அவலத்தை அரசியலாக்குதல் !! (கட்டுரை)
அரசியல்வாதிகள் தமக்கான ‘பொலிட்டிக்கல் மைலேஜ்’ (அரசில் பிரபல்யம்) பெற, பெரும்பாலும் நெருக்கடியான சூழ்நிலைகள் சாதகமாக அமைந்துவிடுகின்றன.
ஒரு நெருக்கடிநிலை ஏற்படும் போது, அந்த அவலத்தில் மக்கள் தத்தளிக்கும் போது, நெருக்கடியைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டதாகக் கூறி, தம்மை முன்னிலைப்படுத்துவதன் மூலம், இத்தகைய சூழ்நிலைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த அரசியல்வாதிகள் விளைகிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம், தம்மை கடினமான சூழ்நிலைகளை கையாளும் திறன் கொண்ட, திறமையான தலைவர்களாக காட்டிக்கொள்கிறார்கள்.
சில சந்தர்ப்பங்களில், அரசியல்வாதிகள் தங்கள் சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதற்கு நெருக்கடிநிலைமைகளை உருவாக்கலாம்; அல்லது, பயன்படுத்திக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட கொள்கைக்கு அழுத்தம் கொடுக்க அல்லது, தங்கள் அரசியல் எதிரிகளை பிழையான வௌிச்சத்தில் காட்ட, அவர்கள் நெருக்கடியான சூழலை தமக்கு ஏதுவாகப் பயன்படுத்தலாம்.
உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் ஆபத்தில் இருக்கும் சூழ்நிலைகளில், இத்தகைய போக்கானது ஆபத்தானது. ஏனெனில், இது உண்மையான பிரச்சினைகளில் இருந்து, கவனத்தை திசைதிருப்பி, நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை பாதிப்புக்கு உட்படுத்தலாம்.
நெருக்கடிகள், அரசியல்வாதிகளுக்கு தலைமைத்துவத்தின் திறனையும் ஆழுமையையும் வெளிப்படுத்தவும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புகளை வழங்க முடியும் என்பது உண்மைதான். என்றாலும், அவர்களின் நடவடிக்கைகள், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நலன் நோக்கில் வழிநடத்தப்படுவதை உறுதிப்படுத்துவது முக்கியம்.
ஒரு நெருக்கடியின் போது, அரசியல்வாதிகள் தங்கள் முடிவுகளுக்கும் செயல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும். மேலும், இதுபோன்ற சூழ்நிலைகளை அவர்கள், தங்கள் சொந்த இலாபத்துக்காகப் பயன்படுத்தக்கூடாது. இறுதியில், நெருக்கடியில் இருந்து வௌிவரும்போது, அரசியல் சிந்தனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய, ஒன்றிணைந்து செயற்படுவது தலைவர்களின் உண்மையான நோக்கத்தைப் பொறுத்ததாகும்.
சுதந்திர இலங்கையின் மிகப்பெரிய பொருளாதார அவலத்தை, கடந்த ஆண்டில் இலங்கை சந்தித்தது. இந்த மிகப் பெரிய பொருளாதாரப் பிறழ்வு, தொடர்ந்து வந்த அரசாங்கங்களின் தீர்க்கதரிசனமற்ற அரசியல் கொள்கைகளால் விளைந்தது. இலங்கை மக்கள், குறுகிற நோக்கங்களுக்காக வாக்களித்ததன் விளைவை, அவர்கள் அனுபவிக்கிறார்கள் என்றால் சொன்னால் அது மிகையல்ல.
இந்தப் பொருளாதார பேரவலத்திலிருந்து மீள்வது என்பது, கடினமான பாதையாகத்தான் இருக்கப் போகிறது. மிகப்பெரிய விபத்தைச் சந்தித்த ஒருவர், ஒரு சத்திரசிகிச்சை முடிந்தவுடன், உடனடியாக எழுந்து நடந்துவிடப் போவதில்லை. அவர் குணமாக நீண்டகாலம் தேவை. மருந்துகள் ஒழுங்காக எடுக்கப்பட வேண்டும். குணமாகும் காலம் வலி மிகுந்ததாகவே இருக்கும். அது தவிர்க்க முடியாது.
