;
Athirady Tamil News

உள்ளூராட்சித் தேர்தல்; யாருக்கு வாக்களிப்பது? (கட்டுரை)

0

இம்மாதம் நடக்கவிருந்த உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், தற்போது 2023 ஏப்ரல் 25 ஆம் திகதியன்று உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல், 2023 மார்ச் 9 அன்று நடைபெறவிருந்தன. ஆனால், இலங்கை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையால் குறித்த தினத்தில் தேர்தல் நடத்தப்பட முடியாது தாமதமானது.

உயர்நீதிமன்றின் இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து, பாதீட்டில் தேர்தலுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதைத் தடுக்க, இடைக்கால தடைவிதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல்கள் நடப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணைக்குழு தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக பணியாற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு ஏப்ரல் 25ஆம் திகதியை உள்ளூராட்சித் தேர்தலுக்கான புதிய திகதியாக அறிவிக்க அறிவுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சி அதிகார சபைகளின் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் உப பிரிவு 38(1)(c) இன்படி, தேர்தல் ஆணைக்குழு தேர்தல் திகதியை நிர்ணயித்த பின்னர், தேர்தல்களை அறிவிக்கும் தனி வர்த்தமானிகளை பிராந்திய தேர்தல் அதிகாரிகள் வெளியிடுகின்றனர். ஆகவேதான், அவர்களுக்கான தேர்தல் திகதி அறிவுறத்தலை தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் நடக்குமா இல்லையா, என்ற கேள்வி ஒரு புறமிருக்க, இந்தவிடத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் வகிபாகமென்ன என்பதைப் புரிந்துகொள்ளுதல் அவசியமாகிறது. உள்ளூராட்சி மன்றங்களின் வகிபாகம் பற்றி அழுத்திச் சொல்வதற்கான தேவை எழுந்திருக்கக் காரணம், இந்த உள்ளூராட்சித் தேர்தல், நாட்டின் எதிர்காலத்தை மாற்றப்போகும், ஆட்சியை, ஆட்சிமுறையை மாற்றப்போகும் தேர்தலாக பிரதான எதிர்க்கட்சிகள் உருவகித்து வரும் பிரசாரத்தின் உண்மைத்தன்மை பற்றிய தௌிவு வாக்காளர்களிடம் ஏற்பட வேண்டும் என்பதாகும்.

உள்ளூராட்சி மன்றங்களென்றால் என்ன? உள்ளூராட்சி மன்றங்கள் என்பவை இலங்கையின் மூன்றாவது மற்றும் கீழ்மட்ட அரசாங்கக் கட்டமைப்பாகும். மத்திய அரசாங்கம் முதல் மட்டமாகவும், மாகாண சபைகள் இரண்டாம் மட்டமாகவும் உள்ளன எனலாம். உள்ளூராட்சி மன்றங்கள் தமது பகுதிக்குட்பட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை நிறைவேற்றுகின்றன.

வீதிகள், நடைபாதைகள், உள்ளூர் போக்குவரத்து, உட்கட்டமைப்பு, சுகாதாரம், வடிகால், கழிவகற்றல், வீடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொது நூலகங்கள், பொது பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் பொது சேவைகளை வழங்குவதும், உறுதிப்படுத்துவதும் உள்ளூராட்சி மன்றின் பணிகள்.

ஆகவே மக்களின் வாழ்வோடு நேரடியாகத் தொடர்புடைய பல அடிப்படைப் பணிப்பொறுப்புகள் உள்ளூராட்சி மன்றின் பாற்பட்டது. மிகப் பொதுவான உதாரணமாக, குப்பை அள்ளுதல், ஊரைச் சுத்தப்படுத்துதல், வடிகால் அமைத்தல், சிறிய வீதிகளை அமைத்தல், சீரமைத்தல், ஆரம்ப சுகாதார வசதிகளை வழங்குதல், கட்டாக்காலி நாய்களைப் பிடித்தல், தீயணைப்பு மற்றும் அவசர உதவி சேவைகளை நடத்துதல், ஊர் பொதுச்சந்தைகளை நிர்வகித்தல், ஊர் மயானங்களை நிர்வகித்தல் போன்றவற்றை எல்லாம் செய்வது உள்ளூராட்சி மன்றங்களே!

