;
Athirady Tamil News

‘இது நடக்குமா, சாத்தியமா?’ !! (கட்டுரை)

0

இப்போது யார் யாரை சந்தித்தாலும் அவர்களை அறியாமலேயே முதலில் கேட்கும் கேள்விதான் ‘நடக்குமா’ என்பது. தேர்தல் பற்றிய இந்தக் கேள்வி, அவர்களை அறியாமலேயே முன்னே வந்து விழுகின்றது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து, திகதியும் அறிவிக்கப்பட்டு விட்டாலும் மக்கள் மனங்களில் மட்டுமன்றி வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள் மனங்களிலும் ‘திட்டமிட்டபடி’ வாக்கெடுப்பு நடக்குமா என்பதில் இன்னும் சந்தேகம் இருக்கவே செய்கின்றது.

நாடு பெரும் பொருளாதாரப் பின்னடைவை எதிர்கொண்டுள்ளதுடன், ஒவ்வொரு குடும்பத்திலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, தேர்தல் ஒன்றை மக்கள் வேண்டி நின்ற காலம் போல, இக்காலம் இல்லை என்பதே நிதர்சனமாகும்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக நமது ஆட்சியாளர்கள், தம்முடைய வெற்றிகளும் எதிர்கால அரசியல் இருப்பும்தான் நிலைப்பாடாகக் கொண்டு அலைகிறார்கள்.
ஒரு ஜோசியக்காரன், இனவாதிக்கு இருக்கின்ற செல்வாக்கின் அளவுக்குக் கூட, மக்கள் நலனோ நாட்டு நலனோ அவர்களது இறுதித் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தவில்லை என்பதையே கடந்த காலங்களில் கண்டிருக்கின்றோம்.

இதையெல்லாம் தாண்டி, இப்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. வாக்களிப்பு சீட்டுகள் அச்சிடும் கட்டம் வரை, இந்தச் செயன்முறை வந்த பிறகும், மார்ச் ஒன்பதில் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் இன்னும் முழுமையாகத் தீரவில்லை.

மக்களைப் பொறுத்தமட்டில், ‘இது நடக்குமா, சாத்தியமா?’ என்ற கேள்வி வெறுமனே தேர்தலுடன் மட்டும் தொடர்புபட்டதல்ல; நாட்டில் இடம்பெறுகின்ற பல விவகாரங்கள் தொடர்பில், இவ்வாறான கேள்விகள் மக்கள் மனங்களில் இருக்கவே செய்கின்றன.

‘நடக்குமா?’ என்ற வினா, சில நேரங்களில் ஒரு சந்தேகமாகவும், சிலபோதுகளில் ஓர் ஏக்கமாகவும் சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல் முன்வைக்கப்படுவதாகச் சொல்லலாம்.

குறிப்பாக, இந்த நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றமும், கட்டமைப்பு முறைமை மாற்றமும் நடக்குமா என்ற கேள்வி, மக்களிடம் நீண்டகாலமாக இருக்கின்றது. மக்களை உண்மையாக நேசிக்கும், ஊழலற்ற ஆட்சியாளர்கள் எப்போது உருவாகுவார்கள் என்ற ஏக்கம், மக்கள் மனங்களில் உள்ளது.

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகள் எப்போது தீரும்? அது மிகக் கிட்டிய காலத்தில் நடப்பது சாத்தியமா? நமது பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகப் போகின்றது போன்ற கேள்விகள் ஒவ்வொரு குடும்பத் தலைவனிடமும் தலைவியிடமும் உள்ளன.

அப்பாவி மக்களின் தவறுகளுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வேகத்தில், பெரும் ஊழல்வாதிகள், நாட்டைக் கொள்ளையடித்தவர்கள், அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்கள், இனவாதிகள் போன்ற தரப்பினருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படாதது ஏன் என்ற கேள்வி மக்களிடத்தில் இன்னுமிருக்கின்றது.

