சீனாவின் கடல்சாா் ஆதிக்கமும் கடன் பொறி இராஜதந்திரமும் !! (கட்டுரை)
இந்தியப் பெருங்கடல், உலகின் மிக முக்கியமான நீர்வழிகளில் ஒன்றாகும். இது இயற்கை வளங்களின் முக்கிய ஆதாரமாக உள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை இணைப்பதில் இந்தியப் பெருங்கடல் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியப் பெருங்கடல் உலகளாவிய வர்த்தகத்திற்கான ஒரு முக்கியமான கடல் பாதையாகவும் இருக்கிறது. உலக வர்த்தகத்தில் பெரும் பங்கை இந்த கடல் வழிப்பாதை வகிக்கிறது.
இந்தியப் பெருங்கடல் அதன் புவியியல் அமைவிடம் காரணமாக பல நூற்றாண்டுகளாக ஒரு முக்கியமான மூலோபாய இடமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக, பல நாடுகள் இந்தியப் பெருங்கடலில் தமது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள போட்டியிட்டு வருகின்றன.
சமீபகாலமாக, இந்தியப் பெருங்கடலில் சீனாவின் பிரசன்னமும் அதன் கடல்சாா் விரிவாக்கமும் அதிகரித்துக் கொண்டே வருவதை அவதானிக்க முடிகிறது. இது இந்தியாவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கும் அதன் பொருளாதார நலன்களுக்கும் ஒரு சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் இந்தியாவால் கணிக்கப் படுகிறது.
அதுமட்டுமல்லாமல், இந்தியப் பெருங்கடலில் வளர்ந்து வரும் சீனாவின் பொருளாதார மற்றும் இராணுவப் பிரசன்னம், பிராந்தியத்தில் அரசியல் முறுகல்களையும் உருவாக்கி வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் பிராந்திய நலன்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது.
இந்தியப் பெருங்கடலில் சீனா கட்டமைத்து வரும் ஆதிக்கத்திற்கு அடிப்படையாக சீனாவின் “பெல்ட் எண்ட் ரோட் திட்டம்” அடிப்படையாக அமைந்திருக்கிறது. இந்தத் திட்டம் சீன ஜனாதிபதி சீ ஜின் பிங் ஆல் 2013 ஆண்டில் தொடங்கப்பட்டது.
உலகில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக வகுக்கப்பட்ட வியூகமாக சீனாவின் “ஒரு பட்டி ஒரு பாதை” என்ற பெல்ட் எண்ட் ரோட் முன்முயற்சி (The Belt and Road Initiative) என்ற இந்தத் திட்டம் கருதப்படுகிறது.
ஆசிய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் வரலாற்று ரீதியாக இருந்து வரும் வர்த்தக பாதையை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும் என அப்போது சீனாவால் சொல்லப்பட்டது.
இந்தத் திட்டத்தின் மூலம் உலக நாடுகளை சீனா தங்கள் நாட்டுடன் போக்குவரத்து மூலம் இணைக்கும் என்றும், சீனாவிற்கும் பிற நாட்டுக்கும் இடையில் வீதிப் போக்குவரத்தை ஏற்படுத்தும் என்றும், அதேபோல் கடல் வழியே போக்குவரத்தை ஏற்படுத்தி சீனாவில் இருக்கும் துறைமுகங்களை உலகில் இருக்கும் பிற துறைமுகங்கள் உடன் இணைக்கும் என்றும் சீனத் தரப்பால் சொல்லப்பட்டது.
இந்த திட்டத்தை வைத்து பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களில் சீனா பாரிய முதலீடுகளை செய்தது. இந்தியப் பெருங்கடல் பகுதியிலும், புவியரசியலிலும் இந்த “பெல்ட் எண்ட ரோட் முன்முயற்சி” திட்டம் குறிப்பிடத்தக்க தாக்கங்களை நிகழ்த்தியுள்ளது.