இந்த உள்ளூராட்சி மன்றங்கள், பெருநகரங்களில் ‘மாநகர சபை’ என்றும், நகரங்களில் ‘நகர சபை’ என்றும், ஏனைய பிரதேசங்களில் ‘பிரதேச சபை’ என்றும் அறியப்படுகின்றன.

மாநகர சபைகள், 1947 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மாநகர சபை கட்டளைச் சட்டத்தாலும், நகர சபைகள், 1939 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க நகர சபைகள் கட்டளைச் சட்டத்தாலும், பிரதேச சபைகள், 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தினாலும் நிர்வகிக்கப்படுகின்றன.

சமூகங்கள் நன்கு நிர்வகிக்கப்படுவதையும், வளமானதாக இருப்பதையும், அவர்களின் குடிமக்களின் தேவைகளுக்குப் பதிலளிக்கக் கூடியதாக இருப்பதையும் உறுதி செய்வதில் உள்ளூராட்சி மன்றங்களின் பங்கு முக்கியமானது. உள்ளூராட்சி மன்றங்கள் இல்லாமல், அத்தியாவசிய சேவைகளை வழங்குவதிலும், அடிமட்ட அளவில் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதிலும் மிக்பெரிய இடைவௌி ஏற்பட்டுவிடும்.

ஆனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல், இன்றைய எதிர்க்கட்சிகள் மேடைக்கு மேடை முழங்குவதைப் போல, நாட்டின் எதிர்காலத்தை மாற்றப்போகும், ஆட்சியை, ஆட்சிமுறையை மாற்றப்போகும், விலைவாசியைக் குறைக்கப்போகும், பொருளாதாரத்தை மேம்படுத்தப்போகும், அந்நியச் செலாவணி வருவாயை அதிகரிக்கப்போகும், வரிகளைக் குறைக்கப்போகும், இனவாதத்தை இல்லாதொழிக்கப்போகும் தேர்தலா என்றால், அதற்கான உறுதியான பதில், உள்ளூராட்சி மன்றங்களால் இந்த எந்த விடயத்திலும் மாற்றங்களைக் கொண்டுவர முடியாது என்பதுதான்.

உள்ளூராட்சித் தேர்தல், உள்ளூர் சமூகங்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அவை நாட்டின் ஆட்சிக் கொள்கையை மாற்ற வாய்ப்பில்லை. ஏனெனில், வரிக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை, நாட்டுக்கான சட்டவாக்கம், தேசிய பாதுகாப்பு போன்ற மாற்றங்கள் போன்ற முழு நாட்டையும் பாதிக்கும் முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரம், உள்ளூராட்சி மன்றங்களுக்கு இல்லை.
ஆட்சிக் கொள்கை பொதுவாக பாராளுமன்றத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மத்திய அரசாங்கத்தால்தான் தீர்மானிக்கப்படுகிறது.
முழு நாட்டையும் பாதிக்கும் முடிவுகளை எடுப்பதற்கு மத்திய அரசாங்கமே பொறுப்புடையதும், அதிகாரமுடையதுமாகிறது. குடிமக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய கொள்கை மாற்றங்களை அறிமுகப்படுத்தும் அதிகாரம், மத்திய அரசாங்கத்திடமே உள்ளது.

சில சந்தர்ப்பங்களில், உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் பொதுக் கருத்து மற்றும் அரசியல் உணர்வுகளில் பரந்த போக்குகளைப் பிரதிபலிக்கலாம். எவ்வாறாயினும், இவ்வாறான சந்தர்ப்பங்களிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தல், நாட்டின் ஆட்சிக் கொள்கையை நேரடியாக மாற்றுவதற்கு வாய்ப்பில்லை. இந்த உண்மையை வாக்காளர்கள் உணரவேண்டும்.

