;
Athirady Tamil News

தமிழ்த் தேசிய அரசியலில் சாதி, மதம்!!! (கட்டுரை)

0

தமிழ்த் தேசிய அரசியலில் சாதி, மதம் என்பன மிக நீண்டகாலமாக பேசாப்பொருளாகவே இருந்தது வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியல், மதம் பற்றிப் பேசுவதும் இல்லை; சாதி பற்றி வௌிக்காட்டிக் கொள்வதுமில்லை. 1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, சா.ஜே.வே செல்வநாயகத்தை எதிர்த்து தேர்தலில் நின்ற ‘அடங்காத் தமிழன்’ சுந்தரலிங்கம், ‘வேலா, சிலுவையா?’ என்ற ரீதியிலான பிரசாரத்தையும் மேற்கொண்டார்.

இது ஓரளவுக்கு வௌிப்படையாக நடந்த பிரசாரம். ஆனால், அந்தத் தேர்தலில் பெரும்பான்மை சைவர்கள் நிறைந்த தொகுதியில், குறித்த பாணியிலான பிரசாரத்தை மீறியும், கிறிஸ்துவரான சா.ஜே.வே செல்வநாயகம் வெற்றி பெற்றார். அதன் பின்னர், பகிரங்கமாக சைவ-கிறிஸ்தவ வேறுபாடு சார்ந்த பிரசாரங்கள் பெருமளவிற்கு தமிழ்த் தேசிய அரசியலில் முன்வைக்கப்படவில்லை.

சைவத் தலைமைகள், கிறிஸ்தவ தேவாலயத்தோடு நெருங்கிய உறவினைக் கொண்டிருந்தார்கள், அதுபோல கிறிஸ்தவத் தலைமைகள் சைவ சின்னங்களைச் சூடுவதை பொதுவௌியில் செய்வதைத் தவிர்க்கவில்லை. ஒரு வகையான புரிந்துணர்வு இருந்தது. இதற்குப் பல காரணங்களுண்டு. மிக முக்கிய காரணங்களுள் ஒன்று சிங்கள-பௌத்த பேரினவாதம். சிங்கள-பௌத்த பேரினவாதம் ‘தமிழ்’ என்ற ஒற்றை அடைளத்திற்குள் அனைத்துத் தமிழர்களையும் ஒன்றுபடுத்தி அடக்குமுறைக்கு உட்படுத்தியது.

தமிழர்களுள் சாதி, மத அடையாளங்கள் இருந்தாலும், தமிழர்களை எதிரிகளாக முன்னிறுத்திய பேரினவாத அரசியல் சக்திகளுக்கு அனைவரும் தமிழர்களாக மட்டுமே தெரிந்தார்கள்.

பேரினவாதத்தின் அடக்குமுறையைச் சமாளிக்க தமிழர்கள், தம்முள்ளான அடையாளப் பிரிவுகளில் சிக்கிக்கொள்ளாது இருக்க வேண்டிய அவசியப்பாடு இருந்தது. அது தமிழர் என்ற அடையாளத்தை வலுப்படுத்தி, அதன் உட்பிரிவுகளால் உடையாது நிற்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது என்றால் அது மிகையல்ல.

இதற்காக தமிழர்களுள்ளான சாதி, மத அடையாளங்கள் முற்றாக அற்றுப்போயின என்று சொல்லிவிட முடியாது. உயிர்போகும் பிரச்சினை தலையைக் காவுகொள்ள காத்திருந்து போது, அந்தச் சாதி, மத அடையாளங்கள் பயனற்றுப்போயின. சிங்களக் கிறிஸ்தவர்கள், வடக்கு-கிழக்கு தமிழ்க் கிறிஸ்தவர்களை கிறிஸ்தவர்களாகப் பார்த்தார்கள் என்பதை விட, தமிழர்களாகப் பார்த்தார்கள் என்பதுதான் நிதர்சனம்.

தெற்கிலுள்ள கத்தோலிக்கர்களே, வடக்கு-கிழக்கிலுள்ள மறைமாவட்ட ஆயர்களை ஐயத்துடன் பார்த்த சந்தர்ப்பங்களும் நிறையவே உண்டு. ஆகவே, சிங்களவர், எதிர் தமிழர்கள் என்ற இந்தத் தீவின் இனவாத வெறியின் உச்சம்தான், ஒரு வகையில் தமிழர்களுக்கு உள்ளிருந்த சாதி, மத அடையாளங்கள் அரசியல் ரீதியில் முக்கியம் பெறாமல் போனமைக்கு முக்கிய காரணமாகும்.

