விவசாயிகளைப் பந்தாடும் யானைகள் !! (கட்டுரை)
“மனிதர்களின் வாழ்வுரிமையை யானைகள் பறிக்கின்றன. ஆனால், யானைகளைத் துன்புறுத்துவதும் கொல்வதும் தண்டனைக்கு உரிய குற்றங்களாகும். வெடிகள் போன்றவற்றுக்கு யானைகள் பழக்கப்பட்டு இருப்பதால் இவற்றை விரட்ட வித்தியாசமாக சிந்தித்து செயற்பட வேண்டி உள்ளது. பனை ஓலைகளில் நெருப்பை கொளுத்தி எறிந்தால், யானைகள் மிரண்டு ஓடி விடும்” என்று தனது அனுபவத்தில் கண்டு கொண்டதை விவரித்தார் அம்பாறை, காரைதீவைச் சேர்ந்த ஓய்வு நிலை பிரதி அதிபரும் விவசாய ஆர்வலருமான எஸ். தில்லையம்பலம்.
வாகரையில் உள்ள வயல்களில் யானைகளை விரட்டுவதற்காக தேனீக்களை வளர்க்கின்றனர். தேனீக்களின் பிரசன்னம் காரணமாக யானைகள் அந்த பக்கமே தலை காட்ட மாட்டா!
இலங்கை மக்களை பொறுத்த வரை மிக அதிக எண்ணிக்கையிலான தொழில் முயற்சியாளர்களில் விவசாயிகளும் அடங்குகின்றனர். எல்லா மாகாணங்களிலுமே விவசாய செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால், அனைத்து மாகாணங்களின் விவசாயிகளும் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் பொதுவானவையாகவே உள்ளன; அவை பாரதூரமானவை.
வனாந்தரங்களை அண்டிய கிராமங்களில் வயல் செய்கின்ற, வாழ்கின்ற மக்களுக்கும் காட்டு யானைகளுக்கும் இடையில், நீண்ட தசாப்த காலமாக பாரிய யுத்தம் இடம்பெற்று வருகின்றது. அவை, தற்காலத்தில் உக்கிரம் அடைந்துள்ளது. இது ஒரு தேசிய பிரச்சினையாகும்.
விவசாயிகள் பரம்பரை பணக்காரர்கள் அல்லர். மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் அதிக பிரயத்தனங்களை மேற்கொண்டே விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சொந்த வயல்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும் உள்ளார்கள். அதே போல ஒத்திக்கு (குத்தகைக்கு) வயலை பெற்று விவசாயம் செய்பவர்களும் உள்ளனர்.
விவசாய நடவடிக்கைகளில் ஒவ்வொரு கட்டத்தின்போதும் பல்லாயிரக் கணக்கான பணத்தை செலவு செய்ய நேர்கின்றது. அறுவடைக்கு தயாராகின்ற இறுதி கட்டத்தின்போது காட்டு யானைகளின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள நேர்கின்றது.
யானைகள் நெல்லை தின்பதற்காக வயல்களுக்கு படை எடுத்து வருகின்றன. வயல்களை துவம்சம் செய்கின்றன. காவலுக்கு ஆட்களை நிறுத்த வேண்டிய தேவை விவசாயிகளுக்கு ஏற்படுகின்றது. காவலாளிகள் தங்குவதற்கு வாடிகள் அமைத்து கொடுக்கின்றனர். வாடிகளை நிர்மாணிப்பதற்கும் கணிசமான பணத்தை செலவு செய்ய நேர்கின்றது. அதே போல மின்சார வேலிகளை நிறுவுவதற்கும் இலட்சம் ரூபாய்களை செலவிட நேர்கின்றது. காவலாளிகளுக்கு ஒரு நாளைக்கு தலா 2000 ரூபாய் வரை நாள் கூலி கொடுக்க வேண்டும். ஆனால் இவற்றால் எல்லாம் குறிப்பிட தக்க பலன்கள் கிடைப்பதாக இல்லை என்பதே வருத்தம் ஆகும்.
யானைகள் பயிர்களை மாத்திரம் அல்ல மனித உயிர்களையும் அழித்து விடுகின்றன. யானைகளை துரத்துவதற்கு வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளுடைய உதவி, ஒத்தாசைகளை பெற வேண்டி ஏற்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களின்போது இலஞ்சம், ஊழல் தலை விரித்தாடுவது தவிர்க்க முடியாதது.
ஒரு முறை விசேடமாக கவனிக்காவிட்டால் அடுத்த முறை இந்த அதிகாரிகள் வரவே மாட்டார்கள். விவசாயிகள் அறுவடையை செய்து கொண்டு நெல்லை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்த பிற்பாடும் வேறு விதமாக யானைகளின் அட்டகாசம் தொடர்கின்றது. வீடுகளுக்கே வந்து விடுகின்றன.