இந்த வலி மிகுந்த நீண்டகால மீட்சிப் பாதையைத் தவிர, ‘மந்திரத்தால் ஏதேனும் நடத்திவிட முடியாதா’ என்ற மனிதனின் அங்கலாய்ப்புத்தான் போலி வைத்தியர்கள், மந்திரவாதிகள் போன்றவர்களுக்கு வாய்ப்பாகிவிடுகிறது. “என்னிடம் வா, முழுமையான இரட்சிப்பு கிடைக்கும்; இந்த அவலம் தேவையில்லை” என எந்த முகாந்திரமும், அடிப்படையும் இல்லாமல் அவர்கள் சொல்லும் வெற்றுவார்த்தைகள், வலியில் இருப்பவனுக்கு இனிப்பாகத்தான் இருக்கும். ஆனால், அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தது, தற்கொலைக்குச் சமம் என்பதை மனிதன் உணர்ந்துகொள்ளும் போது, அவன் சாவின் வாசலில் நிற்பான்.
சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் இந்தப் போலி வைத்தியர்கள், மந்திரவாதிகள் போன்றோர் போலத்தான் மக்கள் மத்தியில் திரிகின்றார்கள்! அவர்கள் பெரும்பாலும் நெருக்கடியான சூழ்நிலையை, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயல்கிறார்களேயன்றி, நெருக்கடியைத் தீர்ப்பது அவர்களது முதன்மை எண்ணம் அல்ல.
அவர்கள், நெருக்கடிக்கு தற்போதைய அரசாங்கத்தை குற்றம் சாட்டுகிறார்கள். அத்துடன், தாங்கள் இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண்போம் என்றும் சொல்கிறார்கள். ஆனால், அதை எப்படிச் செய்யப் போகிறார்கள்? இப்போது செய்வதை விட, எதை வித்தியாசமாகச் செய்யப் போகிறார்கள் போன்ற கேள்விக்கு அவர்களிடம் தௌிவான பதிலில்லை.
ஆளுங்கட்சியின் நம்பகத்தன்மையை குறைமதிப்புக்கு உட்படுத்தவும், பொதுமக்களின் ஆதரவைப் பெறவும் அவர்கள் நிலைமையைப் பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றனரே தவிர, இப்போது ஆட்சியில் உள்ளவர்களை விட எதை வித்தியாசமாகச் செய்யப் போகிறார்கள் என்பதை அவர்கள் சொல்வதே இல்லை.
எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பெரும்பாலும், நெருக்கடியைக் கையாள்வதில் அரசாங்கத்தின் தோல்விகள் அல்லது குறைபாடுகளை முன்னிலைப்படுத்துகிறார்கள். அவர்கள் அரசாங்கத்தின் கொள்கைகள், முடிவுகளை விமர்சிக்கிறார்கள், குறை சொல்கிறார்கள். மேலும் தாம் ஆட்சியில் இருந்தால் நிலைமையை சிறப்பாகக் கையாண்டிருப்பார்கள் என்று சொல்கிறார்கள்.
ஆளும் கட்சி சம்பந்தப்பட்ட கடந்த கால தவறுகள், சர்ச்சைகளை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். நெருக்கடி அவர்களின் திறமையின்மை அல்லது ஊழலின் விளைவாகும் என்று குறித்துரைக்கிறார்கள். தற்போதைய அரசாங்கத்தை குற்றம் சாட்டுவதன் மூலம், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி அல்லது விரக்தியின் உணர்வை உருவாக்குகிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளிக்கிறார்கள்.
