களுடனான சின்னங்களின் எந்தவொரு தொடர்ச்சியும் அற்றனவாக, பெரும்பான்மையான அதிவலது அமைப்புகள் இயங்குகின்றன.
முன்னோரில் இருந்து வேறுபட்ட தந்திரோபாயங்கள், பிரசாரம், ஆட்சேர்ப்பு முயற்சிகள் போன்வற்றில் உள்ள ஆழமான வேறுபாடுகள், கணிப்பில் எடுக்கத் தக்கவை. சமகால தீவிர வலதுசாரி தீவிரவாதக் குழுக்கள், உண்மையில் பாரம்பரிய பாசிச அழகியலைப் போற்றுகின்றன; தங்கள் முன்னோரிடமிருந்து கடன் வாங்குகின்றன. இது அவர்களின் அணிதிரட்டல், மூலோபாயம் ஆகிய இரண்டிலும் ஆழமான மாற்றங்களை, பொதுவெளியில் மறைக்க உதவுகிறது.
20ஆம் நூற்றாண்டின் பாசிசத்தின் சித்தாந்தமானது, அரசு கைப்பற்றப்பட வேண்டும். அதனால் சமுதாயத்தை மறுசீரமைக்க முடியும் (குறிப்பாக, கம்யூனிசத்துக்கு எதிராக) என்பதாக இருந்தது. இதற்கு நேர்மாறாக, தற்கால தீவிர வலதுசாரிக் கோட்பாடானது, அவநம்பிக்கையை அல்லது, ஓர் ஆழமான குழப்பத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசுகளின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையற்ற ஊகக்கொள்கைகளில் அதீத நம்பிக்கையை ஏற்படுத்துவனவாக இவை மாறியிருக்கின்றன.
இன்றைய அதிவலதுசாரி என்பது, தனித்த ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் இயங்குவதில்லை. ஒருபுறம், ‘தலைமையற்ற எதிர்ப்பின்’ வழிப்பட்டு, தலைமையற்ற குழுக்களாக அதிவலதுசாரிகள் இயங்குகின்றனர்.
‘அதிமனிதர்’களாகத் தம்மை நினைத்துக் கொள்ளும் அதிவலதுசாரிகள், தலைமைக்குக் கட்டுப்பட்டு நடப்பது மிகவும் சிரமமானது என்கின்றனர். கட்டளைக்குக் கீழ்ப்படிதல் அவர்களது ‘ஈகோ’வைப் பாதிக்கும். எனவே, தலைமையற்ற நிலையிலேயே தற்போதைய பல அதிவலதுசாரிக் குழுக்கள் இயங்குகின்றன.
கடந்தகாலத்தில் அனைவரையும் கவர்கின்ற, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற தலைவனின் கீழ் அதிவலதுசாரிகள் ஒன்றுதிரண்டார்கள். ஹிட்லர், முசோலினி ஆகியோர் இவ்வாறான தலைவர்களாவர்.
இப்போது இன்னொருபுறம், தலைமையற்ற எதிர்ப்பானது பல சமயங்களில் ‘தனி ஓநாய்’ அணுகுமுறைக்கு வழிகோலுகிறது. இதனாலேயே பல தனிமனித தீவிர செயல்கள் அரங்கேறுகின்றன.
இதன் அண்மைய உதாரணம், பிரான்ஸின் குர்திஷ்கள் மீதான தனிமனிதன் மேற்கொண்ட பயங்கரவாதம் ஆகும். இது, தீவிர வலதுசாரி தீவிரவாதிகளிடையே, பிரபலமான ஒரு போக்காக கடந்த பத்தாண்டுகளில் உருவெடுத்துள்ளது. இப்போக்கானது, அதிவலதுசாரித்துவத்தில் நிறுவன கட்டமைப்பின் பொருத்தம் பற்றிய வினாக்களை எழுப்பியுள்ளது.
இன்று, தீவிர வலதுசாரிகளின் வேறுபட்ட கூறுகளை ஒன்றிணைப்பது முடுக்கவாதம் (Accelerationism) என்ற கருத்துருவாக்கமாகும். இது ஒரு வன்முறை தீவிரவாத மூலோபாயம் ஆகும். அதாவது, மீண்டும் மீண்டும் தீவிர வன்முறைச் செயல்கள் மூலம், தற்போதைய அரசாங்க அமைப்புகளின் வீழ்ச்சியைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முடுக்கம் என்பது ஒரு தந்திரோபாயக் கோட்பாடாகும். இது, ஒரு இறுதி இலக்காக உயர்த்தப்படுகிறது; அது கவிழும் வரை அரசின் கப்பலை உலுக்குகிறது. அனைத்து எதிர்கால சாத்தியக்கூறுகளையும் மாயமாகத் திறக்க வேண்டிய பொது நெருக்கடியைத் தூண்டுவதே இதன் நோக்கம்.
