ரணில் எனும் பசுத்தோல் போர்த்திய ‘நரி’ !! (கட்டுரை)
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து அறிவித்திருந்தார்.
ரணில், ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டதும் அவசர அவசரமாக சர்வகட்சிக் கூட்டங்களைக் நடத்தி, நாட்டில் புரையோடிப்போயுள்ள இனமுரண்பாடுகளுக்குத் தீர்வு காணப்போவதாக கூறினார். அதற்காக, தமிழ்த் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தைகளையும் அவர் ஆரம்பித்தார்.
சுதந்திர இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை, இனவாதமும் மதவாதமும் அடக்குமுறைகளுக்கான ஏதுகைகளுமே தீர்மானித்து வந்திருக்கின்றன. இலங்கைக்கு சமஷ்டி ஆட்சி கட்டமைப்பே பொருத்தமானது என்று சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் கூறிவந்த எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கா, நாடு முழுவதிலும் பேருரைகளை நிகழ்த்தி இருந்தார். அதற்காக, அவர் யாழ்ப்பாணம் வந்து, தமிழ்த் தலைவர்களின் ஆதரவையும் கோரியிருந்தார்.
ஆனால், சுதந்திரத்துக்குப் பின்னர், அவர்தான் நாட்டில் மிக மோசமான இன முரண்பாடுகளுக்கான பெருந்தீயைக் கொளுத்தி எரிய விட்டார். ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து வந்த பண்டாரநாயக்க, ஆட்சியைப் பிடிப்பதற்காக தனிச் சிங்களச் சட்டம் என்ற பேரினவாத சதித்திட்டத்தை கையில் எடுத்தார்.
தனிச் சிங்களச் சட்டம் என்பது உண்மையிலேயே ஜே.ஆர் ஜெயவர்தனவின் திட்டம். ஆனால், அதனை, தென் இலங்கை மக்களிடம் வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைப்பதற்காக பண்டாரநாயக்க திருடிக் கொண்டார். அதை, பௌத்த பீடங்களின் துணையுடன் சிங்கள மக்களிடம் சேர்ப்பித்தார். அது, நாட்டின் முரண்பாடுகளை அதிகப்படுத்தியது. கலவரங்கள், காடைத்தனங்களுக்கு வித்திட்டது.
மேல் நாட்டு சிங்களவர், கரையோர சிங்களவர், தமிழ் – முஸ்லிம்களின் பாரம்பரிய பகுதிகள் என்ற மூன்று பிராந்தியங்களை உள்ளடக்கிய சமஷ்டிக் கட்டமைப்பினூடான ஆட்சி அதிகாரமே இலங்கைக்கு பொருத்தமானது. ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்கிற ஆரோக்கியமான ஆட்சிக்கும் ஒவ்வொரு பிராந்திய மக்களின் தனித்துவத்தை காப்பாற்றுவதற்கும் அதுவே பொருத்தமானது என்பது பண்டாரநாயக்கவின் நிலைப்பாடு.
இந்த நிலைப்பாடு, சுதந்திர இலங்கையில் நடைமுறைக்கு வந்திருந்தால், நாடு உண்மையிலேயே ‘ஆசியாவின் ஆச்சரியம்’ ஆக இருந்திருக்கும். ஆனால், அவ்வாறான ஏதும் நிகழவில்லை.
மாறாக, 75ஆவது சுதந்திர வருடத்தில் நாட்டு மக்கள் நாட்டை விட்டு எப்படி தப்பி ஓடுவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இது எங்களுடைய நாடு என்கிற எண்ணம் மெல்ல மெல்ல மக்களிடம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது. அதற்கு, கடந்த காலத்தில் ஆட்சி நடத்திய தலைவர்களும் கட்சிகளும், அவர்களுக்கு ஆலோசனை என்கிற பெயரில் இனவாதத் தீயை வளர்க்க உதவிய தரப்புகளுமே காரணமாகி இருக்கின்றன.
75ஆவது சுதந்திரத்தை நாடு எதிர்கொண்டிருக்கின்ற இந்தக் காலத்தில், நாடு திவாலாகி சுருண்டு கிடக்கின்றது. அதிலிருந்து எப்படி மீள்வது என்று எந்தத் திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை.
