ரணிலும், 13ஆம் திருத்தமும், இனப்பிரச்சினைக்கான தீர்வும்!! (கட்டுரை)
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலான சர்வகட்சி மாநாட்டின் அடுத்தபடியாக, கடந்த வாரம், ஜனவரி 26ஆம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சர்வகட்சி மாநாடு கூடியது. இதில் பலவிடயங்களை தனது பேச்சிலும் பதிலளிப்புகளிலும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அவற்றிலிருந்து ஜனாதிபதி ரணிலின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான எண்ணம் பற்றிய மேலதிக தௌிவு புலப்படுகிறது.
குறித்த சர்வகட்சி மாநாட்டில், ஜனாதிபதி ரணில், பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டிருந்தமை, இங்கு கவனிக்கத்தக்கது:
“அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்படவேண்டும் அல்லது பாராளுமன்றம் 13ஆம் திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும். தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவது என்பது நிர்வாகத்துறைத் தலைவர் என்ற முறையில் எனது பொறுப்பு.
37 ஆண்டுகளாக, 13ஆம் திருத்தம், அரசியலமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது. தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், 13ஆம் திருத்தத்தை இல்லாதொழிக்க தனிப்பட்ட சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தமாக முன்வைக்கலாம். சபையில் பெரும்பான்மையினர் குறித்த சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்தால், 13ஆம் திருத்தத்தை நான் முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஒன்றில் அரசியலமைப்பை நான் முழுமையாக செயல்படுத்த வேண்டும் அல்லது பாராளுமன்றம் 13ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும். 13ஆவது திருத்தச் சட்டத்தை அமல்படுத்தவும் மாட்டோம்; அதேவேளை இல்லாது ஒழிக்கவும் மாட்டோம் என்று நடுநிலையில் இருக்க முடியாது.
13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் நான் செயற்படுகின்றேன். அதைக் கடைப்பிடித்தால், நாம் ‘ஒன்றுபட்ட’ அரசாக இருக்கிறோம் என்று சொல்லலாம். நான் சமஷ்டி அரசை எதிர்க்கிறேன்; ஆனால், அதிகாரப் பகிர்வை அல்ல. இலங்கையில் உள்ள மாகாண சபைகளுக்கு லண்டன் நகர சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் கூட இல்லை. எனவே, இதை ஒரு சமஷ்டி அரசு என்று வரையறுக்க முடியாது. மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன, இலங்கையை ஒரு சமஷ்டி நாடாக மாற்றக்கூடாது என சட்டத்தரணிகளுடன் இணைந்து பல சரத்துகளை அறிமுகப்படுத்தினார். இதுவரை, ஒவ்வொரு ஜனாதிபதியும் இதை செயற்படுத்த முடிவு செய்துள்ளனர். எனவே, நாம் 13ஆம் திருத்தத்தை அகற்ற வேண்டும் அல்லது அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
காணி ஆணையம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். இது தொடர்பான சட்டமூலம் மார்ச் மாதத்துக்குள் முன்மொழியப்படலாம். ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் ஒன்பது பிரதிநிதிகள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் 12 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அரசியலமைப்பு கூறுகிறது. பின்னர் தேசிய காணிக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். அதன் பின்னர் தேசிய காணி கொள்கையை, காணி ஆணைக்குழுவால் செயற்படுத்த முடியும்.
மாகாண பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதிலாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால், அதற்குரிய சட்டத்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இருப்பினும், நாம் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள், பெப்ரவரி எட்டாம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மேலும் ஏதேனும் ஆலோசனைகள் இருப்பின் அவற்றை பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர் செய்து அவற்றை பரிசீலித்து பெப்ரவரி எட்டாம் திகதி சமர்ப்பிக்கலாம்.
இங்கிருப்பவர்களோ நானோ, எங்கள் நாட்டைப் பிரிக்கத் தயாராக இல்லை. இங்கு அமர்ந்திருக்கும் நாம் அனைவரும் சிங்களவர்கள். இந்த நபர்கள் சிங்களவர்களுக்கு துரோகம் செய்ய மாட்டார்கள். சிங்களவர்கள் இருப்பார்களேயானால், அவர்கள் தமிழர்கள், முஸ்லிம்கள், பர்கர்கள் போன்ற பிற இனத்தவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். நமது தேசிய கீதத்தில் ‘ஒரு கருணை அனைபயந்த எழில்கொள் சேய்கள்’ (ஒரு தாயின் குழந்தைகள்) என்ற வரியில் உள்ள கருத்தை நாம் பாதுகாத்தால், நாம் ஒற்றுமையாக முன்னேற முடியும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு ஒருபடியாக ஒருமித்த அடிப்படையிலான தீர்வை நோக்கிச் செயல்படுவோம். நமது அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் படிப்படியாகத் தீர்ப்போம். இந்தப் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளாமல் முன்பு ஒப்புக்கொண்டபடி செயற்படுவோம். நாங்கள் யாருக்கும் துரோகம் இழைக்கவோ, நாட்டை பிரிக்கவோ இல்லை. இன்று நாடு ஒன்றுபட்டுள்ளது” என்றும் கூறியிருந்தார்.
ஜனாதிபதி ரணிலின் மேற்சொன்ன பேச்சிலிருந்து சில விஷயங்கள் தௌிவாகின்றன.
முதலாவது, இனப்பிரச்சினைக்கான உடனடித்தீர்வு என்பது 13ஆம் திருத்தத்தின் அமல்படுத்தல் என்பதுதான்.
இரண்டாவது, சமஷ்டி என்பது இன்னும் ‘தீண்டத்தகாததாகவே’ பார்க்கப்படுகிறது.