இவ்வாறு உள்நாட்டுப் போர்கள், பெரும் ஆழ்ந்த உணர்ச்சித் தூய்மையின் கற்பனைகளாகச் செயற்படுகின்றன. ஆனால், இந்தத் திருப்திகரமான மோதலுக்குப் பிறகு என்ன வருகிறது என்பது தெளிவாக இல்லை; அல்லது, மாறாக, அது தனிப்பட்ட இரசனைக்கு திறந்து விடப்படுகிறது, இந்த அதிவலதுசாரித்துவத்தின் நிலைப்பாட்டில் பலர் உள்ளனர்.
முடுக்கவாதம் என்பது, உலகளாவிய வெள்ளை மேலாதிக்க தீவிரவாத இயக்கத்தில், புழக்கத்தில் உள்ள மிகவும் உள்ளார்ந்த வன்முறை மற்றும் ஆபத்தான கருத்தியல் ஆகும். தற்போதைய அரசாங்க அமைப்புகளின் வீழ்ச்சியைக் கொண்டு வருவதன் மூலம், வெள்ளை அதிகாரத்தை அடைவதற்கான ஒரே பாதையாக இருப்பதால், இனப்போர் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல; விரும்பத்தக்கது என்று முடுக்கவாதிகள் நம்புகிறார்கள்.
2022ஆம் ஆண்டில், முடுக்கவாதிகள் இணையத்தில் இணையலாம்; சமூக ஊடகத் தளங்களில் சந்திக்கலாம் என்றிருக்கிறது. அதிவலதுசாரிகள் சமீப வரலாற்றில் எந்தக் கட்டத்திலும் உள்ளடக்கப்பட்டதை விடவும், மிக அதிகமாக இணையத்தில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
கொரோனா வைரஸின் பரவலால், உலகம் முடங்கியிருந்த நிலையில், அதிவலதுசாரிகளில் ஒருபகுதியினர், உலகளாவிய தொற்றுநோயை தங்கள் பிரசாரத்தையும் சித்தாந்தத்தையும் தள்ளுவதற்கும், தங்களின் உணர்ந்த எதிரிகளைத் தாக்குவதற்கும் ஒரு வாய்ப்பாக வரவேற்றுள்ளனர்.
வெள்ளை மேலாதிக்க தீவிரவாதிகள் இந்தத் தொற்றுநோயை, இயக்கத்தின் பல நம்பிக்கைகளை உறுதிப்படுத்துவதாகவும் அவர்களின் வன்முறை நோக்கங்களைத் தொடர ஒரு வாய்ப்பாகவும் பார்க்கிறார்கள். ஏனெனில் பொருளாதாரம், குடியேற்றம், எதிர்காலத்தில் நிச்சயமற்ற தன்மையுடன் தொடர்புடைய கவலையை ‘வைரஸ்’ தூண்டுகிறது.
இந்தக் கூட்டில், இனவெறியர்களை மட்டுமல்ல; சதிக் கோட்பாட்டாளர்கள், கம்யூனிச எதிர்ப்பாளர்கள், அரசாங்க எதிர்ப்பாளர்கள், மாற்றுப்பாலினத்தாரை வெறுப்போர் என அனைவரையும் இணைத்துத் தமது கூடாரத்தை விரிவுபடுத்துகின்றனர். இதனால் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பாசிச பேரணிகளில் இருந்த கூட்டத்தைப் போலவே, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் விரக்தியடைந்த தனிநபர்கள், தங்களை ஏதோ பெரிய அமைப்பின் பகுதியாக உணர முடியும்.
100 ஆண்டுகளுக்கு முன்பு போலல்லாமல், தனிப்பட்ட ஒழுக்கம் அல்லது உயரதிகாரிக்கு அடிபணிதல் ஆகியவற்றின் தேவை மிகக் குறைவாகவே உள்ளது. இந்தக் கட்டமைப்பு முறை, அதிவலது நபர்களுக்கு உவப்பானது; எனவே இது செல்வாக்குள்ளாதாக இருக்கிறது.
இன்றைய அதிவலசாரித்துவதின் போக்குகளை ஐந்து அடிப்படைகளில் நோக்க முடியும். இவை, அடிப்படையில் மேற்கத்தைய அதிவலதுசாரித்துவத்தின் போக்குகளாக இருந்தபோதும் இவை, பல ஆசிய, ஆபிரிக்க, இலத்தீனமெரிக்க அதிவலதுசாரிகளின் நடத்தைகளுக்கும் பொருந்தி வருகின்றன.