நிகழ்காலத்தை எடுத்துக் கொண்டால், பொதுப் பயன்பாட்டுச் சேவைகளை நிர்வகிப்பதற்காக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு என்ற ஒன்றை நிறுவிவிட்டு, மின்சார சபை மற்றும் அரசியல்வாதிகள் ஆணைக்குழுவின் அறிவுரைகளை அதனது அறிவுறுத்தல்களை புறக்கணித்துச் செயற்படுவது ஏன் என்ற கேள்வி உள்ளது.

உயர்தரப் பரீட்சை நடந்து கொண்டிருக்கும் காலத்தில் கூட, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் புறக்கணித்து அரச கட்டமைப்பு செயற்படுவது எந்த அடிப்படையில் நியாயம் எனத் தெரியவில்லை. இப்படி உலகில் வேறெங்கும் நடக்குமா என்றும் தெரியவில்லை.

இவ்வாறு ஓர் ஆணைக்குழுவை அரச கட்டமைப்பே புறக்கணித்துச் செயற்படுமானால், நாட்டு மக்கள் சட்டத்தை, அதிகாரிகளை, ஒழுங்குவிதிகளை மதித்து நடப்பார்களா?

மத்திய வங்கி கொள்ளை உள்ளடங்கலாக பெரிய திருடர்கள், ஊழல் பெருஞ்சாளிகள் தப்பித்துக் கொள்வார்கள் என்றால், பசிக்காக தேங்காய் திருடும் ஒருவனின் விடயத்தில் எவ்வாறு சட்டத்தை நிலைநாட்ட முடியும்? சாதாரண மக்கள் சட்டத்தை மதிப்பார்கள் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

இவ்வாறு விடை தெரியாத அநேக கேள்விகள், மக்கள் மனங்களில் இருந்தாலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி முதன்மையானதும் முக்கியமானதும் ஆகும்.

இங்கு நன்றாக கவனிக்க வேண்டிய சொல் ‘திட்டமிட்டபடி’ என்பதாகும். அதாவது, ஆட்சியாளர்கள், அதிகார தரப்பினர் உள்ளடங்கலாக நாட்டின் ஆளுகையை தீர்மானிக்கும் வர்க்கம், மனதில் வைத்துள்ள ‘திட்டம்’ என்ன என்பதுதான் இங்கு முக்கியமாகும்.

நமக்குச் சொல்லப்பட்ட திட்டம்தான் அவர்களது உள்மனங்களில் உள்ள திட்டமா, இரண்டும் வெவ்வேறு திட்டங்களா, திட்டம் ஏ, திட்டம் பி என திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கு விடை தெரிந்தால், தேர்தல் மார்ச் ஒன்பதாம் திகதி நடக்குமா என்பது சுலபாக தெரிந்து விடும்.

இந்தச் சூழ்நிலையிலும் தேர்தல் நடக்குமா என்ற கேள்வி, மக்கள் மனங்களில் இருப்பதற்கும், நடக்கும், நடக்காது என எல்லோரும் ஆளுக்கொரு விதமாக இவ்விடயத்தைப் பேசிக் கொள்வதற்கும் பல விவகாரங்கள் காரணமாகியுள்ளன.

முதலாவது, வெளிப்படையாகக் காணப்படும் பொருளாதார நெருக்கடி. அதாவது, இப்போதிருக்கின்ற இக்கட்டான நிலையில், தேர்தலை நடத்துவதற்கும் அதன் பிறகு உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பதற்கும் ஏற்படும் செலவை சமாளிப்பது எப்படி என்ற பிரச்சினையாகும்.

இரண்டாவது, உறைநிலையில் உள்ள அரசியல் குழப்பங்கள். மொட்டுக் கட்சி, ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கி அவரைக் கொண்டாடுகின்ற போதிலும், உள்ளூராட்சி சபைகளில் தமக்கு ஆதரவு அதிகம் இருக்கும் என்ற நம்பிக்கையில், இந்தத் தேர்தலை தமது அடுத்த யுக அரசியல் பயணத்துக்கான அடித்தளமாக பயன்படுத்த முனைகின்றது.