உண்மையில், உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரத்தின்போது, போட்டியிடும் கட்சிகள் வழங்க வேண்டிய உறுதிமொழிகள், உள்ளூராட்சி மன்றின் அதிகாரம், பொறுப்புகள் சார்ந்து அமைய வேண்டும். உதாரணமாக, தினமும் முறையாக குப்பை அகற்றுவோம்; குழந்தைகளுக்கான தரமான பாலர் பாடசாலைகளை ஊரின் பல பகுதிகளிலும் அமைப்போம்; சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் நுளம்புகளை இல்லாதொழிப்பதற்கும் உடனடி நடவடிக்கை எடுப்போம்; எல்லா வீதிகளையும் முறையாகச் செப்பனிட்டு பாதுகாப்போம்; அனைத்து வீதிகளுக்கும் சூரிய சக்தியைச் சேமித்து, இரவில் ஒளிரும் மின்விளக்கு வசதியை வழங்குவோம்; வீதிகளை தினமும் சுத்திகரிப்போம்; பொதுப் பூங்காக்களை அமைத்து, பராமரித்துப் பாதுகாப்போம்; ஊர்க் குளங்களை தூர்வாரிப் பாதுகாப்போம்; சுற்றுச்சூழலுக்கு தீங்கு தரும் செயற்பாடுகளை அனுமதியோம்; வீட்டுவரிகளை சமநீதிக் கொள்கைகளின்படி நடைமுறைப்படுத்துவோம் போன்ற உள்ளூராட்சி மன்றுகளின் அதிகாரத்துக்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பிலான உறுதிமொழிகளை வழங்க வேண்டுமேயொழிய, ‘சிஸ்டம் சேஞ்ச்’, வரிகளைக் குறைப்போம், பொருளாதாரத்தை மாற்றியமைப்போம்,என்று உள்ளூராட்சி மன்ற தேர்தல் மேடைகளில் முழங்குவதெல்லாம் அப்பட்டமான ஏமாற்று வேலை.

பொதுவாகவே, உள்ளூராட்சி மன்றிற்கு மக்கள் தமது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர், பெரும் அரசியல் விற்பன்னராக இருக்க வேண்டியவரல்ல. இது பாராளுமன்ற தேர்தல் அல்ல. இங்கு குறித்த ஊரைச் சேர்ந்த, அம்மக்களுக்கு காட்சிக்கு எளியவனாக உள்ள, எப்போதும் மக்கள் அணுகக் கூடிய, ஒருவரைப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுப்பதே மிகச் சிறந்த தெரிவாக அமையும்.

இரண்டு நாள்கள் குப்பையகற்ற உள்ளூராட்சி மன்றின் பணியாளர்கள் வரவில்லையென்றால், மக்கள் உடனடியகாகத் தொலைபேசி மூலம் அழைக்கவோ, நேரில் சந்திக்கவோ கூடியவராக அம்மக்களின் பிரதிநிதி இருக்க வேண்டும்.

ஆகவே, உங்கள் வட்டாரத்தில் வாழ்கின்ற, மக்களோடு மக்களாக நிற்கும் ஒருவர்தான், உள்ளூராட்சி மன்றிற்கு உங்கள் பிரதிநிதியாகவதற்கு தகுதியுள்ள நபர். இங்கு கட்சி சார்பு என்பது கூட அவசியமானதொன்றல்ல. ஏனென்றால் இது பாராளுமன்றத் தேர்தலோ, மாகாண சபைத் தேர்தலோ அல்ல என்பதை மீண்டும் மீண்டும் ஞாபகத்திற் கொள்ளுதல் வேண்டும்.

கட்சிக்கு வாக்களிக்கிறோம் என்ற பெயரில், கட்சி நிறுத்திய யாரோ ஒருவருக்கு வாக்களித்துவிட்டு, நாளைக்கு தெருவிளக்கு எரியாவிட்டால், நீங்கள் தெரிவுசெய்த அந்த யாரோ ஒரு பிரதிநிதியை எங்கே சென்று தேடுவீர்கள்? உங்கள் வட்டாரத்திற்கு ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், கட்சி அடையாளங்களைத் தாண்டி, உங்கள் வட்டாரத்திற்கு சேவையாற்றக் கூடிய ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். அவர் சுயாதீனமாகக் கூட போட்டியிடுபவராக இருக்கலாம். அதுதான் உங்களுக்கு நன்மையானது. அதைவிடுத்து, ஆட்சி மாற்றம், கொள்கை மாற்றம் என சில கட்சிகள் காட்டும் பேய்க்காட்டலில் ஏமாந்துவிட வேண்டாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.