பங்களாதேஷிடம் 250 மில்லியன் டொலர் கடனை, நாட்டின் அவசரகால நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக கடந்த வருடம் இலங்கை வாங்கியது. ஆனால், அந்தக் கடனுக்கான எல்லை தாண்டிய பின்னரும், அதைச் செலுத்தும் திராணி நாட்டுக்கு இல்லை. ஆறு மாத கால அவகாசத்தை, பங்களாதேஷிடம் அழுது புலம்பி வாங்கி வைத்திருக்கின்றது நாடு.
சீனாவிடமும் இந்தியாவிடமும் ஏற்கெனவே வாங்கிக் குவித்த கடன்கள் பல பில்லியங்கள். அந்தக் கடன்களை மீளச் செலுத்துவது பற்றி யோசித்தால், நாடு இன்னும் பல ஆண்டுகள் இருளின் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையே காணப்படுகின்றது.
அப்படியான நிலையில், பெருமளவு நிதியைச் செலவு செய்து, ஆடம்பரமாக சுதந்திர தினத்தை, பொதுமக்களின் பங்கேற்பின்றி, இராணுவப் பாதுகாப்போடு நடத்தி முடித்திருக்கிறார் ரணில். அன்று மாலை, நாட்டுக்கு மக்களுக்கு உரையாற்றிய அவர், “நாடு படுகுழிக்குள் வீழ்ந்ததற்கு கடந்த கால ஆட்சியாளர்களும் அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களும் காரணம்” என்று கூறியிருக்கிறார்.
“தொடர்ந்தும் கடந்த கால ஆட்சியாளர்கள் இயங்கியது போல இருக்க முடியாது. மாறாக, பிரிவினைகள், பிளவுகள் அற்ற ஒரு தாய் நாட்டு மக்களாக இன, மத பேதங்கள் கடந்து ஒன்றிணைய வேண்டும்” என்று பேசியிருக்கின்றார்.
அதற்கு சில நாள்களுக்கு முன்னர்தான், “13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவேன்” என்று அவர் யாழ்ப்பாணத்தில் பேசியிருந்தார்.
ரணில், 13ஆவது திருத்தத்தைப் பற்றி பேசுவதற்கான நிர்ப்பந்தம் என்பது, இந்தியாவால் ஏற்பட்டு இருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்காகத் தீர்வு முறைமையை, 13ஆவது திருத்தச் சட்டத்தினூடு அமையும் மாகாண சபைகளினூடு பெற்றுக் கொள்ள முடியும் என்று இந்தியா, தமிழ் மக்களிடம் கூறியது.
ஆனால், 13ஆவது திருத்தம் ஏற்படுவதற்கான இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் போதே, அதன் பங்காளிகளாக தமிழ் மக்கள் இருக்கவில்லை. அப்போதே, மாகாண சபைகள், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு அல்ல என்று தமிழ் மக்கள் நிராகரித்து விட்டார்கள். இன்று இருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பைத் தவிர, மாகாண சபைகளை அங்கிகாரமாக யாரும் கருதவில்லை.
இந்தியாவின் நிர்ப்பந்தத்துக்காக, மாகாண சபையை ஏற்ற, ஈ.பி.ஆர்.எல்.எப் கூட சில மாதங்களில், “அதில் ஒன்றுமில்லை” என்று அறிவித்துவிட்டு அதிலிருந்து வெளியேறிவிட்டது. அப்படியான நிலையில், மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று தசாப்த காலம் தாண்டிய பின்னரும், மாகாண சபைகள் தான், அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்தியா செயற்படுகின்றது.
இது, இந்தியாவின் அரசியல் இராஜதந்திர நலன்களைக் கருத்தில் கொள்ளும் திட்டமாகும். மாகாண சபை நாட்டின் அரசியலமைப்பில் இருந்து இல்லாமல் செய்யப்பட்டால், இந்திய – இலங்கைக்கான ஒப்பந்தமும் வறியதாகிவிடும். இலங்கை, ஒருவகை தர்மசங்கடத்துடன் இந்தியாவோடு செய்துகொண்ட ஒப்பந்தமொன்றின் மூலம், நாட்டின் உள்ளக பிரச்சினையில் தலையிட வைத்திருக்கின்றது. இதை இல்லாமல் செய்வதற்கு இந்தியா விரும்பாது. அதனால்தான், தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள தங்களில் கருவிகளைக் கொண்டு, அடிக்கடி 13ஆவது திருத்தம் குறித்த விடயத்தை பிரதான பேசுபொருளாக்குவதில் இந்தியா குறியாக இருந்து வந்திருக்கின்றது.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் டெலோவைத் தேர்ந்தெடுத்து, 13ஆவது திருத்தத்தை முன்னிறுத்தி, தமிழ்த் தேசிய கட்சிகளை ஒருங்கிணைத்த சந்திப்புகளை நடத்தி, இந்தியாவுக்கு கடிதம் எழுத வைத்ததும் அதன் நோக்கில்தான்.
