தேசிய அரசாங்கம் நாட்டுக்கா, ஜனாதிபதிக்கா? (கட்டுரை)
தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளுக்கும் இவ்வாரம் அழைப்பு விடுப்பார் என, கடந்த வாரம் செய்திகள் வெளியாகி இருந்தன.
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்து கொண்டிருக்கும் உடன்படிக்கையை ஏப்ரல் 25ஆம் திகதி (நேற்று) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போது, இந்த அழைப்பை விடுக்கவிருப்பதாக ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்தார் என்று, தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், கடந்த வாரம் ‘டெய்லிமிரர்’ பத்திரிகையிடம் தெரிவித்திருந்தார்.
கணேசனும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் ஜனாதிபதியை சந்தித்த சந்தர்ப்பம் ஒன்றிலேயே, ஜனாதிபதி இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். பின்னர் அந்த உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் இன்று (26) வரை ஒத்திவைக்கப்பட்டது. அதாவது, இடையில் ஏதாவது மாற்றங்கள் இடம்பெற்று இருக்காவிட்டால், தேசிய அரசாங்கம் பற்றிய அழைப்பை ஜனாதிபதி இன்று அல்லது நாளை விடுக்கக்கூடும்.
சித்தாந்த ரீதியிலோ அல்லது சட்ட ரீதியிலோ அல்லாது, சாதாரண அர்த்தத்தில் தேசிய அரசாங்கம் என்றால், சகல அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து நடத்தும் அரசாங்கம் என்ற உணர்வுதான் ஏற்படுகிறது.
ஆனால், இலங்கையில் சட்டப்படி, தேசிய அரசாங்கம் என்பது அவ்வாறான ஒன்றல்ல! அரசியலமைப்பின்படி தேசிய அரசாங்கம் என்றால், ‘பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்ட அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழு, ஏனைய கட்சிகளுடன் அல்லது சுயேச்சை குழுக்களுடன் இணைந்து அமைக்கும் அரசாங்கமாகும்’ என்பதாகும்.
விந்தை என்னவென்றால், இந்த வரைவிலக்கணம் ‘அரசியலமைப்பில் அமைச்சர்களின் எண்ணிக்கை’ என்ற விடயத்தின் கீழ் வருவதாகும். அதாவது, அமைச்சரவையில் 30 அமைச்சர் மட்டுமே இருக்கலாம் என்று கூறிவிட்டு, தேசிய அரசாங்கமாக இருந்தால், இந்த எண்ணிக்கையை பாராளுமன்றமே தீர்மானிக்கும் என்று அரசியலமைப்பு கூறுகிறது. அதைத் தவிர, தேசிய அரசாங்கம் எதற்காக என்பதைப் போன்ற எந்த கருத்தும் அதில் இல்லை. அதாவது, அமைச்சர்களை அதிகரித்துக் கொள்வதற்காகவே தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கரு அரசியலமைப்பில் புகுத்தப்பட்டுள்ளது.
அது எவ்வாறாயினும், அரசியலமைப்பிலுள்ள அந்த வரைவிலக்கணத்தின்படி, நடைமுறையில் இப்போதும் தேசிய அரசாங்கம் ஒன்றே இருக்கிறது என்று வாதிடலாம். 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது, 145 ஆசனங்களை வென்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து சுமார் 40 உறுப்பினர்கள் இப்போது ஆளும் கட்சியிலிருந்து விலகி இருந்த போதிலும், அதேபோல், பொதுஜன பெரமுன அறுதிப் பெரும்பான்மையை இழந்த போதிலும் பொதுஜன பெரமுனவுக்கே இன்னமும் பாராளுமனறத்தில் பெரும்பான்மை பலம் இருக்கிது. 54 ஆசனங்களை வென்ற இரண்டாவது பெரிய கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு இப்போது சுமார் 50 ஆசனங்களே இருக்கின்றன. பொதுஜன பெரமுனவுக்கு பெரும்பான்மை பலம் இருப்பது போலவே, அக்கட்சி இப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தே ஆட்சியை நடத்தி வருகிறது. எனவே, நடைமுறையில் தேசிய அரசாங்கம் ஒன்றே இருக்கிறது.
