ஊழல் தேசத்தில் கல்முனை மீதான கறை!! (கட்டுரை)
‘நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்…’ என்று தொடங்கும் பாடல் வரி, இலங்கை அரசியலின் போக்குகளை நோக்குகின்ற போது, அடிக்கடி ஞாபகத்துக்கு வருவதுண்டு.
உள்ளூராட்சி மன்றங்கள் தொடக்கம், மாகாண சபைகள் தொட்டு பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதிகள் வரை ஒவ்வொருவரிடமும் மக்கள், இந்தக் கேள்வியை உட்கிடையாக முன்வைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இப்போது, உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்து, உள்ளூராட்சி சபைத் தேர்தலும் பெரும் இழுபறியாகி உள்ளது. தேர்தலை உடன் நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கைகள், அழுத்தங்கள் முன்வைக்கப்படுகின்றன. அரசாங்கம் அதற்கெதிரான கற்பிதங்களைச் சொல்லி வருகின்றது.
இப்படியான ஒரு காலகட்டத்தில், கல்முனை மாநகர சபையில் மக்களின் பணம், ஊழல்மோசடிக்கு உள்ளானதாக கடுமையான குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.
‘கிழக்கின் முகவெற்றிலை’ என்று கல்முனை நகரம் அழைக்கப்படுவதுண்டு. ஆயினும், அப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய எம்.எச்.எம் அஷ்ரப், ஏ.ஆர் மன்சூர் ஆகியோரின் மறைவுக்குப் பின்னர், எச்.எம்.எம் ஹரீஸ் எம்.பியின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஊடாகவோ மாநகர சபையின் அதிகாரத்தின் ஊடாகவோ ‘முகவெற்றிலை’ என்ற அடையாளத்தை அழகுபடுத்தும் வகையில், கல்முனையில் முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கின்ற அபிவிருத்தி இடம்பெறவில்லை என்றுதான் கூறவேண்டும்.
அண்மைக் காலமாக, கல்முனையை மையப்படுத்தியதாக பல விவகாரங்கள் பேசுபொருளாகி உள்ளன. கல்முனை மாநகர சபை எல்லையில் இருந்து, தமது வட்டாரங்களைப் பிரித்து, தனியான உள்ளூராட்சி சபை ஒன்றைத் தருமாறு, சாய்ந்தமருது மக்கள் கோரி வருகின்றனர். அதேநேரம், அதிகாரமுள்ள தனியான பிரதேச செயலகத்தை தமிழர்கள் கோரி வருகின்றனர்.
இதற்கிடையில்தான் கல்முனை மாநகர சபையில் கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய் நிதிமோசடி இடம்பெற்றுள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இன்னுமொரு விவகாரத்துக்குள் ‘கிழக்கின் முகவெற்றிலை’ அகப்பட்டுள்ளது எனலாம்.
இலங்கையில் ஊழல்களுக்கும் மோசடிகளுக்கும் பஞ்சமில்லை. தேசிய மட்டத்திலும் பிரதேச மட்டங்களிலும் இவை இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இவற்றில் சில வெளியில் வருகின்றன; சில அப்படியே மூடிமறைக்கப்பட்டு விடுகின்றன.
‘நாட்டைக் கொள்ளையடித்தார்கள்’ என்று வர்ணிக்கப்பட்ட ஆட்சியாளருக்கு, அதிகார குடும்பத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சிறிய சிறிய ‘பிக்பொக்கட்’ திருடர்கள் கைது செய்யப்படுகின்ற நாட்டில், மத்திய வங்கியின் பிணை முறியில், ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொள்ளையடித்தவர்களிடம் இருந்து, மக்கள் பணம் மீளப் பெறப்படவில்லை.
நீதி, நியாயம், நேர்மை என்று கதைத்துக் கொண்டு, காலாகாலமாக அரசியல் அதிகாரத்தின் ஊடாக மக்களுக்குச் சேவையாற்றாமல், பணம் உழைத்துக் கொண்டிருக்கின்ற மற்றும் தரகுப் பணம் வாங்கிக் கொண்டிருக்கின்ற அரசியல்வாதிகள் செய்த மோசடிகள், கொள்ளைகள், நிதிக் கையாடல்கள் எல்லாம் வெறும் பேசுபொருளாக மட்டுந்தான் இருந்தன.
