;
Athirady Tamil News

இயங்கு நிலையற்ற முஸ்லிம் எம்.பிக்கள்!! (கட்டுரை)

0

அரசியல் என்பது, எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பதை அடிப்படையாகக் கொண்ட ஒருவித கலையாகும். இது எல்லோருக்கும் வாய்த்துவிடாது.

கால மாற்றத்துக்கு ஏற்ப, தங்களை மாற்றிக் கொள்ளாத மனிதர்கள், உலக ஒழுங்கில் இருந்து புறமொதுக்கப்பட்டு விடுவதைப் போல, களநிலைமைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களை எல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, எல்லாக் காலத்திலும் காரியத்தில் கண்ணாயிருக்கின்ற அரசியல்வாதிகள்தான், மக்கள் மனங்களில் நிலைபெறுகின்றார்கள்.

இது அரசியலுக்கு மட்டுமன்றி எல்லா தொழிற்றுறைகளுக்கும் பொருந்தும். பல நூறு ஆசிரியர்கள் கற்பித்தாலும், எல்லா ஆசிரியர்களையும் மாணவர்கள் குருவாக மனதில் குடியமர்த்துவதில்லை. ஆயிரக்கணக்கான அரச அதிகாரிகள் பதவிக்கு வந்தாலும், அனைவருமே மக்கள் மனங்களில் நிலைத்திருப்பதில்லை. இது பொதுவானது; என்றாலும் மக்கள் பிரதிநிதிகள், இவர்களுள் சற்று விசேடமானவர்கள் எனலாம்!

மக்களின் வாக்குகளை நம்பி பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டமாக அவர்கள் இருப்பதால், அரசியலில் ஏற்படும் இலையுதிர்காலம், பனிக்காலம், புயற்காலம், வரட்சிக்காலம், கோடை மாரி என எல்லாப் பருவ காலங்களிலும் இயங்கக் கூடியவர்களாக, அவர்கள் தம்மை புடம்போட்டுக் கொள்ள வேண்டும்.

அரச அதிகாரிகள் விடுமுறை தினங்களில் ஓய்வாக விடுப்பில் இருப்பது மாதிரி அல்லது, பாடசாலை ஆசிரியர்கள் தவணை விடுமுறையில் தமது பணிகளை சற்று ஒதுக்கி பொழுதைக் கழிப்பது போல, அரசியல்வாதிகள் செயற்பட முடியாது. அப்படிச் செயற்படுபவர்கள் மேற்குறிப்பிட்ட ‘இயங்குநிலை மக்கள் பிரதிகள்’ என்ற வகுதிக்குள் உள்ளடங்கமாட்டார்கள்.

இந்த அடிப்படையில் நோக்கினால், முஸ்லிம் அரசியல்வாதிகள், அதாவது தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பிக்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இயங்குபவர்களாகவும் மீதமுள்ள அனைத்துக் காலத்திலும் சமூக விடயத்தில் வாழாவிருப்பவர்களாக அல்லது, தமது கஜானாக்களுக்காக உழைப்பவர்களாகவே இருக்கக் காண்கின்றோம்.

ரமழான் நோன்பு காலத்தில் அல்லது விடுமுறையில் இருக்கின்ற பாடசாலை மாணவர்கள் போன்று, பரபரப்பின்றி, வேலைப்பழு இன்றி, ஓய்வாக காலத்தைக் கழிக்கவே 99 சதவீதமான முஸ்லிம் எம்.பிக்கள் விரும்புவதாக தோன்றுகின்றது.

உலக அரசியல் ஒழுங்கு என்று ஒன்று இருக்கின்றது. குறிப்பாக ‘ஒற்றை உலக ஒழுங்கு’ (வன் வேர்ல்ட் ஓர்டர்) என்பது இதில் முக்கியமானது. அத்துடன், இந்த உலகை திரைக்குப் பின்னால் இருந்து யார் ஆட்டுவிக்கின்றார்கள் என்பதும் கவனிப்புக்கு உரியது. இந்த ஓர் உலக ஒழுங்கில் இப்போது, சில அதிர்வுகள் ஏற்படத் தொடங்கி இருக்கின்றன.

சமகாலத்தில், இலங்கை அரசியலும் பலவிதமான மாறுதல்களுக்கு உள்ளாகி வருகின்றது. வெளிப்படையாக பார்க்கின்ற போது, மைத்திரியும் மஹிந்தவும் ரணிலும் சஜித்தும் ஒரே விதமானவர்கள் என்று நாம் மேலோட்டமாக நினைத்தாலும், ஆழமாக நோக்குகின்ற போது ஆட்சி மாற்றங்களுக்குப் பின்னால் பெரும் சூட்சுமங்கள் இருப்பதை உணர முடியும்.