ஆயினும், தமது தலைமையின் கீழ் செயற்பட்டு வந்தவர்கள், தம்மை விட்டுப் பிரிந்து அமைத்துக் கொண்ட கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை மீண்டும் தமது தலைமையை ஏற்றுக் கொள்ளச் செய்வதே, தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் ஜனாதிபதி செய்யப் போகிறார் என்றே தெரிகிறது.
இதில் இரண்டு நோக்கங்கள் இருக்கலாம். ஒன்று, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் என்ற முறையில் தமக்கு இருந்த அதிகாரத்தை சிதைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களைப் பழிதீர்ப்பதாகும்.
இரண்டாவது, தற்போது வாக்கு வங்கியே இல்லாமல் இருக்கும் தமது கட்சியின் வாக்கு வங்கியை வளர்த்துக் கொண்டு, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாகும்.
அவற்றைத் தவிர, தேசிய அரசாங்கம் என்ற பெயரில் மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளை, அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில் ஜனாதிபதி அக்கறை செலுத்தவில்லை. மக்கள் விடுதலை முன்னணி அவ்வாறு அரசாங்கத்தில் சேரப் போவதுமில்லை. அதேபோல் சேர்ந்தாலும், அக்கட்சியிடம் மூன்றே மூன்று ஆசனங்கள் தான் இருக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தில் இணையப் போவதாக அண்மைக் காலமாக வதந்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, கபீர் ஹாஷிம் ஆகியோர் அரசாங்கத்தில் சேரக்கூடும் என்று பலர் கூறுகின்றனர். இதற்குக் காரணம், அவர்கள் அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான உடன்பாட்டை முழுமையாக இல்லாவிட்டாலும் ஆதரிப்பதாகும்.
அந்த உடன்படிக்கையில் இருக்கும் வரித் திட்டத்தையும் இலாபமீட்டும் அரச நிறுவனங்களை விற்பதையும் தாம் ஆதரிக்காவிட்டாலும், பொதுவாக அந்த உடன்படிக்கையை தாம் ஆதரிப்பதாகவும் ஜனாதிபதியும் ஐ.ம.சவின் கொள்கைகளையே பின்பற்றுகிறார் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். எனவேதான், இவர்கள் அரசாங்கத்தில் சேரலாம் என்றதொரு கருத்து பரவியிருக்கிறது.
ஆயினும், மக்கள் ஆதரவோ ஆணையோ இல்லாத அரசாங்கத்தைத் தாம் ஆதரிக்கப் போவதில்லை என்று கலாநிதி ஹர்ஷ டி சில்வா புதன்கிழமை (19) ஊடகங்களிடம் தெரிவித்தார். ஆணை எவ்வாறாயினும், ஆதரவு இல்லாத கட்சியில் இணைவது, எந்தவோர் அரசியல்வாதியினதும் எதிர்காலத்துக்கு உகந்ததாக அமையாது. எனவே, சிலவேளை கலாநிதி சில்வா கூறுவது உண்மையாகவும் இருக்கலாம்.
அண்மையில், அரசியல் கட்சிகளுக்கான மக்கள் ஆதரவு தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளையும் அவர்கள் கருத்தில்கொண்டு இருப்பார்கள். அந்தக் கருத்துக்கணிப்புகளின்படி, ஆளும் கட்சிகளான ஐ.தே.கவையும் பொதுஜன பெரமுனவையும் சுமார் நான்கு சதவீத மக்களே ஆதரித்தனர்.
அதேவேளை, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, கபீர் ஹாஷிம் ஆகிய மூவரும், பொருளியல் அறிவு உள்ளவர்களாவர். கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி, இலங்கைக்கான உதவித் திட்டத்தை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அங்கிகரித்த போது, ஏதோ பிரச்சினைகள் தீர்ந்ததைப்போல் ஆளும் கட்சியினர் பட்டாசுக் கொழுத்தி மகிழ்ந்தாலும், நாணய நிதியத்தின் திட்டத்தின் மிகுதிப் பகுதி மிகவும் கடினமானது என்று அவர்களுக்குத் தெரியும்.