எனவே, இப்படியான ஒரு தேசத்தில், கல்முனை மாநகர சபை விவகாரம் ஆச்சரியமானதோ அபூர்வமானதோ அல்ல. அதேபோல், கல்முனையில் மட்டுமே இவ்வாறான நிதிக் கையாடல் இடம்பெற்று இருக்கின்றது; மற்றைய உள்ளூராட்சி சபைகள் எல்லாம் 100 சதவீதம் முறையாக செயற்பட்டு இருக்கின்றன என்று சொல்வதற்கும் இல்லை.
இதுபோல, பல சபைகளில் சிறியதும் பெரியதுமாக ‘சம்பவங்கள்’ இடம்பெற்று இருக்கலாம். பல விவகாரங்கள் வெளிவராமல் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.
ஆனால், அதற்காக கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்மோசடி விவகாரத்தை, கண்டுகொள்ளாமல் விடவும் முடியாது, மானம்போகும் என்பதற்காக மூடிமறைக்கவும் கூடாது. மாறாக, உண்மை என்ன என்பது கண்டறியப்பட வேண்டியது அவசியமாகும்.
தமிழர்களும் முஸ்லிம்களும் வாழ்கின்ற பிரதேசங்களை உள்ளடக்கியதாக கல்முனை மாநகர சபை உள்ளது. இரு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். அத்துடன் பிரதேச சபை, பிரதேச செயலக சர்ச்சைகள் காரணமாக, தேசிய அளவில் உற்றுநோக்கப்படும் ஒரு சபையாக இதைக் குறிப்பிடலாம்.
இச்சபையானது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையில் உள்ளது. இஸ்லாம் சொல்கின்ற நல்ல பல கொள்கைளின் அடிப்படையில், அக்கட்சி இயங்குவதாக பிரசாரப்படுத்தப்படுகின்றது. கட்சித் தலைவர் ஹக்கீம் பொதுவாகவே, ஊழல்களை விமர்சிப்பவராகக் காணப்படுகின்றார்.
கல்முனையில் எச்.எம்.எம் ஹரீஸ் எம்.பியாக இருக்கின்றார். ஆயுட்காலம் முடிவடைந்த கடைசி மாநகர சபையின் மேயராக சட்டத்தரணி றகீப் பதவி வகித்தார். எனவே, மேற்குறிப்பிட்ட இந்தக் கௌரவங்களைப் பேணுவதற்காக, கல்முனை மாநகர சபை ஒழுங்கான முறையில் மிகக் கவனமாகச் செயற்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இதையெல்லாம் தாண்டி, அங்கு ஓர் ஊழல், நிதிமோசடி இடம்பெற்றிருக்கின்றது என்றால், அதன் உண்மையான பின்னணி என்ன என்பது முதலில் கண்டறியப்பட வேண்டும். பணத்தைச் சுருட்டுவது ஒருபுறமிருக்க, வேறு உள்நோக்கங்களும் இருந்ததா என்பது வெளிக் கொணரப்பட வேண்டும்.
கல்முனை மாநகர சபை ஆணையாளர் அஸ்மி, இது குறித்து கருத்து வெளியிட்டிருந்த போது, இதுவரையான விசாரணைகளின் அடிப்படையில் 79 இலட்சம் ரூபாய் அளவிலான ஊழல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்து உள்ளதாகவும், மொத்தமாக சுமார் 1.9 கோடி ரூபாய் மோசடி இடம்பெற்றிருக்கலாம் என கணிக்க முடிவதாகவும் கூறியிருந்தார். இவ்விடயம் தொடர்பில், உரிய விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் அறிவித்திருந்தார்.
கல்முனை மாநகர சபைக்கு கிடைக்கப் பெற்ற நிதியில் குறிப்பாக, மக்களின் வரிப்பணத்தில் மோசடி இடம்பெற்று உள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக, கடுமையான விமர்சனங்களை பல தரப்பும் முன்வைக்கின்றன.