ஆனால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு என்ன? அவர்களது திட்டம் என்ன? அது இன்றைய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து எப்படி வேறுபட்டது? எப்படி அதனை நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்ற எதற்கும் அவர்களிடம் பதிலில்லை. “நாம் வந்தால், செய்வோம்” என்பதுதான் அவர்களது பதிலாகப் பெரும்பாலும் இருக்கிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்ற பிரதான எதிர்க்கட்சிகளின் அழுத்தத்துக்குப் பின்னால் இருப்பதும் இந்த நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி, தமது ‘அரசியல் மைலேஜ்’ஜை ஏற்றிக்கொள்ளும் எண்ணமேயன்றி, மக்கள் நலன் அல்ல. அதற்கு ஜனநாயகம், வாக்குரிமை, மக்கள் இறைமை என்ற கோட்பாடுகளை அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
மின்வெட்டு, எரிபொருள் வரிசைகள் என்பன இல்லாது போயுள்ளன. பொருட்களின் தட்டுப்பாடுகள் கடந்த வருடம் இருந்ததைவிடக் குறைந்துள்ளன. இலங்கை ரூபாய் கொஞ்சம் பலமடைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கும் தறுவாயில் இலங்கை நிற்கிறது. ஆகவே, இந்தப் பொருளாதார நெருக்கடி நிலை கொஞ்சம் குறைந்துவிட்டால், எங்கே தமக்கான மக்களாதரவு போய்விடுமோ என்ற பயம், உடனடியாகத் தேர்தல் வேண்டும் என்ற கோரிக்கையின் பின்னால் ஒளிந்திருப்பதை புரிந்துகொள்ளக் கூடியதாகவே இருக்கும்.
இன்றைய சூழலில், அதிகரித்துள்ள வரிகள், மின்சாரக் கட்டண உயர்வு ஆகியன மக்களைப் பாதித்துள்ள நிலையில், அவற்றையும் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, மக்களின் அதிருப்தியை தமக்கான வாக்காக மாற்றி, அறுவடை செய்துகொள்ள பிரதான எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன.
இதைச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை ஏன் எழுகிறதென்றால், இந்தப் பிரதான எதிர்க்கட்சிகள் எதுவுமே, இலங்கையின் அரசியலில் தேவைப்படும் மாற்றத்தை வழங்குவதற்கான உறுதியான உறுதிமொழிகள் எதையும் வழங்கவில்லை.
கடந்த வாரப் பத்தியில் குறிப்பிட்டதைப் போல, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல், இலங்கை நீண்ட காலப் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி யோசிக்க முடியாது. ஆனால், இந்தப் பிரதான எதிர்க்கட்சிகள் எதுவுமே, இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில், மூச்சு விடுவது கூட இல்லை. இதுதான் இவற்றின் உண்மை முகம்.
இன்று ஜனாதிபதி ரணில் முன்னெடுக்கும் சர்வதேச நாணய நிதியப் பொறிமுறையைத்தான் ஐக்கிய மக்கள் சக்தியும் முன்னெடுக்கப்போகிறது. கோட்டாபய ராஜபக்ஷ முயன்று தோற்றுப்போய் நாட்டை நாசமாக்கிய, ‘உள்நாட்டுக்குள் தீர்வு, சர்வதேச உதவி வேண்டாம்’ என்பதைத்தான் என்.பி.பி என்ற பெயரில் உலாவரும் ஜே.வி.பியின் நிலைப்பாடும் ஆகும்.
இவர்களிடம் இதைவிட வேறெந்தத் தீர்வுமில்லை. சரியான தீர்வை வழங்கும் திராணியுமில்லை. அவலத்தில் சிக்கி, வலியில் துடிக்கும் மக்களிடம் வாக்குவேட்டை நடத்தத்தான் அத்தனை பகிரதப் பிரயத்தனங்களும் தகிடுதத்தங்களும் இடம்பெறுகின்றன. அதற்காகத்தான் இவர்கள் இன்று வீதிக்கு இறங்குகிறார்கள்.
உண்மையில், இன்று இலங்கை சந்தித்து நிற்கும் மிகப்பெரிய ஜனநாயகப் பிறழ்வுகளுள் ஒன்று, இலங்கையில் முறையான ஆளுங்கட்சியும் இல்லை; எதிர்க்கட்சியும் இல்லை. எவர், எப்போது, எங்கே, எந்தப் பக்கம் நிற்கிறார் என்ற எந்தவொரு புரிதலும் இல்லாமல்தான் இலங்கையின் அரசியல் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.
இலங்கை பொருளாதார ரீதியில் மீளவேண்டுமானால், தீர்க்கதரிசனமுள்ள, திறமையும், திராணியுமுள்ள தலைமைகள் வேண்டும். மக்களின் அவலத்தை அரசியலாக்கி, வாக்கு வேட்டை நடத்தக் காத்திருக்கும் கூட்டத்தால் அந்தத் தலைமைத்துவத்தை வழங்க முடியாது.