;
Athirady Tamil News

நாணய நிதியமும் ஜனாதிபதி தேர்தலும் !! (கட்டுரை)

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது முறையாகவும் ஒத்திவைக்கப்படும் நிலைமைதான் தெரிகிறது.

முதலாவதாக, மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல், அரசாங்கம் நிதியை வழங்காத காரணத்தால் ஏப்ரல் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இம்முறையும் அதே காரணத்தால், தேர்தல் ஒத்திவைக்கப்படப் போகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதி வழங்குமாறு உயர்நீதிமன்றம், நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவை பணித்திருந்தது. இருந்தபோதிலும், தேர்தல் ஆணைக்குழுவினதும் அரச அச்சகத்தினதும் கோரிக்கைகளை, நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிவிட்டு, நிதி அமைச்சின் செயலாளர் அமைதியாக இருகக்கிறார்.

இதற்கிடையே, நிதி அமைச்சின் செயலாளர் நீதிமன்றத்தின் கட்டளையை புறக்கணித்தார் என்றும் அதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்தார் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும், இரண்டு மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன. “நிதி அமைச்சரின் அனுமதியின்றி, என்னால் நிதி வழங்க முடியாது” என்று அவர், நீதிமன்றத்தில் கூறப் போகிறார் போலும்!

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு முன்னர், ஜனாதிபதி ஒரு செயலைச் செய்தார் என்றோ அல்லது, செய்யவில்லை என்றோ அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய, சட்டத்தில் இடம் இருக்கவில்லை. ஆனால், இப்போது ஜனாதிபதியின் செயல் குறித்து, அவருக்குப் பதிலாக சட்ட மாஅதிபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.

2018ஆம் ஆண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்றத்தை சட்ட விரோதமாகக் கலைத்த போது, அந்த அடிப்படையிலேயே அதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடிந்தது.

இப்போது, தேர்தலுக்காக நிதி வழங்குமாறு நீதிமன்றம், சிலவேளை நிதி அமைச்சரான ஜனாதிபதியையும் பணிக்கலாம். அவர் அதைப் புறக்கணித்தால், அவருக்குப் பதிலாக சட்ட மாஅதிபருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செயயப்படுமா, நீதிமன்றம் அது அவமதிப்புத் தான் என்று தீர்ப்பு வழங்குமா, அப்போது ஜனாதிபதி தண்டிக்கப்படுவாரா? தண்டிக்க முடியுமா என்பதெல்லாம் காலம் பதில் கூற வேண்டிய கேள்விகளாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமது கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் ஆளும் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் தேர்தலில் படுதோல்வி அடையும் என்பதைத் தெளிவாகத் தெரிந்திருப்பதாலேயே, தொடர்ந்து தேர்தலுக்கு முட்டுக்கட்டைகளை போடுகிறார் என்பது தெளிவான விடயமாகும்.

இந்த நிலையில், டிசெம்பர் மாதத்துக்கு முன்னர், தேர்தல் நடைபெறும் என்று முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்‌ஷ கூறியிருக்கிறார். இதை, அவர் எதிர்க்கட்சிகளைக் கிண்டலடிப்பதற்காகவே கூறியிருக்க வேண்டும்.

தேர்தலுக்கு சுமார் 1,000 கோடி ரூபாய் அவசியமாக இருந்த போதிலும், உடனடியாக 500 அல்லது 600 கோடி ரூபாய் இருந்தால், தேர்தலை நடத்தலாம் என்று தேர்தல் ஆணைக்குழுவும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும் கூறுகின்றன. அதாவது, 15 மில்லியன் டொலருக்கு நிகரான பணம் உடனடியாக அவசியமாகிறது.

தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம் 330 மில்லியன் டொலர் பணம் கிடைத்திருப்பதால், அதில் 15 மில்லியன் டொலரை செலவழித்து தேர்தலை நடத்து முடியும். ஆயினும், அரசாங்கம் அதற்கும் இணங்காது.