தூர்ந்துபோன ஐக்கிய தேசிய கட்சியை கொஞ்சமேனும் தூக்கி நிறுத்த ஒரு வாய்ப்பாக, ரணில் விக்கிரமசிங்க இதைப் பயன்படுத்த முனைவதாக தெரிகின்றது. ஆனால், ஐ.தே.கவுக்கு எந்தச் சிறிய வெற்றி கிடைத்தாலும் அது, இப்போதைய நிலையில் அவர்கள் கணக்கில் இலாபம்தான்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியும், தேசிய மக்கள் சக்தியும் இந்தக் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க கணக்குப் போட்டுக் கொண்டிருக்கலாம். எனவே, இந்தத் தேர்தலின் முடிவுகள் அடுத்த தேர்தலில் தாக்கம் செலுத்தும் என்ற நிலையில், அரசாங்கம் துணிந்து தேர்தலுக்கு முகம் கொடுக்குமா என்ற ஐயப்பாடு உள்ளது.

தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்த ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க, அரசாங்கத்தில் உள்ள சிலர் வேறு கதைகளை கூறிக் கொண்டிருப்பதும் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதும் வெளிப்படையானது. அத்துடன், தேர்தலை நடத்த முன்னிற்கும் ஆணைக்குழு உறுப்பினர்கள் அச்சுறுத்தப்படுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காலநீட்டிப்புக்கு உட்பட்ட உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலம் இன்னும் முடிவடையவில்லை. அத்துடன் தேர்தல் திகதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல், தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பத்துடன் அரச அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

தேர்தல் திகதியை தீர்மானிக்கும் கூட்டத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்களில் மூவர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது. இது, இந்த முடிவின் சட்டவலுத்தன்மை பற்றிய கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், ஆணைக்குழு உறுப்பினரான திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸின் இராஜினாமாவும் மூன்று உறுப்பினர்கள் மீதான அச்சுறுத்தலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

இவற்றையெல்லாம் ஒரு கோர்வையாக நோக்குகின்ற போது, தேர்தல் நடக்காது என்றே பலரும் அனுமானிக்கின்றனர். பொது மக்களும் அவ்வாறான கருத்துகளையே தமக்கிடையில் பகர்வதை காணக்கூடியதாக உள்ளது.

ஆனால், எது எவ்வாறிருப்பினும் விரும்பியோ விரும்பாமலோ தேர்தல் ஒன்றை நடத்தியாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசாங்கம் இருக்கின்றது. அதற்கும் பல காரணங்கள் உள்ளன.

மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கும் ஆட்சிக்காலம் முடிவடைந்து விட்டது. இருப்பினும் மாகாண சபை தேர்தலை நடத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. எனவே, இந்தத் தேர்தலையாவது நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்தியா 13ஆவது திருத்தத்தை அமல்படுத்துமாறும் மாகாண சபை தேர்தலை நடத்துமாறும் கோரி வருகின்ற நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தினால் கொஞ்ச காலத்தை கடத்தலாம். இல்லாவிட்டால், நேரடியாக மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அத்துடன், இலங்கை அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்கும் அதன்மூலம் மக்களின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கும் பின்வாங்குகின்றது என்ற தோற்றப்பாடு உருவாகும். ரணில் அரசாங்கத்தின் சர்வதேச உறவுகளில் இது பாதகமான விளைவுகளை உண்டுபண்ணலாம்.

சுருக்கமாகச் சொன்னால், நீதிமன்ற வழக்கின் ஊடாக அல்லது அரசியலமைப்பு சட்டம் ஊடாக தடைகள் ஏதும் வந்தால் தவிர, அதிகாரத்தில் இருப்பவர்கள் தேர்தலை நடத்த வேண்டும் என்று நினைத்தால் தேர்தல் நடக்கும்; இல்லையென்றால். தேர்தல் நடக்காது. அவ்வளவுதான்!

தேர்தல் நடக்குமா என்ற இந்தக் கேள்விக்கு விடை கிடைத்தாலும், எது நடந்தாலும் உண்மையாகவே மக்கள் நலன் சார்ந்த ஒரு கட்டமைப்பு மாற்றம் நடக்குமா என்ற கேள்விக்கு கடைசி வரையும் விடை கிடைக்கப் போவதில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.