விவசாயிகள் எதிர்நோக்குகின்ற இன்னுமொரு பிரச்சினையும் இங்கு இருக்கின்றது. காட்டு யானைகளால் தாக்கப்படலாம் என்கிற அச்சம்கூட விவசாயிகளை பொருளாதார ரீதியாக பெரிதும் பாதித்து நிற்கின்றது. இந்த அச்சத்தில் கதிர்கள் முற்றுவதற்கு முன்பாகவே அவசரப்பட்டு நெல்லை அறுவடை செய்து விடுகின்றனர். இதனால் மிக குறைந்த விலைக்குத்தான் இந்நெல்லை விற்பனை செய்ய வேண்டி ஏற்படுகின்றது. இது விவசாயிகளுக்கு பாரிய நட்டத்தை கொண்டு வருகின்றது. பாரிய சுமையாக மாறுகின்றது.
விவசாயிகளில் கணிசமான ஒரு தொகையினர் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக விவசாயம் செய்வதை தவிர்த்து வீட்டில் ஒதுங்கி உள்ளனர். இவர்களில் பலர் சொந்த விவசாய நிலங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்தும் உள்ளனர். இன்னும் சிலர் அகப்பட்ட பெறுமதிக்கு ஒத்திக்கு கொடுத்து உள்ளனர். விளைச்சல் ஒத்தி நடைமுறையில் அதிகரித்து வருகின்றது. அதாவது வயலை ஒத்திக்கு பெறுபவர் அறுவடையின்போது அவர் விரும்புகின்ற எண்ணிக்கையிலான நெல் மூடையை ஒத்தியாக வழங்குவதை காண முடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி , பட்டிப்பளை, வவுணதீவு, கிரான், வாகரை, செங்கலடி போன்ற பிரதேச செயலக பிரிவுகளில் காட்டு யானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள கலமந்தன்வெளி, தும்பாலை, நாற்பதாம் கிராமம், வைக்கிஎல்லை, இராணமடு போன்ற இடங்களை சேர்ந்த விவசாயிகள் மாத்திரம் அல்ல, பொதுமக்களும் அச்சத்தில் உறைந்து காணப்படுகின்றனர். கடந்த கால உயிரிழப்புகள், பொருளிழப்புகள் ஆகியன காரணமாக இயல்பு வாழ்க்கை குழம்பி போய் உள்ளது.
வக்கி எல்லைக்கான வட்டவிதானை சாமித்தம்பி வெள்ளைக்குட்டி கருத்து கூறியபோது, “நாங்கள் யுத்தத்துக்கு பின்னர் குடியேற்றப்பட்ட இடத்தில் வாழ்ந்து வருகின்றோம். நாளாந்தம் எங்கள் கிராமத்தை காட்டு யானைகள் ஆக்கிரமிக்கின்றன; உயிரை கையில் பிடித்தவாறுதான் நித்திரை கொண்டு எழும்புகின்றோம், எங்கள் உடைமைகள், விவசாயம், வீட்டு தோட்டம் போன்றவை அழிக்கப்படுகின்றன. காட்டு யானைகளில் இருந்து எங்களையும், எங்கள் பொருளாதாரத்தையும் பாதுகாத்து தருமாறும், இப்பிரச்சினையில் இருந்து விடுவிக்குமாறும் அரசாங்கத்திடம் கோருகின்றோம்” என தெரிவித்தார்.
வெல்லாவெளி பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகியை இந்த விடயமாகக் கேட்டபோது, “மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் இது வரையும் 18 பேர் உயிரிழந்து உள்ளனர். ஆறு பேர் படுகாயம் அடைந்து நடக்க முடியாமல் இருக்கின்றனர். எமது பிரதேசத்தில் கலமந்தன்வெளி, தும்பாலை, நாற்பதாம் கிராமம், வைக்கிஎல்லை, இராணமடு போன்ற பிரதேசங்களில் யானைகள் தரித்து நிற்பதை காண கூடியதாக உள்ளது; அருகில் மக்கள் குடியிருக்கின்றனர். பொதுமக்களும் விவசாயிகளும் அன்றாட நடவடிக்கைகளை செய்ய முடியாமல் அச்சத்தில் வாழ்கின்றனர். இங்கெல்லாம் பொதுமக்களின் பொருளாதாரம் யானைகளின் தொல்லைகளால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி நிற்கிறது”என தெரிவித்தார்.
மூவினங்களையும் சேர்ந்த விவசாயிகள் அம்பாறை மாவட்டத்தில் உள்ளார்கள், அம்பாறை, சம்மாந்துறை, காரைதீவு என்றெல்லாம் யானைகளுக்கு வித்தியாசம் தெரியாது. யானைகள் இன ரீதியாக தாக்குதல்களை மேற்கொள்வதில்லை என்பதால், ஒரே விதமான பாதிப்புக்ளைதான் இம்மாவட்ட மக்கள் எதிர்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் கருணை உள்ளம் கொண்டவர்கள்; சட்டத்துக்கு அஞ்சுபவர்கள். வயல்வெளிகளில் குறிப்பிட்ட இடங்களில் நுட்பமான முறைகளில் ஆணிகளை தயார்ப்படுத்தி வைத்தால் யானைகள் வருகின்றபோது அவை யானைகளின் கால்களில் ஏறி விடும். ஆணி அடிபட்ட யானை வேதனையில் பிளிறும். ஏனைய யானைகள் பயந்தோடி விடும். ஆணி அடிபட்ட யானைக்கு உயிராபத்து நேரவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், பேரழிவுகளை ஏற்படுத்தி கொண்டிருக்கின்ற யானைகள் மீது இந்த முறையை கையாள விவசாயிகள் விரும்புவதில்லை.