நாணய நிதியத்தின் தலையீட்டில், உலக வங்கியிடமும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமும் ஜப்பானிடமும் மேலும் மூன்று பில்லியன் டொலர் கடனாக கிடைக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதேவேளை, அரச நிறுவனங்களை விற்று, சுமார் 3 பில்லியன் டொலர் பணத்தைப் பெறலாம் என வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி டிசெம்பர் மாதம் ‘ரொய்ட்டர்ஸ்’ செய்திச் சேவையிடம் கூறியிருந்தார்.

இவற்றைப் பாவித்து, நாட்டில் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை குறைத்து, விலைவாசியையும் ஓரளவுக்குக் குறைத்துவிட்டால், அரசாங்கத்தின் மீதான மக்களின் வெறுப்பு குறையும். அதன் பின்னர், தேர்தல்களை நடத்தி, தமது அதிகாரத்தை தொடரலாம் என்று ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவும் கணக்குப் போடுவதாகத் தெரிகிறது.

கடந்த மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பொன்றின்படி, மக்கள் விடுதலை முன்னணிக்கு 43 சதவீத மக்கள் ஆதரவு இருந்தது. ஐக்கிய மக்கள் சக்திக்கு 30 சதவீத ஆதரவும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒன்பது சதவீத ஆதரவும் பொதுஜன பெரமுனவுக்கு எட்டு சதவீத ஆதரவும் வழங்கப்பட்டு இருந்தது.

மக்கள் விடுதலை முன்னணிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்குமான மக்களின் ஆதரவு அறிவுபூர்வமானதா அல்லது வெறும் பொருளாதார நெருக்கடியால் உந்தப்பட்டதா என்பதை, எதிர்வரும் தேர்தல்களில் தான் பார்க்க முடியும். அது பொருளாதார நெருக்கடியால் உந்தப்பட்டது; அதைத் திருப்பி விடலாம் என்பதே, இரண்டு ஆளும் கட்சிகளினதும் கருத்தாக இருக்கிறது.

எனவே, பாராளுமன்றத்தில் ஓர் ஆசனத்தையாவது நேரடி தேர்தலில் பெறத் தவறிய ஐக்கிய தேசிய கட்சி, ஜனாதிபதி தேர்தலில் இப்போது கண்வைத்திருப்பதாகவே கூறப்படுகிறது.

அதேவேளை, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, கடந்த ஒரு வருட காலமாக மக்கள் முன் வர முடியாமல் பதுங்கியிருந்த பொதுஜன பெரமுனவும் நாட்டுக்கு கிடைக்கப் போகும் கடன் பணத்தால், ஐக்கிய தேசிய கட்சியல்ல, தாமே தலைதூக்க வேண்டும் என்பதைப் போல், தற்போது பொதுக் கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளது.

நாணய நிதியத்தின் முதலாவது தொகை கடன் பணம் கிடைத்தன் பின்னர், ‘நான் தான் எல்லாவற்றையும் செய்தேன்’ என்ற தோரணையில், ஜனாதிபதி கருத்து வெளியிட்டு வருகிறார். அதேவேளை, கடந்த கால பாவங்களை எல்லாம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் தலையில் கட்டிவிட்டு, மக்கள் முன்னால் வீராப்புப் பேசலாம் என்று பொதுஜன பெரமுன நினைக்கிறது.

“நாடு பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியிருந்த போது, எவருமே நாட்டை காப்பாற்ற முன்வராத நிலையில், நானே முன் வந்தேன்” என்று ஜனாதிபதி கூறுகிறார். உண்மைதான்!

கடந்த வருடம் மே மாதம் ஒன்பதாம் திகதி, மக்கள் எழுச்சியின் காரணமாக மஹிந்த ராஜபக்‌ஷ, பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்ய நேர்ந்த போது, பொதுஜன பெரமுனவின் எல்லோரும் தத்தமது குகைகளில் பதுங்கினார்கள். அப்போது ஜனாதிபதி கோட்டாபய, எதிர்க்கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்தார்.

“நான், பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டாலும், எனக்கு பாராளுமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாமல் எதையும் செய்ய முடியாது” என்று, மக்கள் விடுமுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க கூறினார்.

