சிங்கள பௌத்த வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்! (கட்டுரை)
இலங்கை அரசியலில் இன்று பௌத்த மகாசங்கம் என்னும் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டுவிட்டது.
கடந்த மாதம் இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகைக்குப் பின்னர் ரணில் விக்ரமசிங்க காணி, பொலிஸ் அதிகாரம் உட்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார்.
அதுமட்டுமன்றி சுதந்திர தினத்தன்று தீர்வு திட்டம் அறிவிக்கப்படும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் இவ்வாறு ரணில் விக்ரமசிங்க கூறியது ஈழத் தமிழர்களையும் இந்திய அரசாங்கத்தையும் ஒரே தட்டில் வைத்து ஏமாற்றி தோற்கடிப்பதற்கே.
இராஜதந்திர நகர்வுகள்
அது மாத்திரமன்றி மறுவளமாக தன்னை அதிகாரத்தில் தொடர்ந்து தக்கவைக்கவும், இலங்கையில் பௌத்த – சிங்கள தேசியவாதத்தை மீண்டும் நிலை நாட்டுவதற்குமாகும்.
ரணில் விக்ரமசிங்காவின் அறிவிப்பின் பின்னே அவருடைய இராஜதந்திர நகர்வுகள் மூலம் இலங்கை தென் இலங்கையின் அரசியலை ஒரு எரிமலை குழம்பாக மாற்றியிருக்கிறார்.
இவ்வாறு மாற்றுவதற்கான காரணம் இந்தியாவுக்கு வாக்குறுதியை கொடுத்துவிட்டு அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தட்டிக் கழித்து தப்பித்துக் கொள்வதற்கு அவர் கையாண்ட உத்திதான் பத்திரிகைகளையும், சிங்கள புத்திஜீவிகளையும், பௌத்தப்பிக்குகளையும் உசுப்பேத்தி விட்டமை ஆகும்.
இதன் வெளிப்பாடுதான் ஜே.வி பியின் பேச்சாளர் விமல் வீரவன்ஸ 13ஆம் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடு பிரிவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
இதே கருத்தையே பௌத்த. பிக்குகளும், சிங்கள புத்திஜீவிகளும் சொல்லத் தொடங்கினர்.
இவ்வெளிப்பாடுகளின் தொடர்ச்சிதான் கடந்த 08ஆம் திகதி கொழும்பில் பௌத்தப்பிக்குகள் பெருமெடுப்பிலான ஆர்ப்பாட்ட போரணி ஒன்றை நடத்தினர்.
அதில் அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் அனுசரணையுடன் அமரபுர நிகாயா, ராமானுஜ நிகாயா ஆகிய இரண்டு நிகாயங்களும் இணைந்து ஆர்ப்பாட்ட பேரணிப் போராட்டத்தை நடத்தினர்.
13ஆம் திருத்தச் சட்டம்
இந்தப் போராட்டத்தின் இறுதியில் 13ஆம் திருத்தச் சட்ட நகலை எரித்து தமது எதிர்பினை வெளிக்காட்டினர்.
“13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒருபோதும் அனுமதியோம்” என சபதமும் எடுத்தனர்.
போராட்டத்தின் போது இலங்கையின் ஒரு துண்டு நிலத்தையும் எவருக்கும் பங்குபோட நாம் அனுமதிக்க மாட்டோம். காணி, பொலிஸ் அதிகாரத்தை தமிழர்களுக்கு வழங்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என மிகக் கடுமையான பிரகடனங்களை வெளியிட்டனர்.
அந்தப் பிரகடனங்களும் கோசங்களும் சிங்கள தேசத்தின் சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையின் கொரடூரத்தின் வெளிப்பாட்டை தோலுரித்துக் காட்டுகின்றது.
இத்தகைய பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் அடிப்படை சித்தாந்தம் பற்றி பார்ப்பது முக்கியமானது சிங்கள பௌத்த தேசியவாதம் என்பது ஆகம, பாஷா, ரட்டை என்ற மூன்றையும் காப்பது என்பதையே அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆகம என்பது பௌத்த மதத்தையும், பாஷா என்பது சிங்கள மொழியையும், ரட்ட என்பது நாடு அதாவது சிங்கள அரசையும் குறித்து நிற்கிறது. ஆகம, பாஷா, ரட்டை ஆகிய மூன்றையும் பாதுகாப்பது என்ற அடித்தளத்திற்தான் பௌத்த சிங்கள பேரினவாத சிந்தனை இலங்கையில் செயற்படுகிறது.
இதற்கு நல்லதொரு உதாரணமாக எஸ்.டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்காவை படுகொலை செய்த பௌத்த துறவியான சோமராம தேரோவுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. தூக்கு தண்டனை நிறைவேறுவதற்கு முன்னர் சோமராம தேரர் கிறிஸ்தவராக தன்னை மதமாற்றினார்.