மேலும், இதன் பின்னாலுள்ள இன்னொரு சமூகக் காரணியையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். இன்றைய வடக்கு-கிழக்கில், கணிசமான சைவக் குடும்பங்களில், கிறிஸ்தவ உறவுகளுண்டு. அதுபோல கணிசமான கிறிஸ்தவக் குடும்பங்களில், சைவ உறவுகளுண்டு. இந்தச் சமூகக் காரணியும் கூட, மத ரீதியான பிளவுகள் பெருமளவுக்கு வெடிக்காமைக்கு முக்கிய காரணம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

யாழ்ப்பாண சமூகத்தில், குறிப்பாக யாழ். சைவர்களிடையே கிறிஸ்தவ விரோதப் போக்கு என்பது இயல்பாக அமையாமைக்கு அந்தச் சமூகத்திற்கு கிறிஸ்தவ மிஷனரிகள் ஆற்றிய பங்களிப்பும், குறிப்பாக கல்வி ரீதியிலான பங்களிப்பும், ஒருவகையில் மிக முக்கிய காரணமாகிறது.

பிரபல இந்து பாடசாலைகள் இன்று யாழ்ப்பாணத்தில் இருந்தாலும், சென்.ஜோன்ஸ், யாழ். மத்திய கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி ஆகியனவே இன்றும் பிரபலமான தெரிவுகளாக இருக்கின்றன.

இவை கிறிஸ்தவ பாடசாலைகளாக இருப்பினும், இங்கு சைவப்பிள்ளைகள் கணிசமானளவில் கல்வி கற்கிறார்கள். யாழ். சைவ சமூகத்தின் பெரும் அடையாளங்களுள் ஒன்றான நல்லூர் கோவிலின் இன்றைய தர்மகர்த்தா கல்வி கற்றது சென். ஜோன்ஸ் கல்லூரியில் ஆகும்.

ஆகவே, யாழ்ப்பாண சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கு, அதன் மத அடையாளங்கள் மட்டும் போதுமானவை அல்ல. அதனைத்தாண்டி சமூக யதார்த்தத்தைப் புரிந்துகொள்வது அவசியம்.

இந்தப் பின்புலம் இருக்கத்தக்கதாகத்தான், இன்று மத அடையாளத்தை முன்னிறுத்திய அரசியல் நகர்வுகள் சில வடக்கு-கிழக்கில் இடம்பெறுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ‘இந்து’ அடையாளம் வடக்கு-கிழக்கில் சில தரப்பினரால் பகீரதப் பிரயத்தனத்துடன் முன்வைக்கப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணத்துக்கும் வடக்கு-கிழக்கிற்கும் ‘இந்து’ என்ற அடையாளம் புதியது. ஆம், இந்துக் கல்லூரிகள் இருக்கின்றன, ஆனால் அதனைத்தாண்டி இந்த அடையாளம் மிகப் புதியது. ஆறுமுகநாவலர் காலத்தில் கூட, யாழில் முன்னெடுக்கப்பட்டது சைவ மீளெழுச்சியே அன்றி, இந்து மீளெழுச்சியல்ல. இலங்கையில் பாடசாலைகளில் சமய பாடங்கள் கற்பிக்கப்படுகிறன. இங்கு சைவம் தான் கற்பிக்கப்படுகிறதேயொழிய, இந்து மதம் அல்ல.

நிற்க! சைவ – இந்து சிந்தாந்தப் பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, இந்தப் புதிய ‘இந்து’ அடையாள நுழைப்பின் மூலத்தைத் தேடுவது அவசியமாகிறது.

இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிடுவது அவசியம். சைவர்கள் உள்ளிட்ட இந்துக்கள் அனைவருக்கும், இந்நாட்டில் தாம் நடத்தப்படும் விதம், தமது அடையாளங்கள், தமது வழிபாட்டுத்தலங்கள், தமது வாழ்வியல் முறை, தமக்கான அங்கிகாரம் என்பனவெல்லாம் பற்றிய நிறையக் கவலைகளும் கோவங்களும் ஆதங்கங்களும் இருக்கின்றன.

இது அரசாங்கம் பற்றியது மட்டுமல்ல. திருக்கேதீச்சரம் என்பது உலகச் சைவர்களுக்கு மிக முக்கியமான திருத்தலங்களுள் ஒன்று. பழம்பெருமை கொண்ட திருத்தலம். இராவணனின் மனைவி மண்டோதரியின் தந்தை மாயன் கட்டிய பெருங்கோவில் என்ற புராண நம்பிக்கையுமுண்டு.