அப்போது நாணய நிதியத்துடன், அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருந்தது. அதை முன்னெடுத்துச் செல்லாது, பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க முடியாது என்றும் ஆனால், அதை முன்னெடுத்துச் செல்வது, தமது கொள்கைக்கு முரணானது என்றும் மக்கள் விடுதலை முன்னணி எண்ணியது. நாணய நிதியத்துடனான திட்டத்தை ஏற்றுக் கொண்டாலும் பிரச்சினையை தம்மால் தீர்க்க முடியுமா என்ற தயக்கம் சஜித் பிரேமதாஸவிடம் இருந்தது.

கடந்த பொதுத் தேர்தலை அடுத்து, அரசியலில் விரக்தியடைந்த மனநிலையில் ரணில் இருந்ததாகவும், ஐ.தே.கவை கலைத்துவிட நினைத்ததாகவும் முன்னாள் அமைச்சர் நவின் திஸாநாயக்க அண்மையில் கூறியிருந்தார்.

அதனாலோ என்னவோ, தேர்தல் நடைபெற்று 10 மாதங்களுக்குப் பின்னர்தான் ரணில், ஐ.தே.கவுக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்துக்கு தம்மை நியமிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்தார். அதாவது, பொதுத் தேர்தலுக்குப் பின்னர், தமக்கு எதிர்காலமே இல்லை என்று தான் அவர் நினைத்திருக்கிறார். இந்த நிலையில்தான் ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் ஒருவரை தேடினார்.

ஏற்கெனவே ரணிலுக்கும் ராஜபக்‌ஷர்களுக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு இருந்தது. அதேவேளை, ஏற்கெனவே கோட்டாபய அரசாங்கம், நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருந்தது. நாணய நிதியத்திடம் இருந்து ஓரளவு பணம் கிடைக்கும்; அந்நிதியத்தின் தலையீட்டால் வேறு வழிகளிலும் கடன் பெறலாம்; அவற்றை வைத்து அரசியல் ரீதியாகத் தம்மை பலப்படுத்திக் கொள்ளலாம்; அல்லது, குறைந்த பட்சம் அடுத்த பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதி தேர்தல் வரை காலத்தை கடத்தலாம் என்பதை ரணில், தனது அரசியல் அனுபவ வாயிலாக கண்டார். உடனே அவர் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் தான், பொதுஜன பெரமுனவும் தலைதூக்க முயல்கிறது. கோட்டாபய தான் எல்லாவற்றுக்கும் காரணம்; மஹிந்த பதவியில் இருந்திருந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்காது என்று கூறவே அவர்கள் இப்போது முயல்கின்றனர். ஆனால், கடந்த ஏப்ரலில் ‘டெய்லி மிரர்’ பத்திரிகைககு வழங்கிய நேர்காணலில், கோட்டாபயவின் சகல நடவடிக்கைகளையும் மஹிந்த ராஜபக்‌ஷ வரவேற்று இருந்தார்.

நாணய நிதியத்தின் திட்டங்களின் வெற்றியிலேயே, இரண்டு ஆளும் கட்சிகளினதும் குறிப்பாக ரணிலின் எதிர்காலம் தங்கியிருகிறது. அந்தத் திட்டத்தின் பிரகாரம், அரசாங்கம் ஊழலை கட்டுப்படுத்த வேண்டும். (முடியுமா?) தொடர்ந்து வரிகளை அதிகரிக்க வேண்டும்; மின் கட்டனத்தை உயர்வாகவே வைத்திருக்க வேண்டும். அரச நிறுவனங்களை மறுசீரமைக்க (விற்க) வேண்டும். வெளிநாட்டு கடனைக் குறைக்க வழி சமைக்க வேண்டும்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை பொறுத்தே, நிதியத்தின் மிகுதிப் பணம் படிப்படியாக கிடைக்கும். அதற்குள், ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் வரும். எனவே, நாணய நிதியம் எந்தளவுக்கு ஆளும் கட்சிகளுக்கு கைகொடுக்கும் என்பது சந்தேகமே!

You might also like

Leave A Reply

Your email address will not be published.