இலங்கையின் ஒழுங்கில் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் அதிகமாகவும், ஏனைய சில நாடுகள், அமையங்கள் வரையறுக்கப்பட்ட அளவிலும் செல்வாக்குச் செலுத்துகின்றன. அவர்களது அதிகாரப் போட்டியின் ஆடுகளமாக இலங்கை மாறியிருக்கின்றது. இது பொது மக்களிலும் உள்நாட்டு அரசியலிலும் தாக்கம் செலுத்துவதை காண முடிகின்றது.

இவ்வாறான சூழ்நிலைகளுக்கு மத்தியிலேயே முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது மக்களுக்கான அரசியலை முன்னகர்த்த வேண்டியுள்ளது. இன்னும் தெளிவாகச் சொன்னால், இந்தக் களநிலைமைகள் பற்றிய முழுமையான அறிவுடனேயே களமாட வேண்டியது கட்டாய நியதியாக உள்ளது.

இருப்பினும், முஸ்லிம் அரசியலின் யதார்த்தம் வேறு விதமாக இருப்பதைக் காண்கின்றோம். முஸ்லிம் எம்.பிக்கள் குறிப்பிட்ட சில பருவ காலங்களில் மாத்திரமே இயங்குகின்றனர். ஏனைய பெரும்பாலான காலங்களில் சமூகம் சார்ந்த விடயங்களில் சோம்பேறித்தனமாகவும் பொடுபோக்காகவும் செயற்படுவதைக் அவதானிக்க முடிகின்றது.

பாடசாலை மாணவர்கள் ஒரு பரீட்சைக்குப் பிறகான விடுமுறை காலத்தில் ஓய்வாகவும் உல்லாசமாகவும் பொழுதுகளை வீணே கடத்துவது இந்த இடத்தில் நினைவுக்கு வருகின்றது. ஏனெனில், முஸ்லிம் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ​ஆகியோர்,ன தேர்தலுக்குப் பின்னரான கால இடைவெளியில் அவ்விதமே தொழிற்படுகின்றனர்.

இந்த பாராளுமன்ற காலத்தில் மட்டுமன்றி, கடந்த ஆட்சிக்காலங்களிலும் எம்.பியாக பதவி வகித்தோர் தொடர்பில் இந்தப் போக்கை வெகுவாக அவதானிக்க முடிந்தது.
‘சோடா போத்தலை திறந்தால் பீறிடுகின்ற பானத்தைப் போல’ தேர்தல் மேடைகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் உணர்ச்சி பொங்கப் பேசுகின்ற முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள், அதைச் செயலில் காட்டுவதில்லை என்பது மிகக் கவலையான விடயமாகும்.

சிங்கள மக்களை மையமாகக் கொண்ட பெருந்தேசிய அரசியல், தன்பாட்டில் நகர்ந்து கொண்டே இருக்கின்றது. அதுதான் இந்த நாட்டின் தலைவிதியை தீர்மானிப்பதில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றது.

அதேவேளை, தமிழ்த் தேசிய அரசியலானது இந்த அரசியல் ஒழுங்குக்கு ஈடுகொடுத்து பயணித்து வருகிறது. குறிப்பாக, தேர்தல் காலமாக இருந்தாலும், பெருந்தொற்று காலமாக இருந்தாலும், அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக் காலமாக இருந்தாலும் பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகள், தமது காய்களை நகர்த்திக் கொண்டே இருக்கின்றார்கள்.

இதனால், தமிழர் அரசியல் இயங்குநிலையுடனும் ஒப்பீட்டளவில் உயிர்த்துடிப்புடன் இருக்கின்றது. இதன் விளைவாக, தமிழர்கள் பல விடயங்களை மெல்ல மெல்ல பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை கூர்ந்து நோக்கும்போது கண்டுகொள்ள முடியும்.

தமிழ்த் தேசிய அரசியல் வெளிப்படுத்திய பிம்பத்தின் அளவுக்கு, பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்பது உண்மையாக இருப்பினும், தமிழர்களின் பிரச்சினைகள் அடையாளப்படுத்தப்படுவதுடன். அவர்களது அபிலாஷைகள் தொடர்ந்து வலியுறுத்தப்படுகின்றன. இதனால் இவ்விடயங்கள் தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளன.