ஊழலை தடுப்பது உள்ளிட்ட அந்தத் திட்டத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் அடிப்படையில்தான், இலங்கைக்கான மிகுதி கடன் தவணைகளை நாணய நிதியம் விடுவிக்கும். அதேவேளை, வெளிநாட்டுக் கடன்காரர்கள் தமது கடன் மறுசீரமைப்பது தொடர்பாக முடிவான வாக்குறுதிகளை இன்னமும் வழங்கவில்லை. அத்தோடு அவர்கள் இலங்கையின் உள்நாட்டுக் கடன்களையும் மறுசீரமைக்க வேண்டும் என்கின்றனர். அதன் மூலமாக, நாட்டின் வங்கி அமைப்புமுறை எவ்வாறு பாதிக்கப்படும் என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் கீழ், ஊழியர் சேமலாப நிதியத்திடம் அரசாங்கம் பெற்றிருக்கும் கடனில் ஒரு பகுதியை கழித்துவிட்டால், அதன் மூலம் ஊழியர்களும் பாதிக்கப்படுவார்கள். இதுபோன்ற பல பிரச்சினைகள் காரணமாக, அரசாங்கத்திடம் முண்டியடித்துக்கொண்டு ஓடவேண்டிய அவசியம் இல்லை என்பதும் அவர்களுக்குத் தெரியும். எனவே, ஹர்ஷ போன்றோர்கள் அரசாங்கத்தில் சேர்வார்களா என்பது சந்தேகமே!
ஆனால், தமக்கு சுகாதார அமைச்சை வழங்கினால் தாம் அதனை ஏற்றுக் கொள்வதாக ஐ.ம.ச எம்.பி டொக்டர் ராஜித்த சேனாரத்ன கூறியிருக்கிறார். அதாவது, அவர் அமைச்சுப் பதவிக்காக கட்சி தாவத் தயாராக இருக்கிறார்.
கடந்த பொதுத் தேர்தலில், ஐ.தே.க மாவட்ட ரீதியில் ஓர் ஆசனத்தையேனும் வெற்றி பெறவில்லை. தேசிய பட்டியல் மூலம் மட்டுமே ஓர் ஆசனம் அக்கட்சிக்கு கிடைத்தது. அதற்குக் காரணம், ஐ.தே.கவின் வாக்கு வங்கி மொத்தமாகவே ஐ.ம.சவிடம் சென்றடைந்தமையாகும்.
எனவே, தமக்கு இனி அரசியல் எதிர்காலமே இல்லை என்று நினைத்த ரணில் விக்கிரமசிங்க, ஐ.தே.கவை கலைத்துவிட நினைத்ததாக முன்னாள் அமைச்சர் நவின் திஸாநாயக்க அண்மையில் கூறியிருந்தார். ஆனால், கோட்டாபய அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு, ரணில் பிரதமராக பதவி ஏற்றதன் பின்னர், அவருக்குள் மீண்டும் நம்பிக்கை வளர்ந்தது. கோட்டாபய ராஜினாமாச் செய்தால், பிரதமரான தாமே, ஜனாதிபதி என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே, மக்கள் போராட்டத்தை ஆதரிப்பதாக, பிரதமரானதன் பின்னரும் அவர் உண்மையாகவே தான் கூறியிருக்க வேண்டும்.
எனினும், அவருக்கு மற்றொரு முறை ஜனாதிபதியாவதற்கு மக்கள் ஆதரவு இல்லை. பொதுஜன பெரமுன அவரை தமது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் என்ற உத்தரவாதமும் இல்லை. அடுத்த வருட இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது. அதற்குள் அரசாங்கமும் ஜனாதிபதியும் மேலும் மக்களின் வெறுப்புக்கு உள்ளாகவும் கூடும். எனவேதான் அவர் ஐ.ம.சவை இப்போதே கைப்பற்றிக் கொள்ள திட்டமிடுகிறார் போலும்!
அண்மையில், ஐ.ம.சவின் சில உறுப்பினர்கள் அரசாங்கத்தில் சேர முயல்வதாக வதந்தி பரவவே, தனி நபர்களாக அல்லாமல் கட்சியாகவே எவரும் அரசாங்கத்தில் சேரலாம் என்று ஜனாதிபதி கூறியிருந்தார். அவ்வாறு, ஐ.ம.ச அரசாங்கத்தில் சேர்ந்தால், அதன் உறுப்பினர்களை ஐ.தே.கவுக்குள் உள்வாங்கிக்கொள்வது இலகுவாகும். தேசிய அரசாங்கம் அதற்காகத் தான் என்று ஊகிக்கலாம்!