மூன்றாவது, காணி, பொலிஸ் அதிகாரங்கள் 13ஆம் திருத்தத்தின் அமலாக்கலின் பின்னும் கூட, மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் தொடரும்.
நான்காவது, 37 வருடங்களுக்கும் அதிகமாக அரசியலமைப்பில் இருக்கின்ற குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டை முழுமையாக அமல்படுத்துவதற்கே, “நானும் சிங்களவன் தான்; நான் நாட்டைக் காட்டிக்கொடுக்கமாட்டேன்; நானும் சமஷ்டியை எதிர்க்கிறேன்; நாம் ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும்” என ஒரு நாட்டின் ஜனாதிபதி பேரினவாதிகளுக்கு, குழந்தை ஒன்றுக்குச் சாக்குப் போக்குச் சொல்வதுபோல சொல்லவேண்டியிருப்பது, இந்நாட்டில் இன்னும் பேரினவாதமும், இனவெறியும் தொடர்ந்தும் பலமாகவே இருக்கிறது என்பதைத்தான் உணர்த்தி நிற்கின்றன.
அதிகாரப்பகிர்வு விடயத்தில் 13ஆம் என்பது எவ்வளவுதூரம் அர்த்தமற்றது என்பதற்கு “இலங்கையில் உள்ள மாகாண சபைகளுக்கு இலண்டன் நகர சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் கூட இல்லை” என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றே போதுமானது.
அத்தகைய மாகாண சபை முறைமையைக் கூட முழுமையாக அமல்படுத்தத் தயங்கும் பேரினவாதிகளைக் கொண்ட நாட்டில், ‘சமஷ்டி’ கோரிக்கை உடனடியாகவோ, வெகுசிலகாலத்திலோ நிறைவேறும் என்று தமிழ்த் தேசிய கட்சிகள், தமிழ் மக்களிடம் வெற்றுக் கனவை விதைப்பதில் அர்த்தமில்லை. தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில், இது ஒரு முட்டுச்சந்தில் முட்டி நிற்கும் நிலை. 13ஆம் திருத்தம் தான் தீர்வு என்பது, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பெரும் ஏமாற்றமே!
இன்று ஆட்சியிலுள்ள அரசாங்கங்களுக்கு மாற்றாக, தன்னை முன்னிறுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியோ ஜே.வி.பியோ கூட, அதிகாரப்பகிர்வொன்றை வழங்கப்போவதில்லை. அதைப் பற்றி அவர்கள் பேசுவது என்ன? மூச்சுக்கூட விடுவதில்லை. அது அவர்கள் வாக்கு வங்கியைப் பாதிக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். அப்படியானால், தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலம்தான் என்ன என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்த் தேசிய அரசியல், ‘பூகோள அரசியலால்’ எதையாவது சாதிக்கலாம் என்று சொல்லலாம். ஆனால், அது எப்படியென்பதை அது ஒரு போதும் சொன்னதில்லை. அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்து, புரிந்த இரகசியம். 13ஐத் தாண்டிய தீர்வொன்றுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவை இந்தியாவுக்குக் கிடையாது. இந்தியாவுக்குள் எழுந்திருக்கிற அதிகாரப்பகிர்வு தொடர்பான வாதப்பிரதிவாதங்களை அவதானிக்கிற போது, இலங்கையில் அதிகரித்த அதிகாரப்பகிர்வினை இந்தியா ஆதரிப்பதானது, இந்தியாவின் உள்நாட்டு அதிகாரப்பகிர்வு பிரச்சினைகளை அதிகரிப்பதாகவே அமையும். எனவே, இந்தியா அதைச் செய்யப்போவதில்லை, மற்றைய நாடுகள் இலங்கையில் தலையிட்டு அதைச் செய்யவைப்பதற்கும் இடமளிக்கப்போவதில்லை.
சீனா, இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் தலையிடுவதேயில்லை. இங்கு, அமெரிக்காவும், மேற்கும்தான் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் நம்பும் பூகோள அரசியல் மாயமந்திரம் என்றால், இன்றைய சூழலில் அவை எவ்வளவு தூரம் அதிகாரப்பகிர்வுக்கு இலங்கை மீது அழுத்தம் வழங்கும் என்பது சந்தேகமே!
மஹிந்த, கோட்டா, சுனில் ரட்நாயக்க, நேவி சம்பத் மீதான கனடாவின் தடை போன்ற சில அடையாள நடவடிக்கைகளை புலம்பெயர் தமிழ் சமூகம், மேற்கில் தமக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திச் செய்யலாமேயன்றி, உடனடியாக, இன்றைய உலக அரசியல் ஒழுங்கு மற்றும் நிலைவரத்தை வைத்துப்பார்க்கையில், அதிகாரப்பகிர்வு தொடர்பில் இலங்கையைக் கட்டாயப்படுத்த முடியாத நிலைதான் இருக்கிறது.
ஆகவே, இன்று தமிழ்த் தேசிய அரசியல் முன்னால் ஒரு பெரிய சவால் காத்திருக்கிறது. ஒன்றில் 13ஐ இறுகப் பிடித்து, உள்ளதை வைத்து தமிழ்த் தேசத்தின் நலனை தம்மாலியன்றளவுக்கு முன்னேற்ற முயல்கின்ற, அரசியலை முயலலாம். அதற்கு ஆட்சித்திறன் மிக்கவர்கள் தேவை; அல்லது வழமைபோலவே பகட்டாரவாரக் கோரிக்கைகளை முன்வைத்துக்கொண்டிருக்கும், போராட்டம், பேரணி, கறுப்புக்கொடி என உணர்வெழுச்சி அரசியலை தொடர்ந்து முன்னெடுக்கலாம். அதற்கு இப்போதுள்ளவர்களே போதும்!