உதாரணமாக, பாகிஸ்தானின் குவாதா் துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம். பாரசீக வளைகுடாவின் நுழைவாயிலிலும் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகிலும் மூலோபாய முக்கியத்துவம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தின் வளர்ச்சியில் சீனா இந்த பெல்ட் எண்ட் ரோட் திட்டத்தின் மூலம் அதிக முதலீடுகளை செய்துள்ளது.
சீனாவின் கடல்சாா் ஆதிக்கத்தை இந்திய பெருங்கடலில் தக்க வைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட மற்றுமொரு திட்டம்தான் ஹம்பாந்தோட்டை துறைமுக கட்டமைப்புத் திட்டம். பல பில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட இந்த துறைமுகத்தை சீனா இலங்கையிடமிருந்து 99 வருட கால குத்தகைக்குப் பெற்று தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது.
இந்த ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் சீனாவின் கடன்-பொறி இராஜதந்திரத்தில் இலங்கை சிக்கியிருப்பதை உலகிற்கு பறைசாற்றியது. இலங்கையின் இறையாண்மைக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து சா்வதேச அளவில் பேசப்படுவதற்கு இந்த துறைமுக விவகாரம் காரணமானது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன் மூலம், இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடற்படைப் பிரசன்னம் அதிகரித்து வந்திருக்கிறது. இலங்கையையும் இந்தியாவையும் முறுகல் நிலைக்குத் தள்ளிய “யுவான் வேங் 5” சீன உளவுக் கப்பல் விவகாரம் இதற்கு சிறந்த சான்றாகும். இந்தியாவின் எதிா்ப்பையும் மீறி இந்தக் கப்பல் ஹம்பாந்தோட்டையில் பல நாட்கள் தரித்து நின்று அரசியல் முறுகலை ஏற்படுத்தியது.
சீனாவின் இத்தகைய கடல்சாா் ஆதிக்கம் செயற்பாடுகள், பிராந்தியத்தில் அமைதியின்மையை உருவாக்கியிருக்கின்றன. சீனா தனது கடற்படையை விரிவுபடுத்தி, ரோந்து மற்றும் பயிற்சிகளை இப்பகுதியில் தொடா்ந்து நடத்த திட்டமிட்டு வருவதை அதன் அண்மைக்கால நகா்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
சீனா உலகளாவிய ரீதியில் தனது வணிக ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு கடல்பிராந்தியங்களை குறிவைத்திருக்கிறது. 2017 ஆம் ஆண்டில், சீனா தனது முதல் வெளிநாட்டு இராணுவ தளத்தை ஜிபூட்டியில் நிறுவியது. இது செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாயின் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள ஒரு மூலோபாய இடமாகும்.
ஜிபூட்டியில் உள்ள இந்த கடற்படைத் தளம் கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும், பிராந்தியத்தில் அதன் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்கும் நோக்கமாக உள்ளதாக சீனா கூறி வந்த போதிலும், சீனாவின் இராணுவ அபிலாஷைகளை நோக்கமாக கொண்டே இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதே கடல்சாா் ஆய்வாளா்களின் கருத்தாக இருக்கிறது.
இந்த கடற்படைத்தளம் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளின் கடற்படை சக்திகளுக்கு சவாலாக இருப்பதாக கருதப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் ஆதிக்கத்திற்கு சவால் விடுக்கூடிய சாத்தியத்தை இது உருவாக்கியிருக்கிறது.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையையும் இந்தியாவின் நலன்களையும் பாதிப்பதாக அந்த நாடு குற்றம் சாட்டி வருகிறது. இந்தியப் பெருங்கடலை அதன் மூலோபாய இடமாக இந்தியா பார்க்கிறது.