இதுதான் இங்கு முக்கியமானது! முஸ்லிம்களுக்கான அரசியல் இவ்விதம் இயங்கவில்லை என்பதுதான் கவனிப்புக்கு உரியது. அதாவது, முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதெல்லாம் ஒருபுறமிருக்க, குறைந்தபட்சம் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, வகிபாகம், அவர்களது பிரச்சினைகள், அபிலாஷைகள், எதிர்பார்ப்புகள் பற்றிய விடயங்கள் அறுதியும் உறுதியுமாக காத்திரமான முறையில் முன்வைக்கப்படவில்லை.

ஒவ்வொரு பிரதேசத்திலும் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்துக்கு இருக்கின்ற பிரச்சினைகள் என்ன, அதன் ஆழ அகலங்கள் என்ன என்பது பற்றி அறியாத, விளங்காத முஸ்லிம் எம்.பிக்களும் நம்மிடையே உள்ளனர்.

சமூக விடயத்தில் அக்கறை இல்லாத முஸ்லிம் பொதுஜனங்களைப் போல, சமூகத்தை விட சுயநலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற மக்கள் பிரதிநிதிகளும் உள்ளனர்.

இந்த இலட்சணத்தில் முஸ்லிம் சமூகத்தின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் எவை, காணி முரண்பாடுகள் என்ன, இனவிகிதாசார ரீதியான பாகுபாடுகள் என்ன, இனப்பிரச்சினை அல்லது வடக்கு-கிழக்கு இணைப்பு உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் முஸ்லிம் சமூகத்தின் தெளிவான நிலைப்பாடு என்ன என்பதை, முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டாக வலியுறுத்தத் தவறி வருகின்றனர்.

இவை பற்றி முஸ்லிம் அரசியல்வாதிகள் வினைதிறனான முறையில் செயற்படுவது இல்லையென்றே கூற வேண்டும். ஆகக் கூடிய பட்சமாக, எப்போதாவது அத்திபூத்தாற்போல் ஏதாவது ஒரு பிரச்சினையை பேசுவார்கள்; வாக்குறுதி வழங்குவார்கள்; மக்களை நம்ப வைப்பார்கள்.

அநேகமாக அது ஒரு தேர்தல் காலமாக இருக்கும்; அல்லது, முஸ்லிம் சமூகத்தின் ஆதரவை திரட்டி எடுத்துக் கொண்டு, அரசாங்கங்கள் மற்றும் பெருந்தேசிய கட்சிகளுக்கு முட்டுக் கொடுக்க வேண்டிய ஒரு காலகட்டமாக இது இருக்கும். ஆனால், அத்தோடு எல்லாம் அடங்கி விடும்.

ஒரு வாகன சாரதி விபத்துகளை தவிர்த்து, இழப்புகளைக் குறைத்து தமது பயண இலக்கை அடைய வேண்டுமாயின், எப்போதும் புதுத்தெம்புடன் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். வாகனம் ஓடிக் கொண்டிருக்க அவர் நித்திரை கொள்ள முடியாது. வளைவு நெழிவுகள் ஏற்ற இறங்கங்களுக்கு ஏற்றாற்போல் வாகனத்தை இயக்கிக் கொண்டிருப்பதுதான் அவரது வேலை.

அதுபோல அரசியல்வாதிகளின் வேலை, எப்போதும் சமூகம் சார்பான விடயங்களுக்காக இயங்கிக் கொண்டிருப்பதாகும். இது சேவையோ அர்ப்பணிப்போ அல்ல. மாறாக, தமக்கு வாக்களித்த மக்களுக்கு செய்ய வேண்டிய பிரதியுபகாரம் ஆகும்.

தமக்கு கிடைக்கின்ற கௌரவம் எடுக்கின்ற சம்பளம், கொடுப்பனவு, வரப்பிரசாதங்களுக்காக செய்தே ஆக வேண்டிய வேலையாகும்.

கட்சி மாறுவது, பதவி பெறுவது, பணம் உழைப்பது, மக்களை ஏமாற்றுவது என்ற உத்திகளை எல்லாம் அக்குவேறு ஆணிவேறாக அறிந்து வைத்துள்ள முஸ்லிம் தலைவர்கள், எம்.பிக்கள் தொடராக இயங்குநிலையில் இருப்பது என்ற அடிப்படை விடயத்தையும் கொஞ்சம் கற்றுக் கொள்ள வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.