இந்தத் தீவின் பூர்வீக அடையாளங்களில் ஒன்றான திருக்கேதீச்சரத்தில் ஓர் அலங்கார வளைவு கூட கட்டப்படுவதைக்கூட, சில கிறிஸ்தவர்கள் அனுமதிக்கவில்லை என்பது கவலைக்குரியது. மறுபுறத்தில், திருக்கேதீச்சரம் செல்லும் வீதியில் மாதா சொரூபம் திடீரென்று வைக்கப்பட்ட பிரச்சினையும் சைவ-கிறிஸ்தவ மக்களிடையே கசப்புணர்வை உருவாக்குவதாக இருக்கிறது.

இந்தக் கசப்புணர்வுகளை தமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள சில உள்நாட்டு, மற்றும் அந்நிய சக்திகள் கங்கணங்கட்டிக்கொண்டு செயற்படுகின்றன. அதன் விளைவுதான், இந்தத் திடீர் இந்து அமைப்புகளின் தோற்றம். அமைதியான வழியில், விட்டுக்கொடுப்புகளுடன், சைவர்களும், கிறிஸ்தவர்களும் நடந்திருந்தால், இந்தப் பிரச்சினை எழுந்திராது.

‘தமிழ்த் தேசியம்’ என்பது, தமிழ் மக்களிடையேயான சாதி, மத, பிரதேச அடையாளங்களை மேவிய, தமிழ்த் தேசிய அடையாளத்தைக் கட்டியெழுப்பும் அரசியலாக இருந்தது. அதற்கான தேவையை உருவாக்கியது பேரினவாதம். இங்கு தேவைகள்தான், புத்துருவாக்கங்களுக்கு அடித்தளமாக இருக்கின்றன.

சாதி ரீதியில் பிளவுபட்டிருந்ததொரு சமூகம், மத அடையாளங்களால் அடிபட்டுப் பிளந்திருக்கக் கூடியதொரு சமூகம், அதனை மேவி, ‘தமிழர்’ என்ற அடையாளத்தால் ஒன்றிணைய வேண்டிய கட்டாயத்திற்கு தமிழர்களைப் பேரினவாதம் இட்டுச்சென்றமை, தீங்கிலும் விளைந்ததொரு நன்மையென்றால் அது தவறில்லை.

60 வருட திராவிட அரசியல், தமிழ்நாட்டில் சாதிக்காததைக்கூட, 30 வருட யுத்தம் வடக்கு-கிழக்கில் சாத்தியமாக்கியது. தமிழ்நாட்டில் இன்றும் சாதிக்கட்சிகள் இருக்கின்றன. சாதி கட்சி மாநாடுகள் நடக்கின்றன.

இலங்கைத் தமிழர் அரசியலில் அது சுத்தமாக இல்லை. அதற்காக சாதி இல்லை என்று சொல்லிவிட முடியாது. சமூகத்தின் சாதி அடையாளங்கள் உள்ளன. ஆனால், சாதியின் அரசியல் வகிபாகம் என்பது மிக மட்டுப்படுத்தப்பட்டது.

ஆனால், இன்று மீண்டும் சாதி அரசியலையும் இங்கு உள்நுழைக்கும் சதிவேலையும் நடந்துகொண்டிருப்பதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
‘தலித்’ என்பது 1880களின் பிற்பட்ட காலப்பகுதியில் தீண்டத்தகாத சாதியினரைக் குறிக்க வடஇந்தியாவில் பயன்படுத்திய சொல். இந்தச் சொல் இலங்கையில் புழக்கத்திலேயே இல்லை. இலங்கைத் தமிழர் சாதிக் கட்டமைப்பு வர்ணாச்சிரமத்தின் பாற்பட்டதன்று. இன்று வடக்கு-கிழக்கில் ‘தலித்’ அரசியல் என்று ஒருசிலர் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். யாருக்காக இது, எதற்காக இது? என்பன முக்கிய கேள்விகள்.

யுத்த நிறைவுக்குப் பின்னரான தமிழர் அரசியல், திக்குத்தெரியாத கடலில், மாலுமியில்லாத ஓட்டைப்படகாக மாறியிருக்கிறது. இங்கு ‘நானே மாலுமி; நானே மாலுமி’ என ஒவ்வொருவரும் ஓட்டைப் படகை தம் பக்கத்துக்கு வலித்துக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டைப்படகோ, எங்கும் நகராமல், மூழ்கிக்கொண்டிருக்கிறது. இப்படி வலிப்பவர்களுள், இன்று புதிதான இணைந்துகொண்டவர்கள்தான் மேற்சொன்ன சாதி, மதக் காவலர்கள்.

எச்சரிக்கை!

You might also like

Leave A Reply

Your email address will not be published.