பிராந்தியத்தில் மிகப்பொிய கடற்படை சக்தியாக இந்தியா வலிமையடைந்து வருகிறது. இருப்பினும், இந்தப் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சீனாவின் பிரசன்னம் இந்தியாவின் செல்வாக்கிற்கு சவாலாக மட்டுமல்லாமல் அதன் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் எழுப்பியுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் வளர்ந்து வரும் சீன மேலாதிக்கம், பூகோள அரசியல் ரீதியிலான தாக்கங்களையும் உருவாக்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்தைய சக்திகளை இந்தக் கடல் பிராந்தியத்தில் தங்கள் ஈடுபாட்டை அதிகரிக்கவும் காரணமாகியிருக்கிறது.
இலங்கை, பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு போன்ற நாடுகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அதிக முதலீடு செய்து வரும் சீனா, இந்த நாடுகளில் ஆழ்கடல் துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே இணைப்புகளை உருவாக்கியுள்ளது. இத்தகைய செயற்பாடுகளின் மூலம் பிராந்தியத்தில் அதன் மூலோபாய இருப்பை நிலை நிறுத்தி வருகிறது.
சீனாவின் அதிகரித்து வரும் கடலாதிக்க சக்தியை தடுக்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தியா தனது அண்டை நாடுகளான இலங்கை, மாலைத்தீவு மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் தனது உறவுகளை வலுப்படுத்தி வருகிறது. இந்த நாடுகளின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையை சாா்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா இந்த நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.
புதிய போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கடற்படைத் தளங்களை உருவாக்குவதன் மூலம் இந்தியா தனது கடற்படைத் திறனில் முதலீடு செய்து வருகிறது.
மலாக்கா ஜலசந்திக்கு அருகில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இந்தியா ஒரு கடற்படை தளத்தையும் நிறுவியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் கப்பல்களின் நகர்வைக் கண்காணிக்கும் வகையில், கடல்சார் கண்காணிப்புத் திறனையும் இந்தியா வலுப்படுத்தி வருகிறது.
அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் இந்தியா தனது கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறது. இந்த நாடுகளுடன் இந்தியா கடற்படை பயிற்சிகள், உளவுத்துறை பகிர்வு மற்றும் கடல் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டும் வருகிறது.
இந்தியா, ஈரானில் சபாஹர் (Chabahar port) துறைமுகத்தை உருவாக்கி வருகிறது. 2016 ஆம் ஆண்டு, இந்தியா ஈரானுடன் சபாஹர் துறைமுகம் மற்றும் சபாஹர் சிறப்புப் பொருளாதார வலயத்தில் உள்ள தொழில்களில் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
சபாஹர் துறைமுகத்தில் அலுமினியம் உருக்கி மற்றும் யூரியா தயாரிக்கும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சபாஹா் துறைமுகம் ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவிற்கான போக்குவரத்து பாதையாகவும் இருந்து வருகிறது.
சீனாவின் பெல்ட் எண்ட் ரோட் செயற்திட்டம் பிராந்தியத்திலும், புவியரசியலிலும் பதற்றங்களை ஏற்படுத்தி வருவது மட்டுமல்லாமல், பல நாடுகளை கடன் பொறிக்குள்ளும் சிக்க வைத்து வருகிறது.
இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் அந்நாடுகளை பாரிய அரசியல் நெருக்கடியை நோக்கி கொண்டு சென்றிருக்கிறது.
இந்நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார நெருக்கடிகளின் பின்னணியில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டமும், அதன் மூலம் கொடுக்கப்பட்ட வெளிப்படைத் தன்மையற்ற கடன்களும், சீனாவால் ஆசிா்வதிக்கப்படும் ஊழல் அரசியலும் மிக முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
ஏனைய நாடுகளை கடன் வலையில் சிக்க வைத்து, அரசியல் நெருக்கடிகளை உருவாக்கும் சீனாவின் கடன் பொறி இராஜதந்திர நடவடிக்கை, உலகம் முழுவதையும் தற்போது விமா்சனங்களோடு திரும்பி பார்க்க வைத்துள்ளது.