;
Athirady Tamil News

எந்த உண்மையை கண்டறியப் போகிறார்கள்? !! (கட்டுரை)

0

தென்ஆபிரிக்காவில் அமைக்கப்பட்டதைப் போன்ற உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை அமைக்கும் நோக்கில், தென்ஆபிரிக்க அனுபவங்களை அறிந்து கொள்வதற்காக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷவும் வெளிநாட்டமைச்சர் அலி சப்ரியும் கடந்த மாதம் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை தென்ஆபிரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் அந்நாட்டின் ஜனாதிபதி சிறில் ரமபோஸா மற்றும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் சந்தித்தனர். உண்மையை கண்டறியும் பொறிமுறையொன்றை நிறுவுதல் பற்றி, இவ்வருடம் ஜனவரி மாதம் அமைச்சரவை எடுத்த முடிவொன்றின் பிரகாரமே, இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக இதுகுறித்து அரசாங்கம் தெரிவித்திருந்தது.

‘உண்மையயைக் கண்டறியும் பொறிமுறை’ என்று பொதுவாக இதை அழைத்தாலும் இது இனப்பிரச்சினை தொடர்பானது. அதேவேளை, இதில் வெளிநாட்டமைச்சர் சம்பந்தப்படுவதன் மூலம், இது இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களை கருத்தில் கொள்வதைப்பார்க்கிலும் வெளிநாட்டு அரங்குகளை நோக்கமாகக் கொண்ட காரியம் என்பதும் தெளிவாகிறது.

இந்த விஜயம் தொடர்பான செய்தி வெளியான போதும், அமைச்சர்கள் நாடு திரும்பிய பின்னர் ஊடகங்களில் அதைப் பற்றி பெரிதாக எதுவும் வெளியிடவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று அரசாங்கம் அறிவிக்கவும் இல்லை. போரால் பாதிக்கப்பட்டவர்களாவது அதைப் பற்றி எந்தவோர் அக்கறையை செலுத்தவும் இல்லை. ஆணைக்குழுக்கள் பற்றி, இலங்கை மக்களுக்கு இருக்கும் கசப்பான அனுபவமே அதற்குக் காரணமாகும்.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்த போது, சர்வதேச மனித உரிமை அமைப்பு அதைப் பற்றி ஓர் ஊடக அறிக்கையை வெளியிட்டது. ‘பொறுப்புக் கூறலைப் பற்றிய பிரச்சினையை சர்வதேச சமூகம் எழுப்பும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இலங்கை அரசாங்கம் ஓர் ஆணைக்குழுவை நியமிக்கும். அக்குழு நீண்ட காலத்தை இழுத்தடித்துவிட்டு, எவ்வித பயனையும் காணாமல் முடிவடைந்துவிடும்’ என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

உண்மைதான்! 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை அடுத்து 1984ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக வட்ட மேசை மாநாட்டை கூட்டினார். அதில் ஒரு பயனும் கிடைக்கவில்லை.

1985ஆம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தைகளை அடுத்து ஜே.ஆர்., 1986ஆம் ஆண்டு அரசியல் கட்சி மாநாட்டைக் கூட்டினார். அதில் ஓரளவுக்கு அதிகார பரவலாக்கல் ஆராயப்பட்டது.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை புலிகள் நிராகரித்து மீண்டும் போரை ஆரம்பித்த போது, ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ 1989ஆம் ஆண்டு சர்வகட்சி மாநாட்டை ஆரம்பித்தார். அத்தோடு அவர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவென மங்கள முனசிங்க தெரிவுக்குழுவை நியமித்தார். அவர் காணாமற்போனவர்களைப் பற்றிய ஆணைக்குழுவையும் நியமித்தார்.

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் 1995ஆம் ஆண்டு பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்தார். அது நூற்றுக்கு மேற்பட்ட அமர்வுகளை நடத்திய பின்னர் கைவிடப்பட்டது. காணாமற்போனவர்களைப் பற்றி அறிய, பிராந்திய ரீதியில் மூன்று ஆணைக்குழுக்களை சந்திரிகா நியமித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கென 2006ஆம் ஆண்டு சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி, அதன்மூலம் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை நியமித்தார். அது பலமுறை கூடி, 2010ஆம் ஆண்டு, அதன் அறிக்கையை மஹிந்தவிடம் கையளித்தது. அறிக்கை காணாமல் போய்விட்டது.

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கென, 2006ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் பகவதியின் தலைமையில் வெளிநாட்டு நிபுணர் குழுவை மஹிந்த நியமித்தார். அக்குழு, அரசாங்கத்திடம் இருந்து போதிய உதவி கிடைக்கவில்லை என்று இடைநடுவில் கலைந்துவிட்டது. அதையடுத்து வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற முக்கிய சில மனித உரிமை மீறல் சம்பவங்களைப் பற்றி ஆராய, உதலாகம ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. மஹிந்தவின் காலத்திலேயே காணாமற்போனவர்களைப் பற்றிய பரணகம ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து, போரில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதற்காகவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசாங்கம், புதியதோர் ஆணைக்குழுவை நியமிப்பதாக 2020 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் கூறியது. ஒரு வருடம் கடந்து அடுத்த மனித உரிமைகள் பேரவை கூட்டம் நெருங்கிய போது, உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி நவாஸின் தலைமையில் அந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அக்குழு கடந்த பெப்ரவரி மாதம் ஆறாம் திகதி, தனது இறுதி அறிக்கை நகலிலுள்ள பரிந்துரைகளின் ஒரு சாராம்சத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தது. அதிலும் உண்மையைக் கண்டறியும் பொறிமுறையின் அவசியம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், அவ்வாறானதொரு பொறிமுறையை அமைக்கவென அமைச்சர்கள் தென்ஆபிரிக்காவுக்குச் சென்றிருந்தனர்.