மறுபுறத்தில், ஊழல் எல்லா இடங்களிலும் நடப்பது வழக்கமானதே என்ற பாணியிலான மழுப்பலான வியாக்கியானங்களும் முன்வைக்கப்படுகின்றன. இவ்விவகாரத்தின் பாரதூரத் தன்மையைக் குறைத்துக் காட்டும் முயற்சியாகவே இதைக் கருத வேண்டியுள்ளது. இந்த ஊழல்மோசடியை மூடிமறைப்பதற்கான ஆரம்ப முயற்சியாகவும் இதைக் கருதலாம்.
எவ்வாறிருப்பினும், இதை அவ்வாறு கண்டும் காணாமல் விட்டுவிட முடியாது. ஏனெனில், ஒரு நிதிக் கொடுக்கல் வாங்கல் என்பது, பல உத்தியோகத்தர்களைக் கடந்து செல்கின்றது. பொறுப்புச் சொல்ல வேண்டிய இடத்தில் ஆணையாளரும், மாநகர சபை மேயரும் உள்ளனர்.
இந்நிலையில், கல்முனை மாநகர சபைக்குச் செல்கின்ற பொதுமக்கள், தாங்கள் இதற்கு முன்னர் செலுத்திய சில கட்டணங்கள் தொடர்பில் ஏதோ தில்லுமுல்லு இடம்பெற்றிருப்பதை அனுப ரீதியாக உணரக் கூடியதாக இருப்பதாக கூறிக்கொள்கின்றார்கள்.
கல்முனை மாநகர சபையில் ஊழல் இடம்பெற்றது என்பதும், அதனை ‘இவர்கள்தான் செய்தார்கள்’ என்பதும் இன்னும் முற்றுமுழுதாகச் சட்டத்தின் ஊடாக வெளிப்படுத்தப்படவில்லை. எனவே, இதில் யாரையும் குற்றவாளியாகச் சுட்டிக்காட்ட வேண்டியதில்லை.
ஆயினும். சபையில் ஓர் ஊழல்மோசடி, குற்றம் என்பன இடம்பெற்றிருந்தால், அதற்குப் பின்னால் இருந்தவர்கள் எங்கே இருந்தாலும், அதனை செயற்படுத்தியவர்கள் மாநகர சபைக்குள்தான் இருக்கின்றார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே, முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
நாட்டில் ‘கட்டமைப்பு மாற்றம்’ உருவாக வேண்டும் என்று கோரி வருகின்றோம். பெரிய கொள்ளையர்கள் பற்றிப் பேசி வருகின்றோம். இந்தப் பின்னணியில், உண்மையாக இக்கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டுமாயின், அந்த மாற்றம் உள்ளூராட்சி சபைகளில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட வேண்டும்.
கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதிக் கையாடல் பற்றிய விசாரணைகள் துரிதகதியில் வெளிப்படையாக இடம்பெற வேண்டும். கல்முனை மீது படிந்துள்ள கறையை அகற்றுவதாக இது அமைதல் வேண்டும்.
இதனூடாக, அரசியல்வாதிகளைத் திருத்துவது மட்டுமன்றி, உள்ளூராட்சி சபைகளுக்கும் அதேபோன்று ஊழல் அரசியல்வாதிகளுக்குத் துணைபோகின்ற அரச அதிகாரிகளுக்கும் ஒரு பாடம் புகட்டுவதாக சட்ட நடவடிக்கைகள் அமைய வேண்டும்.
கல்முனை விவகாரத்துடன் தொடர்புபட்ட ஊழல் அரசியல்வாதிகளை வெளிப்படுத்துவதன் ஊடாக, மோசடி செய்த அதிகாரிகளை கடுமையாக தண்டிப்பதன் ஊடாக, கூட்டுக் களவாணிகளையும் பின்னணியையும் சட்டப்படி வெளிக் கொணர்வதன் ஊடாக இந்தக் கறை கழுவப்படலாம்.