அந்தக் கடிதத்தை, ராஜபக்ஷர்களிடம் பெரிய விடயம் மாதிரி இந்தியா எடுத்துச் செல்ல முயன்றமையானது, அப்போது புதிய அரசியலமைப்பு என்கிற பெயரில் ராஜபக்ஷர்கள் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை இல்லாமல் செய்யும் திட்டங்களோடு இருந்தமையாலாகும்.
ஆனால், சிறிய காலத்துக்குள்ளேயே கோட்டாவை நாட்டு மக்கள் பதவியில் இருந்து அகற்றியதும், ரணில் வந்தார். இப்போது நாடு எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியை காட்டி இந்தியா, தன்னுடைய பிடியைப் பேண நினைக்கின்றது. அதற்காகத்தான், அதாவது இந்தியாவை மகிழ்விப்பதற்காகத்தான் ரணில், 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாக கூறியிருக்கின்றார்.
இன்னொரு பக்கம், 13ஆவது திருத்தத்தை முன்வைத்து ரணில் ஆடும் இராஜதந்திர சதுரங்கத்தின் மூலம், நாட்டின் இனப்பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டுவிட்டேன் என்று சர்வதேசத்துக்கு அவர் காட்ட நினைக்கிறார். அதாவது, ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட சில வாரங்களுக்குள்ளேயே, சர்வகட்சி கூட்டத்தை நடத்தி, இனமுரண்பாடுகளுக்கான தீர்வு குறித்து பேச்சுகளை நடத்தியிருப்பதாக அவர் காட்டினார்.
அத்தோடு, சுதந்திர தினத்துக்கு முன்னர், தீர்வைக் காணப்போவதாகவும் கூறி, தமிழ்த் தரப்புகளோடு பேச்சுகளை நடத்தினார். ஆனால், அந்த முயற்சிகள் அனைத்துமே ஓர் ஏமாற்று நாடகமாக மாத்திரமே இருந்தன. அப்படியான நிலையில், 13ஆவது திருத்தத்தை அவர் கையிலெடுத்து ஆடுகிறார். அதன் மூலம், இந்தியாவை திருப்திப்படுத்த முடியும் என்பது அவர் நம்பிக்கை.
ஆனால், அவர் தன்னை ‘கைதேர்ந்த சதிகாரத் தலைவர்’ ஆக முன்னிறுத்துவற்காக பௌத்த பீடங்களையும் தென் இலங்கையின் கடும்போக்கு சக்திகளையும் கொண்டு, 13ஆவது திருத்தம் நாட்டின் பிரிவினைக்கான சூத்திரம் என்றும் பேச வைத்துக் கொண்டிருக்கிறார். வடக்கில் வந்து 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதாக சொல்லி, இந்தியாவை குளிர வைத்துவிட்டு, தெற்கில் அதற்கு மாற்றாக விடயத்தை தென் இலங்கை சக்திகளைக் கொண்டே அவர் செய்கிறார். இப்போது அவர் ஏமாற்றுவது இந்தியாவை. ஏனெனில், 13ஆவது திருத்தத்தை ஒரு தீர்வாக தமிழ் மக்கள் எந்தக் காலத்திலும் கருதவில்லை; ஏற்றுக் கொள்ளவில்லை.
தென் இலங்கையின் பாரம்பரிய அரசியல் ஒழுங்கு என்பது, இனவாத மதவாத, அடக்குமுறை, சதிகாரத்தனம் சார்ந்தது. அதைத்தான் ரணிலும் ‘பசுத்தோல் போர்த்திய நரி’யாக தற்போது செய்கிறார். அவர், தன்னுடைய குறுகிய நலனுக்காக, நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் இந்தியாவையும் ஏமாற்றுகிறார்.
மற்றப்படி, 13ஆவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்பதோ, அது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பதோ கானல் நீருக்கு ஒப்பான ஒன்று!