கிறிஸ்தவனாகவே தூக்கு கயிற்றில் தொங்கினார் என்பதிலிருந்து பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கும், பௌத்த மதத்திற்கு எந்த ஒரு இழுக்கும் ஏற்படாத வண்ணம் பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு இந்த பௌத்த துறவிகள் சங்கர்ப்பம் பூண்டுள்ளார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அன்றைய காலத்தில் பௌத்த சிங்களவர்களுக்கு தமிழ் மக்களும் கிறிஸ்தவ மதமும் பெரும் எதிரியாக காணப்பட்டது என்பதையும் இங்கே புரிந்துக்கொள்ள முடிகிறது .
இலங்கையின் பௌத்த மகா சங்கங்கள் தம்மதீபக் கோட்பாட்டை தொடர்ந்து இலங்கையில் நிலைநாட்டுவதற்கு முற்படுகின்றன.
நிலத்தையும் அதிகாரத்தையும் தமிழ் மக்களுடன் பங்குபோட சிங்கள தேசம் ஒருபோதும் தயார் இல்லை என்பதும் இந்த தம்மதீபக் கோட்பாட்டின் வெளிப்பாடுதான்.
ஆகவே தம்மதீபக் கோட்பாடு என்றால் என்ன என்பதை விளங்கிக்கொள் வேண்டும்.
இலங்கை பௌத்தத்தின் புனித நூலாக கொல்லப்படும் மகாவம்சம்
1) இலங்கை பௌத்த மதத்தின் பொருட்டு புத்தரினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு (அதாவது ஆசீர்வதிக்கப்பட்ட பூமி)
2) விஜயனே இலங்கையில் முதன் முதலில் காலூன்றிய மனிதன்.
3) விஜயனும் அவனுடைய வழித் தோன்றல்களுமே பௌத்தத்தை பாதுகாப்பதற்கு என்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். (இவர்கள் தான் சிங்கள மொழி பேசும் மக்கள்)
4) விஜயனுடைய சந்ததியினர் உடையதே இலங்கை அரசாங்கம்.
இலக்கிய அடிப்படை இனவாதக் கருத்தையே மகாவம்சம் முன்வைக்கிறது.
இந்தகைய இன, மத குரோத அடிப்படைக் கருத்துக்களைத்தான் மகாவம்சம் முன்வைக்கிறது. மகாவம்சம் என்கின்ற கற்பனையான பொய்யான ஐதீகக்கதை அடிப்படையாக கொண்டுதான் இனம், மதம், மொழி, நாடு, அரசு ஆகிய ஐந்தையும் ஒன்றாக இணைத்து பௌத்த மகாசங்கத்தனரால் உருவாக்கப்பட்டதுதான் தம்மதீப கோட்பாடு.
இத்தகைய இனவாத சிந்தனையுடன் கிறிஸ்துவுக்கு பின் ஆறாம் நூற்றாண்டில் மகாநாம தேரரால் உருவாக்கப்பட்ட வம்சத்தில் இருந்து தம்மதிப கோட்பாட்டை பௌத்த மகா சங்கங்கள் கட்டமைப்புச் செய்திருக்கின்றனர்.
அந்தக் கட்டமைப்பில் இருந்து கொண்டுதான் பௌத்த மகா சங்கங்கள் தமிழர்களுக்கு எதிரான மிகக் கடுமையான இனக் குரோதத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
பௌத்த வரலாறு
இன்று இலங்கையில் மல்வத்தபீடம், அஸ்கிரியபீடம், என்ற இரண்டு பெரும் பௌத்த மகாசங்கங்களையும் சியாம் நிகாயம், அமரபுர நிகாயம், இராமானுஜ நியாயம் ஆகிய மூன்று நிகாயங்களையும் உள்ளடக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட பௌத்த நிறுவனங்கள் இயங்குகின்றன.
இவை அனைத்தும் தம்மதீபக் கோட்பாட்டின் அடித்தளத்திலிருந்து கட்டமைப்புக்கு செய்யப்பட்ட அமைப்புகள் ஆகும். கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியை அமரபுர, ராமனுஜ நிகாயங்களே நடத்தினர்.
இன்றைய கணிப்பீட்டில் அமரபுர, ராமனுஜ நிகாயங்களில் 21,000 க்கு மேற்பட்ட பௌத்தா துறவிகள் அங்கம் வகிக்கின்றனர். இவ்விரு நிகாயங்களிலும் இலங்கையின் மொத்த பிக்குகளில் 20 சதவீதத்திரை கொண்டுள்ளனர்.
அமரபுர நிகாயம் 1803ல் பர்பாவின் தலைநகராக அமரபுரவிலிருந்து வந்த தேரவாத பிக்குகளை கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்த நிகாயத்தை சேர்ந்த பிக்குகள் கடும் மஞ்சள் நிறத்திலான காவியுடை தரிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் கரவ, துறவ சாதி அமைப்பைச் சேர்ந்தவர்கள். மொத்த பிக்குகளில் 13 சதவீதத்திரை கொண்டுள்ளது. அடுத்து ராமனுஜ நிகாயம் அளவால் சிறியது.