முதலாவதாக, அண்மைய அதிவலதுசாரிகளின் தாக்குதல்கள், பயங்கரவாதம், வன்முறை தீவிரவாதத்தை ஊக்குவிப்பது தனித்த சித்தாந்தமல்ல என்பதையும் பல்வேறு சித்தாந்தங்களை அதிவலதுசாரிகள் பிரதிபலிக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக, சலாபி-ஜிஹாதிசம், அல்-கொய்தா, இஸ்லாமிய அரசு போன்ற குழுக்களை எதிர்த்துப் போராடுவதற்கு வளங்களை அர்ப்பணிப்பதாக இருந்தபோதிலும், தற்போதைய அதிவலதுசாரித்துவத்தின் பயங்கரவாத நிலப்பரப்பு மிகவும் மாறுபட்டது.
ஆபிரிக்க அமெரிக்கர்கள் மீது ஆழமான வெறுப்பு, ஆசிய குடியேற்றவாசிகள் மீதான பகை, யூத எதிர்ப்பு போன்ற அச்சுறுத்தல்களை உள்ளடக்கிய தப்பெண்ணங்கள் என பல்வகைப்பட்டதாக அதிவலதுசாரித்துவ சித்தாத்தங்கள் உள்ளன.
இரண்டாவதாக, அதிவலது தீவிரவாதம் பரவலாக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியவர் ‘தனி ஓநாய்’ என்று அழைக்கப்படுவார். அவர் எந்த வெளிப்புற உதவியும் தூண்டுதலும் இல்லாமல் சொந்தமாகச் செயற்பட்டார். ‘தனி ஓநாய்’ என்ற வார்த்தையே தவறான பெயராக இருந்தாலும், பொலிஸாருக்கும் உளவுத்துறை நிறுவனங்களுக்கும் இப்படிப்பட்ட தனி ஓநாய்களைக் கண்டறிவது கடினம்.
ஒரு தாக்குதல் நடத்துபவர் இணையத்தில் தீவிரவாத பிரசாரத்துக்கு ஆளான பிறகு, தீவிரமான ஒரு பரந்த சுற்றுச்சூழல் அமைப்பிலிருந்து வெளிவருகிறார். எனவே, இப்படியானவர்களின் பயங்கரவாதச் செயல்களை முன்கூட்டியே எதிர்வுகூறுவது சிக்கலானது.
மூன்றாவதாக, இன்றைய காலப்பகுதி, பயங்கரவாதத்தின் ஜனநாயகமயமாக்கலுக்கு வழிசெய்துள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கடந்த தசாப்தத்தில் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதற்கான தடைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. இன்று, இணைய இணைப்பு, திறன்பேசி, ஆயுதங்களுக்கான அணுகல் என்பன இலகுவாகியுள்ளன. இதனால் வன்முறையும் வன்முறைக்கான வாய்ப்புகளும் ஜனநாயகமாய் உள்ளன.
நான்காவதாக, அதிவலதுசாரிகள் தவறான தகவல்களால், பல வழிகளில் தூண்டப்படுகின்றார்கள். தகவல்திரிப்பும், தவறான தகவல்களும் அதிவலதின் முக்கிய ஆயுதங்களாக உள்ளன. ஒரு பொய்யை மையமாக வைத்து, ஆதரவு திரட்டுவதும் வன்முறைக்குத் தூண்டுவதும் இலகுவானதாயுள்ளது.
தவறான தகவல், இணையத்தில் எப்போதும் வாழ்கிறது. அது பயங்கரவாத அறிக்கைகளில் பொதிந்துள்ளது, மேலும், வன்முறை தீவிரவாத சித்தாந்தங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் ஆதரவாளர்களால் அனுப்பப்படுகிறது. எனவே, அதிவலதுசாரித்துவத்தின் ஆதரவுத்தளத்தின் அடிப்படைக் கருவிகளில் ஒன்றாக, தவறான தகவல்களும் தகவல்திரிப்புகளும் பொய்களும் மாறியுள்ளன.
ஐந்தாவதாக, அரசுகள் இன்று அதிவலசாரித்துவத்தை முன்னிலைப்படுத்தும் முக்கிய அரங்காடிகளாக உருமாறியுள்ளன. இரண்டு தசாப்தங்களாக பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரைத் தொடர்ந்து, பல மேற்கத்திய நாடுகள் இப்போது பெரும் அதிகாரப் போட்டியை நோக்கிச் செல்கின்றன.
இன்று அரசுகள் நேரடியாகவே அதிவலதுசாரித்துவ பயங்கரவாதம் அதிகரிப்புக்கு ஆதரவளிக்கின்றன. இது கெடுபிடிப்போரின் போது நடத்தப்பட்ட மறைமுக மோதல்களுக்கு ஒப்பானது. மொத்தத்தில் அதிவலசாரித்துவத்தின் செல்வாக்கு அதிகரிப்புக்கு, தேச அரசுகளே முக்கிய காரணகர்த்தாக்களாக உள்ளன.