உண்மையைக் கண்டறியும் பொறிமுறையைப் பற்றிய கருத்து ஆராயப்படுவது முதல் முறைல்ல! இது அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான போர் முடிவடைந்தது முதல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் ஏனைய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் வலியுறுத்தி வரும் ஒரு விடயமாகும்.

கடந்த ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் காலத்தில் இதுவும் காணாமற்போனோருக்கான அலுவலகம் உள்ளிட்ட வேறு சில காரணங்களும் முக்கிய விடயங்களாக மேலெழுந்து வந்தன. ஆயினும் போர் முடிவடைந்து 14 ஆண்டுகள் கடந்த நிலையில், அவ்வாறானதொரு பொறிமுறையை உருவாக்க இப்போது தான் படிக்கப் போகிறார்கள்.

இவ்வருடம் நடைபெற்ற 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த நவம்பர் மாதம் கூறினார். அதற்காகவென பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்தார். பின்னர், இரண்டு வருடங்களில் பிரச்சினையை தீர்ப்பதாக கூறினார். இந்தப் பின்னணியில், இந்த உண்மையைக் கண்டறியும் பொறிமுறை பற்றிய விடயமும், களத்தில் குதித்துள்ளமை முக்கியமாகும்.

இங்கு எழும் பிரதான பிரச்சினை என்னவென்றால், எதைப்பற்றி அரசாங்கம் உண்மையயை கண்டறியப் போகிறது என்பதாகும். இனப்பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில், நாம் எங்கே பிழை விட்டோம் என்பதைப் பற்றி அரசாங்கம் ஆராயப் போகிறதா அல்லது, போரின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்களைப் பற்றி ஆராயப் போகிறதா?

மனித உரிமைகள் விடயத்தைத்தான் ஆராயப் போகிறது என்றால், எந்தக் கால கட்டத்திலான சம்பவங்கள் ஆராயப்படப் போகின்றன? மக்கள் விடுதலை முன்னணிக்கும் அரச படைகளுக்கும் இடையிலான மோதலின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்களும் ஆராயப்படப் போவதாக ஒரு சிங்கள பத்திரிகை கடந்த வாரம் செய்தி வெளியிட்டு இருந்தது.

அவ்வாறாயின், 1971 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை அரசாங்கம் ஆராயப்போகிறதா? இது வேகமாக வளர்ந்து வரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களைக் குறி வைத்து ஆரம்பிக்கப் போகும் திட்டமா என்ற கேள்வியும் அதன்படி எழுகிறது.

வடக்கு, கிழக்கு போரை மட்டுமே கருத்தில் கொண்டாலும், போர் முடிவடைந்து 14 வருடங்கள் உருண்டோடிவிட்டன. கருத்தில் கொள்ளப்படப்போகும் சம்பவங்களோடு சம்பந்தப்பட்ட சாட்சியாளர்களில் எத்தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள் என்பது பெரும் கேள்வியாகும். அத்தோடு போரால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கானோர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்களில் எத்தனை பேர் சாட்சியமளிக்க முன்வருவார்கள் என்பது அடுத்த கேள்வியாகும்.

அதேவேளை நீதி, நியாயம் பற்றிய விடயத்தில் இலங்கை மக்கள் இன ரீதியாக வெகுவாக பிரிந்து சிந்திக்கும் நிலையில் உள்ளனர். சிலர் செஞ்சோலை தாக்குதலை நியாயப்படுத்தும் அதேவேளை, சிலர் புறக்கோட்டை குண்டு வெடிப்பை நியாயப்படுத்துகின்றனர். இந்த நிலையில், உண்மையைக் கண்டறிவதானது மிகவும் கடினமான விடயமாகும்.

அத்தோடு மனித உரிமைகள் விடயத்தில் எவ்வகையான நியாயத்தை வழங்க வேண்டும் என்பதிலும் மக்கள இன ரீதியாக பிரிந்து சிந்திக்கின்றனர். சிலர் குற்றவாளிகளைத் தண்டிப்பதன் மூலமே நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்க, வேறு சிலர் குற்றங்களை பரஸ்பரம் ஏற்று ஐக்கியத்தை உருவாக்க வேண்டும் என்கின்றனர்.

2018ஆம் ஆண்டு அதாவது, ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் காலத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றில் விசாரணைகள் மூலம் உண்மையை கண்டறிந்தாலும் அவற்றைப் பாவித்து எவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் பொதுவானதோர் உடன்பாட்டை ஏற்படுத்த எடுக்கும் முயற்சியே மேலும் கருத்து மோதல்களை உருவாக்கும் என்றே தெரிகிறது.

எனினும் கடந்த காலத்தில் அரசாங்கங்கள் வழங்கிய வாக்குறுதிகளை கவனிக்கும் போது, உண்மையைக் கண்டறியும் பொறிமுறையைப் பற்றியும் பெரிதாக எதிர்ப்பார்ப்புகளை வைத்திருப்பதில் பயனில்லை என்றே கூற வேண்டும். அதுதான் இதுவரை கண்டறிந்த உண்மையாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.