கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இழந்துவிட வேண்டாம்!! (கட்டுரை)
இலங்கை பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், பொது மக்களுக்கு எவ்வாறான முதலீடுகளில் தம்வசமிருக்கும் பணத்தை முதலீடு செய்யலாம் என்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக, கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு பெருமளவு வீழ்ச்சியடைந்தததைத் தொடர்ந்து, பொது மக்கள் சேமிப்பில் வைத்திருந்த பணத்தின் பெறுமதியும் வீழ்ச்சி கண்டது. இதனைத் தொடர்ந்து பணவீக்கமும் அதிகரித்திருந்த நிலையில், வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலைகளைப் பயன்படுத்தி, விபரமறியாத மக்களை ஏமாற்றி, அவர்கள் தம்வசம் வைத்திருக்கும் சேமிப்புகளை சூட்சுமமாக அள்ளிச் செல்லும் திட்டங்கள் எமது சூழலில் பெருகிக் காணப்படுகின்றன.
இவை தொடர்பில் கண்காணிப்பதற்கு எந்த அதிகாரத் தரப்பும் இல்லாத நிலையிலும், நாட்டில் காணப்படும் சட்ட விதிமுறைகளின் பின்தங்கிய நிலைகளை தமக்கு சாதகமாக்கிக் கொண்டும், தனியார் நிறுவனமாக தம்மைப் பதிவு செய்து கொண்டு, குறுகிய காலத்தில் அதிகளவு வட்டி வீதங்களைப் பெற்றுத் தருவதாக மக்களை நம்பும் வகையில் செயலாற்றி பணத்தைப் பெற்றுக் கொள்ளும் கும்பல்கள் பற்றி அண்மைய நாட்களில் பரவலாக பேசப்பட்டது.
இவ்வாறு இயங்கும் மூன்று நிறுவனங்களை சில வாரங்களுக்கு முன்பாக இலங்கை மத்திய வங்கி இனங்கண்டு அவற்றின் சொத்துக்களை முடக்குவது மற்றும் அந்த நிறுவனங்களின் பணிப்பாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை தடுக்கும் உத்தரவுகளையும் பெற்றிருந்தது. இதுபற்றி ஊடகங்களுக்கும் அறிவித்திருந்தது.
இந்த மோசடி நிறுவனங்களின் செயற்பாடுகள் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இலங்கையில் பரவலாக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், இவை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சில தளங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், சமூக வலைத்தளங்களில் தம்மை முன்மாதிரியாகக் கொள்பவர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர்கள் செல்வாக்குச் செலுத்துபவர்கள் (இன்புளுவென்ஸர்கள்) தமது வீடியோ பதிவுகளில் இவ்வாறான மோசடி முதலீட்டுத் திட்டங்கள் பற்றிய பிரச்சாரங்களையும் முன்னெடுத்திருந்தனர்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும். ஏனெனில், ஆரம்பத்தில் இவர்களின் அணுகல் மற்றும் தாம் இலக்கு வைக்கும் நபர்களின் நம்பிக்கையை வெல்லும் வகையிலான செயற்பாடுகள் அனைத்தும் அவர்களின் மீது அதீத நம்பிக்கையை தோற்றுவிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
தொடர்ச்சியாக தொடர்புகளை பேணி, நம்பிக்கையை வென்றதன் பின்னர், பணத்தை வைப்புச் செய்யுமாறு வங்கிக் கணக்கை வழங்குவதுடன், அவர்களின் போலி வாக்குறுதிகளுக்கு ஏமாந்து, மக்களும் தமது பணத்தை வைப்பிலிடுகின்றனர். குறுகிய காலத்தில் அளவுக்கதிகமாக பணத்தை சம்பாதித்துவிட வேண்டும் எனும் பேராசையினால் தாம் வாழ்நாள் முழுவதிலும் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை, இவ்வாறான மோசடியான நிறுவனங்களில் வைப்பிலிட்டு இழந்துவிடும் நிலை எழுகின்றது.
இதனைத் தொடர்ந்து, வழமையாக பொலிசில் முறைப்பாடு செய்தல், கஷ்டப்பட்டு சேமித்த பணம் பறிபோய்விட்டதே என அழுது புலம்புவதும் அர்த்தமில்லாத செயல்களாகிவிடும்.
இலங்கை மத்திய வங்கியினால் இவ்வாறான மோசடி செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிக்கப்படுவதாக சிலர் தவறான அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளனர். உண்மையில், இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகாரமளிக்கப்பட்ட நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் விவரங்கள், பொது மக்களின் பார்வைக்காக அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களின் பட்டியல் காலாகாலத்தில் இலங்கை மத்திய வங்கியினால் மெருகேற்றம் செய்யப்படுவதுடன், அவற்றில் மக்கள் பணத்தை வைப்புச் செய்வதால் எழக்கூடிய ஏதேனும் சிக்கல்களுக்கு இலங்கை மத்திய வங்கி தலையிட்டு, தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும். அது தொடர்பில் ஏற்கனவே தன்வசம் சட்ட விதிமுறைகளையும் கொண்டுள்ளது.
தமது சேமிப்பு முழுதையும் ஒரே ஆதனத்தில் முதலீடு செய்வதை தவிர்த்து, அவற்றை வெவ்வேறு மூலங்களில் முதலீடு செய்வதனூடாக தமது முதலீட்டின் மீது காணப்படும் இடர்நிலையை குறைத்துக் கொள்ள முடியும்.
சில முதலீடுகள் அதிகளவு வருமதிகளை வழங்குவதாக அமைந்திருக்கும். அவ்வாறான முதலீடுகளில் அதிகளவு இடர்கள் இருக்கும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். குறைந்த வருமதிகளை வழங்கும் முதலீடுகள், பாதுகாப்பானவையாக அமைந்திருக்கும்.
இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகாரமளிக்கப்பட்ட நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களினால் வழங்கப்படும் நிலையான வைப்புகள் இவ்வாறு முதலீட்டை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான தெரிவாகும். இலங்கை ரூபாயில் தமது சேமிப்புகளை பேண விரும்பாதவர்கள், பணத்துக்கு மாற்றீடான தங்கத்தை வாங்கி தமது பணத்தை சேமித்து வைக்க முடியும்.
அது போன்று கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யலாம். இதன் போது பங்கு முகவரின் ஆலோசனைகளைப் பெறுவதுடன், சந்தையின் போக்கு தொடர்பில் தொடர்ச்சியாக பின்தொடர்ந்து அறிந்திருப்பது முக்கியமானதாகும். அவ்வாறு மேற்கொள்வதனூடாக தமது முதலீட்டின் உச்ச பயனை பெற்றுக் கொள்ள முடியும்.
காப்புறுதித் திட்டங்களுடன் இணைந்த முதலீடுகளும் நீண்ட கால அடிப்படையில் பயனளிப்பனவாக அமைந்துள்ளன. காணி, வீடு சொத்து வாங்குதலும் தற்காலத்தில் சிறந்த வருமானத்தை வழங்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களாக அமைந்துள்ளன.
நாடு காணப்படும் தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழலில், கஷ்டப்பட்டு உழைத்து, சேமித்து வைத்துள்ள பணத்தை, வெறும் வார்த்தைகளை நம்பி, விளம்பரங்களை நம்பி தொலைத்துவிட வேண்டாம் என்பது கனிவான வேண்டுகோளாக உள்ளது. அனைத்து முதலீடுகளிலும் ஆபத்துகள் காணப்படுகின்றன. எந்த முதலீட்டில் குறைந்த ஆபத்து உள்ளதோ, அதைத் தெரிவு செய்வது சிறந்தது.