1864ல் பர்மிய தேரவாத பிக்குகளின் அனுசரனையுடன் சாதிப்பாகுபாட்டை எதிர்த்த நிறுவப்பட்டது.
இந்த நிகாயத்தை சேர்ந்தவர்கள் கபில நிற அதாவது கடும் கபில நிற காவியுடை தரிக்கின்றனர்.
பௌத்த நிறுவனம்
இவர்கள் முற்றுமுழுதாக தாழ்த்தப்பட்ட சாதி அமைப்பை சேர்ந்தவர்களாகவும் மொத்த பிக்குகளில் 7 சதவீதத்திரை கொண்டுள்ளனர்.
சிகாம் நிகாயாம் 1764 மீள்நிர்மாணம் செய்யப்பட்டு கட்டமைக்கப்பட்ட வலுவான பௌத்த நிறுவனமாகும். அளவால் பெரியது.
இலங்கையிலுள்ள மொத்த பிக்குகளில் 80 சதவீதத்திரை கொண்டுள்ளது. அத்தோடு சியாம் நிகாயம் முற்று முழுதாக சிங்கள கொய்கம உயர்சாதியச் சேர்ந்த பௌத்த பிக்குகளை கொண்டுள்ளது.
இவர்கள் இளமஞ்சள் காவியுடை தரிகின்றனர். அவர்களே சங்கக்கட்டளை என்னும் உயர் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்தவர்களாகவும் உள்ளனர்.
மேலும் மல்வத்த, அஸ்கிரிய என்ற இரண்டு உயர் பீடங்களிலும் சியாம் நிகாயத்தை சேர்ந்த பௌத்தப்பிக்குகளே 81 சதவீதத்தினராக உள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
அத்தோடு மல்வத்த பிடம் ஐக்கிய தேசிய கட்சி சார்பு உடையவர்களை அதிகம் கொண்டுள்ளது. அதேநேரம் அஸ்கிரிய பீடம் சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களை கொண்ட பிக்குகளைக் கொண்டுள்ளது. எது எப்படியோ இலங்கை அரசியலில் மகாசங்கமும், பௌத்த பிக்குகளுமே எழுதப்படாத அரசியல் யாப்பாக தொழிற்படுகிறது.
பௌத்த மகா சங்கத்தினை மீறி இலங்கையின் எந்த அரசியல் தலைவர்களாலும் எத்தகைய ஒரு முடிவையும் எடுக்க முடியாது.
அவ்வாறு முடிவை எடுக்கின்ற ஒரு அரசியல் தலைவரும் இலங்கையின் அரசியல் நாற்காலியிலிருந்து மறுகணமே தூக்கி எறியப்படுவர் என்பதுதான் நிதர்சனம்.
பௌத்த மகா சங்கங்கள் இப்போது போராட்டத்திற்கு இறங்கிவிட்டன. அதனால் தென்னிலங்கை அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்த வார இறுதியில் 5000 பிக்குகள் மிகுந்தலையில் ஒன்று கூடி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
பேரினவாதம்
இலங்கை பௌத்தத்தின் வரலாற்றில் முதல் தடவையாக தேவநம்பிய தீசனை இந்தியாவிலிருந்து வான்வழியாக பறந்து வந்திறங்கிய மஹிந்த தேரர் மிகிந்தலை மலையில் சந்தித்தார் என்றும் தர்மபோதனை செய்து அவனை பௌத்தனாக மதம் மாற்றினார் என்றும் மகாவம்சத்தில் கூறப்படுகிறது.
அந்த இடத்தில் பௌத்தத்தின் வரலாற்றை மீண்டும் பறைசாற்றுவதற்காகவே பௌத்த பிக்குகள் தமது போராட்டத்தை மிகிந்தலையில் நடத்துவதாக அறிவித்துள்ளனர். இதே போலதான் கோட்டாபய.
ராஜபக்ச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் தனது பதவிப்பிரமாணத்தை அனுராதபுரத்தில் தமிழ் மன்னனான எல்லாளனை வெற்றிகொண்ட வெற்றிச் சின்னமான ரூவன்வலிசாயாவில் மேற்கொண்டதனையும் நினைவில் கொள்ளவேண்டும்.
சிங்கள பௌத்த பேரினவாதமானது மகாவம்சத்தின் பொய்யான ஐதீக கதைகளின் அடிப்படையில் தொடர்ந்தும் பேரினவாத சிந்தனையோடு இலங்கை தீவில் தொழிற்பட போகிறது என்பதும் அது தொடர்ந்தும் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் எதிராகவே செயல்பட போகிறது என்பதையும் பிக்குகளின் மிகிந்தலைப் போராட்டம் உணர்த்தும் என்பது திண்ணம்.