புதிய உத்திகள் கண்டறியப்பட வேண்டும். ஏனைய விவசாய நாடுகளிலும் இவ்வாறான பிரச்சினைகள் இருக்கின்றன. அவர்களின் அனுபவங்களை பெற்று யானைகளின் தொல்லைகளில் இருந்து முழுமையாகவோ, பகுதியளவிலோ விடுபட வேண்டி இருக்கின்றது. அதே நேரம் முறையான காப்புறுதிகள், இழப்பீடுகள் விவசாயிகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
காட்டு யானைகளால் விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்ற முன்னெடுப்புகள், முயற்சிகள் ஆகியவற்றில் விவசாய அமைச்சு, வன விலங்குகள் அமைச்சு ஆகியன ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல ஒருமித்து செயற்பட வேண்டும். அதே போல மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கம் ஆகியனவும் ஒருமித்து செயற்பட வேண்டும். மாகாணங்களின் ஆளுனர்கள் கூடுதலான நிதி ஒதுக்கீடுகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
காட்டு யானைகளின் அட்டகாசங்களால் பாதிக்கப்படுகின்ற விவசாயிகளின் பிரச்சினைகளின் தீர்ப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு, அமைச்சரவை குழு, பாராளுமன்ற உப குழு போன்றவை நியமிக்கப்படுவது தீர்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும். அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டத்தில் கூடுதலான ரொக்க நிதி காட்டு யானைகளின் பிரச்சினையை கையாள்வதற்கும், பாதிக்கப்படுகின்ற விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடு வழங்குவதற்கும் ஒதுக்கீடு செய்யப்படல் வேண்டும்.
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்களுக்கு உண்மையில் காட்டு யானைகளின் அட்டகாசங்கள் காரணமாக தாயக விவசாயிகள் பெரிதும் எதிர்கொண்டு நிற்கின்ற துன்பியல் வாழ்க்கை சரியாக தெரியாது. அது குறித்த அறிவூட்டல்கள், தெளிவூட்டல்கள் ஆகியவற்றை புலம்பெயர்ந்து வாழ்கின்ற இலங்கையர்களுக்கு வழங்குகின்றபோது தாயகத்தில் உள்ள விவசாய உறவுகளுக்கு உதவிகள் செய்ய அவர்கள் முன்வருவார்கள். இது விவசாயிகளின் சுமை, துன்பம் ஆகியவற்றை குறைப்பதற்கு வழி ஏற்படுத்தி கொடுக்கும் என்பது எமது கருத்தாகும்.
யானையின் பலம் தும்பிக்கையிலே இருக்கின்றது. மனிதனின் பலம் நம்பிக்கையிலே இருக்கின்றது. காரைதீவு கமநல சேவைகள் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி மார்க்கண்டு சிதம்பரநாதன் இன்னும் சில மாதங்களில் அரசாங்க சேவையில் இருந்து ஓய்வு பெறுகின்றார். அவருடைய அனுபவத்தின்படி யுத்தத்துக்கு பின்னரான கால பகுதியில் யானைகளின் அட்டகாசம் பெரிதும் அதிகரித்து காணப்படுகின்றது. அவர் யானைகளின் அட்டகாசத்தில் இருந்து விடுபடுவதற்கு மிக பொருத்தமான ஆலோசனை ஒன்றை முன்வைத்தார். பக்கத்து பக்கத்து வயல்களை சேர்ந்த விவசாயிகள் குழு நிலையில் இணைந்து வயல் எல்லைகளில் சூரிய மின்சாரத்தில் இயங்குகின்ற வகையில் மின்சார கம்பிகளால் நீளமான – தொடர் வேலிகள் அமைக்க வேண்டும், இதற்கான செலவு ஒப்பீட்டளவில் குறைவு என்பதுடன் தனிப்பட்ட வகையில் தனி ஒரு விவசாயியை பெரிதாக தாக்க மாட்டாது. அத்துடன் இம்மின்சார கம்பிகளை தாண்டி யானைகள் வயலுக்குள் நுழைய மாட்டாது என்று தெரிவிக்கின்றார்.
யானை வேலிகளுக்கு அருகில் அகழிகளை தோண்டுகின்ற செயல் திட்டமும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. 10 அடி அகலமும், 10 அடி ஆழமும் கொண்ட அகழிகள் பொருத்தமானவை என்று துறை சார்ந்த நிபுணர்களால் சுட்டி காட்டப்பட்டு இருக்கின்றது. மாவட்ட செயலகங்களில் இவை குறித்த மந்திராலோசனை கூட்டங்கள் இடம்பெற்று இருக்கின்றன.
இதுவும் கடந்து போகும் என்பது போல யானைகளின் அட்டகாசத்துக்கு நிச்சயம் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டியது அவசியமும்; அவசரமும் ஆகும்.